
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
சென்னைக்கு வந்த புதிதில் ஒருநாள் மாலை சாந்தோம் பீச்சில் படுத்திருந்தேன். ஜிலுஜிலு என்ற கடல் காற்று. அதன் தாலாட்டில் அப்படியே தூங்கிப்போனேன். நள்ளிரவில் ஒரு போலீஸ்காரர் வந்து எழுப்பினார். ‘என்னடா முழிக்கிறே?’ என ‘பராசக்தி’யில் சிவாஜியை ஒரு போலீஸ்காரர் நடுராத்திரி எழுப்பிக் கேட்பார். ‘தூங்கறவன எழுப்பினா முழிக்காம என்ன செய்வான்?’ என சிவாஜி திருப்பிக் கேட்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.
‘‘தற்கொலை செஞ்சுக்க வந்தியா?’’
‘‘இல்லை சார். நான் சினிமாவில் சாதிக்கணும்னு வந்திருக்கேன். இதப் பாருங்க... கதை எல்லாம் வெச்சிருக்கேன்’’ என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
‘‘வா ஸ்டேஷனுக்கு’’ என சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துப் போனார். லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டார்.

கடல் காற்றின் குளிரில் அவ்வளவு நேரமும் இருந்த எனக்கு அது கதகதப்பாக இருந்தது. லாக்கப்பிலேயே படுத்துத் தூங்கிவிட்டேன். காலையில் இன்ஸ்பெக்டர் வந்தார். ‘லாக்கப்ல யாரு’ எனக் கேட்டிருப்பார் போல. ‘ஏதோ தற்கொலை முயற்சி கேஸ்’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.
‘‘கூப்புடுய்யா அவனை’’ என்றார்.
எழுந்துவந்து அவர் முன்னால் நின்றேன். ‘எந்த ஊரு... என்ன பேரு?’ என விசாரித்தார். சொன்னேன்.
‘‘அட, நம்ம சங்கரய்யா அண்ணன் பையனா?’’ என ஆச்சர்யமாகக் கேட்டார். என் சித்தப்பாவுடன் அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றாகப் படித்ததாகச் சொன்னார். ‘‘எதுக்கு தற்கொலை பண்ணிக்க வந்தே... வீட்ல சண்டையா?’’ என விசாரித்தார். அவரிடம் என் கதைகளை எல்லாம் காட்டினேன். சினிமா கனவில் சென்னை வந்ததைச் சொன்னேன். டீ, பன் எல்லாம் வாங்கித் தந்தார். ‘‘சரி... சரி... ஊருக்குப் போய்ச் சேரு’’ என அறிவுரை சொன்னார்.
‘சரி’ எனத் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தவன், ஒரு யோசனையோடு திரும்பவும் அவரிடம் போனேன். பஸ் செலவுக்குக் காசு கேட்டுத் திரும்பி வருகிறேன் என அவர் நினைத்திருப்பார் போல! ‘‘என்னடா?’’ என்றார்.
‘‘சார்... குளிர் அதிகமா இருக்கறதால, நைட்ல வெளிய படுக்க முடியலை. இங்க கொஞ்சம் கதகதப்பா இருக்கு. ராத்திரியில லாக்கப்ல வந்து படுத்துக்கவா?” என்றேன்.
‘‘என்னா கிண்டல்டா உனக்கு... போடா இங்கருந்து’’ என விரட்டிவிட்டார்.
இந்தச் சம்பவத்தை ஒருமுறை ஜெயா டி.வி நிகழ்ச்சியில் சொன்னேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான கொஞ்ச நேரத்தில் என் வீட்டுக்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கியவர் கையில், அழகாக பேக் செய்த ஒரு பெரிய சாக்லெட் பாக்ஸ். ‘‘மேடம் கொடுக்கச் சொன்னாங்க’’ என்றார்.
ஜெயா டி.வி-யில் நான் பேசிய அந்த நிகழ்ச்சியை ஜெயலலிதா சிரித்துச் சிரித்து ரசித்திருக்கிறார். நிகழ்ச்சி தயாரித்தவர்களிடம் என் முகவரி வாங்கி, நிகழ்ச்சி வெளியான சில நிமிடங்களிலேயே இனிப்பு கொடுத்தனுப்பி மகிழ்ந்திருக்கிறார். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்... என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து எனக்குப் பரிசு அனுப்பியது பெருமையாக இருந்தது.
நான் உடனே போயஸ் கார்டன் வீட்டுக்குப் போன் செய்து அவருக்கு நன்றி சொல்ல முயற்சி செய்தேன். ‘‘கொஞ்சம் இருங்க... கொஞ்ச இருங்க...’’ என ரொம்ப நேரம் லைனில் காத்திருக்கச் சொன்னார்கள். கடைசியாக, ‘‘அம்மாவுக்கு லைன் கொடுக்க முடியாது’’ எனச் சொல்லிவிட்டார்கள். ‘‘அம்மாவுக்கு நன்றி சொன்னேன்னு சொல்லுங்க, போதும்’’ என நானும் போனை வைத்துவிட்டேன்.
பாரதிராஜாவும் நானும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் அவரிடம் ‘சொந்த வீடு’ கதை சொன்னது அவருக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஒரு சினிமா விருது பெறும் விழாவில் விருது கேடயத்தைக் கொடுத்துவிட்டு, ‘‘எப்படி இருக்கீங்க?’’ என்றார் வாஞ்சையுடன்.

என் வயதில் இருக்கும் சிலரைப் பார்க்கும்போதுதான் எனக்கு என் வயதே நினைவுக்கு வரும். நரைத்த தலை, வழுக்கை, தொப்பை, நிறைவேறாத ஆசைகள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் எனச் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கு எப்போதுமே கவலை அண்டியது இல்லை. அது ஒரு வரம். நிறைய சம்பாதிப்பேன். பிறகு படம் எடுத்து நஷ்டமாவேன். மீண்டும் சம்பாதிப்பேன். கார் வாங்குவேன், வீடு வாங்குவேன். அதெல்லாம் போய் பழைய நிலைக்கு வருவேன். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கை என்னுடையது. சொத்து சேர்க்க வேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு இருந்தது இல்லை.
80-களில் டாட்சன் கார் புது மாடல் வந்தபோது அதை வாங்கியவர்களில் நானும் ஒருவன். சில சமயம் அந்த காருக்கு பெட்ரோல் இல்லாமலும் நிற்பேன். ஒருநாள் வெளியில் செல்ல வேண்டிய அவசியம். காரில் பெட்ரோல் குறைவாக இருப்பதாக டிரைவர் சொன்னார். கையில் இருந்த மூன்று ரூபாயைக் கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொண்டு வரச் சொன்னேன். பெட்ரோல் பங்கில், ‘சார் காருக்கு ஏன் ஒரு லிட்டர் பெட்ரோல் போடுறீங்க’ என வருத்தப்பட்டிருக்கிறார்கள். டிரைவர் வந்து சொன்னார். ஒரு நிமிடம் யோசித்தேன். நேராக கார் விற்கும் இடத்துக்கு ஓட்டச் சொன்னேன். ‘பெட்ரோல் போடுவதற்கு வசதி வந்ததும் கார் வாங்கிக்கொள்ளலாம்’ என்றேன். டிரைவர் ஆடிப்போய்விட்டார். அப்படித்தான் முடிவெடுப்பேன்.
‘முதல் மரியாதை’ தந்த வெற்றி என்னை உச்சத்துக்குக் கொண்டு போனது. சிவாஜியுடன் நான் நேரடியாகப் பணியாற்றிய படம். ஒரு காவியம் போல இரண்டு ஆண்டுகளுக்கு அந்தக் கதையைச் செதுக்கினேன். பெயரும் பணமும் புகழும் சம்பாதித்துக்கொடுத்த படம் அது. அந்தப் பணத்தில் பெசன்ட் நகரில் அருமையான வீடு வாங்கினேன். உடனே சொந்தப் படம் ஆசை ஒன்று கூடவே வருமே... வந்தது. அந்த வீட்டை விற்றுவிட்டேன். இந்த எதுவுமே என்னை பாதித்தது இல்லை. எந்த அசையா சொத்தும் என்னை அசைத்துப் பார்த்தது இல்லை. அதே நேரத்தில் பழைய ஜூனியர் விகடன் பவுண்டு வால்யூமை யாராவது தொட்டால் கோபமாகிவிடுவேன். புத்தகங்கள் எனக்குச் சொத்து. என்னதான் கம்யூனிஸ்ட் குடும்ப மூளையாக இருந்தாலும் புத்தகச் சொத்துக்களை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)
அந்தப் புன்னகை என்ன விலை?
தேனி அருகே தேவாரத்தில் நான், பாஸ்கர், இளையராஜா, அமர் நான்கு பேரும் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றோம். தென் மாவட்டங்களில் அந்த நாளில் எல்லா ஹோட்டலிலும் காலையில் கடையைத் திறந்ததும் பல் துலக்கக் கரியும், முகம் கழுவிக்கொண்டதும் நெற்றியில் பூச திருநீறும் வைப்பார்கள். எங்களிடம் இருந்த மொத்தக் காசையும் திரட்டி ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டோம்.
அப்போது இரண்டு காலும் இல்லாத ஒருவர், தன் சக்கர வண்டியில் ஹோட்டலுக்கு வந்து நெற்றியில் திருநீறு பூசுவதைப் பார்த்தேன். எனக்குப் பரிதாபமாகிவிட்டது. இரண்டு காலும் இல்லாமல் அவர் என்ன வேலை செய்து பிழைக்க முடியும்? நண்பர்களுக்குத் தெரியாமல் நான் மறைத்துவைத்திருந்த பத்து பைசாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர், ‘‘எனக்கு எதுக்குப்பா?’’ என்றார்.
‘‘பரவாயில்லை, வெச்சுக்கங்க’’ என வற்புறுத்திக் கொடுத்தேன். பாஸ்கருக்கு ‘பசியில் இருக்கிற நேரத்தில் இப்படி தானம்செய்ய வேண்டுமா’ என்ற கோபம். சிறிது நேரத்தில், கால் அற்ற அவரை ஹோட்டல் பையன் கல்லா பெட்டியில் தூக்கி உட்கார வைத்தான். அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!