மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!

சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘‘ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். ‘குடும்ப அரசியல் செய்கின்றனர்’  என்று கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவை குருமூர்த்தியா காப்பாற்றினார்? எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது! நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம். பி.ஜே.பி-யில் எந்தப் பதவியும் வகிக்காத ‘துக்ளக்’ குருமூர்த்தி அரசியல் செய்யும்போது, ஜெயலலிதாவைப் பாதுகாத்த நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா? திராவிடர்களுக்கு எதிராக பிராமணர்களுடன் சேர்ந்து குருமூர்த்திதான் சதி செய்கிறார்.’’ - 2017 பொங்கல் விழாவில் இப்படிப் பொங்கினார் நடராசன்.

ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிரான நடராசனின் இந்த சீற்றம் இப்போது ஆரம்பித்தது அல்ல. 1980-களிலேயே தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம். எம்.ஜி.ஆர் வரச் சொன்னதால் அவரைப் பார்ப்பதற்காக வீட்டின் வரவேற்பறையில் காத்திருந்தார் வலம்புரி ஜான். இப்படிப் பலமுறை எம்.ஜி.ஆர் அழைப்பதுண்டு. அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் இருந்து மஞ்சள் புடவையில் சசிகலா இறங்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் சசிகலாவை இப்படிப் பலமுறை பார்த்திருக்கிறார். முதன்முறையாக ராமாவரம் தோட்டத்தில் அவரைப் பார்த்தும் வலம்புரி ஜானுக்கு அதிர்ச்சி.

சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!

யோசனையோடு மாடிக்குப் போனார் வலம்புரி ஜான். அவரைப் பார்த்ததும் தலையணைக்குக் கீழே இருந்த ஒரு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினார் எம்.ஜி.ஆர். ‘பத்திரிகைச் சுதந்திரம் பறிபோகிறது’ எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட கண்டனக் கூட்டத்துக்கான விளம்பர நோட்டீஸ் அது. சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் கூட்டத்தில் ‘பத்திரிகையாளர்கள் சோ ராமசாமி, அருண் ஷோரி, வலம்புரி ஜான் ஆகியோர் உரையாற்றுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துகளைப் பார்த்ததுமே, ‘அது ஜெயலலிதாவின் கையெழுத்து’ என்பது வலம்புரி ஜானுக்குப் புரிந்துவிட்டது.

அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது, ‘‘எதற்காக இந்தக் கூட்டம்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்படுகிற கூட்டம்’’ என்றார் வலம்புரி ஜான். ‘‘இந்தக் கூட்டத்துக்கு உங்களை யார் அழைத்தது. நீங்கள் ஏன் போனீர்கள்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘சோ சார்... அழைத்தார். ஆனால், நான் போகவில்லை’’ என்றார் வலம்புரி ஜான். ‘‘நிச்சயமாக நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?’’ என்று திருப்பிக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர். எந்த ஏஜென்ஸி வழியாகவும் இந்த உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’’ என வலம்புரி ஜான் சொன்னதும், அதுவரை உஷ்ணத்தோடு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் சாந்தம் ஆனார். ‘‘ஏன் கலந்துகொள்ளவில்லை?’’ என எம்.ஜி.ஆர் கேட்டதும், ‘‘சோ சார்... பேசுகிறார். அதில் கலந்து கொண்டால் அவர் பேச்சை மறுத்துப் பேச வேண்டி வரும் என்பதால் போகவில்லை’’ என்று பதில் சொன்னார் ஜான். ‘‘ஸாரி’’ எனச் சொல்லி வலம்புரி ஜானை அனுப்பி வைத்த எம்.ஜி.ஆர்,  மறக்காமல் அந்த நோட்டீஸைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மூலம் குருமூர்த்தி அம்பலப்படுத்தினார். இதற்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டில், 1987 மார்ச் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்துதான் கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க எம்.பி-யும்  எம்.ஜி.ஆரின் ‘தாய்’ பத்திரிகை ஆசிரியருமான வலம்புரி ஜான் அழைக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க-வும் காங்கிரஸும் அப்போது கூட்டணிக்கட்சிகள். மாநிலத்தில் எம்.ஜி.ஆரும் மத்தியில் ராஜீவ் காந்தியும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சசிகலா ஜாதகம் - 42 - நடராசனும் குருமூர்த்தியும்!

இந்தச் சூழலில் நடந்த அந்தக் கூட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். ‘போபர்ஸ் ஊழல் குறித்து எழுதிய குருமூர்த்தி மீது ராஜீவ் காந்திக்குக் கோபம் உண்டு. அப்படிப்பட்டவரின் கைதைக் கண்டித்து நடத்தப்படும் கூட்டத்துக்கு வலம்புரி ஜான் சென்றால், ராஜீவ் காந்தி உங்களைப் பற்றி என்ன நினைப்பார்? இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க எம்.பி எப்படிப் போகலாம்?’ என எம்.ஜி.ஆரிடம் பற்ற வைத்தார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்துக்கான நோட்டீஸில் தன் கைப்பட குறிப்புகள் எழுதி, உயிர்த்தோழி சசிகலா மூலம் அனுப்பியிருந்தார் ஜெயலலிதா. அந்தப் பேப்பரைக் கொடுக்கத்தான் சசிகலா அன்றைக்கு ராமாவரம் தோட்டத்துக்கு வந்து போனார்.

ஜெயலலிதாவுக்கு மந்திராலோசனை சொல்கிறவர் வலம்புரி ஜான் என நினைத்துக் கொண்டு இந்த இருவருக்கும் இடையே பெரிய தடுப்புச் சுவரை எழுப்பினார் நடராசன். அதற்காக வலம்புரி ஜானையும், பிராமணரான குருமூர்த்தியையும் ஒரே கல்லில் வீழ்த்துவதற்கு, கண்டனக் கூட்டத்தை வைத்து, சதுரங்கம் ஆடினார் நடராசன்.

2017-ம் ஆண்டுக்கு வருவோம். இப்போது குருமூர்த்தியும் நடராசனும் என்ன சொல்கிறார்கள்.

‘‘சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர்’’ - குருமூர்த்தி

‘‘குருமூர்த்தி அரசியல் செய்யும்போது நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா?’’ - நடராசன்

(தொடரும்)