Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

போஸ்டல் ராஜ், திருநாவலூர்.

தமிழ்நாட்டின் இந்த அவலமான நிலைக்கு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா...இவர்களில் யார் காரணம்?


ஒட்டுமொத்தமாக தமிழகம் அவலநிலையில் இருக்கிறது என்பதும் தவறு. எந்த அவலத்துக்கும் இவர்கள் மூவர்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகால அவலங்களில் பல விஷயங்களுக்கு இவர்கள் மூவரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

 ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில், நீர் மேலாண்மைத் திட்டங்களுக்குத் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறதா?


அப்படி எந்தவிதமான யோசனையோ, அக்கறையோ தமிழக அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அக்கறையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் முன்னேற்றம் காண முடியும்.

ஏ.கணேசன், தூத்துக்குடி.

தமிழக அரசியல் நிலவரம் பற்றி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா என்ன நினைத்துக்கொண்டு இருப்பார்?


அரசியல் நிலவரம் குறித்து அறியும் ஆவல் அவருக்கு இல்லை. அதனால்தான் முதலமைச்சர், அமைச்சர்கள், அ.தி.மு.க பிரமுகர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களில் சிலரை மட்டும் பார்க்கிறார். அவர்களிடமும் உடல்நல விசாரிப்புகள் மட்டும்தான் நடக்கிறது. தன்னை இந்த  நிலைமைக்கு உள்ளாக்கிவிட்டவர்கள் மீது கோபம் இருக்கலாம். அந்தக் கோபத்தைக் காட்டவும், செயல்படுத்தவும் அவரால் முடியாது. அதை உணர்ந்தவராகத்தான் சசிகலா இருப்பார்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.


அ.தி.மு.க அரசின் ஆயுள் காலம் முடிந்துவிடுமா?


அப்படிச் சொல்ல முடியாது. அமைதியாக இருந்தால் நான்கு ஆண்டுகளை நிம்மதியாக ஓட்டலாம். ஏதாவது பிரச்னைகளில் சிக்கிக்கொண்டால் நான்கு மாதங்களில்கூட கதை முடிந்துவிடும். ‘அடுத்த தேர்தலில் வெல்லும் மந்திரம் இன்றைய அ.தி.மு.க-விடம் இல்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கழுகார் பதில்கள்!

கோ.பாலன், சென்னை-2.

ரஜினிகாந்த், கணக்கில் வைக்கப்பட வேண்டிய திறனா அல்லது தீர்ந்துவிட்ட திறனா?


சினிமாவைப் பொறுத்தவரை அவர் கணக்கில் வைக்கப்பட வேண்டிய திறனே. அரசியலைப் பொறுத்தவரை அவர் தீர்ந்துவிட்ட திறன்தான். சினிமாவில் அவரை நம்பி பல நூறு கோடி முதலீடு செய்யப்படுகிறது. அரசியலுக்கு அவர் 1996-லேயே வந்திருக்க வேண்டும்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.


‘ நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசுதான் மாணவர்களைக் கெடுக்கிறது’ என்று கூறுகிறாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?


நாடு முழுக்க ஒரு தேர்வு நடக்கும்போது, அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு கேட்பதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதற்கான வழிமுறையைச் சரியாகப் பின்பற்றவில்லை. இப்படி ஒரு விதிவிலக்குத் தருவதாக இருந்தால், அதற்கு மத்திய அரசுதான் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்கு முயற்சி எடுக்காமல், ‘தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விதிவிலக்கு கிடைத்துவிடும்’ என்று ஆசை காட்டியது தமிழக அரசு. இதுவும் தவறானது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.

வால்டர், கோவை.

தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என்று பெண்களும் இளைஞர்களும் போராடுவது பாராட்ட வேண்டிய செயல்தான். அதேபோல், தங்கள் பகுதியில் இருக்கும் ஆற்று மணலை அள்ளக்கூடாது என்று தடுக்க வேண்டியதும் இவர்கள் கடமைதானே? ஏன் இவர்கள் போராட்டம் நடத்தவில்லை. பயமா?


பயமல்ல காரணம். டாஸ்மாக் கடைகள் போல மணல் கொள்ளை நேரடியாக, உடனடியாக நம் குடும்பங்களைப் பாதிக்கவில்லை என்பதுதான் காரணம். அதேசமயம், மணல் கொள்ளைக்கு எதிராகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், அது பெருமளவில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். இந்த டாஸ்மாக் விஷயத்துக்கும் மேலான பாதிப்பு இந்த மணல் கொள்ளையில் இருக்கிறது. இது குடும்பங்களை அல்ல, பூமிப் பந்தையே பாதிக்கக்கூடிய விஷயம் என்பதை உணர்வதற்குக்கூட நேரமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது இன்றைய வாழ்க்கைச்சூழல். மணல், நீர், மரம் போன்ற இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகிறது. கமிஷனுக்கு ஆசைப்படும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதைத் திறம்பட செய்து வருகின்றனர்.

வி.ஐ.பி. கேள்வி

கழுகார் பதில்கள்!

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் மூத்த தலைவர்)

தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏதுமின்றி, உணர்ச்சிமயமான பரபரப்புச் செய்திகளை மட்டுமே தமிழக இளைஞர்கள் பின் தொடர்வது ஏன்?

ட்டுமொத்த இளைஞர்களும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது. அதிக சதவிகிதத்தினர் என்று வேண்டுமானால் சொல்லாம்.

உணர்ச்சிமயமான செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறு இல்லை. பரபரப்பான செய்திகளில் ஆர்வம் இருப்பதிலும் தவறு இல்லை. அடுத்து ஒரு பரபரப்பான செய்தி வந்ததும், இந்தச் செய்தியை அப்படியே விட்டுவிட்டு மறந்து போவதுதான் தவறானது. இன்றைய ஃபாஸ்ட் புட் யுகத்தில் எல்லாமே அவசர அவசரமாகத்தான் நடக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் அது நம்மை வந்து அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் மறக்கடிக்கவும் படுகிறது. இதில் அதிக இளைஞர்கள் பலியாகிறார்கள்.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி, முதலீடுகள், வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தங்களது வாழ்க்கையோடு தொடர்புடையவை என்ற புரிதல் அவர்களுக்கு இல்லை. ‘நான் படித்தேன், நான் பாஸ் ஆனேன், நான் வேலைக்குப் போனேன்’ என்று எல்லாவற்றையும் தன்னுடைய கோணத்தில் மட்டுமே பார்க்கப் பழகிவிட்டதால், பரந்து பட்ட ஒரு பொதுநோக்கம் இல்லாமல் போய்விட்டது. ஒரு மாநிலம் அனைத்து விஷயங்களிலும் பாழ்பட்டுப்போனால், எந்த மிகச் சிறந்த இளைஞனும் தனிப்பட்ட அளவில் வளர முடியாது என்பதை இவர்கள் உணர்வது இல்லை.

அரிசி ஏதோ ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் விளைவதாக நினைப்பது மாதிரிதான், தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு போன்றவற்றையும் யாரோ எங்கோ நடத்துவதாக, அல்லது நடத்தத் தவறுவதாக இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது அந்த இளைஞர்களின் தவறு மட்டுமல்ல. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த உணர்ச்சிமயமான, பரபரப்பான பாணியில் பொதுநோக்கம் குறித்த செய்திகளும் பரப்பப்பட வேண்டும். முன்னுரிமை தரப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!