Published:Updated:

தனக்கு எதிராக புகார் கொடுத்தவர்களுக்கு கல்தா! - அமைச்சர் மீது அதிரடி புகார்

தனக்கு எதிராக புகார் கொடுத்தவர்களுக்கு கல்தா! - அமைச்சர் மீது அதிரடி புகார்
தனக்கு எதிராக புகார் கொடுத்தவர்களுக்கு கல்தா! - அமைச்சர் மீது அதிரடி புகார்
தனக்கு எதிராக புகார் கொடுத்தவர்களுக்கு கல்தா! - அமைச்சர் மீது அதிரடி புகார்

விருதுநகர்: தங்கள் தொகுதிக்காரர் அமைச்சரானால் அதிகாரம் செலுத்தி செழிப்பார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். ஆனால், 'வைகைச்செல்வன் அமைச்சரானதால் நாங்கள் பழிவாங்கப்பட்டு ப‌தவிகளை இழந்திருக்கிறோம்' என்று கண்ணைக் கசக்குகிறார்கள் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. காரர்கள்!

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. கோபாலசாமி என்று தொகுதிக்கு ஒரு கோஷ்டி உண்டு. இதில் அருப்புக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள். அமைச்சர் வைகைசெல்வன், எம்.எல்.ஏ.வாக மட்டும் இருந்தபோது அவருக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் கடும் உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

இதையடுத்து வைகைச்செல்வனை எதிர்த்து அருப்புக்கோட்டை அ.தி.மு.க நகரச்செயலாளர் கண்ணன், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் கெப்பையராஜ் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவை சந்தித்து புகார் கொடுக்க புறப்பட்டனர். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அவர்களால் முடியவில்லை. வைகைச்செல்வனுக்கு எதிராக புகார் மனுக்களை கொட‌நாட்டில் இருந்த ஜெயலலிதாவின் பிரதிநிதிகளிடம்  கொடுத்து விட்டு வந்தனர்.

உடனே இது பற்றி வைகைச்செல்வனுக்கு தகவல் போனது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தன் மீது கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்ததாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இவரும் பதிலுக்கு புகார் செய்தார். கொஞ்ச நாள் பிரச்னை இப்படியே போய் கொண்டிருந்தது. இந்த நிலையில் வைகைச்செல்வன் சமீபத்தில் பள்ளிக்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உடனே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி அமைச்சர் வைகைச்செல்வனிடம் அடம் பிடித்தது.

வைகை தனது மேலிட‌ செல்வாக்கை வைத்து, அருப்புக்கோட்டை அ.தி.மு.க நகரச்செயலாளர் கண்ணன்,  ஒன்றிய செயலாளர் கெப்பையராஜ், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களான சிவசங்கரனை நகரச்செயலாளராகவும், ஒன்றிய செயலாளராக பந்தல்குடி முருகேசனையும், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக விருதுநகர் வெங்கடேஷ்சையும் நியமனம் செய்திருக்கிறார்.

இந்த அதிரடியால் மிரண்ட‌ கொடநாடு போன மற்ற கட்சி நிர்வாகிகள் இப்போது வைகைச்செல்வனுக்கு துதிபாடுகிறார்கள். இவர்களிடம் சிரித்துப் பேசும் வைகைச்செல்வன், பிற்பாடு தனது ஆதரவாளர்களிடம், 'கொட‌நாடு கோஷ்டி பூராவும் நம்மக்கிட்ட வருது" என்று சொல்லி கமெண்ட் அடிக்கிறாராம். பதவி பறிப்புக்கு ஆளான கட்சி நிர்வாகிகள்  மாவட்ட செயலாளரான அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் முறையிட,  நான் உங்களை நீக்குவதற்கு கட்சி மேலிடத்துக்கு நோட் எதுவும் வைக்கவில்லை. நமக்கு பிடிக்காதவரு கட்சி மேலிடத்தில் நேரடியாக நோட் வைத்து நிர்வாகிகளை மாற்றுகிறார். இப்படியே போனால்  மாவட்ட செயலாளரான எனக்கு என்னதான் மரியாதை?" என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராதா என்ன - அதுவும் அ.தி.மு.க-வில்!

எம்.கார்த்தி
படம்: ஆர்.எம்.முத்துராஜ்