அரசியல்
தொடர்கள்
Published:Updated:

“நான் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த நிர்பந்தமும் இல்லை!” - ஜெயானந்த் அதிரடி

“நான் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த நிர்பந்தமும் இல்லை!” - ஜெயானந்த் அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த நிர்பந்தமும் இல்லை!” - ஜெயானந்த் அதிரடி

“நான் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த நிர்பந்தமும் இல்லை!” - ஜெயானந்த் அதிரடி

ந்தவொரு விவகாரம் குறித்தும் வெளிப்படையாகப் பேசும் வழக்கம் சசிகலா குடும்பத்தினருக்கு இல்லை. ஆனால், அதற்கு மாறாக, தன் முகநூல் பக்கத்தில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வருபவர், ஜெயானந்த். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன். நம்முடைய கேள்விகளுக்கும் தயங்காமல் அவர் பதில்கள் அளித்தார்.

“உங்கள் அப்பா திவாகரன் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து, ‘இது என் பிறந்த நாள் பரிசு’ என்று சொல்லியுள்ளீர்கள். அறக்கட்டளை, உங்கள் அரசியல் பிரவேசத்துக்கானதா?”

‘‘என் பிறந்த நாளில் ‘திவாகரன் அறக்கட்டளை’ ஆரம்பித்தோம். அறக்கட்டளை மூலமாக இரண்டு பணிகளைச் செய்யவுள்ளோம். ராணுவ வீரர்கள் பணிக்காலத்திலே மரணம் அடைந்தால், அந்தக் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க போகிறோம். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வோம். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எங்களுக்கு விவசாயத்தின் அருமை நன்றாகத் தெரியும். வறட்சி காரணமாக, பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்தவகையில் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகள் செய்யப்போகிறோம். இதுபோன்ற உதவிகளைப் பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்போது, அறக்கட்டளையை ஏற்படுத்தி அதை முறைப்படுத்தி இருக்கிறோம்... அவ்வளவுதான். இதற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.”

“நான் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த நிர்பந்தமும் இல்லை!” - ஜெயானந்த் அதிரடி

“எதிர்காலத்தில், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிடப்போவதாகச் சொல்லப்படுகிறதே?”

“நான் அரசியலுக்கு வரக் கூடாது என்று எந்த நிர்பந்தமும் இல்லையே. ஆனால், இப்போது தேர்தலில் நிற்கும் எண்ணம் எனக்கு இல்லை. நடப்பதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘அரசியலில் நீ ஈடுபடவில்லை என்றால், அதற்குத் தண்டனையாக, உன்னைவிட கீழ் நிலையில் உள்ளவர்களால் நீ ஆளப்படுவாய்’ என்று அரசியலைப் பற்றி கிரேக்க அறிஞர் பிளாட்டோ சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தையே நான் இப்போது பின்பற்றுகிறேன். (‘கீழ்நிலையில் உள்ளவர்’ என்று யாரைச் சொல்கிறாரோ!) அதனால், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.”

“அ.தி.மு.க-விலிருந்து உங்கள் குடும்பம் முற்றிலுமாக ஒதுங்கிவிட்டதா? நீங்கள் அ.தி.மு.க-வில் இணைந்து செயல்படுவீர்களா?”

“தற்போதைய சூழ்நிலையில், இதற்கு என்னால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்களேன்.”

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?”

“இந்த ஆட்சி உண்மையிலே நன்றாகச் செயல்படுகிறது. அதற்கு உதாரணம், ‘மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்’ என்ற துணிச்சலான அறிவிப்பு. இயற்கையைப் பாதுகாக்கும் அரசாக இது மாறியிருக்கிறது.”

“உங்கள் குடும்பத்தை ஓ.பி.எஸ் அணியினர் எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? உங்கள் அப்பாவை மையமாக வைத்தே, தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?”

“அப்பா, இதுவரை கட்சியைப் பற்றி தவறாக எந்தக் கருத்தையும் பேசியது கிடையாது. ஆட்சியும், கட்சியும் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், அ.தி.மு.க என்ற கட்சியே இருக்கக் கூடாது என்று அந்த அணியில் உள்ள சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு, ‘தமிழகம் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என்ற எண்ணம் உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பலர் அந்த அணியில் இருக்கிறார்கள். தேர்தல் வந்தால் மீண்டும் ஜெயிப்பதற்கு வாய்ப்பு வரும் என்று கணக்குப் போடுகிறார்கள். அதனால், இப்படியொரு குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள்.”

“அ.தி.மு.க-வில் இருந்து உங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நினைப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?”

“அம்மாவின் இறுதி நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தினருடன் நல்ல முறையில் அவர் பேசினார். எனவே, அவ்வாறு மோடி நினைக்கவேண்டிய அவசியமே இல்லை. அது ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட விஷயம்.”

“கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று தினகரனுக்கு உங்கள் குடும்பத்திலேயே நெருக்கடி கொடுக்கப்பட்டதாமே?”

“தினகரன்மீது எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்த மனவருத்தமும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தபோது, எங்கள் குடும்பத்தினர் யாருமே எதிலும் தலையீடு செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, இதுமாதிரி வதந்திகள் எப்படிக் கிளம்புகின்றன என்றே தெரியவில்லை.”

“அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவதற்கு, திவாகரன்தான் தடையாக இருக்கிறார் என்று ஓ.பி.எஸ் அணியினர் சொல்கிறார்களே?”

“இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள், யார் விரும்பவில்லை என்பதை ஓ.பி.எஸ் ஸிடமே கேட்டுப்பாருங்கள். அணிகள் இணைவதற்கு நாங்கள் தடையாக இல்லை என்பது அப்போது தெரியும்.”

- அ.சையது அபுதாஹிர்