Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

செ.அ.ஷாதலி, தென்காசி.

இந்திய விடுதலைக்காகப் போராடிய காந்திக்கும் நேதாஜிக்கும் என்ன வித்தியாசம்?


இருவரது இலக்கும் ஒன்றுதான். ஆனால் வழிமுறையில்தான் வித்தியாசம். ‘எனது லட்சியம் நிறைவேற தாமதம் ஆனாலும் பரவாயில்லை, அதற்கான வழிமுறை அகிம்சையாக இருக்க வேண்டும்’ என்று சொன்னவர் காந்தி. ‘ரத்தத்தைத் தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறேன்’ என்று சொன்னவர் நேதாஜி. இருவரும் தங்கள் வழிமுறையில் உறுதியாக இருந்து, அதற்காக தங்களையே பலிகொடுத்தவர்கள் என்பதால், நாம் எப்போதும் நினைத்து வணங்கத் தக்கவர்கள்.

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார்’ என்கிறாரே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நக்மா?


 ஒரு படத்தில் நடிக்கும்போதே அடுத்த படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதைப் போல... நக்மா இப்போதே ரஜினி கட்சிக்கும் தூதுவிடுகிறார் போலும்!

கழுகார் பதில்கள்!

அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கத் தயங்குவது ஏன்?


ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்களை இவர் நீக்கப் போக, அவர்கள் ஆளுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களுடன் கழன்று கொண்டால் எடப்பாடியின் பதவியே காலியாகி விடாதா? நீங்கள் முதலுக்கே... அதாவது, முதல்வருக்கே மோசம் நினைக்கிறீர்களே! ஆனால், அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஜெயலலிதாவின் சொத்துகள் அரசுக்கா? வாரிசுகளுக்கா? கட்சிக்கா?


அவருடைய உயில் எங்கே என்பது மர்மமாகவே இருக்கிறது. இல்லையென்றால், மூன்று தரப்புக்கும் சம பங்கு வைக்கலாம்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தமிழக அரசியலில் இனியும் திரையுலகத்தினருக்கு வாய்ப்பு உள்ளதாகக் கருதுகிறீர்களா?


அப்படி ஒரு வாய்ப்பு இனியும் இருப்பதாகக் கருதவில்லை. ரஜினியின் அரசியல் வருகை செய்தியே பரபரப்பை அடையவில்லை என்பதுதான் உண்மை. மேலும், ‘ரஜினி வந்தால் வரவேற்போம்’ என்று ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களே சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கே ரஜினியைப் பற்றிய பயம் விட்டுப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்.

பொன்விழி, அன்னூர்.

துர்கா ஸ்டாலினின் ஆஸ்தான ஜோசியர் யார்?


நீங்கள் அந்த ஜோசியரின் மார்க்கெட்டைக் கூட்ட நினைக்கிறீர்கள் போலும்?! ஸ்டாலின் கடற்கரையில் காற்று வாங்குவதும், கோயில் குளத்தைத் தூர் வாருவதும் அவர் சொல்லித்தான் நடக்கிறது என்று கேள்வி!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின் என்பது போல... ஸ்டாலினின் வாரிசு உதயநிதிதானா?


அது இருக்கட்டும்... ஸ்டாலினுக்கு அழகிரி என்ற போட்டி இருந்ததைப் போல, உதயநிதிக்கு சபரீசன் இருக்க முடியாதா?

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி-54.


அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் தற்போதைய நிலை என்ன?


ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது இந்த நூலகம். தி.மு.க ஆட்சியில் 5 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. அதை அப்படியே ‘பேய் பங்களா’ மாதிரி ஆக்கிவிட்டார் ஜெயலலிதா. சென்னை உயர் நீதிமன்றம் எத்தனையோ உத்தரவு போட்டும் ஒன்றும் செய்யவில்லை.  இப்போது  தினமும் காலையிலேயே மாணவர்கள் டோக்கன் வாங்க கூடிவிடுகிறார்கள். புதிதாக 30 ஆயிரம் புத்தகங்கள் வாங்க உத்தரவு போடப்பட்டுள்ளது. நூலகத்தைச் சீரமைக்க பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வாரம்தோறும் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன. ஞாயிறுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. அண்ணா உயிர் பெற்று வருகிறார்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

‘அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னம் கூடாது’ என்று சொல்கிறாரே சீமான்?


ஒரு தடவையாவது வென்ற பிறகுதான், சின்னம் எவ்வளவு முக்கியம் என்று சீமானுக்குத் தெரியும்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ரஜினி - நக்மா சந்திப்பு சம்பிரதாயமானதுதானா அல்லது, அரசியல் செய்தி உள்ளதா?


‘‘அரசியலுக்கு நீங்கள் வாருங்கள், ஆட்சேபனை இல்லை. ஆனால், பி.ஜே.பி-யில் சேர வேண்டாம்’’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் தகவலை ரஜினியிடம் சொல்வதற்காக நக்மா வந்ததாகச் சொல்கிறார்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்சி ஆரம்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?


ஏதாவது ஒரு சமாதிக்குப் போக வேண்டும். தியானம் செய்ய வேண்டும். அல்லது, சமாதியில் அடித்து சத்தியம் செய்ய வேண்டும். மூன்று முறை வலம் வர வேண்டும். அல்லது வலம் வந்தவரின் கணவராக இருக்க வேண்டும். இவைதான் தகுதி என்றால்... ஒரு கூடை மாம்பழம் இருந்தால் அதை வைத்தும் கட்சி ஆரம்பிக்கலாம்.

சுப.உதயகுமார், (தலைவர், பச்சை தமிழகம்)

கழுகார் பதில்கள்!

தமிழக அரசியலை, பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவதற்கு ஊடகங்கள் போதிய அளவு பங்களிப்புச் செய்கின்றனவா?

தமிழக அரசியலை, பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவது ஊடகங்களால் மட்டும் முடியாது. அதனைப் பொதுமக்களும் பொதுவாழ்வில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு ஊடகங்கள் உதவி செய்யலாம்.

ஊடகங்கள் அத்தகைய காரியத்தைச் செய்து வருகின்றன. இன்றைய அரசியல் ஊழல்மயமானது, அராஜகமானது. அதிகார துஷ்பிரயோகமானது. இதனை காட்சி ஊடகங்களும் இணைய ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. அந்தரங்கத்தில் நடப்பதை அரங்கத்துக்குக் கொண்டு வந்து கொட்டுவதே, அதனைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

செய்திகளைச் சொல்வதோடு தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்காமல் அதனை விவாதப் பொருளாக ஊடகங்கள் மாற்றிக்கொண்டு இருக்கின்றன. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் வெளியிடுவதால்தான், அந்தப் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. போராட்டத்தின் வேகம் தக்க வைக்கப்படுகிறது. வெற்றியும் கிடைக்கிறது.

இதில் ஒவ்வொரு ஊடகத்துக்கும் பங்களிப்பில் கூடுதல், குறைவு இருக்கலாம். ஆனால், பங்களிப்பு இல்லை என்று சொல்ல முடியாது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!