
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘‘தியாகச் செயல்களாலும் தீப்பொறி பேச்சுக்களாலும் தமிழ்ப் பற்றுக் கொண்ட இளைஞர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியனையும் பேராசிரியர் அன்பழகனையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கலைஞர் முன்னேறியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சுவை மிகுந்த திரைப்பட வசனங்களால் கிடைத்த மிகப்பெரிய விளம்பரம். இரண்டு, மேடைப் பேச்சுகளோடு நின்றுவிடாமல் சாதாரணத் தொண்டர்களோடும் பழகி அவர்களின் செயலாற்றலை ஊக்குவித்தது.’’ - கருணாநிதிக்கு நடராசன் சூட்டிய பாராட்டுரை இது!
பள்ளி மாணவராக இருந்தபோது, கருணாநிதியின் எழுத்திலும் பேச்சிலும் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் நடராசன். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திய அந்தப் போராட்டத்தில், அண்ணா தலைமையிலான தி.மு.க-வும் பங்கெடுத்தது. கருணாநிதி மீது அன்பு வைத்திருந்த நடராசனுக்கு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட கருணாநிதி மீது கோபம். நீதிமன்றத்தில் கருணாநிதி அளித்த வாக்குமூலம்தான் நடராசனின் கோபத்துக்குக் காரணம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையொட்டி, 1965 பிப்ரவரி 16-ம் தேதி கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி அளித்த வாக்குமூலத்தில், ‘என்னைக் காவலில் வைத்திருப்பது தவறான நோக்கத்தின் அடிப்படையில்தான். நானோ, எனது கட்சியோ மாணவர் கிளர்ச்சியைப் பற்றி எதுவும் சொன்னதில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார். சிறை வாழ்க்கையை அஞ்சாமல் ஏற்று வந்த கருணாநிதி, சிறையிலிருந்து விடுதலைப் பெற மனு போட்டது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தஞ்சையில் தலைமையேற்று நடத்தி வந்த நடராசனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்த விஷயம் நடராசனை உறுத்திக்கொண்டே இருந்தது. கருணாநிதி மீது கோபத்தில் இருந்த நடராசனின் திருமணத்தை, கருணாநிதிதான் நடத்தி வைத்தார்.
மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.எஸ்ஸி பட்டத்தை வாங்கி வெளியே வந்த நடராசனுக்கு, அரசியல் ஆசை எட்டிப் பார்த்தது. கல்லூரிக் காலத்தில் கட்சி சார்பற்ற முறையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்ட நடராசன், பட்டதாரி ஆனபிறகு மொழிப் போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த தி.மு.க-வில் இணைய முடிவெடுத்்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன்தான். இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் அண்ணா, 1967 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தார் நடராசன்.
அரசியலில் குதித்த நடராசன், இந்தி எதிர்ப்பு மாநாட்டை தஞ்சையில் நடத்த களமிறங்கினார். அதற்காக எல்.கணேசனின் உதவியை நாடினார். தஞ்சையில் இருக்கிற கல்லூரிகளின் மாணவர் தலைவர்களை எல்லாம் அழைத்துக் கூட்டம் போட்டார். சிறப்பு விருந்தினராக அண்ணா பங்கேற்க வேண்டும் என எண்ணி, அவரிடம் தேதி கேட்க முயன்றார். அப்போது தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த அண்ணா, தஞ்சை வ.உ.சி நகரில் இருந்த மத்திய அரசுச் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அண்ணாவைச் சந்தித்துத் தேதி வாங்கப் போனார் நடராசன். அண்ணா அருகில் இருந்த மன்னை நாராயணசாமி, ‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தஞ்சையில் நடத்திய மாணவர் தலைவர்களில் நடராசனும் ஒருவர்’’ என அண்ணாவுக்கு அறிமுகம் செய்தார்.
தி.மு.க உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தஞ்சையின் தளகர்த்தர்களில் மன்னை நாராயணசாமி முக்கியமானவர். இவர் தலைமையில்தான் நடராசனின் திருமணம் 1973 அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்றது. சசிகலாவின் கழுத்தில் நடராசன் கட்டிய தாலியை எடுத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அந்தத் தாலியை அப்போது சுமந்த சசிகலாதான், தமிழக அரசியலில் பிறகு கோலோச்சுவார் என கருணாநிதி கிஞ்சித்தும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி மீது வருத்தம் கொண்ட நடராசன், அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியை வைத்துதான் தன் திருமணத்தை நடத்தினார். அந்த நடராசன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி பிறகு விவரித்தபோது கருணாநிதியை என்ன சொன்னார் தெரியுமா?
‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அடித்தளத்தின் மீதுதான் கலைஞர் போன்றவர்கள் அமைச்சர்கள் ஆகக் கூடிய தி.மு.க ஆட்சி மாளிகை 1967-ல் அமைய முடிந்தது. இப்படி அமைந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே தமக்குச் சம்பந்தம் இல்லாதது போல நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து விடுதலை பெறத் துடித்த கலைஞர்தான், மாணவர் போராட்டம் தந்த உச்சக் கட்டப் பலன்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.’’
(தொடரும்)