Published:Updated:

'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விகள்!

'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விகள்!
'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விகள்!

அமித் ஷா, ஊழல் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமையாவது இருக்கிறதா?’’ என கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக எதிர்க் கட்சியினர்.

‘பி.ஜே.பி-யின் தேசிய தலைவர் அமித் ஷா-வின் தமிழக விசிட்டுக்குப் பிறகு தமிழகத்தில் 'ரெய்டு மேளா' நடந்து முடிந்திருக்கிறது. எடப்பாடி பொறுப்பில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டரை குறி வைத்து சோதனைகளை நடத்தியிருக்கிறது வருமானவரித் துறை.

தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்கிற பி.ஜே.பி-யின் திட்டத்தின் ஒருபகுதியாக பூத் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார்கள். ‘மகா சக்தி‘, ‘சக்தி கேந்திரம்‘ என்கிற காரியகர்த்தாக்கள் எனப்படும் வாக்குச்சாவடி ஊழியர்களை மாநில வாரியாக சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கி வருகிறார். தமிழகத்தின் 15 ஆயிரம் பூத் பொறுப்பாளர்களை சந்தித்திருக்கிறார். 

‘‘இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்தான்’’ என சொல்லிவிட்டு போயிருக்கிறார் அமித் ஷா. இதற்கு எதிர்வினைகள் கிளம்பின. ஆனால், இப்படி அவர் சொல்வது முதல் முறை அல்ல. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ‘‘எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடைபெறுகிறது.'' என சொன்னார். 

இப்படி சொல்லும் அமித் ஷா மீதுதான் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் படிக்கப்படுகின்றன. ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அவர் இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் 745 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிற அதிர்ச்சி செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியானது. கடந்த ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினரானபோது அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்திருந்தது. 2012-ல் 8.54 கோடி ரூபாயாக இருந்த சொத்து 2017-ல் 34.31 கோடியாக உயர்ந்துவிட்டது. 

‘‘மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபிறகு, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வந்த ‘டெம்பிள் என்டர்பிரைசஸ்‘ என்ற நிறுவனம் 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்தது’’ என ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்ட கட்டுரையால் அரசியல் புயல் வீசியது. ‘‘பண மதிப்பிழப்பு முடிவு அமித் ஷா மகனுக்கு முன்கூட்டியே தெரியுமா?’’ என கேள்வியை வீசியது காங்கிரஸ். ‘‘இப்படியான குற்றச்சாட்டுகள் படிக்கப்படும் அமித் ஷா, ஊழல் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமையாவது இருக்கிறதா?’’ என கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக எதிர்க் கட்சியினர். ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு பி.ஜே.பி.தான் துணை நிற்கிறது. ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை தாங்கிப் பிடிப்பதே அவர்கள்தான்’’ என்கிறார் தினகரன்.

தமிழகத்துக்கு அளித்த திட்டங்கள் என்ன?

அமித் ஷா தனது பேச்சில் தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த திட்டங்கள் பற்றியும் விரிவாக பட்டியலிட்டார். ‘‘சென்னை மோனோ ரயில் திட்டத்துக்காக 3,267 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார். ‘‘மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என ஜுலை 3-ம் தேதிதான் சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர் தங்கமணி. அடுத்த 7-வது நாளில்தான் அமித் ஷா சென்னை வந்தார். அப்படி வந்தவரிடம் ‘மோனோ ரயில் ரத்து’ அறிவிப்பை தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் சொல்லியிருக்கலாம். ஏன் சொல்ல மறந்தார்கள்? தான் படிக்கப் போகும் உரையை லோக்கல் பி.ஜே.பி தலைவர்களிடம் காட்டி, அமித் ஷா செக் செய்திருந்தால் தவறை திருத்தியிருக்க முடியும். மாநில தலைமையைக்கூட நம்பாத நிலையில், தேசிய தலைவர் இருக்கிறாரா... ஒரு தகவலைக்கூட உறுதி செய்து கொள்ள முடியாத அளவுக்கா மத்திய அரசின் ஏஜென்சிகள் இருக்கின்றன? ஒரு திட்டம் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வதில் ஒற்றுமை இல்லாத நிலையில், தமிழகத்தில் பி.ஜே.பியின் வாக்குகளை ஒற்றுமையாக்குவது சாத்தியமா? மாநில அரசால் கைவிடப்பட்ட திட்டத்துக்கு அமித் ஷா சொல்லியபடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த நிதியை தமிழக அரசு என்ன செய்தது? அல்லது நிதியே அளிக்கப்படவில்லையா என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இரு தரப்பும் அமைதி காப்பது எதற்காக?

தமிழக நதிகள் இணைப்புக்கு நிதியுதவி, சென்னை - கோவை, சென்னை -மதுரை வழித்தடங்களில் புல்லட் ரயில், மாமல்லபுரம் வரையில் பறக்கும் ரயில், கச்ச தீவு உரிமை, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்கல ஏவுதளம், மகேந்திரகிரியில் இந்திய வான்வழி திரவ உந்துவிசை தொழிநுட்ப மையம், குளச்சல் துறைமுகத்தை பன்னாட்டு துறைமுகமாக மாற்றுதல், ஐ.சி.எப் இரண்டாவது யூனிட், திருவான்மியூர் டூ மாமல்லபுரம் ரயில் பாதை, ராயபுரத்தில் புதிய ரயில் முனையம், ஸ்ரீபெரும்புதூரில் விமான தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என எத்தனையோ திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றும் என எதிர்பார்த்தது தமிழ்நாடு. ஏமாற்றியது மத்திய அரசு. பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டம், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்கள்கூட அந்தரத்தில் நிற்கின்றன.

மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளால், தமிழ் செம்மொழி பிரகடனம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நெசவாளர்களுக்கு சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, சென்னை மெட்ரோ ரயில், கடல்சார் தேசிய பல்கலைக் கழகம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இத்தனையும் செய்த தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரத்தியடித்தது தமிழகம். 

கோரிக்கைகள் நிறைவேறாதது ஒரு பக்கம் என்றால் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியத்தில் மெத்தனம், விவசாயிகள் நிர்வாண போராட்டம் என தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில்தான், ‘‘தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சி அமைய பாடுபடுவோம்’’ என சொல்லியிருக்கிறார் அமித் ஷா. இது சாத்தியமா? என்பது அப்பாவி தமிழனுக்கூட தெரியும் அமித் ஷாவுக்கு தெரியாமல் போகுமா?

பின் செல்ல