Published:Updated:

சிக்கியது செய்யாத்துரை.. சிக்கப்போவது யார்.. யார்? - 'மெகா' ரெய்டு ஸ்கெட்ச்

செய்யாத்துரையின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில், ரூ. 28 கோடி, சேத்துப்பட்டில் வசித்த இன்னோர் உதவியாளர் ஜோன்ஸ் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரில் ரூ. 40 கோடி, அண்ணா சாலையில், மிகச் சாதாரணமாக இருந்த ஓர் அலுவலகத்தில் ரூ. 4 கோடி எனக் கோடிகளனைத்தும் மிகச் சாதாரணமாகக் கிடைத்துள்ளன.

சிக்கியது செய்யாத்துரை.. சிக்கப்போவது யார்.. யார்? -  'மெகா' ரெய்டு ஸ்கெட்ச்
சிக்கியது செய்யாத்துரை.. சிக்கப்போவது யார்.. யார்? - 'மெகா' ரெய்டு ஸ்கெட்ச்

ருமானவரிப் புலனாய்வுத்துறையின் ரெய்டு காரணமாக முக்கிய வி.ஐ.பி-க்கள் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரையின் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் நிறுவன ஊழியர்களின் வீடுகளில் நான்காவது நாளாக ரெய்டு நடவடிக்கை தொடர்ந்தபடி இருக்கிறது. செய்யாத்துரையின் மகன் நாகராஜூக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலும் இதே சோதனை தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, முடக்கப்பட்டுள்ள டபுள் டிஜிட்டல் கொண்ட வங்கிக் கணக்குகள், லாக்கர்களை இந்த ரெய்டுக்குப் பின்னர் திறந்து ஆய்வு செய்யவும் ஐ.டி. (வருமான வரிப் புலனாய்வுத்துறை) தரப்பில் திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2013 ம் ஆண்டு வரையில், மிகச்சாதாரண வணிகராக இருந்த செய்யாத்துரை, கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசின் `கிரேட் ஒன்' ஒப்பந்ததாரராக வளர்ச்சியடைந்த பின்னணி குறித்தெல்லாம் விசாரணை துல்லியமாக நகர்கிறது. 2017-18 நிதியாண்டில் மட்டுமே  ரூ.7,940 கோடிக்கு, தமிழக அரசின் ஒப்பந்தப் பணிகள் செய்யாத்துரையின் `எஸ்.பி.கே. அண்டு கோ' வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை, மேம்பாலம், உள்வட்டச் சாலைப் பணிகள் தவிர, கிரஸ்ஸர், ஸ்பின்னிங் மில்கள், நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் என செய்யாத்துரை அண்ட் கோவின் நிறுவனக் கட்டுமானப் பணிகள் அடுத்தடுத்து வேகம் பிடித்தபடி இருக்கிறது. 2014- ம் ஆண்டின் இறுதியில்தான் செய்யாத்துரையின் என்ட்ரி இருந்துள்ளது.

ரெய்டு ஏரியாவில் நடந்ததைப் பற்றி, அவரின் அடிப்பொடிகள் சிலரைப் பிடித்து உலுக்கினோம். " அவ்வளவுதான் சார், இப்ப சம்பாதித்தது மட்டும் அல்ல. பரம்பரையாக 'அண்ணன்'  வீட்டில் பாதுகாத்து வைத்திருந்த நூறு சவரன் நகைகள், சில லட்ச ரூபாய்களும் இதில் போய்விட்டது. எதற்குமே கணக்கு வழக்கு இல்லாமல் இருந்தால் இதுதான் நிலைமை. செய்யாத்துரை அண்ணனிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்புகளை ஒப்படைத்த போது, 'நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம், நாங்கள் நேரடியாகக் இதில் இறங்க முடியாது. எங்களுக்குப் பதிலாக, நீங்கள் இருந்துப் பார்த்துக் கொண்டால் மட்டும் போதும்' என்றுதான் சொன்னார்கள். மூத்த வி.ஐ.பி.யின் மகன் மூலம்தான் அண்ணன் இறக்கி விடப்பட்டிருக்கிறார். தொடக்கமே, மங்களகரமாக இருந்தது. அந்த மூத்த வி.ஐ.பி.யின் மகன், செய்யாத்துரை அண்ட்  கோவுக்கு கமிஷனை மட்டும்தான் அப்போது கொடுத்து வந்தார். செய்யாத்துரை சைடில் லாபமாகக் கொட்டிய கோடிகளைப் பார்த்து மிரண்ட, அடுத்த நிலை சீனியர் வி.ஐ.பி.,  இந்த விஷயத்தைப் பொதுவில் போட்டு உடைத்து விட்டார். இந்தப் பஞ்சாயத்தால் முதலில் தொடங்கிய டீல் உடைந்து விட்டது. மூத்த வி.ஐ.பி.யின் மகன் தவிர, அடுத்த நிலை வி.ஐ.பி.களின் உறவுகள், பிள்ளைகள் என்று புதுப் பட்டாளம், செய்யாத்துரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்படி, உள்ளே வந்த புதுவரவுகள், தலை-வால் புரியாமல் அடித்த கொட்டமும், சிலர் பக்குவமாகப் போட்டுக் கொடுத்ததுமே, ஐ.டி. யை கடிதம் போடாமலே வரவழைத்து விட்டது. அவர்களுக்காக அண்ணன் அண்ட் கோ, பதுக்கிய தங்கக் கட்டிகளும், கார்களில் லோடு ஏற்றி ஒளித்து வைத்த கரன்ஸிகளும், தோப்புகளில் புதைத்திருக்கும் சொத்து ஆவண விவரங்களும் இப்போது வெளியில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விசாரணையின் காமெடியே, `அடுத்தவன் பதுக்கியதை போட்டுக் கொடுத்து விட்டு நாம் எஸ்கேப் ஆகி விடலாம்' என்று ஒவ்வொருவரும் நினைத்ததோடு, அதில் காட்டிய வேகமும்தான்..." என்றனர்.

மதுரை கே.கே.நகர் வண்டியூர் பூங்கா ரோட்டில் அமைந்துள்ள செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரன் வீட்டிலும் இரண்டு நாள்களாகத் தொடர் சோதனை போய்க் கொண்டிருக்கிறது. இதே பகுதியிலுள்ள செய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே சொகுசு விடுதியிலும் இடைவிடாத சோதனை நடந்துகொண்டிருக்கிறது. `தமிழக அரசின், பிரதான நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் இந்த சொகுசு விடுதியில் வைத்துத்தான் கையெழுத்தாகின' என்ற தகவலால், ஐ.டி. அதிகாரிகள், அந்த விடுதியை அங்குலம் அங்குலமாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். விடுதியில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கேமராக்கள், வருகை தந்தவர்களின் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், சொகுசு விடுதியில் பணியாற்றும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
உத்தங்குடி-கப்பலூர் ரிங் ரோடு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் திருமங்கலம் அலுவலகம், அதற்கடுத்துள்ள கல்லணை கல்குவாரி அலுவலகங்களிலும் தனித்தனி ஐ.டி. டீம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசின் உயரதிகாரிகள், நான்கு மந்திரிகள், மூத்த மந்திரி ஒருவரது பினாமி ஒப்பந்ததாரர் ஆகியோர் குறித்த ஆவணங்களும் இந்த ரெய்டில் சிக்கியுள்ளன என்ற தகவல், மதுரையில் வலுப்பெற்றுள்ளது.

இரண்டுநாள் சோதனையில், செய்யாத்துரையின் மகன்களான கருப்பசாமி, நாகராஜன், பாலசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சிக்கியதுபோக, சென்னையில் உள்ள இவர்களது உதவியாளர்களின் வீடுகள், கார்களிலிருந்து மட்டுமே 179 கோடியே 90 லட்ச ரூபாய் கட்டுக் கட்டாக சிக்கியிருக்கிறது. ஐந்நூறு கோடி ரூபாய்க்குக் குறையாத சொத்து ஆவணங்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் சோதனைக்குப் போன அதிகாரிகளை மிரள வைத்திருக்கிறது. செய்யாத்துரையின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில், ரூ. 28 கோடி, சேத்துப்பட்டில் வசித்த இன்னோர் உதவியாளர் ஜோன்ஸ் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரில் ரூ. 40 கோடி, அண்ணா சாலையில், மிகச் சாதாரணமாக இருந்த ஓர் அலுவலகத்தில் ரூ. 4 கோடி எனக் கோடிகளனைத்தும் மிகச் சாதாரணமாகக் கிடைத்துள்ளன. இவை தவிர, 105 கிலோ தங்கக் கட்டிகளும் கிடைத்திருக்கின்றன. மூன்றாவது, நான்காவது நாள்கள் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்தவை, பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள். `எஸ்.பி.கே. நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளிலிருந்து எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளக் கூடாது' என, குறிப்பிட்ட வங்கிகளுக்கு வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, மொத்த வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வங்கி லாக்கர்கள், பிரத்யேக கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்றவற்றைத் திறந்தால், தெரியக் கூடிய ரகசியங்களை விட அதிக ரகசியங்களை செய்யாத்துரையே ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார் என்ற தகவல்தான் கோட்டை வட்டாரத்தை நான்காவது நாளாக உலுக்கிக் கொண்டிருக்கிறது! ரெய்டு பரபரப்புகளுக்கிடையே செய்தியாளர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, ``முறையான வரியைச் செலுத்தாதவர்களைக் குறிவைத்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசைக் குறிவைத்தும், மந்திரிகளையும், என்னையும் குறிவைத்தும் ரெய்டு நடப்பதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. எதையாவது செய்து இந்த அரசை அசைத்து விடலாம் என்று நினைத்துக் காய் நகர்த்துகிறார்கள்... அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது" என்று தெரிவித்தார்.

ஒரு நீதிக்கதை இருக்கிறது... ``ஒரு பண்ணையில் இரண்டு சேவல்கள் இருந்தன. சேவல்களுக்குள், யார் பெரியவர் என்று சண்டை வந்தது, இரண்டும் மோதிக் கொண்டன. நாம் தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த ஒரு சேவல், பொந்துக்குள் போய் பதுங்கிக்கொண்டது. ஜெயித்த சேவல், பெருங்குரலில் கத்த, அதைப் பசியோடிருந்த ஒரு கழுகு வந்து கொத்திச் சென்றது. பொந்துக்குள் புகுந்த சேவலை, அங்கிருந்த மலைப்பாம்பு கவ்விக்கொண்டது. சேவல்களின் சண்டையைப் பார்த்து தெறித்து ஓடிய பெட்டைக் கோழிகள், குஞ்சுகளுடன் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஓடையில் விழுந்து ஓடையோடு அடித்துக் கொண்டு போய்விட்டது.