Published:Updated:

குறைபாட்டால் கூடங்குளம் அணுஉலையை இயக்க அதிகாரிகள் எதிர்ப்பு உதயகுமார் தகவல்

 குறைபாட்டால் கூடங்குளம் அணுஉலையை இயக்க அதிகாரிகள் எதிர்ப்பு உதயகுமார் தகவல்
குறைபாட்டால் கூடங்குளம் அணுஉலையை இயக்க அதிகாரிகள் எதிர்ப்பு உதயகுமார் தகவல்

நெல்லை: கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் இதனை இயக்க அதிகாரிகள் மறுத்து உள்ளேயே எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 குறைபாட்டால் கூடங்குளம் அணுஉலையை இயக்க அதிகாரிகள் எதிர்ப்பு உதயகுமார் தகவல்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் 14,500 கோடி ரூபாய் செலவில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், முதல் அணு உலையில் எரிபொருளான யுரேனியத்தை நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதை அடுத்து, கடந்த ஆண்டின் இறுதியில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனால் விரைவிலேயே மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அமைச்சர் நாராயணசாமியும் டெல்லியில் உள்ள அணு சக்தித் துறை அதிகாரிகளும் 2013 ஜனவரி மாதமே மின் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தனர். அதன் பின்னர் பல முறை மின் உற்பத்திக்கான கால அவகாசத்தை நீட்டித்தனர். கடைசியாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் நாராயணசாமி கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘முதலாவது அணு உலையில் ஏப்ரல் மாதத்திலும் இரண்டாவது அணு உலையில் டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவும் மின் உற்பத்தி தொடங்கப்படும்’ என அறிவித்து இருந்தார்.

ஆனால், இது போன்று அவர் மட்டும் அல்லாமல் அணு சக்தித் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் அடிக்கடி இது போன்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார்களே தவிர இது வரையிலும், அவர்கள் சொன்னது போல மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

##~~##
இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த இந்திய அணு மின் கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் தாமதம் அடைந்து வருவதால் மின் உற்பத்தி மேலும் தாமதம் அடைய வாய்ப்பு இருக்கிறது. முதலாவது அணு உலையில் மே மாதத்தில் மின் உற்பத்தியை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது அணு உலையில் மேலும் தாமதத்துடன் மின் உற்பத்தி தொடங்கப்படலாம்’ என தெரிவித்து இருக்கிறார்.
 
 குறைபாட்டால் கூடங்குளம் அணுஉலையை இயக்க அதிகாரிகள் எதிர்ப்பு உதயகுமார் தகவல்

இது குறித்து, ஓராண்டுக்கும் மேலாக இடிந்தகரையில் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, "கூடங்குளம் அணு உலை என்பது ‘இறந்து பிறந்த குழந்தை’. இந்த அணு உலையில் தரமான கட்டுமானம் கிடையாது. இங்குள்ள தொழில் நுட்ப கருவிகள் அனைத்தும் தரம் குறைந்தவை. அதனால் பலமுறை சோதனை கட்டத்திலேயே அவை உடைந்து போயிருக்கின்றன. அணு உலையை அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கு.

தற்போது நான்காயிரம் கோடி ரூபாய் அதிக செலவு ஏற்பட்டு இருப்பதாக அணு சக்தி கழகம் தெரிவிக்கிறது. ஆனால் எந்த வகையில் செலவு அதிகம் ஆனது? என்று நாங்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை இந்த திட்டத்தில் வீணடித்து இருப்பதுதான் உண்மை’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

‘‘கூடங்குளம் அணு உலை விவகாரம் தொடர்பாக இந்தியா- ரஷ்யா இடையே குழப்பம் நிலவுகிறது. அதனால்தான் ‘கூரை ஏறத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போவதாக’ சொல்கிறார்கள். இந்திய அதிகாரிகள், ரஷ்யாவிடம் முதல் அணு உலையில் உள்ள ரியாக்டர் பிரஷர் வெசல் சாதனத்தில் "ஆட் ஆன் ஃபியூச்சர்ஸ்’ கட்டமைப்பை செய்து தருமாறு வலியுறுத்தியது. அதனை செய்து கொடுத்த பிறகு அணு உலையில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது.

உடனே ரஷ்ய விஞ்ஞானிகள், ‘உங்களால்தான் இந்த தவறுகள் ஏற்பட்டு விட்டது. அதனால் இதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என சொல்லிவிட்டார்கள். ஆனால், இந்திய தரப்பில் இருந்து, ‘எல்லா வேலையையும் சரியாக செய்து முடிக்க வேண்டியது உங்கள் கடமை’ என தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இரு தரப்பு அரசுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையே முட்டல் மோதல் நடந்துக்கிட்டு இருக்கிறது. அதனால் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலை என்பது தொழில் நுட்ப கோளாறுகள் நிறைந்ததாக எதற்கும் உதவாத நிலையில் மாறி இருக்கிறது. ஆனால் அதனை வெளியில் சொன்னால் அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா செய்திருக்கும் அணு உலைக்கான ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாகி விடும் என்பதால் இந்த அணு உலைகளை இயக்கவும் பயந்து கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் இதனை நாங்கள் இறந்து பிறந்த குழந்தை என்கிறோம்.

இந்தியாவின் மானம் கருதி, பாதுகாப்பை பற்றியோ மக்களின் உயிரை பற்றியோ கவலைப்படாமல் இந்த மோசமான அணு உலையை ஓட்ட மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதற்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி தர மறுத்து வருவதால் தொடர்ந்து கால தாமதம் ஆகிறது. அந்த அணு உலைகளை இயக்கினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதுதான் இன்றைய நிலைமை.

இது தவிர, கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மத்திய தணிக்கை குழு ( சி.ஏ.ஜி) அறிக்கையில், அணு உலையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டு இருக்கும் குளறுபடிகளை பற்றியும் இந்த அணு உலையால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் தெரிவித்து இருந்தது.

இன்னொரு பக்கம், துறையில் இருக்கும் அதிகாரிகள் சிலரும் இந்த அணு உலையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் இதனை இயக்க மறுத்து உள்ளேயே எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அரசியல் ரீதியிலும் காங்கிரஸ் அரசு பயந்து போயிருக்கிறது. அதாவது, இந்த அணு உலையை அவசரமாக இயக்கி ஏதாவது விபத்து ஏற்படுமானால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஒட்டு காலியாகி விடும். அதனால் நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் அணு உலையை இயக்காமல் தள்ளிக் கொண்டே செல்வது, ஒரு வேளை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிட்டால் அடுத்து வரும் அரசின் தலையில் இந்த பிரச்னையை போட்டு விடுவது என்பதுதான் காங்கிரஸின் திட்டம்.

இப்போது மக்களை மட்டும் அல்லாமல் இந்தியாவை நம்பி அணு உலைகளை திறக்க ஒப்பந்தம் போட்டு இருக்கும் வெளி நாடுகளை ஏமாற்றவும் கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளை திறக்க போவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இது அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஆறுதல் கொடுக்கவும் வெளிநாடுகளை ஏமாற்றவுமே உதவுமே தவிர, மக்கள் நலனுக்கு எந்த விதத்திலும் பயன் தராது. மன்மோகன் அரசு, மக்கள் விரோத அரசு என்பதை இதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது’’ என்றார் சுப.உதயகுமார்.

-ஆண்டனிராஜ்

படங்கள்: ராம்குமார்