Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

‘‘வாரும்... வாரும்... உமக்காக நம் அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என கழுகாரை வரவேற்றோம்.

‘‘என்ன... அமித் ஷா எஃபெக்டா?” என்று சிரித்த கழுகாரை அமரவைத்து, அவருக்காக வாங்கி வைத்திருந்த குஜராத்தி இனிப்புகளை டேபிளில் பரப்பினோம். எடுத்து ருசித்தவர், ‘‘ரஜினிக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் திறந்தே இருக்குமென அமித் ஷா சொன்னது, ரஜினி பற்றிய செய்திகள் தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. விரைவில் ரஜினி - மோடி சந்திப்பு நிகழும். சொல்லப்போனால், கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி-ரஜினி சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், 21, 22 தேதிகளில் மோடி குஜராத் சுற்றுப்பயணம் சென்று விட்டதால், அந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இனி அடுத்து எப்போது என்பது, பிரதமர் மோடி தீர்மானித்த பிறகுதான் தெரியவரும். அந்த நேரத்தில் ரஜினியும் அமித் ஷாவும் தனியாகப் பேச உள்ளார்கள். பி.ஜே.பி-யின் ‘தமிழ்நாடு பிளான்’ பற்றி ரஜினிக்கு அமித் ஷா விவரிப்பார் என டெல்லி தகவல்கள் சொல்கின்றன.’’

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

‘‘மோடியிடம் ரஜினிக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறது... ஆனால், தமிழக பி.ஜே.பி-யினர் ரஜினியைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே?’’

‘‘ரஜினி அரசியலுக்கு வந்தால்... அதுவும்  பி.ஜே.பி-யின் பக்கம் வந்தால்... தாங்கள் அடிபட்டுப் போய்விடுவோம் என்ற அச்சம் சிலருக்கு. தங்களில் யாரையும் பாராட்டாமல், மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் போன்றவர்களை ரஜினி பாராட்டியதில், அவர்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வெறுப்பு. அதனால்தான், ரஜினியின் கருத்து வெளியானதும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘ரஜினி பாராட்டிய தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையா?’ என்று கேட்டு நிறுத்திக்கொண்டார். ஹெச்.ராஜா, ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி கூறியுள்ளார். போர் வரும்போது பி.ஜே.பி-யும் பார்த்துக் கொள்ளும்’ என்றவர், அதன்பிறகு ஈரோட்டில் பேசும்போது, ‘ரஜினி சிஸ்டம் கெட்டுவிட்டது என்று கூறியிருக்கிறார். அந்த சிஸ்டம் கெட்டுப்போனதற்குத் திராவிடக் கட்சிகள்தான் காரணம். அப்புறம் ஸ்டாலினை அவர் ஏன் பாராட்டுகிறார்’ என்று கேட்டார். சுப்பிரமணியன் சுவாமி, ‘ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. அவருக்குப் படிப்பறிவு போதாது. அவர் சினிமாவில் மட்டும் நடிக்கட்டும்’ என்று சொன்னார். ஆனால், அதன்பிறகு ‘அரசியலுக்கு வர படிப்பு தேவையில்லை’ என்று லேசாகப் பின்வாங்கினார். முதலில் ரஜினியின் கருத்தை விமர்சித்துவிட்டு, அதன்பிறகு பி.ஜே.பி தலைவர்கள் பின்வாங்கியதற்குக் காரணம் டெல்லியில் இருந்து வந்த உத்தரவுகள்தான்.’’

‘‘தமிழக ஆளுங்கட்சித் தரப்பிலிருந்தும் ரஜினிக்குக் கடுமையாக எதிர்ப்புகள் வந்துள்ளனவே?”

‘‘ஊட்டி மலர்க் கண்காட்சிக்குப்போன நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்      எஸ்.பி.வேலுமணியும் ரஜினி பேச்சு பற்றி ஆலோசனை செய்துள்ளனர். ‘முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு நீங்கள் பேசுவது நன்றாக இருக்காது. நான் டீல் செய்துகொள்கிறேன்’ என்று சொன்னாராம் வேலுமணி. ‘ரஜினியை யார் யாரெல்லாம் எதிர்த்தார்களோ, அவர்களை நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சியைப் பற்றி ரஜினி சொல்லும் அரசியல் கருத்துகள் தவறானவை. காவிரி பிரச்னைக்காக நடிகர் சத்யராஜ் குரல் கொடுத்ததால் பாகுபலி-2 படத்துக்குப் பிரச்னை வந்தது. கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது. அப்போதெல்லாம் பேசாத ரஜினி, இப்போது அரசியல் பேசுவது ஏன்?’ என சீறினார். ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை, ‘நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முன்பு ரஜினி அறிவித்திருந்தார். நிஜமாகவே அவருக்குத் தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால், அந்த ஒரு கோடி ரூபாயை நெல்லை மாவட்டம், தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டத்துக்கு வழங்க வேண்டும்’ என்றார். அடுத்தடுத்து ஆளும் தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கடிகள் வரலாம் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

‘‘ரஜினி இப்போது என்ன செய்கிறார்?”

‘‘ரஜினி முன்புபோல் இல்லை. ‘இந்தமுறை அவர் ஒரு தீவிரமான திட்டத்தோடு இருக்கிறார்’ என்கிறார்கள் அவரின் பால்ய கால நண்பர்கள். ரஜினியை முன்னிலைப்படுத்தும் வேலைகளும் வேகம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. ‘அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பாதையில்தான் இப்போது ரஜினியின் பயணம் இருக்கிறது. ரசிகர்கள் சந்திப்புக்குப் பிறகு ரஜினி, தன்னுடைய நண்பர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் குடும்பத்தினரைச் சந்தித்தார். ‘இதற்கு முன்பு ரஜினி இவ்வளவு மெனக்கெட்டு எப்போதும் களத்தில் இறங்கியது இல்லை. அவரே சொன்னதுபோல், போர் வரும்போது நிச்சயம் இந்த முறை படை எடுப்பார்’ என்கிறார்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர். அதனால், அது தனிக்கட்சியாக இருக்குமா அல்லது பி.ஜே.பி-யுடனான சங்கமமாக இருக்குமா என்பதுதான் இப்போதைக்கு அவருக்குள் இருக்கும் குழப்பம். தமிழக ஆளும் தரப்பிலிருந்து குடைச்சல்கள் வந்தால், அவர் ஒருவேளை       பி.ஜே.பி-க்கு நெருக்கமாகப் போகக்கூடும் என்பதே அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் கணிப்பாக இருக்கிறது.’’

‘‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமரைச் தனியாகச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை... எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை... ஆனால், ஓ.பி.எஸ் சர்வசாதாரணமாகப் போய் பிரதமரைச் சந்தித்துவிட்டு வருகிறாரே?’’

‘‘இதே கேள்வியை மனம்நொந்து ஸ்டாலின் கேட்டார். ‘எந்தப் பதவியிலும் இல்லாத பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பிரதமர், அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் ஒதுக்கவில்லை’ எனக் குற்றம்சாட்டினார் ஸ்டாலின். பிரதமர் மோடியின் தயாரிப்புதானே ஓ.பி.எஸ். அதனால், அவருக்குத்தான் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். அதுவும் ஒரு மணி நேரம் 35 நிமிட சந்திப்பு என்பதுதான் அதில் ஹைலைட். ஏனென்றால், மற்ற தலைவர்கள் யாராக இருந்தாலும்... அவர் எவ்வளவு பெரிய தேசியத் தலைவராக இருந்தாலும்... மாநிலத்தில் பி.ஜே.பி கூட்டணியில் உள்ள தலைவர்களாக இருந்தாலும்... அவர்களுக்கு எல்லாம் அதிகபட்சமே 30 நிமிடங்கள் மட்டும்தான் அப்பாயின்ட்மென்ட். ஆனால், ஓ.பி.எஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள். ஓ.பி.எஸ்ஸுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயனும் சென்றிருந்தனர். நால்வரையும் உட்காரவைத்து முதலில் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு மற்றவர்கள் வெளியில் வந்துவிட ஓ.பி.எஸ்ஸிடம் தனியாகப் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தார்.”

‘‘சந்திப்பில் முக்கியமாக என்ன பேசப்பட்டதாம்?”

‘‘பிரதமரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பாக, ‘உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு உடனடியாக நடத்தத் தயாரா?’ என ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் சவால் விட்டார். இதிலிருந்தே, சந்திப்புக்குச் செல்வதற்கு முன்பாக இருந்த மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். சந்திப்பில் ஓ.பி.எஸ், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் என நான்கு பேரும் இருந்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம் மோடி. எடப்பாடி அரசில் இன்னமும் சசிகலா குடும்பத்தினர் செலுத்தும் ஆதிக்கம் குறித்த தகவல்களை அவர்கள் எடுத்துச் சொன்னார்களாம். அதன்பிறகு ஓ.பி.எஸ்ஸிடம் தனியாக மோடி பேசினார். அப்போது அவர், ‘ஜனாதிபதி தேர்தல் வரை எடப்பாடி ஆட்சியைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தில் எதுவும் செய்ய வேண்டாம். ஆனால், அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலைகளைச் செய்யுங்கள். இவர்களை விமர்சனம் செய்யும் அதே வேகத்தில் தி.மு.க-வையும் கண்டித்துப் பேசுங்கள்’ என்று சொன்னதாகத் தெரிகிறது. ரஜினியின் செல்வாக்கு, அவருடைய அரசியல் பேச்சுகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.’’

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

‘‘அப்படியா?”

‘‘பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் வழக்கத்தைவிட காரத்தோடு ஓ.பி.எஸ் பேசினார். ‘தமிழகத்தில் கையாலாகாத அரசுதான் இருக்கிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து அரசுக்குக் கவலை இல்லை. உள்ளாட்சித் தேர்தல் இவர்களுக்குப் பாடமாக அமையும்’ என்றார். குடிநீர், நதிநீர் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு எடப்பாடி அரசையும், தி.மு.க-வையும் விமர்சனம் செய்தார்.’’   

‘‘உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைக்க ரெடியாகிறாரா?”

‘‘மோடியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்ததும் சில நிருபர்களுக்கு ஓ.பி.எஸ் அப்படி பேட்டி கொடுத்தார். அத்துடன் அவருடைய அதிகாரபூர்வ ட்விட்டரிலும் அப்படி ஒரு பதிவு வெளியானது. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ட்வீட்டை ஓ.பி.எஸ் நீக்கிவிட்டார். ‘இப்போதே கூட்டணி வைப்போம் என்றால், தனிக்கட்சி ஆரம்பித்தா... அல்லது அ.தி.மு.க-வுடன் இணைந்துவிட்டா... என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வரும். ஜனாதிபதி தேர்தல் ஜூலையில் நடக்கவுள்ளது. அதுவரை பொறுமையாக இருங்கள்’ என்று டெல்லி உத்தரவு வந்தது. ஆனாலும், பிரதமர் மோடியைச் சந்தித்த உற்சாகம் குறையாமல் இருக்கிறது அந்த அணி.’’

‘‘சந்திப்புப் புகைப்படங்களில் இருந்த வித்தியாசத்தைப் பார்த்தீர்களா?’’

‘‘எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரதமர் மோடியை மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்தபோது, ஒரே ஒரு புகைப்படம் வெளியானது. அதில் தங்கமணியை நிற்கவைத்து பிரதமர் பூங்கொத்து வாங்கும் படம் மட்டும் வெளியானது. ஆனால், ஓ.பி.எஸ் அணி போனபோது, நான்கு புகைப்படங்கள் வெளியாகின. ஓ.பி.எஸ்ஸை மட்டுமல்ல... அவருடன் சென்ற அனைவரையும் மிக மரியாதையாக அமரவைத்தும், நெருக்கமாக இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடப்பட்டன. இதுவே எடப்பாடி அணியை எரிச்சல்படுத்துவதற்காகத்தான் என்கிறார்கள்.’’

‘‘ம்ம்ம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரைச் சந்திக்கிறாரே?

‘‘ஆம். கடந்தமுறை தமிழக முதல்வருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காத பிரதமர் மோடி இந்தமுறை கொடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியினரை ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் மேலாகச் சந்தித்த மோடி, இந்தமுறையும் தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்றால், அது சர்ச்சைகளைக் கிளப்பும் என்பதால் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஆரம்பத்தில் இருந்தே மோடியும், பி.ஜே.பி-யும் ஆடும் ஆட்டத்தின் தொடர்ச்சிதான் இது.        ஓ.பி.எஸ் அணியை எடப்பாடி அணியைக்காட்டித் தட்டிவைப்பதும், எடப்பாடி அணியை ஓ.பி.எஸ் அணியைக்காட்டித் தட்டிவைப்பதும்தான் அவர்களின் விளையாட்டு’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் டெல்லியில்.’’

‘‘அப்படியானால் என்னதான் நடக்கும்?’’

மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!

‘‘எதுவும் நடக்காது. ‘ஓ.பி.எஸ் அணிக்காக எடப்பாடி ஆட்சியைக் கலைப்பதோ... அவர்களின் அமைச்சர்களை ரெய்டுகள் நடத்தி மிரட்டுவதோ இப்போதைக்கு இல்லை. அதுபோல, எடப்பாடி அணிக்காக முற்றிலுமாக ஓ.பி.எஸ் அணியை ஒதுக்குவதும் பி.ஜே.பி-யின் திட்டத்தில் இல்லை. மாறாக, இருவரையும் பிரித்துவைத்து, இரட்டை இலையை யாருக்கும் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்துவதே பி.ஜே.பி-யின் திட்டம். அது சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார் பி.ஜே.பி டெல்லி பிரமுகர் ஒருவர்.’’

‘‘தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள், திங்கட்கிழமை முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தார்களே?’’

‘‘கடந்த வாரம் இவர்களின் ரகசியக் கூட்டம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நடைபெற்றது அல்லவா... அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கொண்டுபோய் முதல்வர் எடப்பாடியிடம் கொடுத்துள்ளனர். அதை ஒருவித மிரட்டல் தொனியில் செய்துள்ளனர். அதனால் எடப்பாடி பழனிசாமி ஏக டென்ஷனில் இருக்கிறார். ‘பிரதமரைச் சந்தித்து டெல்லியின் மனநிலையை அறிந்துகொண்டு வருகிறேன். அதன்பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். பொறுமையாக இருங்கள்’ என்று சொல்லி அனுப்பினாராம். அதோடு கிளம்பாத அவர்கள், வரிசையாக செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அனைவரையும் தனித்தனியாகப் போய்ப் பார்த்தனர். மூன்று மணி நேரம் கோட்டையில் அமைச்சர்கள் இருக்கும் தளத்தில் இவர்கள் வலம் வந்துள்ளனர். அதன்பிறகு தம்பிதுரையும் வைத்திலிங்கமும் வந்து எடப்பாடியைப் பார்த்தனர். எம்.எல்.ஏ-க் களைச் சமாளிக்கும் வியூகம் அப்போது வகுக்கப்பட்டதாம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், போகிற போக்கில்... ‘‘டெல்லியில் தமிழக அரசு சார்பில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன்மீது போடப்பட்ட வழக்கில், இவரையும் விசாரிக்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல். இந்த விவகாரத்தில் தினகரனுக்கும் சில அதிகாரி களுக்கும் அவர் பாலமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணையால் அரசுக்கு எழும் சங்கடங்களைத் தவிர்க்கவே, அவரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார் களாம்’’ என்று ஒரு கொசுறு தகவலைச் சொல்லிவிட்டுப் பறந்தார்.

படம்: கே.ஜெரோம்