Published:Updated:

மோடி 3 ஆண்டுகள்!

மோடி 3 ஆண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மோடி 3 ஆண்டுகள்!

சே.த.இளங்கோவன்

மோடி 3 ஆண்டுகள்!

சே.த.இளங்கோவன்

Published:Updated:
மோடி 3 ஆண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மோடி 3 ஆண்டுகள்!

“வலுவான ஆட்சியே வலுவான இந்தியாவுக்கு வழி. தனிப் பெரும்பான்மை ஆட்சியை எங்களுக்குத் தந்துள்ளீர்கள். வலுவான இந்தியாவை அமைத்துத் தருகிறோம்.” - 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதும் இவ்வாறு முழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மே 26-ம் தேதியோடு, ஆட்சியின் மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் மோடி.

மோடி 3 ஆண்டுகள்!

மூன்றாண்டு நிறைவு விழாவை விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது பி.ஜே.பி. கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு ‘மகத்தான சாதனைகள்’ படைத்துள்ள்ளது என்று பெருமிதத்துடன் பேசிவருகிறார்கள் பி.ஜே.பி தலைவர்கள். ஆனால்,  மோடி அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகள் மூலம் தனித்த செல்வாக்கைப் பெற்ற மோடி, தேசத்தை ‘டிஜிட்டல் இந்தியா’வாக ஒளிரச் செய்ய... வேலைவாய்ப்பு,  ஊழல் ஒழிப்பு,  வளர்ச்சி ஆகிய மூன்று முக்கிய இலக்குகளை நிர்ணயித்தார். அவற்றை மூன்று ஆண்டுகளில் எந்த அளவுக்குக் கடந்திருக்கிறார் மோடி?

வேலைவாய்ப்பு!

‘எனது ஆட்சியில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வேன்’ என்று வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், 2014-ம் ஆண்டில் 4.21 லட்சம், 2015-ம் ஆண்டில் 1.55 லட்சம், 2016-ல் 2.31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், வேலைவாய்ப்பு ஏன் பெருகவில்லை என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் உரிய பதில் இல்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு 8.72 சதவிகிதம் ஆகும். இதில் நகர்ப்புறங்களில் 10 சதவிகிதம் அளவிலும், கிராமப்புறங்களில் எட்டு சதவிகிதம் அளவிலும் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்பின்மை  இன்னும் பெருகும்  என எச்சரிக்கிறது சர்வதேசப் பணியாளர் ஆணையம். ஆலைகள், பெரு நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலை நீக்கம் என்பது தீவிரமடைந்து வருகிறது.

‘அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே’ என்கிற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முழக்கத்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய இளைஞர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் அபாயம் தலைக்கு மேல் கத்தி போல தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து புதிய இளைஞர்கள் அமெரிக்காவில் ஐ.டி. பணிகளுக்குச் செல்ல இயலாதவண்ணம், விசா கெடுபிடிகளை அந்த நாடு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் சுமார் 56,000 ஐ.டி ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன. வரும் நான்கு ஆண்டுகளில் சுமார் ஆறு லட்சம் இளைஞர்கள் வீட்டுக்கு அனுப்பப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், வேலைவாய்ப்பின்மை என்கிற விஷப் பாம்பு நம் இளைஞர் சமூகத்தின் கழுத்தைச் சுற்றி வளைத்துள்ளது.

விவசாயம்!

“கிராமங்கள் வலுவாக, விவசாயிகள் வலுவாக வேண்டும். விவசாயிகள் நலன் மிகவும் முக்கியம்” என்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், மோடியின் ஆட்சியில் விவசாயிகள், தலைநகர் டெல்லியில் எலிக்கறி சாப்பிட்டுப் போராடுகிற, பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நிர்வாணமாக ஓடுகிற காட்சியைக் கண்டு தேசமே வெட்கித் தலைகுனிந்தது. பிரதமரோ, 40 நாள்களுக்கு மேல் டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரில் அழைத்துப் பேசவில்லை.

‘இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு’ என்று  மோடி அரசு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அது உண்மைதான் என்பதுபோலவே பல ஆதாரங்களை அடுக்குகின்றன எதிர்க்கட்சிகள். 17 கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர்களைக் கூட வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதும் இந்த ஆட்சியில்தான். 2015-2016 நிதியாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 5,02,068  கோடி ரூபாய் வாராக்கடனாக இருந்தது. அது, 2016 டிசம்பரில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து 6,06,911 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆனால், விவசாயிகளோ, வங்கிகளில் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தப்படுகிறார்கள். கடன் சுமை காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு  மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தியாவில் அரை மணிநேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். குறிப்பாக, மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்குப் பிறகு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் கர்நாடகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், ‘கடன் பிரச்னையாலோ, விவசாயப் பிரச்னைகளாலோ விவசாயிகள் இறக்கவில்லை. குடும்பப் பிரச்னைகளால்தான் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்’ என்று அலடசியப்படுத்தினார் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்.

மோடி 3 ஆண்டுகள்!

’விவசாயிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கக்கூடிய சூழல்தான் இந்தியாவில் உள்ளது. விளைபொருளுக்கு  உரிய விலை கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால், சாகுபடிக்கு ஆகிற செலவுத்தொகையோடு 50 சதவிகிதம் கூடுதலாகச் சேர்த்து விலை கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மத்திய அரசு தீர்மானிக்கும் விலைக்கு மேல் மாநில அரசு கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசு, விவசாயிகளுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கிறது' என விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

விலைவாசி!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் எகிறிய விலைவாசி, இன்னும் கீழே இறங்கவில்லை. பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, கிலோவுக்கு 30-40 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், சந்தையில் அது 150 - 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை உச்சத்தில் இருந்த சமயத்தில், சுமார் 40 லட்சம் டன் பருப்பு வகைகளை மக்கள் நுகர்ந்துள்ளனர். இதில் பெரும் லாபம் அடைந்தது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே!

முதலீடு!

``பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளோம். அதனால், அந்நிய நேரடி முதலீடு குவிந்து வருகிறது. கடந்த  இரண்டு நிதியாண்டுகளில் வந்த அந்நிய நேரடி முதலீடு, அதற்கு முந்தைய  இரண்டு நிதியாண்டுகளில் வந்த முதலீட்டைவிட  66 சதவிகிதம் அதிகம். ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக முதலீட்டைப் பெற்றுள்ள நாடு இந்தியாதான்” என்று குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தார் மோடி. 

அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதன் மூலமே தேச வளர்ச்சி சாத்தியம் என்பது மோடியின் அசைக்க முடியாத நம்பிக்கை.  மூன்று ஆண்டுகளில் 43 நாடுகளுக்கு  27 முறை பயணித்துள்ளார் பிரதமர் மோடி. இதன் முக்கிய நோக்கம் முதலீடுகளை இந்தியா நோக்கித் திருப்புவதாகும். இந்த வகையில், 2016 மார்ச் மாத இறுதி நிலவரப்படி, அந்நிய நேரடி முதலீட்டில் 21 சதவிகிதம் மொரீஷியஸின் பங்காகும். 
தமிழ்நாடு?

ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்னைகள் தொடங்கி தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயைக் குறைத்தது வரையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும், புதிய தன்மையில் பிரதமர் மோடியின் அரசு  நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு கேட்ட ரயில்வே திட்டங்கள் பல செயல்படுத்தப்படாமலே உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதால், காவிரி நீர் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. வறட்சி நிதியாக தமிழ்நாடு அரசு 39,565 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 1,748  கோடி ரூபாய் மட்டுமே வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாட்டின் முழுக் கடன் விடுதலை என்பது 86 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதி அளித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க, அதன் ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. நியூட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம். முக்கியமாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் உயர்கல்விக் கூடம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு பெருந்துறையை எய்ம்ஸ்  அமைக்க சிறந்த இடமாக அறிவித்தும், ‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க ஒரு இடம்கூட  சரியாக இல்லை' என்கிறது மத்திய அரசு.

மாநில உரிமைகள்!

 அகில இந்திய அளவில் ஒற்றைக் கட்சியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அஜெண்டாவை வெற்றிகரமாக முடித்த பி.ஜே.பி, மாநில அரசுகளில் தனித்த செல்வாக்கைப் பெறும் இரண்டாவது அஜெண்டாவைக் கையில் எடுத்தது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்  முரண்பாட்டை வளர்ப்பது, ஆளுநரை நியமிக்காமல் இருப்பது, தலைமைச் செயலகம் வந்து மாநில அரசை மிரட்டல் தொனியில் விமர்சிப்பது , நீட் விலக்குக் கேட்டு  சட்ட மசோதா  ஏகமனதாக இயற்றியும் பதிலளிக்காமல் மௌனம் காப்பது  என பி.ஜே.பி-யின் அரசியல் விளையாட்டை தமிழ்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் விமர்சனபூர்வமாகவே பார்க்கின்றனர்.

காஷ்மீரோ, அரசியல் தீர்வு பெறாமல் பள்ளி மாணவ, மாணவிகள் வீதிகளில் இறங்கி கற்களை வீசிப் போராடும் அளவுக்கு, எப்போதும்போல் பதற்ற பூமியாகவே உள்ளது. இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் தினச் செய்திகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியுடன் மோதுவது, கேரளாவில் பினரயி விஜயனை வம்புக்கு இழுப்பது என மாநில அரசுகளுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது மத்திய அரசு.

``ஆட்சிப் பணிகளைவிட கட்சியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறார் மோடி'' என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறந்து ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே இந்தியா என்பதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுத்தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில்  மோடியின் பிம்ப அரசியலைத் தாண்டி வளர்ச்சியைக் காட்ட வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது பி.ஜே.பி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism