Published:Updated:

அழகிரியின் ஆறு மாதக் கெடுவும்... அடுத்த ஆபரேஷனும்!

அழகிரியின் ஆறு மாதக் கெடுவும்... அடுத்த ஆபரேஷனும்!
அழகிரியின் ஆறு மாதக் கெடுவும்... அடுத்த ஆபரேஷனும்!

```தலைவர் (கருணாநிதி) காலத்திலேயே அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு ஒருபோதும் உங்களால் தீவிர அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. உங்களை நம்பியிருந்தவர்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும். விரைவில் ஒரு நல்லமுடிவை எடுங்கள்' என்று அவரிடம் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தி.மு.க-வில் கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த மு.க. அழகிரி, அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டார். ஆறு மாதத்தில் தன்னுடைய திட்டத்தை வெளியிடப்போவதாக அவர் பேசியிருப்பது, தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் ட்ரக்கியோஸ்டோமி குழாய் மாற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீடு திரும்பிய கருணாநிதியைப் பார்ப்பதற்காக, அவருடைய மகனும், தி.மு.க. முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி மதுரையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்துக் கேட்க முயன்றனர். அதற்குப் பதிலளித்த அழகிரி, ``ஆறு மாதத்தில் என்னுடைய முடிவை அறிவிப்பேன். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று காலக்கெடு விதித்து கருத்து தெரிவித்தார். 

மதுரையில் அண்மையில் அழகிரி தன் ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், திடீரென்று மீண்டும் தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்திருப்பது யதேச்சையாக நடைபெற்ற சம்பவமாகத் தெரியவில்லை. ``அழகிரி தன்னுடைய அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டதன் அறிகுறிதான் இது" என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான தி.மு.க. புள்ளிகள்.

இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ```தலைவர் (கருணாநிதி) காலத்திலேயே அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு ஒருபோதும் உங்களால் தீவிர அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. உங்களை நம்பியிருந்தவர்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும். விரைவில் ஒரு நல்லமுடிவை எடுங்கள்' என்று அவரிடம் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்தே, அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம், `ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க. இப்போது பலமில்லாமல் உள்ளது. வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தாலும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க-வை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரை, அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றிய பிறகுதான் தினகரன் அசுர வளர்ச்சியடைந்துள்ளார். மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் செய்து அவருடைய ஆதரவாளர்களைச் சந்திக்கிறார். அதன் பயனாக அ.தி.மு.க-வில் இருந்த பலரும் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். அதேபோல், நீங்களும் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை அறிவியுங்கள். உங்களுக்கு என்று மாவட்டந்தோறும் ஓர் ஆதரவு வட்டம் உள்ளது. அவர்களை வைத்து கூட்டம் நடத்துங்கள். மாவட்டவாரியாக நாம் கூட்டம் நடத்தினாலே அது, ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அவராகவே உங்களை கட்சிக்குள் இழுக்கும் வாய்ப்பும் இருக்கும். ஒருவேளை அவர் உங்களுக்கு எதிராக இன்னும் வேகமாகச் செயல்பட்டால், உங்கள் ஆதரவாளர்களை வைத்து தினகரன் போன்று நாமும் ஓர் அமைப்பை ஆரம்பிக்கலாம். அமைப்பு ஆரம்பித்தால், தி.மு.க வில் இப்போது ஒதுக்கப்பட்டிருப்பவர்களும், ஸ்டாலின் தலைமையை விரும்பாதவர்களும் நம் பின்னால் கண்டிப்பாக வருவார்கள். நாம் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கலாம். ரஜினிக்குத் தமிழகம் முழுவதும் பரவலான செல்வாக்கு இருப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது நமக்கு பலத்தைக் கொடுக்கும். இனியும் நீங்கள் அமைதியாக இருந்தால், அனைத்து வாய்ப்புகளையும் நழுவ விடும் சூழ்நிலை ஏற்படும்' என்று சொல்லியுள்ளார்கள். 

அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட அழகிரி அதன்பிறகுதான் அரசியலில் மீண்டும் என்ட்ரி ஆகவேண்டும் என்று முடிவு செய்துள்ளார். முதலில் குடும்ப உறுப்பினர்களை வைத்து ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் உள்ளது. அதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து வரும் ரெஸ்பான்ஸைப் பார்த்துவிட்டு, மாவட்டவாரியான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார். இதுதான் ஆறுமாத ஆபரேசன்" என்கிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு