Election bannerElection banner
Published:Updated:

அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் ராஜ மரியாதையா?! - கொதிக்கும் கோவை

அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் ராஜ மரியாதையா?! - கொதிக்கும் கோவை
அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் ராஜ மரியாதையா?! - கொதிக்கும் கோவை

மாநகராட்சிக்குக் கிடைக்கும் நிதி, அப்படியே அமைச்சர் வேலுமணியின் ஒரு தொகுதிக்குச் செல்வதாலேயே, மற்ற சாலைகள் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

மக்களுக்குப் பயனளிக்காத அபாயகரமான மேம்பாலம் ஒருபக்கம்; 24 மணிநேர குடிநீருக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மறுபக்கம் என்று `ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தைப் பெற்றிருக்கும் கோவை மாநகரில் அனைத்துத் திட்டங்களும் முறைகேடுகளிலும், சர்ச்சையிலும் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சாலைகள் தரமில்லாமல் மிகவும் சேதமடைந்துள்ளன. மாநகராட்சிக்குக் கிடைக்கும் நிதி முழுவதுமாக அப்படியே அமைச்சர் வேலுமணியின் ஒரு தொகுதிக்கு மட்டும் செல்வதால் மற்ற தொகுதிகளில் அடங்கிய சாலைகள், `கோமா ஸ்டேஜில்' இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

கோவை ஆற்றுப்பாலம் தொடங்கி உக்கடம்வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பாலக்காடு மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களைத் திருப்பிவிடுவதற்காக, குனியமுத்தூரிலிருந்து புட்டுவிக்கி சாலைக்குச் செல்ல ரூ.11 கோடி மதிப்பீட்டில் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலையும், தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது. அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்தச் சாலை இரண்டு மாதங்களுக்குள் தற்போது குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. மேலும், தற்போது மழை பெய்துள்ளதால் இந்தச் சாலை முழுவதுமாக மோசமடைந்துள்ளது. ஏற்கெனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள், இந்தவழியாகச் செல்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தி, தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. மாநகராட்சியின் மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.

சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக், ``விரிவுபடுத்தப்படாத பழைய கோவை மாநகராட்சி எல்லைப்பகுதியில், கடந்த 2009-ம்

ஆண்டு பாதாளச் சாக்கடைப் பணிகள் தொடங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, அந்தப் பணிகள் சற்று தீவிரமாக நடந்துவந்தன. ஆனால், அந்த ஒப்பந்ததாரருக்குப் பணம் கொடுக்காமல் நிலுவையில் இருப்பதால், அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளேகூட மிகவும் பழுதடைந்துள்ளன. நிதிப்பற்றாக்குறையால் மாநகராட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மேலும், கோவை மாநகராட்சி வசூலிக்கும் வரிவசூல் தொகையைக்கூட முறையாகச் செலவிடுவதில்லை. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரான எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கிறார். அவர் நினைத்தால், கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை எப்போதோ நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகப் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனால், மக்கள் திறந்தவெளிச் சாக்கடையைத்தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. மாநகராட்சியில் அவரது தலையீடு அதிகமாக உள்ளது. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறமுடியவில்லை. மாநிலத்தில் நிலையான அரசு இல்லாததால், தமிழக அரசிடமிருந்தும் நிதி பெறமுடிவில்லை. இதேநிலை நீடித்தால், கோவை மாநகராட்சி நிர்வாகம், ஓர் ஆண்டுக்கு முன்னரே சொத்துவரி உள்ளிட்ட வரியை வசூலிக்கத் தொடங்கிவிடுவார்கள்" என்றார்.

சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ், ``மாநகராட்சி நிதி முழுவதும் அமைச்சரின் தொகுதிக்குச் சென்றுவிடுகிறது. மற்ற பகுதிகளில் தரமில்லாத சாலைகள் அமைக்கப்பட்டு, அவை குறுகிய காலத்தில் சேதமடைந்து விடுகின்றன. சாலைப் பணிகளை ஆய்வு செய்ய

வேண்டிய மாநகராட்சி ஆணையர், வெளியில் வருவதே கிடையாது. மூன்றுவகையான ஜல்லிகளைக் கொண்டு சாலை அமைக்க வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இருக்கும் சாலையில் தாரை மட்டும் ஊற்றிவிடுகின்றனர். 

மேலும், சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் ஏதாவது கேட்டாலும், அமைச்சரிடம் பேசி அதிகாரிகளை மிரட்டி விடுகின்றனர். இதன் காரணமாக, ஒப்பந்ததாரர்களிடம், அதிகாரிகள் எதுவும் கேட்பதில்லை. மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி ஓய்வு பெற்ற பிறகும், அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால், புதிய அரசாணை மூலம் அவரை மீண்டும் பணியமர்த்தியுள்ளனர்" என்று விளக்கமளித்தார்.

`பே-புக்கில்' கிடைத்தத் தகவலின்படி, கோவை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை 31 கோடியே 24 லட்சத்து 568 ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. 50 கோடியே 32 லட்சத்து 2 ஆயிரத்து 218 ரூபாய் மதிப்பில் பழைய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆக, கடந்த 5 ஆண்டுகளில், கோவை மாநகராட்சியில் சாலைப் பணிகளுக்காக சுமார் 81 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதில், அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் ஐந்தாண்டுகளில் சுமார் 16 கோடியே 70 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு, உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் அதிகளவிலான பணிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலையை 24.71 கோடி ரூபாய் மதிப்பில் மாதிரி சாலையாக மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதுவும், தொண்டாமுத்தூர் தொகுதிக்குப்பட்ட பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டபோது, ``தடுப்புச் சுவருடன் சேர்த்துதான் புட்டுவிக்கி சாலை அமைக்கப்பட்டுவந்தது. ஆனால், அதன் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. போக்குவரத்து பாதிக்கக் கூடாது என்பதால், பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில், அந்தப் பணிகள் முடிக்கப்படும். அதேபோல, கோவை மாநகராட்சி முழுவதுமே பழுதடைந்துள்ள சாலைகளின் விவரங்களை எடுத்து வைத்துள்ளோம். மழைக்காலம் முடிந்ததும், பழுதடைந்த அனைத்துச் சாலைகளையும் சீரமைப்போம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு