Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

த,சத்தியநாராயணன், அயன்புரம்.

சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி, சசிகலா விடுதலை ஆகும் வாய்ப்பு உண்டா?

சசிகலாவுக்குத் தரப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிட்டது. அதற்குமேல் எந்த ஓட்டையும் இல்லை. தனக்குத் தரப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு, மறுசீராய்வு மனு போட்டுள்ளார் சசிகலா. இது சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ள சிறு சலுகை. அவ்வளவுதான்!

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

கோடி கோடியாகக் குவித்துவைத்துள்ள ஒரு நடிகர், ஆசைகளைத் துறந்த ஞானிபோலப் பேசுகிறாரே?


ஆண்டு அனுபவித்து முடித்த பிறகு ஞானியாவது வழக்கம்தான். இதில் தவறில்லை. இன்னும் சிலர் ஞானியாக இருந்துகொண்டே ஆண்டு அனுபவிக்கவும் செய்கிறார்கள். அதுதான் தவறு.

கழுகார் பதில்கள்!

குருவும் சீடனும் ஆற்றைக் கடக்கப் போனார்கள். கரையில் நின்ற ஒரு பெண், ‘‘என்னை அக்கரைக்குக் கொண்டு போய்விடுங்கள்’’ என்று ஞானியைக் கேட்டுக்கொண்டார். குரு அவளைச் சுமந்து சென்றார். கரையில் கொண்டுவந்து இறக்கிவிட்டார். இது சிஷ்யனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ‘குரு எப்படி ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம்’ என்பது சிஷ்யனின் கேள்வி. அதைக் குருவிடமே கேட்டும் விட்டான்.

‘‘நான் அவளை அப்போதே இறக்கிவிட்டு விட்டேன். நீ இன்னமுமா சுமந்து வருகிறாய்?” என்றார் குரு.

இப்படித்தான் சிலர் ஞானம் பெற்றதாகச் சொன்னபிறகும் பல்வேறு ஆசைகளைத் தூக்கிச் சுமந்து திரிகிறார்கள். இதுதான் தவறு.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘ஆட்சி மாற்றமே தமிழக மக்களுக்கு விடியலை ஏற்படுத்தும். எனவே 356-வது பிரிவைப் பயன்படுத்தி சசிகலாவின் இந்த பினாமி ஆட்சி கலைக்கப்பட வேண்டும்’ என ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளாரே?


மிக மிக அசாதாரணமான சூழல் ஏற்பட்டால் தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஆட்சியையும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கக் கூடாது. இது, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருக்கும் தீர்ப்பு. ஆனால், யாரால் ஆட்டுவிக்கப்படுகிறது என்று தெரியாத, செயல் படாத ஓர் அரசாங்கம் இருக்குமானால், இந்த அசாதாரணச் சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பது என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

ஸ்டாலினை தி.மு.க-வில் முன்னிலைப்படுத்த கருணாநிதி முயன்றபோது அதை எதிர்த்து வைகோவும் மற்ற பிரமுகர்களும் வெளியேறியதுபோல, தன் மகன் உதய நிதியை ஸ்டாலின் முன்னிலைப்படுத்த நினைக்கும்போது இப்போதைய சீனியர்கள் யாராவது வெளியேறும் நிலைமை உண்டாகுமா?

அப்படி எதிர்க்கும் சீரியஸ் சீனியர்கள் யாராவது தி.மு.க-வில் இருக்கிறார்களா... என்ன?

மு.மதிவாணன், அரூர்.

‘‘ஒருவேளை அரசியலுக்கு வரும் சூழல் ஏற்படுமானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என் அருகில்கூட சேர்க்கமாட்டேன்’’ என்று ரஜினி கூறியிருப்பது பற்றி...?


அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் சொல்வது இதுதான். அரசியல் ஊழல்மயமாகிவிட்டது, கெட்டுக்கிடக்கிறது என்று சொல்லித்தான் அனைவரும் அரசியலுக்குள் நுழைவார்கள். ஆனால், கட்சி ஆரம்பித்ததும்தான் பணத்தின் அருமை தெரிய ஆரம்பிக்கும். மெள்ள மாறிவிடுவார்கள். அதுவரை ரஜினியும் சொல்லிக் கொள்ளட்டும்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘‘தமிழகத்துக்குத் தற்போது பொதுத்தேர்தல் வரக்கூடாது’’ என்கிறாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?


அவர்கள் வெற்றிபெறும் சூழல் ஏற்படும்வரை, அவர்களுக்கென முதலமைச்சர் வேட்பாளர் கிடைக்கும்வரை தேர்தல் வரக் கூடாது என்பதுதான் அவரது ஆசை!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘‘தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆய்வுக்கூட்டம் நடத்தியதில் தவறு ஏதும் இல்லை’’ என்கிறாரே நாடாளுமன்றத் துணைச் சபாநாயகர் தம்பிதுரை?


தமிழகத்துக்கு முன்பாகவே வேறு சில மாநிலங்களிலும் இப்படித் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை வெங்கையா நாயுடு நடத்தியதாகத் தமிழக பி.ஜே.பி தரப்பில் விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனாலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது வெங்கையா நாயுடு ஆய்வுக் கூட்டம் நடத்த தலைமைச் செயலகம் வருவாரா? அப்படி வரும்போது தம்பிதுரை இப்படிச் சொல்வாரா?

கெம்பை சுரேஷ், அன்னூர்.

இரட்டை இலைச் சின்னம் நிரந்தரமாக முடக்கப்பட்டால் அ.தி.மு.க-வும் முடங்கிவிடும் தானே?


அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது, ஆர்.கே. நகரில் தொப்பி அடைந்த பிரபலத்தைப் பார்க்கும்போது!

கழுகார் பதில்கள்!

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

ப.சிதம்பரம் மகன் வீட்டுக்குள்ளும் சி.பி.ஐ புகுந்துவிட்டதே?

சி.பி.ஐ நுழையக்கூடாத இடமா அது?

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வின் இரண்டு அணியினருமே ‘அம்மா ஆட்சி அமைப்போம்’ என்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தால் ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டவரின் ஆட்சியை ஏன் மீண்டும் அமைக்க ஆசைப்படுகிறார்கள்? அ.தி.மு.க-வை நிறுவிய ‘எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம்’ என ஏன் ஒருவரும் சொல்வதில்லை?

இவர்களுக்குப் பதவியை, அந்தஸ்தை, பணத்தைக் கொடுத்தவர் ஜெயலலிதா. இன்று அதைத் தக்கவைக்கக் காரணம் சசிகலாவும் தினகரனும். ‘வேண்டும்’, ‘வேண்டாம்’ என அந்தக் குடும்பத்தை ஒதுக்கிவைக்க முயல்வ தாகச் சொன்னாலும், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகிய மூவருக்குத்தான் இவர்கள் விசுவாசமாக இருப்பார்களே தவிர, எம்.ஜி.ஆருக்கு இவர்கள் எப்படி விசுவாசமாக இருப்பார்கள்?

இவர்களில் பலருக்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சும்மா படம் பார்த்து விசில் அடித்திருப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி இது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா தி.மு.க அல்ல. இது, அம்மா தி.மு.க. இவர்கள் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்ல மாட்டார்கள்.  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையே யோசித்து யோசித்துத்தான் கொண்டாடுகிறார்கள்.

எம்.ஜி.ஆருக்கு உண்மையில் விசுவாசமாக இருந்திருக்க வேண்டியவர் ஜெயலலிதா. அவரே எம்.ஜி.ஆர் பெயரைத் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் சொல்வார். ஏற்றிவிட்ட ஏணியைத் தள்ளுவது எடப்பாடி காலத்து வழக்கம் மட்டுமல்ல, ஜெயலலிதா காலத்துப் பழக்கமும் தான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!