Published:Updated:

தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?

தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?

அன்புமணி அதிரடி கேள்வி

தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?

அன்புமணி அதிரடி கேள்வி

Published:Updated:
தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?

டற்பயிற்சி முடித்துவிட்டு உற்சாகத்துடன் வந்து அமர்ந்தார், பாட்டாளி மக்கள் கட்சியின்இளைஞர்அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற ‘ஹேஷ்டாக்’ கோஷத்துடன் களமிறங்கியவர்.  நடப்பு அரசியல் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ரஜினிகாந்த் உங்களைப் பாராட்டிப் பேசியுள்ளாரே?”

“ரஜினிகாந்த், என் இனிய நண்பர்; நல்ல நடிகர். அவர் நடிப்பை நாங்கள் ரசிப்போம்; பாராட்டுவோம். ஆனால், அரசியல் வேறு; நடிப்பு வேறு. இனி, தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு இடமும் கிடையாது; வாய்ப்பும் கிடையாது. தமிழக அரசின் கடன், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துவிட்டது. இந்தக் கடனை எல்லாம் அடைக்க, ரஜினி என்ன திட்டம் வைத்திருக்கிறார்?”

தமிழ்நாட்டின் கடனை அடைக்க ரஜினியின் திட்டம் என்ன?

“அதை வைத்துத்தான், `டோட்டல் சிஸ்டமும் கெட்டுப்போய் இருக்கு. எல்லாத்தையும் மாத்தணும்’ என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே?”

“முதலில், ரஜினிக்கு இதைப் பற்றி என்ன தெரியும்? சினிமாவில் யாரோ எழுதிக்கொடுப்பார்கள். அதைப் பேசிவிட்டுப் போய்விடலாம். அரசியல் என்பது வேறு. இறங்கிப் போராடி, ஊர் ஊராக அலைந்து மக்களிடம் பேசினால்தான், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றி ரஜினிக்குப் புரியும்.”

“அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லையே. ஒரு மருத்துவர் அரசியலில் இருக்கும்போது, ஒரு நடிகர் அரசியலுக்கு வரக் கூடாதா?”

“இங்கே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமாக்காரர்கள் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்து தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இனியும் நாசப்படுத்தவேண்டுமா?  ‘அரசியலுக்கு வருவேன்’ என்று இன்றுவரை அவர் உறுதியாகச் சொல்லவில்லை. `வரலாம்’, `போருக்குத் தயாராவோம்’ என்றுதான் சொல்கிறார். போர் என்றால் என்ன? இப்போது இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கிறதா? அங்கே போய்ச் சண்டை போடப்போகிறாரா என்ன? ரஜினிக்கு அரசியலில் வேலை இல்லை.”

“அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் ஒன்றுசேருமா?”

“அதை பி.ஜே.பி-யிடம்தான் கேட்க வேண்டும். பி.ஜே.பி-யின் விரல் அசைவில்தான் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.”

“தமிழகப் பிரச்னைகளுக்காக, பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்துள்ளாரே ஓ.பி.எஸ்?”

“ தன் மீது வழக்கு எதுவும் போட்டுவிட வேண்டாம் என்று சொல்வதற்காகத்தான் பிரதமரை அவர் சந்தித்தாரே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலன் தொடர்பாகச் சந்திக்கவில்லை. அ.தி.மு.க-வில் 37 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். என்னையும் சேர்த்து 38 எம்.பி-க்கள். எல்லோரும் நாடாளுமன்ற அவையின் நடுவில் போய் நின்றுகொண்டு, `நீங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலைன்னா... நாங்க இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிட மாட்டோம். நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லியிருந்தால், வேறு வழியே இல்லாமல் மத்திய அரசு பணிந்திருக்கும். இதை எல்லாம் செய்ய லாயக்கில்லாதவர்களாக அ.தி.மு.க-வினர் இருக்கிறார்கள். இன்றைய தமிழக அரசும் அப்படித்தான் இருக்கிறது.”

“உங்கள் முழக்கமான `மாற்றம் முன்னேற்றம்’ மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?”

“நிச்சயமாக. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகியிருக்கிறது. மக்களுக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீது நம்பிக்கை இல்லை. இந்தச் சூழலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை, காவல்துறை அடித்துக் கைதுசெய்கிறது. இதுவே நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், எல்லா மதுக்கடைகளையும் மூடியிருப்போம். எங்களைத் தேர்ந்தெடுக்காததை நினைத்து மக்கள் இப்போது வேதனைப்படுகிறார்கள். என் கணிப்புப்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். நிச்சயமாக, மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துத் தேர்தலைச்சந்தித்தோம். அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கப்போவது கிடையாது.”

“எதனால் இந்தத் திடீர் கொள்கை மாற்றம்?”

“கடந்த தேர்தலில் அப்படி ஓர் உத்தியைக் கையாண்டோம். வரும் தேர்தலில் வேறு உத்தியைக் கையாள்வோம். புதிய எதிர்பார்ப்புகள், புதிய திட்டங்கள், புதிய சிந்தனைகள் எல்லாவற்றையும் எங்களால் மட்டும்தான் கொடுக்க முடியும். தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கலாம். ஆனால், இங்குள்ள பிரச்னைகளுக்காக நாங்கள்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தலைமையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைத் தவிர, யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். தமிழ்நாட்டுக்கு மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் வரவில்லை என்றால், அந்த ஆண்டவனால்கூடத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது.”

- நா.சிபிச்சக்கரவர்த்தி