Published:Updated:

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானபோது அவருக்காக இளநீர் வைத்திருந்தோம். ஸ்ட்ரா போட்டு மெல்ல உள்ளே இழுத்த கழுகார், ‘‘ரஜினி அரசியல் தொடர்பான அனல், இதைவிட அதிகமாக அடிக்க ஆரம்பித்துள்ளது” என்றார். இளநீரை முடிக்கும்வரை காத்திருந்தோம்.

‘‘கடந்த 20 வருடங்களாக பல்வேறு அரசியல் டயலாக்குகளைத் தனது படங்களில் பேசி வந்திருக்கிறார் ரஜினி. ‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ என்பது அவரது பிரபலமான டயலாக்குகளில் ஒன்று. அவர் சொன்ன ‘வரவேண்டிய நேரம்’ வந்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் இப்போது நினைக்கிறார்கள். ‘இதுவரை தலைவர் சொன்னது எல்லாம் சும்மா. யாரோ தூண்டிவிட்டு அவரை உணர்ச்சிவசப்பட வைத்து சொல்லச் சொன்னது.ஆனால், இந்தத் தடவை அவராகத்தான் ஆரம்பித்தார். அரசியல் ஆர்வம் அவருக்கு வந்துவிட்டது. அதனால் எப்போது அரசியல் பிரவேசம் என்பதற்கான தேதியை விரைவில் குறிக்கப் போகிறார்’ என்று அவருடைய ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

‘‘அவர்தான் படப்பிடிப்புக்காக மும்பை போய்விட்டாரே?”

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

‘‘ஆமாம்! ‘காலா’ படத்துக்கான வேலைகள் மும்பையில் தொடங்கிவிட்டன. ரஜினியின் இரண்டு படங்களில், முதலில் ஆரம்பித்த படம், ‘2.0’. அது இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் சொன்னார்கள். பிறகு 2018 பொங்கலுக்குத்தான் வரும் என்றார்கள். நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால், அதிலும் சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறமாதிரி ‘காலா’ வேலைகளில் மும்முரம் ஆகிவிட்டார் ரஜினி. இது, மருமகன் தனுஷ் தயாரிப்பது. ‘கபாலி’யில் பெரிய அளவுக்குச் செலவு இல்லை என்றாலும் நல்ல வசூலை அள்ளியது. அதைத் தாண்டி ‘காலா’வும் வசூல் அள்ளவேண்டும் என்று ரஜினி நினைக்கிறார். தமிழில் தயாரிக்கப்படாத ‘பாகுபலி’, தமிழ்நாட்டிலும் கோடிக்கணக்கில் வசூல் அள்ளுவதையும் ரஜினி கவனித்து வருகிறார். ‘பாகுபலி’யைவிட நமது அடுத்த படங்கள் வசூலை அள்ள வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். அதனால்தான் எப்போதும் படம் வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அரசியல் பூகம்பம் கிளப்பும் ரஜினி, ‘காலா’வுக்காக ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே தனது வாய்ஸை ஆரம்பித்தார். இதை வைத்து, ‘இது வழக்கமான அவரது வியாபாரத் தந்திரம்தான். அவர் அரசியலுக்கு எல்லாம் வர மாட்டார்’  என்கிறார்கள் சில விமர்சகர்கள். ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால், அப்படித் தெரியவில்லை.”

‘‘சொல்லும்!”

‘‘இதைப் படத்துக்கான வியாபாரத் தந்திரமாக மட்டுமே பார்க்க முடியாது. சினிமாவில் தனக்கு மிகமிக நெருக்கமான சிலரைக் கூட எப்போதாவதுதான் சந்திப்பது ரஜினியின் வழக்கம். ஆனால், கடந்த ஒரு வார காலமாக அரசியல் பிரமுகர்களை அழைத்துப் பேசி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் பிரமுகர் யுவராஜா... இப்படிப் பலரையும் ரஜினி சந்தித்து வருகிறார். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ரஜினியைச் சந்தித்துப்பேசி இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலைமை எப்படி உள்ளது, அரசியலுக்கு வரலாமா, வந்தால் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற பொதுவான கேள்விகளைக் கேட்டாலும், தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம்  பேசும் போது மனம்விட்டு சில கேள்விகளைக் கேட்கிறாராம் ரஜினி!”

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

‘‘என்ன மாதிரியான கேள்விகள் அவை?”

‘‘ரஜினி கேட்ட சில கேள்விகளை மட்டும் சொல்கிறேன்... ‘காலம் காலமாக எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு  அவங்க ரெண்டு பேருமே இல்லை. அப்படின்னா, அ.தி.மு.க-வினர் மனம்மாறி தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு இருக்கா?’ என்பது ரஜினி கேட்ட முதல் கேள்வி. ‘கருணாநிதி தன்னோட இத்தனை வருஷ உழைப்பால், பேச்சால் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தினார். அவருக்கு இருந்த திறமை ஸ்டாலினுக்கு இருக்கா? ஸ்டாலினை அக்கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்களா?’ என்பது இரண்டாவது கேள்வி. ‘தமிழ்நாட்டுல பல வருஷமாவே      பி.ஜே.பி-யை வளர்க்கிறதுக்கு என்னென்னவோ செய்தார்கள். ஆனால், கட்சி வளரவில்லை. இனியும் அக்கட்சி வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்பது மூன்றாவது கேள்வி. மிக நுணுக்கமான தகவல்களைச் சொல்பவர்களிடம் இந்த மூன்று கேள்விகளையும் ரஜினி கேட்கிறாராம்!”

‘‘இந்தக் கேள்விகளின் நோக்கம் என்ன?”

‘‘இன்று ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் தனக்கு வாக்களிப்பார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ரஜினி நினைக்கிறார். தனக்கான அச்சுறுத்தலாக ஸ்டாலினை மட்டுமே ரஜினி பார்க்கிறார். அதனால், ஸ்டாலின் பற்றி அதிகமாகக் கேட்கிறார். அவரைச் சந்திக்கும் பெரும்பாலான ஆட்கள், ‘பி.ஜே.பி-யில் சேர்ந்துவிடாதீர்கள்’ என்றுதான் சொல்கிறார்களாம். அவர்களிடம், ‘அரசியலில் நுழைந்தால் தனிக்கட்சிதான்.  பி.ஜே.பி-யில் சேர மாட்டேன்’ என்று சொல்லி வருகிறாராம் ரஜினி!”

‘‘தனிக்கட்சி என்றால் எப்போது?”

‘‘அநேகமாக ஆகஸ்ட் 15-ம் தேதியாகக் கூட இருக்கலாம். அடுத்த பொங்கலில் படம் ரிலீஸ் ஆகும்போது கட்சியும் இருக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் யோசிப்பதாகச் சொல்கிறார்கள்!”

‘‘அதற்கு ஏற்றார் போல ‘காலா’ படத்தின் கதையிலும் அரசியல் இருக்கிறதா?”

‘‘அரசியல் வசனங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால், ‘இது அரசியல் கதை அல்ல’ என்கிறார்கள். ‘நாலு பேருக்கு நல்லது செய்ய  எது செய்தாலும் தப்பில்லை’ என்ற கருத்து சொல்லும் விதமாக ‘காலா’ படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘இந்தப் படம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கைக் கதையும் அல்ல. முழுக்க முழுக்க மும்பையில் வசிக்கும் ஒரு தமிழரின் கதை. ‘கபாலி’யில் நீங்கள் பார்த்த ரஜினி சார் வேறு கதாபாத்திரம். ‘காலா’வில் நீங்கள் பார்க்கப் போகும் ரஜினி சாரின் கேரக்டர், இன்னொரு மகா உச்சம்’ என்று சொல்லி வருகிறார் இயக்குநர் பா.இரஞ்சித்!”

‘‘ஜூலை மாதத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் சொல்லி இருக்கிறாரே?”

‘‘அவரைக் கேட்டால், ‘நான் அப்படிச் சொல்லவே இல்லை’ என்று சொல்கிறாராம். ‘தமிழ்நாட்டு மக்கள் என் தம்பிக்கு மிகப்பெரிய வாழ்க்கையைக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த மக்கள் கஷ்டப்படும்போது அவர்கள் துயரத்தை நிச்சயமாக என் தம்பி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். கடவுள் அருள் என் தம்பிக்கு நிறையவே இருக்கிறது. கருணை உள்ளம் கொண்டவர் அவர். தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கினால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்தே தீருவார். சிறு வயதில் இருந்தே அவரது இயல்புகளை அருகில் இருந்து அறிந்தவன் நான். பணம், பொருளுக்கு ஆசைப்படாதவர். தன்னைப்போல் பிறரும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர். அவர் கட்சி ஆரம்பிப்பார். ஆனால் எப்போது என்று எனக்குத் தெரியாது’ என்று மட்டும்தான் அவர் சொன்னாராம். ஜூலை மாதத்தில் கட்சி எனச் சொல்லவில்லையாம்!”

‘‘ஜூலை மாதம் என்று அவர் சொல்லாமல் எப்படி செய்தி பரவியதாம்?”

‘‘முதலில் இப்படிச் சொல்லி விட்டு, ரஜினி சொன்னபிறகு வாபஸ் வாங்கிவிட்டார் சத்தியநாராயண ராவ் என்கிறார்கள். ஆள் ஆளுக்குச் செய்திகளை அறிவிக்க வேண்டியது இல்லை, மீடியாக்களிடம் கருத்து சொல்ல வேண்டியது இல்லை என்கிறாராம் ரஜினி. அதனால்தான் மீடியாக்களுக்குக் கருத்து சொல்ல சுதாகரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் கட்டளை போட்டுள்ளார் ரஜினி. ஜூன் 15-ம் தேதிக்கு மேல், மும்பையிலிருந்து சென்னை வரும் ரஜினி, புதுக்கட்சிக்கான வேலைகளில் மும்முரமாக இறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது” என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு வந்தார்.

“பி.ஜே.பி-யுடன் சசிகலா குடும்பம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டது. பி.ஜே.பி. தலைமையும் இவர்களை மன்னிக்கத் தயார் ஆகிவிட்டது. கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் அல்லவா? அப்போது பிரதமரிடம் சில நிமிடங்கள் தனியாகப் பேசி உள்ளார் எடப்பாடி. ‘உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். மத்திய அரசுடன் மோதல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பேன்’ என்று முழுமையாக சரணடைந்துள்ளார். ‘உங்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு’ என்று மோடியும் சொல்லி அனுப்பினார். மோடியை எடப்பாடி சந்திப்பதற்கு முந்தைய நாள் அமித் ஷாவை, ம. நடராசன் சந்தித்துள்ளார்”

மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி!

‘‘ஓஹோ! இதுவும் சரண்டர் படலம்தானா?”

‘‘ஒருவிதத்தில் அப்படித்தான். தனது நிலைமை, சசிகலா நிலைமை என பலவற்றையும் விவரித்துள்ளார் நடராசன். ‘பரத்வாஜைச் சந்தியுங்கள்’ என நடராசனிடம் சொல்லி இருக்கிறார் அமித்ஷா. ‘நான் அவரை பார்த்துவிட்டேன்’ என்று நடராசன் சொல்லி இருக்கிறார். பரத்வாஜ்தான் தமிழ்நாட்டுக்கான கவர்னராக விரைவில் நியமிக்கப்பட உள்ளாராம். நடராசனுக்கு ஏற்கனவே பரத்வாஜைத் தெரியும். அதனால் விவகாரம் சுமுகமானது. பேச்சு, சசிகலாவின்  நிலைமை பற்றி திரும்பி உள்ளது. ‘எங்களால் எதுவும் செய்வதற்கு இல்லை’ என்றரீதியில் அமித் ஷா சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனால், சசிகலா ரிலீஸ் ஆகிவிடுவார் என்று அவருடைய குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள்!”

‘‘எப்படியாம்?”

‘‘வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது அரசு ஊழியருக்கு மட்டுமே  தண்டனைக்குரிய குற்றம். கூட சேர்ந்து தவறு செய்பவர்களுக்கும், அந்தத் தண்டனை பொருந்தும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்த பிறகு இந்த வழக்கே செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டுள்ளனர். இதை வைத்துச் சசிகலா ரிலீஸ் ஆகிவிடுவார் என்று அவருடைய குடும்பத்தினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

‘‘தினகரன்?”

‘‘தினகரனுக்குச் சலுகை காட்டச் சொல்லி யாரும் வரக்கூடாது என்று டெல்லி சொல்லிவிட்டது. அதனால் தினகரன் தொடர்ச்சியாகச் சிறையில் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை!”

‘‘எப்படி இருக்கிறார் பன்னீர்?”

‘‘அவரது கூடாரம் கலகலத்துக் கொண்டு இருக்கிறது. எப்படியாவது எடப்பாடி அணியில் சேருவார், சலுகைகள் அனுபவிக்கலாம் என்று இவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நினைத்தார்கள்.ஆனால், இப்போதைக்கு இணைப்பு இல்லை என்று முடிவாகிவிட்டதால் பலரும் எடப்பாடி அணியோடு பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.

‘கே.பி.முனுசாமிதான் எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசுகிறார். மற்றவர்கள் பேச்சுக்கு அங்கு மரியாதை இல்லை. பன்னீரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார். இப்படியே போனால் ஒவ்வொருவராகக் கழன்று விடவும் வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்” என்றபடி எழுந்த கழுகாரிடம், ‘‘அமைச்சரவை மாற்றம் இருக்குமா?” என்றோம்!

‘‘இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி சொல்லி இருக்கிறார். ஆனால் தங்க தமிழ்ச்செல்வன், ராதாபுரம் இன்பதுரை ஆகிய இருவருக்கும் அமைச்சர் வாய்ப்பு அடிக்கலாம்” என்றபடி கழுகார் பறந்தார்!

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

சொத்துக்குவிப்பு... ஆக்‌ஷன்!

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த திருப்பம். ‘சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என கர்நாடக நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததது. குன்ஹா தீர்ப்பின்போதே ‘சொத்துகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும்’ என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியது. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சொத்துகள் பறிமுதல் நடவடிக்கையை முடுக்கிவிடும்படி லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் கேட்டுள்ளது. ஆனால், சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய எடப்பாடி அரசு எந்த அக்கறையும் காட்டவில்லையாம். மத்திய அரசில் இருந்து தமிழக அரசுக்கு பிரஷர் வந்தபிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கலெக்டர்களை விரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். சட்டரீதியான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் எடப்பாடி வசம்தான், லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கிறது.