Published:Updated:

ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?
ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

தி.முருகன், ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி

ளிய மக்களின் கைகளில் இருந்து இன்னமும் பிடுங்காமல், நம் ஜனநாயகம் விட்டு வைத்திருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டு. அதற்குத்தான் அத்தனை அரசியல்வாதிகளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆட்சிகள் மலர்வதும், நாற்காலிகள் கவிழ்வதும், அதிகாரத் திமிரோடு பேசுகிறவர்கள் அடுத்த தேர்தலில் அடையாளம் இல்லாமல் போவதும், இந்த ஆயுதத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்துகிறது. ஆனால், ஓர் இயந்திரத்தில், மோசடி செய்து ஓட்டு வாங்கிவிட முடியும் என்றால், மக்களைத் தேடி அரசியல்வாதிகள் ஏன் வர வேண்டும்?

‘நீ எனக்கு ஓட்டுப் போடாவிட்டாலும் பரவாயில்லை; உன் ஓட்டை எனக்கு விழுந்ததாக மாற்றிக்கொள்ள முடியும்’ என்று ஒரு மோசமான அரசியல்வாதி தீர்மானித்தால் என்ன ஆவது?

ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், முறைகேடும் மோசடியும் நடக்கிறது’ என எழுந்த குற்றச்சாட்டு, இந்தியா முழுக்கப் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும், டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் பி.ஜே.பி பெற்ற வெற்றிகளை அசைத்துப் பார்க்கின்றன இந்தக் குற்றச்சாட்டுகள். இந்தியா முழுவதிலுமிருந்து 42 கட்சிகளின் பிரதிநிதிகளைக் கூப்பிட்டுத் தேர்தல் ஆணையம் கூட்டம் நடத்தும் அளவுக்கு இந்தப் பிரச்னை சீரியஸ் ஆகியிருக்கிறது. கடைசியில், ‘‘உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். முறைகேடு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்” என சவால் விட்டிருக்கிறார், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி.

ஜூன் 3-ம் நாள் இதற்கான தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘‘பல நிபந்தனைகளோடு தரப்படும் இந்த வாய்ப்பு வெளிப்படையானது இல்லை’’ என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது.

இந்தியத் தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. 107 சட்டமன்றத் தேர்தல்களையும், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களையும் இந்த இயந்திரங்களை வைத்து நடத்தியிருக்கிறார்கள். ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்போது, அதுகுறித்த சந்தேகங்களும் வதந்திகளும் எழுவது இயல்புதான். ஆனால், இந்த இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை, ஆரம்பத்தைவிட இப்போதுதான் அதிகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘எந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுவதற்காக அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுகிறது’ எனக் குற்றச்சாட்டு எழுந்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, ‘தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டுகளை வைத்துப் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. மகாராஷ்டிராவில், வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற பொம்மை ஒன்றை சடலம் போல வைத்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்கும் போராட்டம் நடத்தினார்கள் அங்குள்ள எதிர்க்கட்சியினர். மும்பை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், ‘‘நான் வாங்கியது ஜீரோ ஓட்டு. என் ஓட்டை எனக்குத்தான் செலுத்தினேன். என் குடும்பமும் எனக்கே வாக்களித்தது. அதெல்லாம் எங்கே போயின?” எனப் பரபரப்புக் குற்றச்சாட்டு கிளப்பி, அது வாட்ஸ்அப் வைரல் ஆனது. ``பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும், டெல்லி மாநகராட்சித் தேர்தல் தோல்விக்கும் இயந்திர மோசடியே காரணம்'' எனச் சொன்னார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். எல்லாவற்றுக்கும் க்ளைமாக்ஸாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சௌரவ் பரத்வாஜ், ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும்’ என டெல்லி சட்டமன்றத்திலேயே, ஒரு மாதிரி இயந்திரத்தை வைத்து டெமோ செய்து காண்பித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில், எந்த அளவு உண்மை இருக்கிறது? சிலவற்றைப் பொய் என்று தேர்தல் ஆணையம் நிராகரித்தாலும், இன்னும் சில மர்மங்களாகவே நீடிக்கின்றன.

ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?
ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

* அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 தேர்தலின்போது, அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்பாக வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கிக் காண்பித்தனர் தேர்தல் அதிகாரிகள். வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வைக்கப்பட்ட அந்த இயந்திரத்தில், எந்த பட்டனை அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுவதாகக் காண்பித்தது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அந்தக் கட்சிப் பிரதிநிதிகள், ‘அசாம் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோதிக்க வேண்டும்’ எனப் புகார் செய்தனர். ‘சில இயந்திரங்களில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்த மாட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது. ஜோர்ஹட் தொகுதியில், அதற்குமுன்பு ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றிருந்த காங்கிரஸ், அம்முறை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

* மகாராஷ்டிரா மாநிலத்தின் யெரவாடா என்ற வார்டில், மொத்தம் 33,289 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஆனால், எண்ணும்போது 43,324 ஓட்டுகள் பதிவாகியிருப்பதாகச் சொன்னார்கள். தோல்வி அடைந்த 15 வேட்பாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். ‘தேர்தல் அதிகாரி கூட்டும்போது தவறு செய்துவிட்டார்’ என்று காரணம் சொன்னது, மாநிலத் தேர்தல் ஆணையம். ‘‘ஜெயித்தவர்களைத் தோற்றவர்களாக அறிவித்து ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வாக்குப்பதிவு இயந்திரமே காரணமாக இருந்தது’’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

கடந்த 2014-ம் ஆண்டு, மகாராஷ்டிராவின் பர்வாட்டி சட்டமன்றத் தொகுதித் தேர்தலில், போட்டியிட்டுத் தோற்றவர் காங்கிரஸ் வேட்பாளரான அபய் சாஜெத். குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் இருந்த இயந்திரங்களில், மோசடி நடந்ததாக மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை ஏற்று, குறிப்பிட்ட அந்த இயந்திரங்களை ஹைதராபாத் மத்திய தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்தியாவிலேயே தடயவியல் பரிசோதனைக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. ‘ரிமோட் மூலம் இவற்றை யாராவது இயக்க முடியுமா? முடிவுகளை மாற்றும்விதமாக, கூடுதலாக ஏதாவது மெமரி சிப் உள்ளே இருக்கிறதா?’ என்பவை உள்ளிட்ட ஒன்பது கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி, பரிசோதித்து பதில் தருமாறு கேட்டிருக்கிறது.

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய வழக்கு இருக்கிறது. விகாஸ் நகர், முசௌரி, ராஜ்பூர் ரோடு, பெல் ராணிபூர், ராய்பூர், பிரதாப் நகர் மற்றும் ஹரித்வார் ரூரல் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், தோற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த எல்லா தொகுதிகளிலும் ஜெயித்தவர்கள், பி.ஜே.பி-யினர். ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது’ எனப் போடப்பட்ட இந்த வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ‘ஒரு நீதிபதியின் முன்னிலையில், 48 மணி நேரத்துக்குள் இந்தத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் செய்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்குக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ‘‘இந்த உத்தரவால், தேர்தல் ஆணையம் பதற்றமாகி இருக்கிறது. இதைத் தடுக்க அவர்கள் எவ்வளவோ முயன்றனர்’’ என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

மத்தியப் பிரதேச மாநிலம் அடெர் தொகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடந்தது. இங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் ‘டெமோ’ செய்து காண்பிக்கும்போது, எல்லா ஓட்டுகளும் பி.ஜே.பி-க்கே விழுவதாக சர்ச்சை கிளம்பியது. தேர்தல் ஆணையம் உடனே களத்தில் இறங்கி 19 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது; சிலரை இடமாற்றம் செய்தது. தீவிர விசாரணை செய்துவிட்டு, ‘டெமோ சமயத்தில், நான்கு ஓட்டுகள் போடப்பட்டன. அவற்றில் ஒன்றே ஒன்றுதான் பி.ஜே.பி-க்கு விழுந்தது’ என விளக்கம் கொடுத்தது. தேர்தலில், காங்கிரஸ் ஜெயித்ததால், சர்ச்சை பெரிதாகவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் இடைத்தேர்தலிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘10 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருந்தது. அதனால் வந்த பிரச்னை இது. அவற்றை அகற்றிவிட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது.

வாக்குப்பதிவு இயந்திரம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. வாக்காளர்கள் வாக்களிப்பது ஒரு பகுதியில்; இன்னொரு பகுதியானது, வாக்குச்சாவடி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும். அதில் அவர் ஒப்புதல் கொடுத்தால்தான், ஒருவர் ஓட்டு போட முடியும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் உள் கட்டமைப்பு யாருக்கும் தெரியாமலே இருந்தது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத் என்பவர் மட்டுமே அவற்றின் படங்களை வெளியிட்டு இருந்தார்.

‘‘இந்த இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டாலும், மத்திய அரசின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள்தான் இவற்றை உருவாக்குகின்றன. 94 சுற்றுகளில்,  இவை பாதுகாப்பு தர பரிசோதனைகளை முடித்து வருகின்றன. இவற்றின் புரோகிராமை ஒருமுறை எழுதினால், யாராலும் படிக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. வயர்லெஸ், ப்ளூடூத், வைஃபை என எந்த சிக்னல் மூலமும் இதன் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய முடியாது. மற்ற நாடுகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையதளம் மூலம் இணைத்திருக்கிறார்கள். அதனால், அவற்றில் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவது சாத்தியம். நம் இயந்திரங்கள் இயங்க இணைய வசதி தேவையில்லை. எனவே, இவை உச்சபட்ச பாதுகாப்பானவை’’ என்பது தேர்தல் ஆணையத்தின் வாதம்.

இந்த இயந்திரங்கள் தொடர்பாக உலகப் புகழ்பெற்ற  இன்ஜினீயர்களும் அறிவியலாளர்களும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியுள்ளார்கள். அவர்களில், அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் பூர்வி வோராவும் ஒருவர். ‘‘இதுவும் ஓர் இயந்திரம். எந்த இயந்திரத்திலும் முறைகேடு செய்வது சாத்தியம். எந்த ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அல்லது ஹார்டுவேரிலும், யாருடைய கவனத்துக்கும் வராமலே மாற்றங்கள் செய்ய முடியும். இணையதள இணைப்பு இல்லை என்றாலும், குடோனில் இருக்கும்போதே அதில் மாற்றங்கள் செய்வது சாத்தியம். இதில் இருக்கும் பிரச்னைகளை நாங்கள் சொல்கிறோம். இதையெல்லாம் தீர்த்து, 100 சதவிகிதம் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வென்றபோது, பி.ஜே.பி இதே குற்றச்சாட்டைச் சொன்னது. இப்போது பி.ஜே.பி-யை நோக்கி எல்லாக் கட்சிகளின் விரல்களும் நீள்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்திருந்தால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருக்க முடியாது; சமீபத்திய பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்திருக்கவும் முடியாது.

‘இதுவரை மோசடி நடக்கவில்லை’ என்பதற்கும், ‘மோசடியே செய்ய முடியாது’ என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ‘இப்படி நடந்தால் என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு நியாயமான பதிலைத் தேர்தல் ஆணையம் தர வேண்டும்.

அரசியல்வாதிகள், தங்கள் தோல்வி பற்றிய ஆத்ம பரிசோதனையை அரசியல்ரீதியாகச் செய்ய வேண்டுமே தவிர, டெக்னாலஜிமீது பழிபோட்டுத் தப்பிக்கக் கூடாது.

ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத். ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்’ என்று முதலில் குரல் எழுப்பியவர் இவர்தான். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் இதற்கான ‘டெமோ’வை அவர் செய்து காட்டினார். ரிமோட் மூலம் அதைக் கட்டுப்படுத்தி, எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே வேட்பாளருக்கு ஓட்டு விழுவது மாதிரி செய்து காட்டினார். அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் ஹால்டெமேன், நெதர்லாந்தைச் சேர்ந்த ராப் காங்ரேய்ப் ஆகியோர் அவருக்கு உதவினர். ‘Citizens for Verifiability, Transparency and Accountability in Elections’ என்ற அமைப்பின் மூலமாகச் செயல்பட்டு வந்த ஹரிபிரசாத், ‘‘யாரோ ஓர் அரசியல்வாதி பணம் செலவழித்து சில ஹேக்கர்களை ஏற்பாடு செய்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறிவிடும். சிலர் நினைத்தால், ஒரு தேர்தல் முடிவையே மாற்றிவிடலாம் என்ற நிலை எவ்வளவு பயங்கரமானது! இதன் தொழில்நுட்பத்தை இன்னும் வலுவாக்க வேண்டும்’’ என அக்கறையோடு சொன்னார்.

ஆனால், தேர்தல் ஆணையம், இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, `ஹரிபிரசாத் எங்கிருந்து அந்த இயந்திரத்தை எடுத்தார்?' என்று சீரியஸாக ஆராயத் தொடங்கியது. மும்பை மாநகராட்சி குடோன் ஒன்றிலிருந்து அதை எடுத்தார் என்பது தெரியவே ஐந்து மாதங்கள் ஆகின. வாக்குப்பதிவு இயந்திரத்தைத் திருடியதாக ஹரிபிரசாத் கைது செய்யப்பட்டார். ‘‘தேர்தல் இல்லாத நாட்களில் இந்த இயந்திரங்கள் சீல் செய்து வைக்கப்படுவதில்லை. குடோன் பாதுகாப்புக்கும் சாதாரண காவலாளிகள்தான். யாரும் உள்ளே புகுந்து எந்த மோசடியும் செய்யலாம். நான் ஓர் அதிகாரிபோல நடித்து அங்கு போனதும், குடோனைத் திறந்து என்னிடம் இதைக் கொடுத்தார்கள்’’ என வாக்குமூலம் கொடுத்தார் அவர்.

அவரது சொந்தத் தொழிலை முடக்கும் அளவுக்குப் போனது போலீஸ். கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டு நிம்மதியைக் கெடுத்தார்கள். ‘‘உங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தி என்னை ஜெயிக்க வைத்தால், கோடிகளில் கொண்டுவந்து கொட்டுகிறோம் என சில அரசியல்வாதிகள் என்னிடம் பேரம் பேசினார்கள். ஆனால், எனக்கு தேசநலன்தான் முக்கியம்’’ என்றெல்லாம் சொன்னார் ஹரிபிரசாத்.

மேலை நாடுகளில், இதுபோன்ற டெக்னாலஜி ஹேக்கர்களை மதிக்கிறார்கள். ஹரிபிரசாத்தோடு இணைந்து இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த அலெக்ஸ் ஹால்டெமேன் ஏற்கெனவே, 'அமெரிக்க வாக்குப்பதிவு இயந்திரத்திலும், முறைகேடு செய்து முடிவை மாற்றிக் காட்ட முடியும்' என நிரூபித்திருந்தார். உடனே அவரை, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஆலோசகராக கலிஃபோர்னியா மாகாண அரசு நியமித்தது. இங்கே ஹரிபிரசாத்? ‘நமக்கு ஏன் வம்பு’ என ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஓட்டு சொல்லும் சீட்டு!

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள், மோசடி செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாப்பானவை இல்லை’ எனக் கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னது. இதைத் தொடர்ந்து, ‘அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரத்தை வரும் 2019-ம் ஆண்டுக்குள் பொருத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Voter-Verified Paper Audit Trials (VVPAT) எனும் இந்த வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரம் இருந்தால், ஒருவர் ஓட்டு போட்டதும், 'யாருக்கு ஓட்டு போட்டார்?' என ஒரு பிரின்ட் ஸ்லிப் வந்துவிடும். ஏதாவது வித்தியாசம் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யலாம். ‘ஏதாவது சந்தேகம் வந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தும்போது, இந்தத் துண்டுச்சீட்டுகளை எண்ண வேண்டும்’ எனப் பல கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு