Published:Updated:

கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

சுகுணா திவாகர்

கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

சுகுணா திவாகர்

Published:Updated:
கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

2017-ம் ஆண்டு இரு திராவிடக் கட்சிகளுக்கும் முக்கியமான ஆண்டு. காங்கிரஸ் என்ற தேசியக் கட்சியை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைப் பிடித்த 50-ம் ஆண்டு, கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்த 60-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு என்ற மூன்று முக்கியத்துவங்கள் இந்த ஆண்டுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மேடையில் அமரும் நிலையில்  கருணாநிதி இல்லை. இப்படி ஒரு விழா நடைபெறுவதை உணரும் நிலையிலேயே அவர் இல்லை. காலம் விசித்திரமானதுதான்!

கருணாநிதி தீவிரமாக அரசியல் செய்ய இயலாத இன்றைய நிலையில், தி.மு.க-வுக்கு என்று சில கடப்பாடுகள் உள்ளன. கருணாநிதி தன் அரசியல் வாழ்வில் பல சமரசங்களையும் சந்தர்ப்பவாதங்களையும் செய்திருந்தாலும், அசைக்கமுடியாத பல நல்ல மாற்றங்களையும் நிகழ்த்தியிருக்கிறார். சமூகநீதி, பெண்களுக்கான சொத்துரிமை, அடித்தட்டு மக்களும் பயன்பெறும்வகையில் மக்கள்நலத் திட்டங்கள் ஆகியவை அவரது முக்கியமான சாதனைகள். அரசியல் தளத்தைத் தாண்டி கலாசார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கிறார். திருநங்கைகளுக்கான நல வாரியம், ‘நரிக்குறவர்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்கவேண்டும்’ என்று திருச்சி சிவா மூலம் மத்திய அரசை வலியுறுத்தியது, கல்விமுறை மாற்றங்கள், தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு, ‘ஊனமுற்றவர்கள்’ என்ற வார்த்தையை ஒழித்து ‘மாற்றுத்திறனாளி’ என்ற வார்த்தையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டண மற்றும் வேலைவாய்ப்புச் சலுகை, கோயில்களில் அறங்காவலர் குழுவில் ஆதிதிராவிடர்களையும் பெண்களையும் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்ற அரசாணை என்று கருணாநிதி கொண்டுவந்த சட்டங்களும் அரசாணைகளும் சமூகரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தனித்துவமானவை.

கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

இந்தச் செயல்பாடுகளை எல்லாம் வெறுமனே ஓட்டரசியல் நோக்கங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. வெறுமனே தேர்தல் அரசியலை மட்டும் உள்வாங்கிக்கொண்டால் ஸ்டாலினால் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள முடியாது.

கருணாநிதியின் வைர விழாவை முன்னிட்டு மாற்று அணியை உருவாக்க ஸ்டாலின் முயற்சி மேற்கொள்கிறார். ஆனால், இது வெறுமனே அரசியல் நடவடிக்கையாக நின்றுவிடக்கூடாது. அண்ணா மறைவுக்குப்பின் தி.மு.க தலைவரானதில் இருந்தே தேசிய அரசியலில் தி.மு.க-வுக்கான இடத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார் கருணாநிதி. ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தன் குடும்ப வாரிசுகளின் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சுயநலத்துடன் அவர் நடந்துகொண்ட விதம், அவரது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் அழிக்கமுடியாத கரும்புள்ளி. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம், இலங்கையில் இருந்து அமைதிப்படையை இந்தியா திரும்பப் பெற்றது, மண்டல் கமிஷனுக்கு ஆதரவு, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து ஆகியவை தேசிய அரசியலின் மூலம் கருணாநிதி சாதித்தவை. இப்படி சாதிக்கக்கூடிய அளவுக்கு அரசியல் பலமும் கருத்தியல் பலமும் ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்பதை அவரது வருங்காலம்தான் மெய்ப்பிக்க வேண்டும்.

இது ஒரு பக்கம்! இன்னொரு பக்கத்தில்....

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வில் நாள்தோறும் நகைச்சுவைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. காவிரிப் பிரச்னை, ராஜீவ் கொலை வழக்குப் பிரச்னை, ஈழப்பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை ஆகியவற்றில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராக உறுதியாகப் போராடி வந்தார். தனது அரசியல் கோரிக்கைகளை மறைமுக நிர்பந்தங்களாக வைத்து நெருக்கடியைக் கொடுக்க இதனைப் பயன்படுத்தினாலும், மேற்சொன்ன விஷயங்களில் தனது உறுதியை ஜெயலலிதா நிலைநிறுத்தினார். காலம் முழுவதும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்தவர், தி.மு.க-வுக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி ‘ஈழத்தாய்’ பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார். அதேபோல் தன்னைமீறி தேசியக்கட்சிகள் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்ற தன்முனைப்பும் அவரது நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்தது. ஆனால், இப்படியான தன்முனைப்புடன்கூட மாநில அரசின் உரிமைகளை வலியுறுத்தக்கூடியவர்களாக இன்றைய அ.தி.மு.க-வினர் இல்லை.

இன்று அ.தி.மு.க-வில் நடைபெறும் அசிங்கங்களுக்கும் அதிகாரப் போட்டிகளுக்கும் வேறு யாரையும்விட ஜெயலலிதாதான் முதன்மைக்காரணம். கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குமே சுயநலம் இருந்தது என்றாலும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. தன் குடும்ப வாரிசே தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நீண்டநாட்களாகத் திட்டமிட்டு, தொண்டர்களையும் தயார்படுத்திவைத்திருந்தார் கருணாநிதி. சுயநலம் என்றாலும் ‘தனக்குப் பின்னால் கட்சி இருக்கவேண்டும், செயல்பட வேண்டும்’ என்ற நோக்கம் கருணாநிதிக்கு இருந்தது. ஜெயலலிதாவோ, தனக்குப் பின்னால் கட்சி நிலைத்திருப்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. தனக்கு நிகரான யாரும் கட்சியில் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமல்ல, தனக்கு அடுத்தும் யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்தார். இதுதான் அ.தி.மு.க-வின் இப்போதைய வீழ்ச்சிக்குக் காரணம்.

நாகரிகம் இல்லையென்றாலும், ஒன்றைச் சொல்லவேண்டும். ஜெயலலிதா இல்லாததால் அ.தி.மு.க-வில் பல தீமைகள் நடந்ததைப் போலவே நன்மைகளும் நடந்திருக்கின்றன. ஊழல், குடும்ப அரசியல், தலைமை வழிபாடு ஆகிய பண்புகள்... தமிழக அரசியலுக்குக் கருணாநிதி இழைத்த தீங்குகள். கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்ட ஜெயலலிதா, கருணாநிதி வழியில் இந்த மூன்று தீங்குகளையும் பின்பற்றத் தயங்கவில்லை. கூடுதலாக, அவர் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவை, அரசியல் நாகரிகம் இன்மை, சுயமரியாதை மறுப்பு, எதேச்சதிகாரப் போக்கு, வெளிப்படையற்ற தன்மை.

கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்!

கருணாநிதி - எம்.ஜி.ஆர் காலத்திலேயே அரசியல், தரம் தாழத் தொடங்கியது உண்மைதான். மூன்றாந்தர மேடைப்பேச்சாளர்கள் பரஸ்பரம் வசைபாடி வந்தாலும், தனிப்பட்ட முறையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நட்பும் அரசியல் நாகரிகமும் பேணினர். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் அரசியல் நாகரிகம் பாதாளத்துக்கும் கீழே போனது. மாற்றுக்கட்சிகளில் முக்கியத் தலைவர்கள் இறந்தபோது ஜெயலலிதா அஞ்சலி செலுத்தச் சென்றதில்லை. பல சமயங்களில் இரங்கல் அறிக்கைகள்கூட வெளியிட்டதில்லை.

ஆனால், ஜெயலலிதா இறந்த சில நாள்களில் இது மாறியது. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை அ.தி.மு.க-வில் இருந்து ஜெயக்குமாரும் தம்பிதுரையும் சென்று பார்த்ததுடன், எம்.ஜி.ஆர் பாணியில் ‘கலைஞர்’ என்றே பேட்டியில் குறிப்பிட்டனர். இது முக்கியமான மாற்றம்.

சுயமரியாதை இயக்கம் கண்ட மண் இது. திராவிடம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே சுயமரியாதைதான். ஆனால், தன் கட்சிக்காரர்கள் அனைவரையும் தன் காலில் விழவைத்து சுயமரியாதையைக் கேலிப்பொருளாக்கி யவர் ஜெயலலிதா. ஆனால், இப்போது அ.தி.மு.க-வில் (இரண்டு அணிகளிலும் தான்) யாரும் யார் காலிலும் விழவில்லை. ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர் களைப் பொம்மைகளாகத்தான் வைத்திருந்தார். இப்போதோ அமைச்சர்கள் துறைசார்ந்து அறிவிப்புகளைச் செய்கின்றனர்.

தி.மு.க கொண்டுவந்த திட்டங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவற்றைக் குப்பைத்தொட்டிக்கு அனுப்புவதில் குறியாக இருந்தார் ஜெயலலிதா. கடந்த தி.மு.க ஆட்சியில் பல முறைகேடுகள் இருந்தாலும் சமச்சீர்க்கல்வி, செயல்வழிக் கற்றல் ஆகிய கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தகுந்தவை. ஆனால், ஜெயலலிதா இவற்றை அலட்சியம் செய்தார். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, பராமரிக்காமலேயே சீரழித்தார். ஆனால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படுவதோடு, வாரம்தோறும் விருந்தினர்களை அழைத்து சிறப்புக்கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க, தலைமையைத் தொலைத்தாலும், பாதையைக் கண்டடைந்திருக்கிறது. கருணாநிதியின் பங்களிப்பு இல்லாத தி.மு.க-வுக்குத் தலைமை இருக்கிறது. பாதை?