Published:Updated:

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘டெல்லியில் மழை பெய்ததால் வெயில் குறைந்திருக்கிறது’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ். அவர் டெல்லியில் இருப்பதைப் புரிந்து கொண்டுப் போனில் பிடித்தோம். ‘‘டி.டி.வி.தினகரனுக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து விட்டதே?’’ என்றோம்.

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘‘ஆமாம்! டெல்லி போலீஸ் ‘அந்த ஆதாரம் இருக்கிறது... இந்த ஆதாரம் இருக்கிறது...’ என இழுத்தார்களே தவிர, தினகரனைச் சிறையில் இன்னமும் வைத்திருக்கத் தேவையான காரணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. அதனால் சுலபமாக ஜாமீன் கிடைத்துவிட்டது. 41 நாள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருக்கிறார் தினகரன்.”

‘‘இனி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?’’

‘‘அ.தி.மு.க-வில் உள்ள 122 எம்.எல்.ஏ-க்களில்  தற்போது பல கோஷ்டிகள் தலையெடுத்துவிட்டன. சசிகலா, எடப்பாடி பழனிசாமி, தினகரன், திவாகரன், தோப்பு வெங்கடாசலம், வைத்திலிங்கம், ராஜன் செல்லப்பா, நாடார் அணி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்... இப்படி பல கோஷ்டிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் கஸ்டடியிலும் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இவர்களில் 37 பேரின் ஆதரவு தினகரனுக்கு இருப்பதாக அடித்துச் சொல்கிறார், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர். இப்போது சொல்லும்... ஆக்டிவ் பாலிடிக்ஸில் தினகரன் ஈடுபடாமல் இருப்பாரா?’’

‘‘டெல்லி இதை எப்படிப் பார்க்கிறது?’’

‘‘குறைந்தபட்சம் ஜூலை மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரையாவது தினகரன் அடக்கியே வாசிக்கவேண்டும் என்பது டெல்லிவாலாக்களின் எதிர்பார்ப்பு. ஆனால்,  அ.தி.மு.க-வின் சில கோஷ்டிகளை ஒருங்கிணைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தினகரன் வழிநடத்துவார் என்றே தெரிகிறது. அவரின் நேரடி இலக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். கைதுக்கு முன்பு தினகரன் வீட்டில் நடந்த சண்டையில் வேலுமணியும் அமைச்சர் தங்கமணியும் நேருக்கு நேராகப் பேசிய வார்த்தைகள் சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தன. வேலுமணியிடம் உள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டும் என்று முதலில் போர்க்கொடி தூக்கப்போகிறார்களாம். மேலும், தங்கமணி, வீரமணி, ஆர்.பி. உதயக்குமார் இப்படிப் பலரையும் கழற்றிவிடவேண்டும் என்பது தினகரனின் திட்டம். ஆனால், வேலுமணியை நீக்க முதல்வர் எடப்பாடி சம்மதிக்கமாட்டார். இங்கிருந்துதான் பிரச்னை வெடிக்கப் போகிறது. தன் கஸ்டடியில் உள்ள  எம்.எல்.ஏ-க்களைச் சட்டசபை நடக்கும் போது எடப்பாடிக்குக் கட்டுப்படாமல் வேறு மாதிரி நடந்துகொள்ள சொல்லப்போகிறாராம் தினகரன். இதில் எடப்பாடி திடுக்கிட்டுப் போயிருக்கிறார். தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் இரண்டு அமைச்சர்கள். ஒருவர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இன்னொருவர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். இந்த இருவரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்கள் தன் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறார் எடப்பாடி.”

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘‘நடராசனின் டெல்லி விசிட்டுக்குப் பிறகு தினகரன் ஜாமீனில் வெளி வந்திருக்கிறாரே?”

‘‘இரண்டுக்கும் தொடர்பில்லை. தன் தம்பி பழனிவேலு, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருடன் நடராசன் டெல்லி போனார்.

பி.ஜே.பி-யின் முக்கியப் பிரமுகர்கள் சிலரைச் சந்தித்தார். சில வாக்குறுதிகளை அப்போது நடராசன் தரப்பு கொடுத்ததாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேச்சு. மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அவரது செயலகத்தைக் கவனித்தவர்களில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர், நடராசனின் தம்பி பழனிவேலுவின் மாப்பிள்ளை. மோடியின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பவர். தற்போது குஜராத் மாநிலத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அந்தச் சேனலையும் நடராசன் தரப்பு விட்டு வைக்கவில்லையாம். ‘ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டது நடராசனுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் கோபம். மற்றபடி, இருவருக்கும் வேறு எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்கிறார்கள் அந்தக் குடும்பத்தில். பி.ஜே.பி தலைவர்களை டெல்லியில் போய் நடராசன் பார்த்ததை எடப்பாடி அரசில் இருக்கும் சீனியர் அமைச்சர்கள் யாரும் ரசிக்கவில்லையாம்.’’

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘‘இதில் பி.ஜே.பி-யின் திட்டம் என்ன?”

‘‘முதலில் ஓ.பன்னீர்செல்வம், பிறகு, எடப்பாடி பழனிசாமி, இப்போது தினகரன் என்று கோஷ்டிகளை பிஜே.பி அரசு, டெல்லியில் உருவாக்கித் தமிழகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. கோஷ்டிகள் அதிகமானால்தானே தகவல்கள் டெல்லிக்குப் போகும். அதை வைத்து அரசியல் செய்ய முடியும். அதைத்தான் பி.ஜே.பி செய்கிறது. பல தலையாட்டி பொம்மைகள் கிடைத்துவிட்டார்களே... வேறென்ன வேண்டும்?”

“தமிழகத்தில் அதிரடியாக 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்களே?”

“22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது பெரிய விஷயமல்ல. அதில் நான்கு மாவட்டக் கலெக்டர்கள் மாற்றப்பட்டனர். அது கவனிக்கத்தக்க செய்தி. இந்த 22 டிரான்ஸ்ஃபர்களும் இரண்டு கலெக்டர்களை மாற்றுவதற்காகவே போடப்பட்டது. அவர்கள், திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார். எப்படியாவது இவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று இடைவிடாமல் போராடியவர் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன். திருநெல்வேலிக்குக் கருணாகரன் வந்த பிறகு, வைகுண்ட ராஜனுக்குக் கடுமையான தலைவலி ஆரம்பித்தது. திருநெல்வேலி பகுதியில் உள்ள வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் சோதனை, மணல் குடோன்களுக்கு ‘சீல்’ வைப்பது என்று கருணாகரன் கருணை காட்டாமல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் அரசியல் நிலைமை சரியில்லாமல் இருந்ததால், வைகுண்டராஜனால் வேறு ஆட்களைப் பிடித்து காரியம் சாதிக்கவே முடியவில்லை. அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு கருணாகரனைச் சகித்துக் கொண்டிருந்தார். தினகரன், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளரானபோது, வைகுண்டராஜனுக்கு லேசாக நம்பிக்கை ஏற்பட்டது.’’

‘‘ஓ... அதனால்தான் வைகுண்டராஜன்-தினகரன் சந்திப்பு அப்போது நடைபெற்றதா?’’

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘‘ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரனைச் சந்தித்து வைகுண்டராஜன் ஆதரவு தெரிவித்தார். அந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமே, கருணாகரனின் அதிரடிகளில் இருந்து தனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் முறையிடத்தான். ஆனால், இந்தச் சந்திப்பு நடந்த மறுநாளே வைகுண்டராஜனின் குடோன்களுக்கு ‘சீல்’ வைத்து மூடினார் கருணாகரன். இதேபோல தூத்துக்குடியிலும் நடந்தது. இதில் வெறுத்துப்போன வைகுண்டராஜன், எடப்பாடி பழனிசாமியைச் சிலர் மூலம் சந்தித்தார். மீண்டும் கோரிக்கை வைத்தார். அதன்பிறகே, திருநெல்வேலியில் இருந்து கருணாகரன் மாற்றப்பட்டார். மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி கலெக்டர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். தூத்துக்குடி கலெக்டராக இருந்த ரவிக்குமார் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.’’

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களைக் கையகப்படுத்தும் வேலைகள் வேகம் பிடித்துள்ளனவே?’’

‘‘எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்துக்குப் பிறகுதான் இந்த வேலைகள் தீவிரம் அடைந்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அந்தப் பயணத்தில், தன் விசுவாசத்தை நிரூபிக்க எடப்பாடி படாதபாடு பட்டார். ஆனால், அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, ‘சசிகலா குடும்பத்தை முற்றிலும் கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் ஒதுக்கிவிட்டதாகச் சொல்கிறீர்கள். பிறகு ஏன் சசிகலாவின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் வேலையை இன்னும் தொடங்கவில்லை?’ என்பதுதான். அதன்பிறகே சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக்டர்களைத் துரிதப்படுத்தி, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது தமிழக அரசு. மொத்தம் 128 சொத்து வகையினங்கள் இதில் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தோ தோகா கெமிக்கல்ஸ், லக்ஸ் பிராப்பர்டீஸ், அக்ரோ பார்ம்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பெயரில்தான் நிலம், கட்டடங்கள் வாங்கிப் போடப்பட்டுள்ளன. அவற்றைக் கையகப்படுத்தும் வேலைகளில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை இறங்கி உள்ளது.”

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

‘‘சென்னையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனரே?”

‘‘தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ வெற்றிவேலின் பெரம்பூர் தொகுதியில், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான தனி வட்டாட்சியராக இருந்தவர் மதன் பிரபு. வயது 38. இவர்,  ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் தண்டையார் பேட்டை  தனி வட்டாட்சியர் பதவியையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். சுமார் 30 ஆயிரம் முதியோர் பென்ஷன் பில் வேலைகள் உள்ளிட்ட முக்கியப் பணிகளை தனி ஒருவராக கவனித்து வந்திருக்கிறார். கடந்த 31-ம் தேதியன்று அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே, ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோனார். இந்தச் சோகச் செய்தி அறிந்ததும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். ‘தண்டையார்பேட்டை தாலுக்கா அலுவலகப் பணியையும் சேர்த்துக் கவனிக்கும்படி கொடுக்கப்பட்ட நெருக்கடியே, மதன் பிரபுவின் மரணத்துக்குக் காரணம். போனில் லோக்கல்      எம்.எல்.ஏ தரக்குறைவாகத் திட்டுகிறார், மிரட்டுகிறார் என்றெல்லாம் எங்களிடம் சொல்லி மதன்பிரபு வருந்தி இருக்கிறார். கலெக்டர் ஆபீஸில் உயர் அதிகாரிகள் இருவர் உச்சகட்ட டார்ச்சர் கொடுத்துள்ளனர். இதுபற்றி எங்கள் சங்கம் மூலமாகவே வருவாய்த்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்து விட்டோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவு... ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டோம்’ என்கிறார்கள் போராடும் சங்கத்தினர்’’ என்று கழுகார் முடித்தபோது, நமது செல்போன் சார்ஜ் தீர்ந்திருந்தது.

அட்டைப் படம்: சு.குமரேசன்
படங்கள்: மீ.நிவேதன்,  கே.ஜெரோம்

மீண்டும் போராட்டக்களமான ஐ.ஐ.டி!

சென்னை ஐ.ஐ.டி வளாகம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் போராட்டக் களமாக மாறியிருக்கிறது.

மத்திய பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை, சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் ‘பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்’ என்ற மாணவர் அமைப்பு விமர்சனம் செய்தது. அதையடுத்து, அந்த அமைப்பை ஐ.ஐ.டி நிர்வாகம் தடை செய்தது. அதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்களும் நடந்தன. அதையடுத்து, அந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது. இது 2015-ம் ஆண்டு நடைபெற்றது.

மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி!

இப்போது மீண்டும் கொந்தளிக்கிறது ஐ.ஐ.டி வளாகம். இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசுத் தடை விதித்ததைக் கண்டிக்கும் வகையில், கடந்த 29-ம் தேதி ஐ.ஐ.டி வளாகத்தில், மாட்டுக்கறி உண்ணும் விழாவை மாணவர்கள் நடத்தினர். அதில் பங்குகொண்ட பிஹெச்.டி மாணவர் சூரஜ்ஜை, அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர்களில் சிலர் கொடூரமாகத் தாக்கினர். அதில், சூரஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சொல்லும் ஐ.ஐ.டி மாணவர் சதீஷ் “சூரஜ், கேரளாவைச் சேர்ந்தவர். இங்கு, ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் பிஹெச்.டி ஆய்வுப்பட்டம் மேற்கொள்கிறார். மாட்டுக்கறி விழாவுக்கு மறுநாள் ஐ.ஐ.டி கேன்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஓஷன் இன்ஜினீயரிங் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும், வட இந்தியாவைச் சேர்ந்த மனிஷ் மற்றும் அவரின் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து சூரஜ்ஜைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சூரஜ் அனுமதிக்கப்பட்டார்” என்றார்.

சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல மாணவர் அமைப்பினர், ஐ.ஐ.டி-யைக் கடந்த 31-ம் தேதி முற்றுகையிட்டனர். ‘சூரஜ்ஜைத் தாக்கிய மாணவர்களை ஐ.ஐ.டி-யில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று மாணவர்களில் ஒரு தரப்பினர் ஐ.ஐ.டி-க்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். “சூரஜ்ஜைத் தாக்கியவர்கள், ‘விவேகானந்தர் மாணவர் வட்டம்’, ‘வந்தே மாதரம் மாணவர் வட்டம்’ போன்ற அமைப்புகளின் ஆதரவாளர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் துடிக்கிறது. ‘இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்வோம்’ என்று போராடும் மாணவர்களிடம் ஐ.ஐ.டி நிர்வாகம் சமாதானம் பேசுகிறது” என்றனர் அவர்கள்.

சென்னை ஐ.ஐ.டி-யின் டீன் எம்.எஸ்.சிவக்குமாரோ “இதுகுறித்து ஊடகங்களிடம் நான் பேசக்கூடாது” என்று பின் வாங்குகிறார். இப்போது இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.