Published:Updated:

`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி
`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி

`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்டெர்லைட் ஆலையின் நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். 

`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த சதிக்கு அரசும், காவல்துறையும் மறைமுகமாக துணை நிற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய அப்பகுதிகளைச் சேர்ந்த  மக்கள், தங்களது போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி, கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றபோது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவிகளைப் படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்குப் பணிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 24-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அன்றே ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு மே 28-ம் தேதி வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் இடைவிடாத போராட்டமும், தமிழகம் முழுவதும் எழுந்த ஸ்டெர்லைட்  எதிர்ப்பலையும்தான் தாமிர உருக்காலை மூடப்படுவதற்கு காரணம் என்பதை உணர்ந்துகொண்ட ஆலை நிர்வாகம், இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. இதற்கான பிரசாரத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு பிரிவினர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும், வேலைவாய்ப்புக்கும் ஸ்டெர்லைட் ஆலை அவசியம் என்பதால் அதை மீண்டும் திறக்க ஆணையிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைக்கும் நாடகம் வாரந்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு மனு கொடுப்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தான்; அவர்களைத் தவிர வேறு யாரும் அல்ல.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் தூத்துக்குடி நகரத்தையும், புறநகரையும்  சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளாமானோர் தங்கள் உறவுகளைப் புற்றுநோய்க்கு பலி கொடுத்துள்ளனர். கருச்சிதைவு, உடல் உறுப்பு செயல்பாடு பாதிப்பு என ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட தீய விளைவுகளுக்கு வாழும் எடுத்துக்காட்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளனர். 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களால் இனியும் பொறுக்க முடியாது  என்ற நிலை ஏற்பட்டபோதுதான் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடினார்கள். ஆலைக்கு எதிராக இருமுறை நடந்த ஒன்று கூடல்களில் யாரும் அழைக்காமலேயே  லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்... இல்லாவிட்டால் தங்களைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழங்கினார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி மனு கொடுக்கிறார்கள் என்று கூறுவதை நம்ப முடியாது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தாமிரத்தின் விலை உயர்ந்து விட்டது; எனவே, ஆலையை திறக்க ஆணையிட வேண்டும் என்று வணிகர்களைக் கூற வைத்து ஒரு நாடகத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நடத்தியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும், அதன் விலை அதிகரித்ததும் உண்மைதான். இப்போது  இறக்குமதி மூலம் நிலைமை சீராகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மனிதகுல பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இது பொருட்படுத்தக்கூடிய விஷயமே இல்லை. 

தாமிர உருக்காலையால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்; இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவோர் அனைவரும் சீனாவின் கைக்கூலிகள் எனக் குற்றஞ்சாற்றும் வகையில் அவதூறு கருத்துகளை ஒரு காணொளி வைரலாக்கப்பட்டு வருகிறது. அதை தயாரித்து வழங்கியது யார்? என்ற விவரம் அதில் இல்லை என்பதிலிருந்தே அது யாரால், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களால் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.

ஸ்டெர்லைட் ஆலையின் இத்தகைய நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்பதுதான் வேதனையளிக்கும் விஷயமாகும். ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவுகளை நினைத்துப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும்  திறக்கக்கூடாது என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக் கூடாது. ஆலையை மூட ஆணை பிறப்பித்து விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்து, வழக்கை முறியடித்து நாசகார ஆலை நிரந்தரமாக மூடப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு