Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

உமரி பொ.கணேசன், மும்பை-87.

கருணாநிதியின் பிறந்த நாள் விழா, அரசியல் விழாதானே?


‘பிறந்த நாள் விழா’ என்ற போர்வையில் நடக்கும் அரசியல் விழா. அரசியல்வாதிகள் வீட்டு கல்யாணங்களே அரசியல் விழாக்கள் தானே!

கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்பது ஒரு திருப்புமுனையை உருவாக்கும்’ என்று கூறுகிறாரே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்?


என்ன திருப்புமுனை என்பதைத் திருமாவளவன்தான் சொல்ல வேண்டும். ‘ரஜினிகாந்தை எதிர்த்தால் ஏதாவது பிரச்னை வரும்’ என்பதற்காக ஆதரித்து வைப்போம் என்ற ரீதியில் இதனைத் திருமாவளவன் சொல்லி இருக்கலாம். அல்லது, ‘அவர்தான் அரசியலுக்கு வரப்போவது இல்லையே, அதனால் சும்மா வரவேற்று வைப்போம்’ என்பதற்காகவும் சொல்லி இருக்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சில வார்த்தைகள் அர்த்தம் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. புரட்சி, தர்மம் வெல்லும், திருப்புமுனையை உருவாக்கும் என்பவையெல்லாம் அந்த வரிசையில் வரும்!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

இந்த ஆண்டாவது தமிழ்நாட்டுக்குத் தேவையான காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்குமா?


கர்நாடகாவின் காவிரிப் படுகையில் அதிகப்படியான மழை பெய்து, அவர்களது தேவையும் பூர்த்தி ஆகி, தேக்கி வைக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்கான நீர் கிடைக்கும். மற்றபடி, அது தமிழ்நாட்டுக்குத் தேவையான நீராகவும் இருக்காது. நமக்கு உரிய நேரத்திலும் கிடைக்காது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய   பி.ஜே.பி அரசு பிடிவாதம் பிடிப்பதும், மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுக்கும் சர்வவல்லமை கர்நாடக அரசியல்வாதிகளுக்கு இருப்பதும் இங்கு யதார்த்தமாக இருக்கும்போது என்ன செய்ய முடியும்?

கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

ரஜினிகாந்த் - விஜயகாந்த் ஒப்பிடுக?


ஒருவர் பட்டுவிட்டார். இன்னொருவர் படப் போகிறார்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

காலில் விழும் கலாசாரம் தற்போது ஒழிந்துவிட்டதா?


முன்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தனித்தனியாகக் காலில் விழுந்து கொண்டு இருந்தார்கள். இப்போது ஓர் அமைச்சரவையே காலில் விழுந்து கிடக்கிறது.

அ.சங்கர், பெங்களூரு.

நம்முடைய வாழ்வில் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப சில முடிவுகளை நாம் கட்டாயம் எடுத்தாக வேண்டும். ஆனால், எந்த முடிவையும் எடுக்காமல்... மேலே கை காட்டினால் அது புத்திசாலித்தனமா?


எப்போதும் எந்த முடிவையும் எடுக்காமல், மேலே கையைக் காட்டி தப்பித்துக் கொண்டே இருப்பதும் புத்திசாலித்தனம்தானே?!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘ஊழல் மக்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்கிறாரே கமல்?


தனக்குக் காரியம் ஆகவேண்டுமே என்பதற்காக எதையாவது லஞ்சமாகக் கொடுத்து இதை ஒருவன் ஆரம்பித்து வைத்திருக்கலாம். அல்லது, உனக்கு இந்தக் காரியம் ஆகவேண்டுமென்றால், இதை எனக்குக் கொடு என்றும்கூட ஒருவன் ஆரம்பித்து வைத்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இதைத் தடுக்க வேண்டியது ஆளும் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் கைகளில்தான் இருக்கிறதே தவிர, மக்களின் கைகளில் இல்லை.

ஒருவர், கல்லூரியில் சேர்ப்பதற்காக தன் மகனுக்குச் சாதி சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகம் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்கிற சூழலில், அவர் அதைக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்? உரிய தேதியில் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியாமல் அவருடைய மகன் கல்வி வாய்ப்பை இழப்பதுதான் நடக்கும். ஒருவேளை அவர் புகார் கொடுத்தாலும், அதன் மீதான நடவடிக்கை என்பது குதிரைக் கொம்புதான். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், அது காலம் கடந்ததாகவே இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படப்போவது மக்கள்தான். லஞ்ச ஊழலை ஒழிக்கும் அதிகாரம் ஆட்சியாளர்களின் கைகளில்தான் இருக்கிறதே தவிர, மக்களிடம் இல்லை. பரஸ்பரம் பிரச்னை இல்லாமல் மக்கள் வாழ்வதற்காக, அவர்களால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு கறையான்களால் அரிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேறு வழியில்லாமல்தான் மக்கள் லஞ்சம், ஊழல் என்றெல்லாம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், திரும்பத் திரும்ப மக்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது... சரியல்ல. கமல் போன்றவர்கள் மக்களைத் திரட்டி ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகப் போராட முன்வருவதற்கு முயன்றால் நிச்சயமாக மக்கள் பாராட்டுவார்கள். இதைவிடுத்து மக்களையே குறைசொல்லிக் கொண்டிருந்தால், கமல் மீது அவர்களுக்கு வெறுப்புத்தான் வளரும்.

கழுகார் பதில்கள்!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகையே உறவு கொண்டாடி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கணியன் பூங்குன்றனார். ஆனால், இப்போதைய தமிழகத்தில் எழுப்பப்படும் ‘மண்ணின் மைந்தன்’ முழக்கங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரண்டும் வேறுவேறு தத்துவங்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது பரந்து மானுடத் தத்துவம். அது தமிழர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலக மக்களுக்கும் பொதுவானது. ‘இனம், மொழி, தேசம், கண்டம் கடந்த மக்களாக அனைவரும் வாழ வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், பழக வேண்டும்’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ‘மண்ணின் மைந்தன்’ என்ற தத்துவம் உரிமை சார்ந்தது. எந்த மண்ணில் அந்த மனிதன் பிறந்தானோ, அந்த மனிதனுக்கு அந்த மண் சொந்தம். அவனது மொழி, அவனது பழக்க வழக்க பண்பாட்டு நெறிமுறைகள் காக்கப்பட வேண்டும். அந்த அரசு அதற்கான முக்கியத்துவத்தைத் தர வேண்டும். அதற்கு குந்தகம் ஏற்படும்போது ‘மண்ணின் மைந்தன்’ முழக்கம் வெடிக்கிறது. இது இயற்கையானதுதான். மஹாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் இதுபோன்ற முழக்கம் எழுப்பப்படும்போது அது விவாதம் ஆவது இல்லை. அவர்களின் இனப்பற்றாக அது பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இது பேசப்பட்டால் மட்டும், ‘தமிழ் இனவாதம்’ என்ற தூற்றப்படுகிறது.

அதற்காக, ‘மாற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் விரட்டப்பட வேண்டும், அவர்கள் அகதிகள் ஆக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்பது அல்ல. அதுமாதிரியான முழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!