Published:Updated:

'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்!'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்!'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்
'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்!'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் நாம் இல்லையென்றால், ஸ்டாலின் நிலைமை மோசமாகிவிடும். 2014-ல் தி.மு.கவுக்குக் கிடைத்த படுதோல்விதான் இந்தமுறையும் வந்து சேரும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.கவுடன் கூட்டணி சேருவதில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 'ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கும் முடிவில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இவ்வளவு குறைவான இடங்களைப் பெறுவதற்குப் பதில் ரஜினியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்' என ராகுல்காந்தியிடம் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர். 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய பேச்சு, பா.ஜ.க வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய அளவில் கூட்டணி மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் ராகுலின் பேச்சு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதே உற்சாகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் வலம் வருகிறது. அதன் விளைவாக, தி.மு.கவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர். "தொடக்கத்தில் இருந்தே தி.மு.கவுடன் கூட்டணி சேருவதில் திருநாவுக்கரசருக்கு உடன்பாடில்லை. காங்கிரஸ் அணிக்குள் தினகரனைக் கொண்டு வருவதுதான் அவருடைய திட்டமாக இருந்தது. இதற்கு, ராகுல் காந்தியிடம் இருந்து எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை. தி.மு.க அணியிலும், காங்கிரஸ் கேட்கும் இடங்களை ஒதுக்குவதற்கு அறிவாலயப் பிரமுகர்கள் தயாராக இல்லை. 'மொத்தமாக 5 இடங்களை ஒதுக்குவோம்' என தி.மு.க தரப்பில் இருந்து தகவல் வந்ததால், கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்" என விவரித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 

"தி.மு.க தரப்பினரின் கெடுபிடி தொடர்பாக, ராகுல்காந்தியின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர். அதில், 'தி.மு.க கொடுக்கக் கூடிய ஒற்றை இலக்க இடங்களை வாங்கிக் கொண்டு நாம் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் களமிறங்க வேண்டும். மத்திய, மாநில ஆளும்கட்சிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புகள் அனைத்தும் தி.மு.க, காங்கிரஸ் அணிக்குத்தான் வாக்குகளாக வந்து சேரும். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் அணி 39 இடங்களில் வென்றது. 2004-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான அணி 40 இடங்களை வென்று சாதனை படைத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் நாம் இல்லையென்றால், ஸ்டாலின் நிலைமை மோசமாகிவிடும். 2014-ல் தி.மு.கவுக்குக் கிடைத்த படுதோல்விதான் இந்தமுறையும் வந்து சேரும். எனவே, நாம் மட்டும் மோசம் போக மாட்டோம். ஸ்டாலினுக்கும் இது பொருந்தும். அவர் ஒன்றும் கருணாநிதியைப் போல நிரூபிக்கப்பட்ட தலைமை கிடையாது. தற்போது அவருக்கு மத்திய லீடர்ஷிப் தேவைப்படுகிறது. 

எனவே, நாம் கேட்கும் இரட்டை இலக்க இடங்களை அவர் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால், ரஜினியை நோக்கி நாம் செல்ல வேண்டும். அடிப்படையில் ரஜினி எனக்கு நெருங்கிய நண்பர். ஆடி மாதம் முடிந்த பிறகு அவர் தன்னுடைய புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட இருக்கிறார். பா.ஜ.கவுடன் ரஜினி கூட்டணி வைத்துவிட்டால், காங்கிரஸ் கட்சிக்குப் பல இடங்களில் பாதிப்பு உருவாகும். குறிப்பாக, தமிழ்நாட்டைத் தாண்டி கர்நாடக, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது. அவர் மீது பட்டியலின சமூகத்தின் பார்வையும் பதிந்திருக்கிறது. அமைதியான இந்துத்துவ முகமும் அவருக்கு இருக்கிறது. இதை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. எனவே, நாம் ரஜினியுடன் கூட்டணி சேருவதில் எந்தத் தவறும் கிடையாது. அதற்கான ஆப்ஷனை நான் திறந்து வைக்கிறேன். நீங்கள் அனுமதி கொடுத்தால் போதும்' என ராகுலிடம் விளக்கியிருக்கிறார். இதற்கு மேலிடத்தில் இருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை" என்றவர்,  

"அதேநேரம், திருநாவுக்கரசரின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் ப.சிதம்பரம். இதுகுறித்து மேலிடத்தில் பேசிய ப.சி, '  தி.மு.க அணியில் நமக்கு ஒதுக்கக் கூடிய இடங்களைப் பெற்றுக் கொள்வதே நல்லது. உ.பி., பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் எந்த எதிர்ப்பையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சீட்டுக்காக எந்தப் பிரச்னையையும் செய்ய வேண்டாம். 2004-ம் ஆண்டு உருவாக்கிய பிரமாண்ட அணியை இப்போது கட்டமைப்பது அவசியம். அதனால்தான், இந்த அணிகளில் குறைந்த அளவு சீட் கிடைத்தாலும் பரவாயில்லை எனச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் உருவாகும் அணியில் ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள், அ.ம.மு.க, பா.ம.க என யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதற்குப் போதுமான இடங்கள் தேவை. எனவே, தி.மு.கவிடம் பிடிவாதம் காட்ட வேண்டாம்.

2004 தேர்தலில் 40 இடங்களையும் கருணாநிதி பெற்றுக் கொடுத்ததுபோல, இந்தமுறை ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெறுவோம். இந்த நான்கு கட்சிகளிடமே கூட்டணி, சீட் பங்கீடு விவகாரத்தை விட்டுவிடுவோம்' எனத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு உறுதியாக சிதம்பரம் பேசுவதற்கும் பின்னணி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, ' எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு சிதம்பரம் முயற்சி செய்கிறார்' என்ற கோபம் அறிவாலயத்துக்கு இருக்கிறது. இதை மறுக்கும்விதமாக, 'நான் தி.மு.க பக்கம்தான் இருக்கிறேன்' என்பதைக் காட்டுவதற்காக மேலிடத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். கூட்டணி விவகாரத்தில் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் திருநாவுக்கரசர்" என்றார் விரிவாக. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு