Published:Updated:

"ஆளுநரை எதிர்த்தால் அவ்வளவுதான்..!'' ஸ்டாலின் ஆப்சென்ட்... தி.மு.க.வினர் அப்செட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"ஆளுநரை எதிர்த்தால் அவ்வளவுதான்..!'' ஸ்டாலின் ஆப்சென்ட்... தி.மு.க.வினர் அப்செட்!
"ஆளுநரை எதிர்த்தால் அவ்வளவுதான்..!'' ஸ்டாலின் ஆப்சென்ட்... தி.மு.க.வினர் அப்செட்!

கடந்த 18-ம் தேதி லண்டனிலிருந்து சென்னைத் திரும்பிய ஸ்டாலின், புதுக்கோட்டைக்கு வருவார் என தி.மு.கவினர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், முதல்நாளே ஸ்டாலின் `ஆளுநருக்கு எதிரான புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்' என அறிக்கைவிட புதுக்கோட்டை தி.மு.கவினர் அப்செட் ஆனார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டந்த ஜூலை 20 ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அரசுப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வதை எதிர்த்துப் போராடிய தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தொண்டர்கள் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதானார்கள்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 20-ம் தேதி அதிகாலை திருச்சி வந்தார். பிறகு, திருச்சியிலிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்ற அவர், ரோஜா விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.

முன்னதாக ஆளுநர் வருகையை எதிர்த்துப் போராட தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போலீஸாரிடம் அனுமதிகேட்டு புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ், டி.ஐ.ஜி லலிதா லெட்சுமி ஆகியோரிடம் முறையிட்டனர். ஆனால், ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் அளவுக்குக் கடுமையான வழக்குகள் போடப்படும் என அறிவித்த காவல்துறை, முன்னெச்சரிக்கையாக தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்ய ஆயத்தமானார்கள். கடந்த மாதம், நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநரை எதிர்த்து தி.மு.கவினர் போராட்டம் நடத்தியபோது, ஆளுநர் மாளிகை காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போது தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ``இனிவரும் காலங்களில் ஆளுநர் எங்கு ஆய்வு செய்கிறாரோ, அங்கு நானே வந்து கறுப்புக்கொடி காட்டிப் போராடுவேன்" என அறிவித்திருந்தார். கடந்த 18-ம் தேதி லண்டனிலிருந்து சென்னைத் திரும்பிய ஸ்டாலின், புதுக்கோட்டைக்கு வருவார் என தி.மு.கவினர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், முதல்நாளே ஸ்டாலின் `ஆளுநருக்கு எதிரான புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்' என அறிக்கைவிட புதுக்கோட்டை தி.மு.கவினர் அப்செட் ஆனார்கள். ஆனால், பல தி.மு.கவினர் சிறைக்குச் செல்ல மாற்றுத் துணிகள் எடுத்துக்கொண்டு தயாரானார்கள்.

ஆளுநர் வருகையையொட்டி புதுக்கோட்டை - திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதுக்கோட்டை நகர் முழுவதிலும் உள்ள சாலைகள், வீதிகள் பளபளத்தன. போராட்டக்காரர்களைத் தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சரியாகக் காலை 10.10 அளவில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சித்தலைவர் கணேஷ் சகிதமாக தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். அடுத்து மற்றப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து ஆளுநர் புறப்பட்டபோது, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், போலீஸாரின் தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயன்றனர். அவர்களை போலீஸார் தடுக்க, காவல்துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு விரைந்து வந்த, எஸ்.பி செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தி.மு.கவினர் உடன்படாமல் இருக்கவே, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் ரகுபதி, செல்லபாண்டியன் , எம்.எல்.ஏ-க்கள் மெய்யநாதன், பெரியண்ணன் அரசு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மா.செக்கள் மாதவன், கவிவர்மன் தலைமையில் 55 பெண்கள் உட்பட 785 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மற்றொரு பக்கம், ஆளுநரின் வருகைக்கு ஆதரவாகப் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.கவினர் ``காவி” கலர் பலூன்கள் பறக்கவிட்டு ஆதரவு தெரிவிப்பதைப் பார்த்த போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

ஆளுநர் ஆய்வு முடித்துக் கிளம்பியதும், ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் கையில் வைத்திருந்த `தூய்மை இந்தியா' திட்டம் குறித்த விழிப்புஉணர்வு பிரசுரங்களை அப்படியே கீழே போட்டுவிட்டுச் சென்றனர். அதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அதைப் படம் பிடிக்கவே, சுதாரித்துக்கொண்ட நகராட்சி அலுவலர்கள் அவற்றை அள்ளிக்கொண்டு போனார்கள்...

அடுத்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி, நரிமேடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார் ஆளுநர். அப்போது, `அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டடங்கள் இருக்கின்றன. கருவிகள் இல்லை. இதனால், பல நோயாளிகளைத் தஞ்சாவூருக்கு மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். இதைச் சரி செய்ய வேண்டும்' என முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனுவோடு ஆளுநரிடம் செல்ல அவரை அதிகாரிகள் அப்படியே தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

அன்று மதியம், புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். `காந்திப் பேரவை' சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், பா.ஜ.க. சார்பில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கோரியும் மனு கொடுத்தார்.

சரியாக மாலை 5 மணியளவில் ஆளுநர் புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலுக்குச் செல்வார் எனக் காத்திருந்தனர். ஆனால், ஆளுநர் கார் திருச்சி நோக்கிப் புறப்பட்டது. கார் திருக்கோகர்ணம் அடுத்த முத்துடையான்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று, ஆளுநர் காரின் வலதுபக்கத்தில் லேசாக உரசிச் சென்றது. இதில் யாருக்கும் காயமில்லை. என்றாலும் ஆளுநரின் காரை ஓட்டி வந்த டிரைவர் வைத்தியலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், விஜயசுந்தரத்தைக் கைது செய்தனர். அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு, ஆளுநர் திருச்சி, தஞ்சையில் நடந்த விழாக்களில் கலந்துகொண்டார். ஆனால், ஆளுநரை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்கள், நள்ளிரவு வரை  விடுதலை செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு உணவும், குடிநீரும் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால் மேலும் பரபரப்பு நீடித்தது. இதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆளுநர் வருகை புதுக்கோட்டை மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் பெரும்பரபரப்பை உண்டாக்கியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு