Published:Updated:

`` `முட்டை'யில் செய்த அணுகுண்டு தெரியுமா எடப்பாடி பழனிசாமி அவர்களே!" - தினகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` `முட்டை'யில் செய்த அணுகுண்டு தெரியுமா எடப்பாடி பழனிசாமி அவர்களே!" - தினகரன்
`` `முட்டை'யில் செய்த அணுகுண்டு தெரியுமா எடப்பாடி பழனிசாமி அவர்களே!" - தினகரன்

"தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் இந்த ஆட்சிக்கு 'முட்டை' வடிவில் அணுகுண்டு வந்துள்ளது. இந்த அணுகுண்டு நிச்சயமாக தற்போதைய ஆட்சியாளர்களை மீளமுடியாத பிரச்னையில் சிக்க வைக்கும்" - தினகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

"சேலம் டூ சென்னை இடையே அமையவிருக்கும் எட்டு வழி பசுமைச்சாலைத் திட்டத்தை பொதுமக்களும், விவசாயிகளும் கேட்கவில்லை. மஞ்சவாடி கணவாயில் இருந்து வரும்போது என்னைச் சந்தித்த விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர், 'எப்பாடுபட்டாவது இந்த எட்டுவழிச் சாலைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துங்கள். இதுவே நீங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் செலுத்தும் நன்றியாக இருக்கும்' என்று கேட்டுக் கொண்டனர். 

சேலத்தில் இருந்து அரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி வரை நான்குவழிச் சாலை அமைத்தால் போதும். சென்னைக்கு சுலபமாகச் சென்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பகுதி மக்களின் வாதம். ஆனால், அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஃபிப்ரவரி மாதம் அவசர அவசரமாக எட்டுவழிச் சாலை அமைக்கப் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசும் அடுத்த நாளே இந்தத் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது. இதில் உள்ள மர்மம்தான் என்னவென்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். மக்கள் விருப்பத்திற்கு எதிரான இந்தத் திட்டம் நிறைவேறினால், முதலமைச்சரும், அவரது உறவினர்களும் மட்டுமே பயனடைவார்கள் என்பதுதான் உண்மை. 

தர்மபுரி மாவட்டம் அரூரில் நான் பேசப் போகிறேன் என்று சொன்னவுடன், எனக்குத் தெரிந்த நண்பர்களும், அதிகாரிகளும் இந்தத் தகவலைப் பேசுங்கள் என்று கூறினார்கள். இந்தச் சாலை அமைவதால் கல்வராயன் மலை, கஞ்சமலை, கவுத்திமலை ஆகிய பகுதிகளில் உள்ள இரும்புத் தாதுக்கள் முழுவதும் வடநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கனிம வளங்களை எளிதாகக் கொண்டு செல்லவே தற்போது எட்டுவழிச் சாலை அமைப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் இந்த ஆட்சிக்கு 'முட்டை' வடிவில் அணுகுண்டு வந்துள்ளது. இந்த அணுகுண்டு நிச்சயமாக தற்போதைய ஆட்சியாளர்களை மீளமுடியாத பிரச்னையில் சிக்க வைக்கும். மறுபக்கம், வருமான வரித்துறை சோதனையின் மூலமாக அமைச்சர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் மறுக்கப்பட்ட பல திட்டங்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு விதிமுறையை மீறி, 1,200 கோடி ரூபாய்க்கு ஒரே டெண்டராக வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தடுக்க மின்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

முதல்வர் எடப்பாடி சமீபத்தில் பேசும்போது, 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் என்னுடைய  உறவினர்கள்' என்று தெரிவித்துள்ளார். ஆனால், எனக்குத் தெரிந்து அவரது சம்பந்தியும், சகலையும்தான் அவரது உறவினர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டபோது, பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, எடப்பாடியை முதல்வர் ஆக்கினார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு சசிகலாவைச் சந்திக்க நானும் சில அமைச்சர்களும் கிளம்பினோம். அப்போது என்னிடம் வந்த எடப்பாடி பழனிசாமி, 'சின்னம்மாவிடம் நான் மன்னிப்புக் கேட்டதாகச் சொல்லுங்கள். சேகர் ரெட்டி கைதான வழக்கில் என் மகனும், சம்பந்தியும், அவருடைய சகலையும் சிக்கியுள்ளனர். நான் சின்னம்மாவை வந்து சந்தித்தால் வழக்கில் பிரச்சனை வரும்' என்று சொல்லி வரமறுத்தார். அப்போது நான் கேட்டேன். இதை முன்பே சொல்லி இருந்தால் நாங்கள் வேறு ஒருவரை முதல்வராக்கி இருப்போமே என்று கூறினேன். 

இப்படி வழக்குகளுக்குப் பயந்து கொண்டிருக்கும் ஒருவர், தமிழகத்தின் முதல்வராக இருந்தால், இந்த நாட்டிற்கு எப்படி நல்லத் திட்டங்களை கொண்டுவர முடியும்? எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மடியில் கனம் உள்ளது. துரோகிகள் நீண்டகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது. கட்சியின் உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். இந்த எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை எதிர்த்து மக்களுடன் இணைந்து போராடுவோம். 

அடுத்தாண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள், இந்த ஆட்சியாளர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் 37 இடங்களில் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, இந்த ஆட்சிக்கு முடிவுவர வாய்ப்புள்ளது" என்றார் தினகரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு