Published:Updated:

2ஜி கிரகணம்!

2ஜி கிரகணம்!
பிரீமியம் ஸ்டோரி
2ஜி கிரகணம்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

2ஜி கிரகணம்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
2ஜி கிரகணம்!
பிரீமியம் ஸ்டோரி
2ஜி கிரகணம்!

ஜூலை 15-ம் தேதியை இந்திய அரசியல் அரங்கம் மட்டுமல்ல, பிசினஸ் உலகமும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசை ஆட்டம் காணவைத்த, தி.மு.க-வின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய 2ஜி வழக்கின் தீர்ப்பு நாள்தான் ஜூலை 15. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலின் போக்கையே புரட்டிப்போடக்கூடியதாக இருக்கலாம்!

2ஜி வழக்கின் கதை

தி.மு.க.வின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இந்த வழக்கின் தீர்ப்பு வரப் போகும்  நிலையில் இந்த வழக்குக்கு பிள்ளையார் சுழி போட்டதே கருணாநிதி குடும்பத்துக்குள் நடந்த உள்வீட்டுக் குழப்பங்கள் தான்!
2007 மே 9-ம் தேதி, ‘தினகரன்’ நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க-வின் தலைமை யாருக்கு என்கிற கேள்விக்கு பதிலாக ஸ்டாலின் பெயர் வெளியிடப்பட்டது. அது அழகிரிக்கு வயிற்றெறிச் சலைக் கொடுக்க... மதுரை தினகரன் நாளிதழைக் கொளுத்தி கோபத்தை வெளிப்படுத்தும் விபரீதத்தை விதைத்தது. மூன்று ஊழியர்கள் தீயில் கருகினார்கள். அன்று மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறனிடம் விளக்கம் கேட்டது தி.மு.க. தலைமை.  தயாநிதி அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியை விட்டே அவர் விலக்கி வைக்கப்பட்டார். அதுவரை அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் டி.வி. அலுவலகம் இடம் மாறியது. கருணாநிதி குடும்பம் தங்களுக்கென கலைஞர் டி.வி.யைத் தொடங்கியது. 

2ஜி கிரகணம்!

ஆ.ராசா வந்தார்

தயாநிதி மாறன் அதுவரை வகித்த தொலைத்தொடர்புத் துறை தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது.  2007 மே 16-ல் ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடங்கியது 2ஜி அத்தியாயம்

ஆ.ராசா வருவதற்கு முன்பே, 2ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு 150 விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால், ஏலம் நடத்தப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பிப்ரவரி மாதமே விண்ணப்பித்து இருந்தது. அதாவது தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோதே அது விண்ணப்பித்துவிட்டது. ராசா பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பர் மாதம் 24-ம் தேதி யூனிடெக் நிறுவனம் விண்ணப்பிக்கிறது. அதற்கு மறுநாள் அந்த நிறுவனத்துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்படுகிறது. அதைக் கொடுத்தவுடன் மற்ற நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்குவதை ராசா நிறுத்தச் சொன்னதாகச் சொல்கிறது சி.பி.ஐ.

இயற்கை நீதிக்கு எதிரானது

ராசா அப்படி அறிவித்தபோது, அப்போதைய தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் மாத்தூர், ``இது இயற்கை நீதிக்கு எதிரானது.  2007 அக்டோபர் 1-ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என்று நாம் முதலில் சொல்லிவிட்டு, திடீரென தேதியை மாற்றுவது தவறானது” என ராசாவை எச்சரிக்கிறார். அதேபோல் நிதித்துறையைச் சேர்ந்த மனு மாதவன் என்பவரும் ராசாவை எச்சரிக்கிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் விடுப்பில் சென்ற ஒருநாள், தொலைத்தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். அதன்பின் சித்தார்த் பெகுரா என்பவரை ராசா, தொலைத்தொடர்புத் துறைச் செயலாளராகக் கொண்டு வருகிறார். அவர் ராசா சொன்னதை அப்படியே நிறைவேற்றிக் கொடுக்கிறார். 2ஜி ஊழலுக்கான வேலைகள் அங்கிருந்துதான் வேகமாகத் தொடங்கின. 
 
ராசா முடிவின் பின்னணி

` 2007 செப்டம்பர் 25-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என ராசா அறிவித்ததற்குக் காரணம், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கண்டிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நிறுவனம் ஸ்வான் டெலிகாம். இந்த நிறுவனமும் ராசாவும் அத்தனை நெருக்கம். ராசா  சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருந்தது. அப்போதே அந்த நிறுவனத்துக்கு ஆதரவாகப் பல தடையில்லாச் சான்றுகளை வழங்கியவர் ராசா. அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ராசா அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக 2ஜி அலைக்கற்றையைப் பெறுவதற்கான தேதியை மாற்றினார். தங்களுக்கு நெருக்கமான ஆ. ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும், ரியல் எஸ்டேட்  தொழில் செய்துவந்த ஸ்வான் நிறுவனம், தொலைபேசி சேவைக்குத் தொழிலை மாற்றியது.

2ஜி ஊழல் தொடக்கம்

2007 அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோர் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் களாகப் பொறுப்பேற்கின்றனர். அதே ஆண்டு, அதே மாதம் 18-ம் தேதி டி.பி குழும நிறுவனங்கள், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்குகின்றன. கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகள் கைமாற்றப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2ஜி கிரகணம்!

2008 ஜனவரி 10-ம் தேதி மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், மதியம் 2.45 மணிக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 2ஜி அலைக்கற்றைக்கான உரிமம் பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களின் விண்ணப்பங்களை 45 நிமிடத்துக்குள் தொலைத்தொடர்புத் துறை தலைமையகத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அதனால், பல நிறுவனங்கள் விண்ணப்பங்களைக் கொடுக்கவும், நேரில் போகவும் முடியவில்லை. ஆனால், ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மட்டும், 2007 அக்டோபர், நவம்பர் மாதங்கள் தேதியிட்டு 1,600 கோடிக்கு டி.டி எடுத்துத் தயாராக வைத்திருந்தன. ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம்/வீடியோகான், ஷ்யாம் டெலிகாம், டாடா டெலி சர்வீஸ், யுனிடெக் நிறுவனங்கள் மட்டும் 2ஜி அலைக்கற்றையைப் பெற்றன.

 பிரதமர் மன்மோகன் சிங்

 2007 நவம்பர் 2-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி அலைக்கற்றை விற்பனைத் தொடர்பாக ராசாவுக்குக் கடிதம் எழுதுகிறார். அதில், 2ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுங்கள் என்று குறிப்பிடுகிறார். அதற்குப் பதில் எழுதிய ராசா, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி-யை விற்பனை செய்ய உள்ளதாகக் குறிப்பிடுகிறார். முதலில் அதற்கு அனுமதி அளிக்காத பிரதமர் மன்மோகன் சிங்,  2008 ஜனவரி 3-ம் தேதி ராசாவுக்கு எழுதிய கடிதத்தில் அனுமதி அளிக்கிறார். அதன்பிறகுதான், 122 வட்டங்களுக்கான 2ஜி லைசென்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

2ஜி கிரகணம்!

ப.சிதம்பரம்...

ப.சிதம்பரம்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்தபோது நிதி அமைச்சராக இருந்தார். 2ஜி அலைக்கற்றைக்கான தொகை, நிதித்துறை மூலம்தான் வசூலிக்கப்படும். அதனால், 2ஜி விற்பனைக் கொள்கையில் செய்த மாற்றம் குறித்து ஆலோசனை நடந்தது. ஆரம்பத்தில் நிதித்துறை, ராசாவின் யோசனையை நிராகரித்தது. ஆனால், இது தொடர்பாக ராசாவுக்கு சிதம்பரம் எழுதிய கடிதத்தில், ``இந்த முறை உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்; ஆனால், அடுத்தமுறை ஏலத்தில் விற்பனை செய்யுங்கள்” என்று பட்டும்படாமலும் ஒப்புதல் அளித்தார்.

இங்கே வாங்கி... அங்கே விற்றன

2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாதவை. அவை வாங்கிய அலைக்கற்றையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிட்டன. 1,537 கோடி ரூபாய்க்கு 2ஜி அலைக்கற்றையை வாங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதில் பாதியை அரபு நாட்டு நிறுவனமான ஈடிசாலட்டுக்கு 4,200   கோடிக்கு விற்றது. இந்தப் பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் கொடுத்ததில் அந்த நிறுவனத்துக்கு லாபம் மட்டும் 2,600 கோடி ரூபாய். ஷியாம் டெலிகாம் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த எம்.டி.எஸ் பிராண்ட் நிறுவனத்துக்கு 74 சதவிகிதப் பங்குகளை விற்றது. யுனிடெக் நிறுவனம் நார்வேயைச் சேர்ந்த யுனிநார் நிறுவனத்துக்கு 67 சதவிகிதப் பங்குகளை விற்றது. டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ நிறுவனத்துக்கு அதன் 26 சதவிகிதப் பங்குகளை விற்றது. ஆயிரம் கோடி ரூபாய்க்குள் 2ஜி அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்கள், அவற்றில் பாதியை மட்டும் பல ஆயிரம் கோடிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன. இதை ஏன் அரசாங்கம் செய்யவில்லை என்பது புகாராகக் கிளம்ப ஆரம்பித்தது.

கலைஞர் தொலைக்காட்சி...

2ஜி ஏலம் முடிந்த அதே நேரத்தில்... கலைஞர் தொலைக்காட்சியின் அக்கவுன்ட்டில் 200 கோடி ரூபாய் கொத்தாக வந்து விழுகிறது. அதுவும் யாரிடம் இருந்து...? எந்த நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததோ, அந்த நிறுவனங்களிடம் இருந்து வருகிறது. எந்த விதமான வியாபார ஒப்பந்தமும் இல்லாமல் 200 கோடி ரூபாய் பணத்தை 2008 டிசம்பர் 23-ல் கலைஞர் தொலைக்காட்சியில் சினியூக் நிறுவனம் முதலீடு செய்கிறது.

ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்த சினியூக் நிறுவனத்துக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனத் தேடிப்பார்த்தால்... டைனமிக்ஸ் ரியாலிட்டி, குஷேகான் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனங்களிடம் இருந்து வந்தது தெரியவருகிறது. டைனமிக்ஸ் ரியாலிட்டிக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று தேடிப்பார்த்தால், டி.பி ரியாலிட்டி என்ற நிறுவனத்திடம் இருந்து வந்தது. டி.பி.ரியாலிட்டி யாருடைய நிறுவனம் என்றால், அது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஓர் அங்கம் என்பது புரிந்தது. மத்திய அமைச்சர் ராசா மூலம், 2ஜி அலைக்கற்றையை வாங்கி, வெளிநாட்டு நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டதில் லம்ப்பாக சம்பாதித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக் காட்சிக்கு 200 கோடியைக் கொடுத்தது அம்பலமானது.

நீரா ராடியா...

2ஜி விவகாரம் மெல்ல மெல்ல சூடுபிடித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா கருணாநிதியின் மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசாவுடன் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. அதில் நீரா ராடியா விடம் யாருக்கு என்ன அமைச்சரவை கிடைக்கும்... கிடைக்க வேண்டும் என ராசா, கனிமொழியுடன் பேசுகிறார். ராசாவுக்குக் கண்டிப்பாகத் தொலைத் தொடர்புத் துறையை ஒதுக்க வேண்டும் என்பதில் கனிமொழி, நீரா ராடியா இருவரும் உறுதியாக இருப்பதை அந்தத் தொலைபேசி உரையாடல் போட்டு உடைத்தது. இந்த நீரா ராடியா, டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தவர்.

 ஒரு லட்சத்து 76,000  கோடி நட்டம்!

2ஜி அலைக்கற்றையை ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது 2009-ன் இறுதியில்  வெளிவந்துவிட்டது. ஆனால், ஊழலின் ரூபாய் மதிப்பு எவ்வளவு என்பதில் யாருக்கும் அப்போது தெளிவு ஏற்படவில்லை. அந்த நேரத்தில், சி.ஏ.ஜி (Comptroller Auditor General Of India) அறிக்கை வெளியானது. 2010  நவம்பர் 8-ல் வெளியான அறிக்கை, 2ஜி அலைக்கற்றை விற்பனையால் நாட்டுக்கு ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் நட்டம் என்று அறிவித்தது.

சி.பி.ஐ. வழக்குப் பதிவு!

2009 டிசம்பர் 21-ல் சி.பி.ஐ இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. ஆனால், அதில் அடையாளம் தெரியாத தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் என்று குறிப்பிட்டு வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. சி.ஏ.ஜி. அறிக்கை வெளியான பிறகு காட்சிகள் மாறின.

19 பேர் குற்றவாளிகள்

சி.பி.ஐ, ஆ.ராசா உள்பட 9 பேரையும், நான்கு நிறுவனங்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது. அமலாக்கத் துறை 10 நபர்களையும் 9 நிறுவனங்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது. அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய சூறாவளியைக் கிளப்பியது. இந்தியா முழுவதும் பேசப்படும் விவகாரமாக 2ஜி ஆனது. 

கைதுப் படலம் தொடங்கியது

மத்திய காங்கிரஸ் அரசு, தி.மு.க-வை நெருக்கி ஆ.ராசாவை ராஜினாமாச் செய்யச் சொன்னது.  2010 நவம்பர் 14-ம் தேதி இரவு ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.   2011 பிப்ரவரி 2-ம் தேதி ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2ஜி விவகாரத்தில் இலாபம் அடைந்த நிறுவனங்கள் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தன என்று கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 2011, மே 20-ம் தேதி கனிமொழியும் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களின் இயக்குநர்கள், நிர்வாகிகள், அவர்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்க ராசாவுக்கு உதவி செய்த அரசு அதிகாரிகள் என்று ஒரு டஜன் பேர் கைது செய்யப்பட்டனர்.

தாயாளு அம்மாளை விடுவிக்க முடியாது!

2ஜி அலைக்கற்றைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த அந்த 200 கோடி ரூபாய், முறைகேடான பணப்பரிவர்த்தனை என்ற அடிப்படையில் அமலாக்கப்பிரிவு தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள்,  கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத்குமார் ரெட்டி, கரீம் மொரானி, ஷாகித் பல்வா ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், `இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும். அவர் அல்சைமர் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் வயோதிகத்தின் காரணமாக, அவரின் உடல்நிலையில் பல பாதிப்புகள் இருக்கின்றன' என்று சொல்லி, கருணாநிதியின் மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் ஒருவரை, உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று சொல்லி தள்ளுபடி செய்துவிட்டது.

2ஜி கிரகணம்!

நீதிபதி ஓ.பி.சைனி வந்தார்

டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.சைனி, கொஞ்சமும் ஈவு இரக்கம் காட்டாமல் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார். சி.பி.ஐ. 80 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை 2011-ம் ஆண்டு தாக்கல் செய்தது. அமலாக்கத் துறை 2014-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2ஜி மெயின் வழக்கு, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் வந்த விவகாரம், ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு என மூன்று வழக்குகளையும் நீதிபதி ஓ.பி.சைனிதான் விசாரித்தார். டே டு டே விசாரணை என்ற ரீதியில், வாரத்தின் ஆறு நாள்கள் விசாரணை நடைப்பெற்றது.  குற்றம்சாட்டப் பட்டவர்கள் ஓரிரு முறை ஆஜராகாமல் போனபோது, உடனடியாக அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் என்று சாட்டையை எடுத்தார். இதனால், அனைத்துக் கட்டங் களையும் தாண்டி, 2015 ஏப்ரல் 15-ம் தேதி, இந்த வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது. 2015 டிசம்பர் 22-ம் தேதி சி.பி.ஐ இறுதி வாதம் முடிந்தது.

ராசா வாதம்!

ஆ.ராசா நீதிமன்றத்தைத் தன்னுடைய வாதத்தால் அதிரவைத்தார்; சிரிக்கவும் வைத்தார். 184 பக்கங்களில் ராசா தனது பதில்களை 2017 ஏப்ரல் 25-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், `ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொழில் போட்டியில் எதிர் எதிரானவை. அவை பரஸ்பரம் தங்கள் நலனுக்கு எதிராக ஒரே நேரத்தில் குற்றச் சதியில் எவ்வாறு ஈடுபட முடியும்? ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த தேதியில் அவை அலைக்கற்றை ஒதுக்கீடு பெறத் தகுதி இல்லை என்பது வழக்கு. இந்த விவகாரத்தில் விண்ணப்பித்த தேதியிலேயே நிறுவனங்கள் தகுதி பெறுவது அவசியம் என உத்தரவிட்டதே நான்தான். எனவே, அவற்றுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக என் மீது எவ்வாறு குற்றம்சாட்ட முடியும்? `முதலில் வருவோருக்கு முதலில் உரிமம்' என்ற விதியை நான் மாற்றியதாக வழக்கு. ஆனால், அந்த விதியின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் (டெல்லி வட்டம் தவிர) ஒரே நேரத்தில் அலைவரிசை வழங்கப்ப ட்டுள்ளது. இதனால், அரசுக்கு வருவாயும் அலைக்கற்றை பயன்பாடும் உறுதி செய்யப்பட்டது. இதில் எனது அதிகாரத்தை நான் எங்கே தவறாகப் பயன்படுத்தி உள்ளேன். கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரராகவோ, நிர்வாகியாகவோ நான் இல்லாதபோது, தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனை எப்படி எனக்கு வழங்கப்பட்ட லஞ்சமாகும்?' என்று வாதிட்டார்.

ராசா சொன்ன யானைக் கதை

தனது இறுதிவாதத்தில் ராசா, ``2ஜி அலைக்கற்றை வழக்கைப் போதிய புரிதலின்றி சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. பார்வை பழுதுபட்ட நால்வர் யானையைத் தொட்டுப் பார்த்து விவரித்த கதையாக 2ஜி வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது. யானையின் காலைத் தொட்டவர் அதைத் தூண் என்றும், வாலைத் தொட்டவர் கயிறு என்றும், காதைத் தொட்டவர் முறம் என்றும், உடலைத் தொட்டவர் சுவர் என்றும் கூறியதாக ஒரு கதை உள்ளது. அதுபோல, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய புரிதலின்றி இந்த விவகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், நாடாளுமன்றக் கூட்டுக் குழு, சி.பி.ஐ. ஆகியவை அணுகியதால், இந்த வழக்கு தீவிரமாகியது” என்றார். இந்தக் கதையை ராசா விவரித்து முடித்ததும் சிறப்பு நீதிபதி சைனி பலமாகச் சிரித்தது தனிக்கதை.

தீர்ப்புக்குத் தேதி குறித்த நீதிபதி சைனி

ராசாவின் யானைக் கதையைக் கேட்டுவிட்டுத்தான் இந்த வழக்கின் தீர்ப்புத் தேதியை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். அதன்படி, ஜூலை 15-ம் தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. தீர்ப்பு வெளியான பிறகுதான், 2ஜி ஊழல் என்பது உண்மையிலேயே பூதமா... அல்லது வெறும் புஸ்வாணமா என்பது தெரியவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism