திகார் சிறையிலிருந்து தினகரன் வெளியே வந்துவிட்டார். வெளியே வந்ததைவிட, அவர் எடுத்திருக்கும் வேகம்தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘இனி தினகரன் அவ்வளவுதான்’ என்று நினைத்தவர்கள் மத்தியில், ‘இனி தினகரன்தான் எல்லாமோ?’ என்ற பெருமூச்சைக் கிளப்பியிருக்கிறார். தினகரனின் இந்த ‘2.0’ அவதாரத்தைப் பார்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் திகிலில் ஆழ்ந்துள்ளன. “எந்த நோக்கத்துக்காகக் கட்சியைவிட்டு ஒதுங்கினேனோ, அது நிறைவேறவில்லை. அதனால் கட்சிப்பணியில் மீண்டும் தீவிரம் காட்டப்போகிறேன்” என்று தினகரன் சொல்ல ஆரம்பித்திருப்பதுதான் திகிலுக்குக் காரணம்!

அன்று இருவர்... இன்று 2,000 பேர்!
ஏப்ரல் 22-ம் தேதி தினகரன் கைது செய்யப் பட்டார். டெல்லி போலீஸார் தினகரனைக் கைது செய்தபிறகு அவரை ஏப்ரல் 27-ம் தேதி சென்னைக்கு அழைத்துவந்தனர். அப்போது ஏர்போர்ட்டில் வரவேற்பதற்கு நாஞ்சில் சம்பத்தும், பெங்களூரு புகழேந்தியும் மட்டுமே சென்றிருந்தார்கள். ஆனால், அதே தினகரன் ஜாமீனில் வந்தபோது டெல்லி திகார் சிறை வாசலிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். சிறையிலிருந்து நட்சத்திர விடுதிக்கு வந்த தினகரனுக்குப் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள், ஐந்து எம்.பி-க்கள், சில மாவட்டச் செயலாளர்கள் எனப் பெரும்படையே வரவேற்பு கொடுத்து அசத்தியது. இந்த வரவேற்பு தந்த உற்சாகத்தில்தான் “கட்சியைவிட்டு என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு” என அதிரடியாகப் பதில் தந்தார். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் தினகரனுக்கு நடந்த வரவேற்பும் பலரையும் பிரமிக்கவைத்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு பூக்களைத் தூவியும் வரவேற்றனர். பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு ஜெயலலிதா வந்தபோது, தரப்பட்ட வரவேற்புபோல தினகரனுக்கும் அமர்க்களப்படுத்தினர்.
கூட்டம் தந்த உற்சாகம்!
தினகரனைக் கட்சியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தபோது, தினகரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான். ‘‘ஆட்சிக்குத்தான் அவர்கள் அமைச்சர்கள், கட்சிக்கு அல்ல” என்று இருவரும் அமைச்சர்களுக்கு எதிராகவே வெகுண்டெழுந்தனர். தினகரன் கைதைக் கண்டித்து தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில், மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது. இந்தப் போராட்டத்துக்குக் கூடிய கூட்டம் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதன்தொடர்ச்சியாக பல இடங்களில், தினகரன் கைதைக் கண்டித்துப் போராட்டங்கள் நடந்தன. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்குக் கூடிய கூட்டத்தைவிட, தினகரனுக்கு ஆதரவாகக் கூடிய கூட்டம் அதிகம். இந்தத் தகவல்கள் எல்லாம் சிறையிலிருந்த தினகரனிடம் சொல்லப்பட்டன. மக்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் தனக்கிருக்கும் செல்வாக்கு பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுதான், கட்சிக்குள் மீண்டும் காலூன்ற வேண்டும் என்ற முடிவுக்குத் தினகரன் வந்தார்.
தினகரனுக்கு ஆதரவாளர்களாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் என மூவர் மட்டுமே இருந்தநிலையில் இன்று மாற்றம். முதல்வர் எடப்பாடி அணியில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாக இருந்துவந்த செந்தில் பாலாஜி, பழனியப்பன் டீம் அப்படியே தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. டெல்லி சென்று தினகரனைப் பார்த்ததோடு அவருக்குத்தான் தங்கள் ஆதரவு என்பதை வெளிப்படையாகவும் சொல்லிவருகிறது. இப்போதைய கணக்குப்படி பார்த்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஸ்கோர் உயர்ந்தபடி இருக்கிறது.
அடையாறு வீட்டில் ஆலோசனை!
திகார் சிறையில் இருந்தபடி தினமும் தமிழக அரசியல்பற்றி அப்டேட் தகவல்களை அறிந்துகொண்டார் தினகரன். சமீபத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி கோஷ்டிகள் போட்டிபோட்டுக்கொண்டு பிரதமரைச் சந்தித்தது தினகரனை ரொம்பவும் டென்ஷன் ஆக்கியது. கட்சிக்காரர்களைத் தாண்டித் தன்னைச் சந்தித்த உறவினர்கள் சொன்ன தகவல்களும் தினகரனை அமைச்சர்கள்மீது ஆத்திரம் கொள்ளவைத்தது. அதனால்தான் 34 நாள்கள் சிறை வாழ்க்கையில் கட்சி மீதான அவரது ஈர்ப்பு அதிகரித்துவிட்டது. தான் சிறைக்கு வந்தபிறகு உறவுகளில் ஆளாளுக்கு நாட்டாமை செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்ற புகாரும் தினகரன் காதுகளுக்குச் சென்றது. ஒரு தீர்க்கமான முடிவோடுதான் அவர் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு வீடு வரை தொண்டர்கள் வரவேற்பு கொடுக்க, வீட்டில் அவருடைய மாமியார் சந்தான லெட்சுமி பரிகார பூஜை செய்து தினகரனை வரவேற்றார். சில எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் வீட்டில் உடனே ஆலோசனை நடத்தியுள்ளார் தினகரன். “மூன்று அமைச்சர்கள் பிடியில்தான் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கியுள்ளது. கட்சிக்குத் தலைமையே இல்லாமல் போனதால், வசூலில் அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்” என்று சிலர் புகார் சொன்னார்கள். “இவர்கள் சம்பாதிக்கத்தான் என்னை ஒதுங்கியிருக்க சொன்னார்கள்போல” என்று நக்கலடித்த தினகரன், பல ரகசியத் தகவல்களோடுதான் சசிகலாவைச் சந்திக்கக் கிளம்பினார்.
அந்த மூன்று அமைச்சர்கள்!
“இனி கட்சி தினகரன் கையில்தான்” என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். “ஆட்சியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கட்சியை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் தினகரன். கட்சியை கஸ்டடியில் எடுக்கும் வேலையில் முதல்கட்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் தினகரன் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்போகிறார்கள். இதற்காகப் பன்னீர் அணியில் உள்ளவர்களுக்கும் தினகரன் தரப்பில் இருந்து அழைப்பு போய் உள்ளது. ‘தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை வைத்தே கூட்டணி அரசியலுக்கு அச்சாரம் போட்டு விட்டார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நாம் இருந்தும், நம்மை மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதே, வலுவான தலைமை இல்லாதததுதான்’ என்று தினகரனிடம் புலம்பியுள்ளார்கள் சில எம்.எல்.ஏ-க்கள்.
இப்போது இருக்கும் அமைச்சரவையில் இன்னும் மூன்று பேரைச் சேர்த்துக்கொள்ள முடியும் என்பது கணக்கு. ஆனால், யாரைச் சேர்த்தாலும் பிரச்னையாகிவிடும் என்பதால் எடப்பாடி அமைதியாக இருக்கிறார். தான் கைகாட்டும் எம்.எல்.ஏ-க்களை அமைச்சராக்க வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். ‘அதைச் செய்தால் எடப்பாடி அரசு தனது கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியாகி விடும்’ என்பது தினகரன் கணக்கு. ஆனால், ‘அது ஆட்சியையே கவிழ்த்து விடும். தினகரன் ஆட்கள் அமைச்சரவைக்குள் வந்துவிட்டால் அனைத்து ரகசியங்களும் தினகரன் கைக்கு அடுத்த நொடியே சென்றுவிடும்’ என்று சீனியர் அமைச்சர்கள் போர்க்கொடி பிடிக் கிறார்கள். ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தப்போகும் இந்த மோதலை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது பன்னீர் டீம். ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என சவால்விட ஆரம்பித்துவிட்டார் தினகரன்.
- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
படம்: வி.ஸ்ரீனிவாசுலு
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நமது எம்.ஜி.ஆர்’ ஒலிப்பது தினகரன் குரலா?
அ.தி.மு.க-வின் இரு துருவங்களாகச் சித்திரிக்கப்படும் பன்னீர் அணியும் பழனிசாமி அணியும் மத்திய அரசை எதிர்த்து வாயே திறக்காத நிலையில், கடந்த 1-ம் தேதி வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் நையாண்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மூச்சுமுட்ட பேச்சு! மூன்றாண்டு போச்சு!’ என்று தலைப்பிலேயே டாப் கியர் போட்டு, `எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு’ என முடிக்கப்பட்டிருந்தது, அந்த நையாண்டிக் கவிதை. மோடியின் மூன்றாண்டு ஆட்சியை இதைவிட காட்டமாக விமர்சிக்க முடியாது.

‘சித்ரகுப்தன்’ எனும் பெயரில் இதை எழுதியவர், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் ஆசிரியரான மருது அழகுராஜ். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல விஷயங்கள் மர்மமாக நடந்துகொண்டிருக்க, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த அன்று இப்படி வெளியானது பலரின் புருவங்களை உயர்த்தியது. தினகரன் உத்தரவுப்படிதான் மத்திய அரசுக்கு எதிராக இப்படி எழுதப்பட்டது என அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
அமைச்சர் ஜெயக்குமார் சாமர்த்தியமாக, “நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் கருத்து, அந்த ஏட்டின் கருத்துதான். தினகரன் தரப்பினரைக் கட்சியின் நிர்வாகத்தில் விலக்கிவைக்கும் முந்தைய முடிவு அப்படியே தொடர்கிறது; அதில் மாற்றமில்லை” என்றார்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக மருது அழகுராஜிடம் பேசினோம். ‘‘மறைந்த அம்மா, ‘என் அரசியல் வாழ்வின் ஆவணம்’ என்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டுக்குப் பாராட்டுப் பத்திரம் தந்திருக்கிறார். அவரால் வளர்க்கப்பட்ட இயக்கத்தில், அவர் நேசித்தப் பத்திரிகை இது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வதற்குக் கட்சிப் பத்திரிகை என்றும் இடையூறாக இருக்காது. அதேசமயம், எதிரிகள் வீசக்கூடிய ஆயுதங்களுக்குக் கவசமாகவும், பகைவரை நோக்கிப்பாயும் அதிகாலை அஸ்திரமாகவும் இது இருக்க வேண்டும்.

அவர்கள் என்னவோ ஜார் மன்னர்களைப் போலவும், தமிழக அரசை அவர்களின் அடிமையைப் போலவும் கருதி தமிழக பா.ஜ.க தளபதிகள் விமர்சிக்கிறார்கள். அதற்குப் பதிலடியாக, மூன்றாண்டு மோடியின் ஆட்சி குறித்துப் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சியை ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டில் பதிவுசெய்தோம். இப்படி ஒரு செய்தியால் மட்டும் இரண்டு அரசியல் இயக்கங்களின் உறவை உறுதிப்படுத்தவும் முடியாது; உருக்குலைத்துவிடவும் முடியாது.
அம்மா கொடுத்த வழிகாட்டலின்படியே இந்த நாளேட்டின் எழுத்துகள் அமைகின்றன. உள்நோக்கத்தோடு எதுவும் எழுதப்படுவதில்லை. தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சீமான் என பலதரப்பையும் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பா.ஜ.க மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. எல்லா விமர்சனங்களும் இப்படி இருப்பதுமில்லை. எங்கள் விமர்சனத்தில் ஏளனம் இருந்தால்தானே தவறு?” என்றார் மருது அழகுராஜ்.
அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து பற்றி அ.தி.மு.க-வின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். அதற்கு அவர், “ஜெயக்குமார் இப்படிப் பேசுவார் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு தற்குறிகூட இப்படிப் பேசமாட்டான். அதிகாரபூர்வப் பத்திரிகையைப் பற்றி அதிகாரத்தைச் சுவைத்துப்பார்க்கின்ற ஒருவர் இப்படிச் சொல்வது, அ.தி.மு.க-வின் ஒவ்வொரு தொண்டனுடைய நெஞ்சத்திலும் வேல் பாய்ச்சியதைப்போல இருக்கிறது. யாருக்கோ அடிமையாகிவிட்டார்கள் என்பதற்குச் சாட்சி இது” என்றார் காட்டமாக.
- இரா.தமிழ்க்கனல்