Published:Updated:

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

Published:Updated:
ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!
ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

பிறந்த நாள் அன்று வீட்டிலேயே இருக்க மாட்டார் கருணாநிதி.

அதிகாலை 4 மணிக்கே அவருக்கு விடிந்துவிடும். சி.ஐ.டி காலனி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டு வைத்து, அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கும். அப்போதே வாழ்த்துகளை வாங்கத் தொடங்கிவிடுவார். 6 மணிக்குக் கோபாலபுரம் இல்லம் வரும் கருணாநிதிக்காகக் குடும்பத்தினரும் தொண்டர்களும் காத்திருப்பார்கள். கறுப்பு சிவப்பு கரை வேட்டிக்கு அன்று மட்டும் விடுமுறை. பட்டு வேட்டிக்கட்டி, குடும்பத்தினர் சூழ கேக் வெட்டுவார். பெற்றோர் படத்தை வணங்கிவிட்டு அண்ணா சமாதி, பெரியார் நினைவகம் சென்றுவிட்டு, காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வரும் கருணாநிதி, மதியம் 2 மணி வரைக்கும் தொண்டர்களிடம் வாழ்த்துகளை வாங்குவார்.

மதிய உணவு சி.ஐ.டி காலனி வீட்டில் இருக்கும். முக்கியப் பிரமுகர்களுக்கு விருந்து அளிப்பார். ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பார். ராஜாத்தி, கனிமொழி சூழ மீண்டும் ஒரு கேக் கட் வைபவம் நடக்கும். மாலையில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் பேசிமுடித்து, இரவு வீடு வந்து சேர 11 மணி ஆகிவிடும். இப்படி தொண்டர்கள் சூழ இருப்பார் கருணாநிதி.

ஆனால், இந்தப் பிறந்த நாள் அவரைப் பொறுத்தவரை வித்தியாசமானது. முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி நேரடியாகப் பங்கெடுக்காமலேயே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டன. கோபாலபுரத்திலேயே அவர் முடக்கப்பட்டு விட்டார். அவரால் எழ முடியாது. குடும்ப உறுப்பினர்கள் சிலரைத்தான் அடையாளம் காண முடியும். அவர்களிடமும் அவரால் பேச முடியாது. லேசாக வாயைத் திறந்தாலே இருமல் வந்துவிடுகிறது. யாராவது பேசினால் அதைக் கவனிக்கிறார். மற்றபடி அவரிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வராது. இதுதான் கருணாநிதியின் உடல்நிலை.

இந்த விழாவைப் பயன்படுத்தி, தேசிய அளவில் தி.மு.க தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது.

அந்த மூன்று பேர்!

கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா, அவர் சட்டமன்றத்துக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டிய வைர விழா என இரண்டு விழாக்களாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இதை வடிவமைத்து இருந்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என வந்திருந்த அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் கருணாநிதியையும் பாராட்டினார்கள். அவருக்கு இணையாக ஸ்டாலினையும் தூக்கிவைத்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் மூன்றாவதாக ஒருவர் பெயர் அதிகம் இடம்பெற்றது. அவர்தான், பிரதமர் நரேந்திர மோடி. பேசியவர்கள் அனைவரும் கருணாநிதி, ஸ்டாலினைப் பாராட்டி முடித்து, மோடியைத் திட்டி விட்டுத்தான் உட்கார்ந்தார்கள்.

சட்டமன்ற மேடை!

விழா மேடை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் தலைவர்கள் கோட்டைக்குள் இருந்து வருவது போல இருந்தது. மேடைக்கு வந்த தலைவர்களை கனிமொழி, ஆ.ராசா வரவேற்று அமரவைத்தனர்.

கருணாநிதி விழாக்களில் தயாளு அம்மாள், ராஜாத்தி ஆகிய இருவரும் கலந்துகொள்வது வழக்கம். தயாளு அம்மாளும் நீண்ட நாள்களாக உடல்நல மில்லாமல் இருக்கிறார். அதனால் அவர் வரவில்லை. ராஜாத்தி அம்மாளும் மிஸ்ஸிங். ‘‘தலைவருக்கு உடல்நலமில்லாத நேரத்தில் அவங்களும் வர விரும்பவில்லை’’ என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.

கருணாநிதியுடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சண்முகநாதன், ஆர்.ராஜமாணிக்கம் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவித்ததில் தொண்டர்கள் நெகிழ்ந்தனர்.

பல மொழிகள்!

வட மாநிலத் தலைவர்கள் நிரம்பியிருந்த விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மட்டும் இந்தியில் பேசினார். ராகுல் காந்தி உட்பட மற்றவர்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆங்கிலத்திலும் இடையிடையே தமிழிலும் பேசினார்.

ராகுல் காந்தி பேச வந்தபோது, மைக் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் மற்றொரு மைக்கில் பேசச் சொன்னார்கள். ராகுலின் உரையை மொழிபெயர்ப்பதற்காக திருநாவுக்கரசர் அங்கு இருந்தார். அவர், அந்த மைக்கை ராகுலுக்குக் கொடுப்பதற்காக ஒதுங்கினார். அதற்குள் ராகுலின் மைக் சரியானது. இது தெரியாமல் திருநாவுக்கரசர் விலகி வர, “யூ கோ தேர்... ஐ ஸ்பீக் ஹியர்” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு ராகுல் பேசினார்.

மேடையில் அனைவருக்கும் காபி, ஸ்நாக்ஸ் கொடுத்தார்கள். இடது கை பழக்கமுடைய ராகுல் காந்தி இடது கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் புகைப்படக்காரர்கள் பல கோணங்களில் படம் பிடித்தனர்.

ஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒதுக்கப்பட்டார்களா அவர்கள்?

ஸ்டாலினுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கனிமொழி, அவ்வப்போது ஸ்டாலினிடம் ஆலோசனைகள் கேட்பதும் சொல்வதுமாக இருந்தார். மேடையில் மிகுந்த உற்சாகத்தோடு வலம்வந்தார். நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘கனிமொழிதான் இந்த விழாவுக்கு எங்களை நேரில் வந்து அழைத்தார்” என்றபோது அவரது முகத்தில் பூரிப்பு. மேடையில் பிரதானமாக அமர்ந்திருந்த இன்னொருவர் ஆ.ராசா.

தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், எ.வ.வேலு, காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் மேடையின் வலதுபுறத்தில் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். மேடைக்கு எதிரில் தலைவர்கள் பார்வைபடும்படியாகக்கூட அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை. மேடையின் எதிரில் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

ஸ்டாலின்... ஸ்டாலின்... ஸ்டாலின்!

அகில இந்திய அளவில் தன் அரசியல் முகத்தைக் காட்டிக்கொள்ள ஸ்டாலினுக்கு இந்த நிகழ்ச்சி பயன்பட்டுவிட்டது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசும்போது, ‘‘கருணாநிதி ஆரோக்கியமாக இருந்திருந்தால் என்ன செய்வாரோ, அதை ஸ்டாலின் செய்வார் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவை மதவெறி அரசியலிலிருந்து விடுவிப்பதற்காக ஸ்டாலின் களத்தில் எங்களோடு கைகோத்து நிற்க வேண்டும்” என்றார்.

ஸ்டாலினை முதலமைச்சர் ஸ்தானத்துக்கு கொண்டுபோய் நிறுத்தினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ‘‘பீகார் அரசு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதில் வெற்றிகண்டுள்ளது. அதன்மூலம் பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளன. விபத்துகள் குறைந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. மதுவிலக்கைக் கொண்டு வந்ததால்தான் இதெல்லாம் சாத்தியமானது. ஸ்டாலின் முதலமைச்சராக வரும்போது மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும்.  ஸ்டாலின் மிகச் சிறந்த அரசியல் அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக வருவார் என்று நான் நம்புகிறேன்” என்றபோது கூட்டம் குதூகலித்தது.

‘‘கருணாநிதியோடு எங்களுக்கு இருக்கும் தொடர்பு மூன்று தலைமுறைகளைத் தாண்டியது. இப்போது ஸ்டாலினோடு சேர்ந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் வந்துள்ளேன்” என்றார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. தனது தாத்தா ஷேக் அப்துல்லா, அப்பா பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பைத்தான் உமர் குறிப்பிட்டார்.

சீதாராம் யெச்சூரி, ஸ்டாலினுக்கு மகுடமே சூட்டினார். ‘‘உலகத்துக்கு அச்சுறுத்தலாக வந்த ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டி ஜெர்மனியில் பறந்தது அமெரிக்கக் கொடியோ, பிரிட்டிஷ் கொடியோ அல்ல; அன்றைய சோவியத் யூனியன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உயர்த்திப் பிடித்த செங்கொடிதான். ஸ்டாலின் என்ற பெயர் மிகவும் பொறுப்பு வாய்ந்தது” என்று முழங்கினார் யெச்சூரி.

ராகுல் காந்தியும் கருணாநிதிக்கு இணையாக ஸ்டாலினைக் கொண்டுபோய் நிறுத்தினார். ‘‘இந்தக் கூட்டத்தை நடத்தி அதில் பங்கேற்க என்னை அழைத்த ஸ்டாலினுக்கு நன்றி. அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. ஒரு மாபெரும் தலைவனின் இடத்தை, வரும்காலத்தில் அவர் நிரப்ப வேண்டியுள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்ற அவர் சரியான திசையில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். கருணாநிதியைப் பற்றி எப்படி இப்போது பெருமையாகப் பேசுகிறோமோ... அப்படி ஒருநாள் ஸ்டாலினைப் பற்றியும் பேசுவோம்” என்றார். இப்படி இந்தியத் தலைவர்கள் ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

பி.ஜே.பி-யை வெளுத்துவாங்கிய ஸ்டாலின்!

அகில இந்தியத் தலைவர்கள் சொன்னதை வழிமொழிவதாக ஸ்டாலின் பேச்சு இருந்தது. ‘‘ஏதோ நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காரணத்தால், என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாமா? ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னார்களே, அந்த உறுதிமொழி என்னவானது? விவசாயிகளின் வருமானத்தை ஒன்றரை மடங்கு உயர்த்திக் காட்டுவோம் என்றார்களே, அது நிறைவேற்றப் பட்டுள்ளதா? கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்ச ரூபாய் தருவேன் என்றாரே, தந்தாரா? இதையெல்லாம் மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று அறிவித்தார்கள். இப்போது திடீரென மாட்டிறைச்சிக்குத் தடை என்று அறிவித்திருக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க அரசு, இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் மதத்தலைவர்களின் தலைமையிலேயே ஆளப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் நிலை உருவாகியிருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

கட்சியில், கொள்கையில் பல மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மதச்சார்பின்மை என்று வருகின்றபோது, நாங்கள் அனைவரும் ஒன்று படுவோம், உறுதியோடு இருப்போம்” என்றார் ஸ்டாலின்.

இப்படி ஸ்டாலினுக்கான பாராட்டு விழாவாக முடிந்தது, கருணாநிதியின் பிறந்த நாள் விழா!

- ஜோ.ஸ்டாலின், சே.த.இளங்கோவன்

படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism