கருணாநிதிக்கும் நடராசனுக்குமான முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா?
பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மன்னர் சரபோஜி கல்லூரியில் புதுமுக வகுப்பில் (PUC) சேர்ந்தார் நடராசன். தஞ்சாவூர் அருள் தியேட்டர் அருகில் ஒரு இடத்தில் நடராசனும் அவரது வகுப்புத் தோழர்களும் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி.யூ.சி தேர்வுகள் நடைபெற்றன. அதற்காக மாணவர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றதால் பிரசாரம் வேறு களைகட்டியிருந்தது.

ஒரு நாள் மாலை. நண்பர்களுடன் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார் நடராசன். அப்போது ஓட்டுக்கேட்டு சிலர் வந்தார்கள். அதில் கருப்புக் கண்ணாடி, நேர் வகிடு எடுத்த சுருள் முடி, தோளில் பச்சை சால்வை, உடம்போடு ஒட்டிய ஜிப்பா இப்படியான காஸ்ட்யூமில் ஒருவர் நடுநாயகமாகக் காட்சியளித்தார். அவர் வேறுயாருமில்லை, மு.கருணாநிதிதான். தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராகக் கருணாநிதி அந்தத் தேர்தலில் போட்டியிட்டார். வாக்குகள் கேட்பதற்காகத்தான் மாணவர்களை அவர் சந்தித்தார். அப்போதுதான் கருணாநிதியை முதல்முறையாக சந்தித்தார் நடராசன். நடராசனின் கிளாஸ்மேட் விக்டரின் அண்ணன்தான் கருணாநிதியை அழைத்து வந்தார். அவர், ‘‘இவங்க எல்லோரும் நம்ம பசங்கதான்’’ எனச் சொல்லி கருணாநிதிக்கு அறிமுகம் செய்தார்.
‘‘உங்க ஓட்டையெல்லாம் உதயசூரியன் சின்னத்துக்குப் போட்டு என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என மாணவர்களிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார். உடனே நடராசன், ‘‘எங்களுக்கு ஓட்டு கிடையாது. ஓட்டுப்போடுற வயசு வரவில்லை’’ என்றார். கருணாநிதியோ, ‘‘உங்களுக்கு ஓட்டு இல்லையென்றாலும் உங்க வீட்டில் இருக்கிற பெரியவர்களை உதயசூரியன் சின்னத்துக்குப் போடச்சொல்லுங்க’’ எனச் சொன்னார். பதிலுக்கு நடராசன், ‘‘எங்களுக்குப் பரீட்சை இருக்கு... படிக்க வேண்டும்’’ என்று சொல்ல... ‘‘முதலில் தேர்தல் வேலை செய்யுங்கள். தேர்வு அப்புறம்தான் வருது. அப்ப படித்துக்கொள்ளலாம்’’ எனச் சொன்னார் கருணாநிதி.
கருணாநிதி கேட்டுக்கொண்டதால் நடராசனும் அவரது நண்பர்களும் கருணாநிதிக்கு வாக்குச் சேகரித்தார்கள். கருணாநிதியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் பரிசுத்த நாடார் போட்டியிட்டார். பரிசுத்த நாடாரின் உறவினர் யாகப்பா நாடாருக்குச் சொந்தமான இடத்தில்தான் நடராசனும் அவரது நண்பர்களும் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். யாகப்பா நாடாரின் மகன்தான் விக்டர். இப்படியான சூழலில்தான் கருணாநிதிக்கு அவர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவு வெளியானபோது, 1,928 ஓட்டுகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றிருந்தார்.
சரபோஜி கல்லூரியில் நடராசன் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு செல்லதுரை என்பவரை நிறுத்தினார்கள் நடராசனும் அவரது நண்பர்களும். கலாட்டா, தகராறு, பணம் எனப் பேரவைத் தேர்தல் களைகட்டியது. கருணாநிதிக்கு வாக்குக் கேட்ட அனுபவத்தைப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தினார் நடராசன். செல்லதுரையும் வெற்றிபெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடராசனின் குலதெய்வம் வீரனார். ஆண்டுதோறும் வீரனாருக்கு ஆடு வெட்டிப் படையல் கொடுப்பார்கள். ஒரு பொங்கல் பண்டிகையின்போது வீரனாருக்கு ஆடு பலி கொடுத்தார்கள். இதை சிறு வயதில் பார்த்த நடராசன், ‘உயிரைக் கொல்வதுப் பாவம்’ எனச் சொல்லி எதிர்த்தார். திருக்குறளில் ‘புலால் மறுத்தல்’ பற்றி படித்த தாக்கத்தால் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தினார் நடராசன். பிராமணர்களை நடராசன் எதிர்த்து வந்தபோதிலும் பிராமணர்களைப் போலவே சைவராக மாறிப் போயிருந்தார். சென்னையில் நடராசன் தங்கியிருந்தபோது சைவத்திற்கு சோதனை வந்தது.
ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலா என்பது உலகமறிந்த செய்தி. நடராசனுக்கும் உடன்பிறவா சகோதரி ஒருவர் இருந்தார். கோவிந்தராஜுலு என்பவரின் மகள் சரோஜாதான் அந்த உடன்பிறவாச் சகோதரி. ஒரு நாள் அவர் வீட்டுக்கு நடராசன் போனபோது சாப்பாட்டில் மீனைக் கலந்து நடராசனுக்குக் கொடுத்து விட்டார் சரோஜா. அப்போது நடராசன் ஒல்லியாக இருப்பார். அவர் உடல் தேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த ஏற்பாட்டை சரோஜா செய்திருந்தார்.
இது தெரிந்ததும் நடராசன் ரொம்ப கவலைப்பட்டார். புலாலை மறுத்து வந்த தனக்கு இப்படி நடந்து விட்டதே என வருத்தப்பட்டார். உடனே சரோஜா, ‘‘பிராமணர்களே இப்போது கறி, மீன் எல்லாம் சாப்பிடுகிறார்கள். அசைவம் சாப்பிடா விட்டால் உன் உடம்பு தேறாது’’ எனச் சொன்னார்.
அன்று சைவம் செத்தது. அசைவம் உயிர் பெற்றது.
(தொடரும்)