Published:Updated:

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘என்னவோ தெரியவில்லை... இந்த ஆண்டு பிறந்தநாளின்போது கருணாநிதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ட்விட்டரில் #HBDKalaignar94 என்ற ஹேஷ்டாக் அகில இந்திய அளவில் அன்று முழுக்க டிரெண்டிங். எல்லா மீடியாக்களிலும் வாழ்த்து மழைதான்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.  

‘‘கருணாநிதியின் சட்டமன்றப் பணிகள் வைர விழாவில் அகில இந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டாரே ஸ்டாலின்?’’ என்றோம்.

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைர விழாக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டபடி நடத்திக் காட்டிவிட்டார் ஸ்டாலின். உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் சோனியா காந்தியும், லாலு பிரசாத் யாதவும் வரவில்லை. மற்ற தலைவர்கள் சொன்னபடியே ஆஜராகிவிட்டார்கள். எல்லோரையும் விமான நிலையத்துக்கு வந்து ஸ்டாலின் வரவேற்றார். ஒவ்வொரு தலைவரையும், ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல மூத்த நிர்வாகிகள் டீம் ஒன்றை ஸ்டாலின் நியமித்து இருந்தார். ராகுல் காந்தியை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.’’

‘‘ஸ்டாலின் வீட்டுக்கும் போயிருந்தாரே ராகுல்?”

‘‘ஆம். கிண்டி கத்திபாரா அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ராகுல் காந்தி தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சற்று நேரம் அங்கு ஓய்வு எடுத்த பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்குப் போனார் ராகுல். அவரோடு தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மட்டுமே சென்றனர். அவர்களை ஸ்டாலினும், மனைவி துர்காவும் வரவேற்றனர். ராகுல் வரும்போது ‘கட்சியினர் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று ஸ்டாலின் கண்டிப்புடன் சொல்லி இருந்தார். அதனால் தி.மு.க-வினர் அங்கு இல்லை. பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜன் எம்.எல்.ஏ மட்டுமே இந்தச் சந்திப்பின்போது ஸ்டாலின் வீட்டில் இருந்தார்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘அங்கு என்ன நடந்ததாம்?’’

‘‘ஸ்டாலின் தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ராகுலிடம் அறிமுகம் செய்து வைத்தார். மருமகன் சபரீசனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்து வைத்தாராம். பேரக் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ‘பெயர் என்ன... என்ன படிக்கிறீங்க?’ என்று ராகுல் காந்தி விசாரித்தார். அரசியல் பேசுவதைவிட அந்தக் குழந்தைகளோடு பேசுவதில்தான் ஆர்வம் காட்டினாராம் ராகுல். உற்சாகமாக அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே காரில் வைர விழாக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்கள். அதற்குள் மற்ற தலைவர்களும் பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து விழா நடைபெற்ற ராயப்பேட்டை மைதானத்துக்கு வந்தார்கள்.”

‘‘கனிமொழிக்கு மன வருத்தம் என்றார்களே?”

‘‘தந்தையின் பிறந்த நாள் விழாவில் எப்படியாவது பேச வாய்ப்பு கிடைக்கும் என கனிமொழி எதிர்பார்த்தார். அவரது ஆசை நிறைவேறவே இல்லை. வட இந்தியத் தலைவர்கள் பலரையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து விழாவுக்கு அழைத்தவர் கனிமொழிதான். அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற புலம்பல் கேட்டது. இதேபோல வருத்தம் அடைந்த இன்னொருவர், ப.சிதம்பரம். அவருக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. முகுல் வாஸ்னிக் முதல் வரிசையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தார். மேடையில் சிதம்பரம் பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.’’

‘‘விழாவுக்குக் கருணாநிதி வராவிட்டாலும், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து வாழ்த்து சொன்னார்களே?”

‘‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மட்டும் ஜூன் 3-ம் தேதியே கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து சொன்னார். விழாவில் பேசி முடித்து, அவர் உடனே திரும்பிவிட்டார். மற்ற தலைவர்கள் சென்னையில் தங்கி இருந்து மறுநாள்தான் கோபாலபுரத்தில் கருணாநிதியைப் பார்த்தார்கள். ஸ்டாலினும் கனிமொழியும்தான் அங்கேயும் ராகுல் காந்தியை வரவேற்றனர். மாடியில் இருக்கும் கருணாநிதி அறைக்கு ராகுல் காந்தியை அழைத்துச் சென்றனர். ‘பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ராகுல் காந்தி வந்துள்ளார்’ என ஸ்டாலின் சத்தமாகச் சொன்னபோது, தலையை உயர்த்திப் பார்த்தாராம்  கருணாநிதி. அருகில் சென்ற ராகுல், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு ‘என்னைத் தெரிகிறதா’ என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு கருணாநிதி தலையை அசைத்துள்ளார். கோபாலபுரம் வீட்டின் தரைதளத்தில் உள்ள அறையில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் கருணாநிதி இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ராகுல் வியந்து போனாராம். அதன்பின் ராகுல் சத்தியமூர்த்தி பவனுக்கு விசிட் அடித்தார். கூட்டம் முடிந்த பிறகு மதிய உணவை சத்தியமூர்த்தி பவனில்தான் சாப்பிட்டார் ராகுல். அந்தச் சாப்பாடு திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து வந்ததாம்.’’

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘திரும்பி வந்த நாள்முதல் அதிரடிகளை ஆரம்பித்துவிட்டாரே தினகரன்?”

‘‘ஆமாம்! சென்னை வந்தது முதலே தினகரனின் போன் பயங்கர பிஸியாக இருக்கிறது. திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து தினகரன் நிகழ்த்திய ஐந்து தொலைபேசி உரையாடல்கள் பற்றி திகைப்போடு பேசுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். முதல் அழைப்பு போனது எடப்பாடிப் பழனிசாமிக்கு. இப்படி ஒரு அழைப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் எடப்பாடி. தினகரனின் குரல் கிட்டத்தட்ட கட்டளையிடும் தொனியில் இருந்ததாம். தினகரன் சிறைக்குச் சென்ற தருணத்தில், சசிகலா குடும்பத்துக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை வைத்த மூன்று அமைச்சர்கள் பற்றிக் குற்றச்சாட்டுப் பட்டியல் வாசித்தார் தினகரன்.”

‘‘யார் அவர்கள்?”

‘‘வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர்தான் அவர்கள். ‘மணி’யான அந்த மூன்று அமைச்சர்களையும் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி சொன்னாராம். அவர்களுக்குப் பதிலாக தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தரும்படி சொன்ன தினகரன், ‘நான் சொல்வதைக் கேட்டுத்தான் இந்த அரசாங்கம் இயங்க வேண்டும். இல்லாவிட்டால், என் ஆதரவாளர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து இந்த ஆட்சியை இல்லாமல் செய்துவிடுவார்கள். நீங்கள் யாருமே அ.தி.மு.க வேட்டி கட்ட முடியாதபடி செய்துவிடுவேன். சீக்கிரமே தேர்தல் வரும். யாருடன் சேர்ந்துகொண்டு எப்படித் தேர்தலை எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். யோசித்து முடிவைச் சொல்லுங்கள்’ என்றாராம். எடப்பாடி பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாராம். அடுத்து அவர் யாருக்கு போன் செய்தார் என்பதைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்.”

‘‘யாருக்கு?”

‘‘ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் அடுத்த அழைப்பு போனது. ‘நான் இல்லாத இத்தனை நாட்களில் எல்லோரும் இணைந்திருப்பீர்கள் என நினைத்தேன். எதுவுமே நடக்காமல் போய்விட்டது. ஒதுங்கி இருந்தால் நீங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவீர்கள். நம்பியவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். நீங்கள் என்னோடு வந்துவிடுங்கள். உங்களுக்கு உரிய மரியாதையைத் தருவேன். அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன்’ என்றாராம் தினகரன். பன்னீர் ரியாக்‌ஷன் எதுவும் காட்டவில்லை.’’

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘அடடே!”

‘‘மூன்றாவதாக தினகரன் அழைத்தது டெல்லியில் இருக்கும் ஒரு பிரமுகரை. அவர், மோடியின் உள்வட்டத்தில் இருக்கிறார். அவரிடம் அமர்த்தலாகப் பேசிய தினகரன், ‘இங்கு நாங்கள்தான் நிஜமான அ.தி.மு.க. உங்களுக்கும் எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை, எங்களுக்கும் உங்களை விட்டால் வேறு வழியில்லை. நாம் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். நம்பகமில்லாத மனிதர்களால் நடத்தப்படும் இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும். ஆனால், கட்சி எங்களிடம்தான் இருக்கும்’ என்றாராம். அந்த டெல்லி பிரமுகர் சில ஆலோசனைகளை தினகரனுக்குச் சொன்னதாகத் தெரிகிறது.”

‘‘ஓஹோ.’’

‘‘அதன்பிறகு திரும்பவும் பன்னீருக்கு போன் செய்திருக்கிறார் தினகரன். இதை பன்னீர் எதிர்பார்க்கவில்லை. இம்முறை தினகரன் குரலில் எல்லைமீறிய கனிவு இருந்ததாகச் சொல்கிறார்கள். ‘என்னை நம்பி வாருங்கள். உங்களுக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ, அதை நான் தருவேன். இனி அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைக் கூப்பிடுகிறேன். எனச் சொல்ல... இம்முறையும் பன்னீர் பதில் எதுவும் பேசவில்லை.’’

‘‘கேட்கவே திகைப்பாக இருக்கிறதே?”

‘‘இன்னும் திகைப்பு முடியவில்லை. பன்னீரிடம் பேசி முடித்துவிட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார் தினகரன். பன்னீரிடம், தான் பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, ‘நான் பெங்களூரு சென்று சிறையில் சித்தியைச் சந்திக்க இருக்கிறேன். அவர்களிடம் என்ன சொல்லட்டும்?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கும் எடப்பாடி அமைதியையே பதிலாகத் தந்திருக்கிறார். ‘சரி... சித்தியிடம் பேசிவிட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுவந்து சொல்கிறேன். அதையாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள்.’ எனச் சொல்லிவிட்டு போனை வைத்தாராம் தினகரன்.’’

‘‘அதனால்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் கோட்டையில் கூடி அப்படி ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார்களா?’’

‘‘ஆமாம்! நடந்த எல்லாவற்றையும் ஜெயக்குமாரிடம் எடப்பாடி பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, ஜெயக்குமார் அறையில் 17 அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து ஜெயக்குமார் மட்டும் எடப்பாடி அறைக்குச் சென்று அரை மணி பேசினார். பிறகு கீழே வந்த ஜெயக்குமார், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். ‘ஏப்ரல் 17-ம் தேதி அனைத்து அமைச்சர்களும் கூட்டாக முடிவு எடுத்தபடி, சசிகலா குடும்பத்தினரைக் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ எனத் தடாலடியாக சொன்னார்.’’

‘‘ஜெயக்குமார் அறிவிப்புக்கு தினகரன் ரியாக்‌ஷன் என்ன?’’

‘‘ பெங்களூரில் இருந்தபடி ஜெயக்குமார் பேட்டியை  லைவ் ஆக பார்த்துக் கொண்டிருந்தார் தினகரன். ‘இரட்டை இலையை மீட்டெடுக்க நான் சிறை சென்று வந்ததுகூட இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையே?’ என்று வருத்தப்பட்டாராம்.’’

‘‘சிறையில் தினகரனிடம் சசிகலா என்ன சொன்னாராம்?’’

மிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்!

‘‘மகாதேவன் மரணத்துக்குப் பிறகு, குடும்பத்தினர் தன்னைப் பார்க்க வருவதைத் தவிர்த்து வந்த சசிகலா, தினகரனுக்குச் சம்மதம் தெரிவித்தார். ‘மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிராக மூத்த அமைச்சர்களே செயல்படுகிறார்கள்.’ எனச் சில விஷயங்களை ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறார் தினகரன். மேலும், குடும்பத்தில் நடக்கும் அதிகாரச் சண்டைகளையும் பட்டியல் போட்டுள்ளார். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சசிகலா, ‘அவங்க எல்லாம் யாருடைய பேச்சைக் கேட்டோ ஆடுகிறார்கள். இப்போதைக்கு நாமும் எதுவும் செய்ய  வேண்டாம். இரண்டு மாத காலம் பொறுமையாக இரு. ஜனாதிபதி தேர்தல் முடியட்டும். அப்போது நாம் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை கட்சி நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டு இரு’ என்று மட்டும் சொல்லி அனுப்பி இருக்கிறார். எடப்பாடிக்கு சசிகலா ஏதோ தகவல் சொல்லி அனுப்பி இருப்பதாக தினகரன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு எடப்பாடி தரப்பு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்து அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகள் இருக்கும்.’’

‘‘என்ன நடக்கும்?”

‘‘அடுத்த நாள் கோட்டையில் எல்லா அமைச்சர்களின் அறையிலும் தனது படத்தை மாட்டச் சொல்லி முதல் அதிரடியை எடப்பாடி செய்துள்ளார். ‘நான்தான்  இனி எல்லாம்’ என தினகரனுக்கு உணர்த்துவதாக செய்யப்பட்ட ஏற்பாடு இது. அநேகமாக, ஜூன் 14-ம் தேதி கூடும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.க-வினர் மூன்று அணிகளாகப் பிரிந்து, மூன்று விதங்களாகப் பேசுவதைப் பார்க்க முடியும். அதே நேரம் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கை கூட ஆரம்பித்திருக்கிறது.’’ என முடித்த கழுகார்,

‘‘இதுவரை நாம் கார்டன் கன்ட்ரோலில் இருந்தோம். இனி கார்டியன் கன்ட்ரோலில் இருப்போம்... என ஒரு அமைச்சர் சொன்னாராம்” என்றார்.

‘‘யார் அந்த கார்டியன்கள்?”

‘‘ஒருவர் டெல்லியில் இருக்கிறாராம். இன்னொருவர் கேரளாவில் இருக்கிறாராம்” என்றபடி பறந்தார் கழுகார்.

படம்: கே.ஜெரோம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism