Published:Updated:

சம்பவாமி யுகே... யுகே..!

சம்பவாமி யுகே... யுகே..!
பிரீமியம் ஸ்டோரி
சம்பவாமி யுகே... யுகே..!

வீயெஸ்வி, ஓவியங்கள்: ஹாசிப்கான்

சம்பவாமி யுகே... யுகே..!

வீயெஸ்வி, ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
சம்பவாமி யுகே... யுகே..!
பிரீமியம் ஸ்டோரி
சம்பவாமி யுகே... யுகே..!

“வருங்கால முதல்வர் சூப்பர் ஸ்டார் வாழ்க...!”

“தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரே வருக...”

“தலைவா... நீதான் அடுத்த பிரதமர்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரஜினிகாந்த் ஆகிய நான்...”

- தூக்கத்தில் பல்வேறு காட்சிகள் கனவுகளாய் விரிய, திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறார் ரஜினி. தாடியை நீவிவிட்டுக் கொள்கிறார். கண்களை கசக்கிக் கொள்கிறார்.

எதிரில் தேரோட்டி கிருஷ்ண பகவான்!

ஊர் முழுவதும் போர் துவங்கி விட்டதற்கான அறிகுறிகள். இரவு பத்து மணிக்குள் முடிக்க வேண்டிய அவசரத்தில் தெருமுனைக் கூட்டங்கள். 24x7 தொலைக்காட்சி விவாதங்கள். சமூக வலைதளங்களில் வாதப்பிரதிவாதங்கள்.அப்படியே சரிந்து கிருஷ்ணரின் கால்களில் விழுகிறார் ரஜினி.

சம்பவாமி யுகே... யுகே..!

கிருஷ்ணர்: ஐஸ்வர்யாவைப் பெற்றவனே... சௌந்தர்யாவின் தந்தையே... ஏன் துவண்டு விட்டாய்? முன் வைத்த கால்களைப் பின்வைக்க விரும்பாதவன் அல்லவோ நீ? காலத்தின் கட்டளையை மறுக்காதவன்தானே நீ... என்ன ஆயிற்று உனக்கு?

ரஜினி: வேண்டாம் சுவாமி... எனக்கு இந்தப் போர் வேண்டாம்.

கிருஷ்ணர்: ஏன்?

ரஜினி: எந்தப் பக்கம் திரும்பினாலும் என்னுடைய நண்பர்களாகவே நிற்கிறார்கள். ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், போராளி சீமான்... இத்தகைய நல்லவர்களை எதிர்த்துப் போரிட என்னால் முடியாது சுவாமி.

கிருஷ்ணர்: வடக்கில் மோடி, அமித்ஷா... இங்கே கங்கை அமரன், இல.கணேசன் போன்றவர்களை விட்டுவிட்டாயே ரஜினி?

ரஜினி: இவர்களை எதிர்த்து நான் போரிடப் போகிறேனா; அல்லது இவர்களது சேனையில் இணைந்து களம் காணப்போகிறேனா என்பது குறித்து ஆண்டவன் தீர்மானிக்கக் காத்திருக்கிறேன்.

கிருஷ்ணர்: போகட்டும்... வருந்தத்தகாதவர்கள் பற்றி நீ வருந்துகிறாய். மற்றொருபுறம் எல்லாம் அறிந்த அறிவாளிகளைப் போல் பேசுகிறாய். அறிவாளிகள் தோற்பவர்களைப் பற்றியோ, ஜெயிப்பவர்களைப் பற்றியோ வருந்த மாட்டார்கள். மராத்திய மைந்தனே! எந்த மனிதனை இவை வருத்துவதில்லையோ, சுக துக்கங்களைச் சமமாக கருதுபவனான அம்மனிதனே இமயமலை செல்லத் தகுதியுள்ளவனாவான்.

ரஜினி: சுவாமி!

கிருஷ்ணர்: ஆமாம் ரஜினி... நியாயமான போரைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறொரு பேறு கிடையாது. இப்படி தர்மமான யுத்தத்தை நீ நடத்தாவிட்டால், சுய தர்மத்தையும் புகழையும் இழந்து பாபத்தையே அடைவாய். கமலின் நண்பனே! நீ தோல்வியுற்றால் சொர்க்கத்தை அடைவாய்... வெற்றிப்பெற்றால் ராஜ்யத்தை அனுபவிப்பாய்... ஆகவே, போர் செய்ய முடிவு செய்து எழுந்திரு.

‘கர்மண்யேவாதி காரஸ்யே மா பலேஷுகதாசந...’ என்று கேள்விப்பட்டிருப்பாய்... கர்மத்தைச் செய்வதில்தான் உனக்கு அதிகாரம். அதன் பலன்களில் உனக்கு எப்போதும் அதிகாரம் இல்லை.

(ரஜினி அவருக்கே உரிய ஸ்டைலில் வாய் விட்டு உரக்கச் சிரிக்கிறார்)

கிருஷ்ணர்: கபாலி நாயகனே! ஏன் சிரிக்கிறாய்?

ரஜினி: சுவாமி... நான் குருவாகப் போற்றும் தயானந்த சரஸ்வதி போன்ற மகான்கள் ஏற்கெனவே பல்வேறு கூட்டங்களில் பேசியவற்றைத்தான் இப்போது நீங்களும் சொல்கிறீர்கள்! புதுசா எதுவும் சொல்லலையே... அதை நினைத்தேன்... சிரிப்பை அடக்க முடியவில்லை! (மறுபடியும் வாய்விட்டு உரக்கச் சிரிக்கிறார்)

கிருஷ்ணர்: மேடையில் பேசிப்பேசி மற்றவர்கள், நான் சொன்னதையெல்லாம் தங்களுடையதாக வரித்துக்கொண்டு விட்டார்கள். நானும் காப்பிரைட் உரிமையை சொல்லி லீகல் நோட்டீஸ் அனுப்புவதில்லை! அது இருக்கட்டும்... உன்னுடைய பிரச்னைதான் என்ன? என்ன தயக்கம் உனக்கு?

ரஜினி: கேசவா! தங்களுக்குத் தெரியாதது இல்லை. எப்போதும் என் முடிவைத் தெளிவாகப் புரிய வைக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...’ என்பேன். ஆனா, ஒரு தடவை கூட எதையும் ஒழுங்காகச் சொல்ல மாட்டேன். என்னோட ஃபேன்ஸ் குழம்பிப் போயிட்டாங்க. அதனால, மனசைத் திறக்கலாம்னு அவங்களை மீட் பண்ணேன். மைக் பிடிச்சேன். அப்போ அரசியல் பற்றி நூல் விட்டேன்...  ஆண்டவன் கட்டளைக்காகக் காத்திருக்கிறதா சொன்னேன்.

கிருஷ்ணர்: பிறகு?

ரஜினி: இரண்டு நாட்களுக்குப் பிறகு, வேறு மாவட்டத்து ரசிகர்களைச் சந்திக்கும்போது ‘சிஸ்டம் சீரழிந்து விட்டது...’ என்றேன். ‘முதலைகள் அற்ற குளமாகப் பார்த்து இறங்க வேண்டும்...’ என்றும், ‘போர் வரட்டும்... நாம் ஒன்று சேருவோம்...’ என்றும் கூறினேன் சுவாமி.

கிருஷ்ணர்: லதா மணாளனே! சிஸ்டம் சீரழிந்து விட்டது என்று நீ குறிப்பிட்டதை உன் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்துக் குழம்பியிருப்பார்கள் பலர். ஒரு விஷயம் புரிந்து கொள். சீரழிந்து போனது சிஸ்டம் மட்டும்தானா? இந்த சொஸைட்டியும் கெட்டுவிட்டதுதானே?

ரஜினி: புரியவில்லை சுவாமி...

கிருஷ்ணர்: சமூகத்தில் எத்தனை அவலங்கள் நடக்கின்றன என்பது உனக்கே தெரியும்? தற்கொலைகள், கௌரவக் கொலைகள், சுட்டுக் கொலைகள், கத்திக்கொலைகள், குண்டு வெடிப்புக்கொலைகள்... அதே மாதிரி எத்தனை விவாகரத்துகள் என்பதும் உனக்குத் தெரியும். லவ் பண்ணிக் கல்யாணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலர், குழந்தை பெற்றுக்கொண்டதும் மறுபடியும் புகுந்தவீடு செல்வதில்லை. குழந்தையைப் பார்க்கக் கணவனை அனுமதிக்காமல் டார்ச்சர் தருவதும் நடக்கிறதுதானே!

ரஜினி: இதற்கெல்லாம் விடிவுகாலம் சுவாமி...

கிருஷ்ணர்: நிச்சயமாக அது உன் கையில் இல்லை போயஸ் நாயகனே! ‘பரித்ராணாய ஸாதூநாம்...’ என்று எப்போதெல்லாம் தர்மத்துக்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் ‘சம்பவாமி யுகே யுகே...’ என்று துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன் என்றேன். ஆனால், ரீமேக் சினிமா மாதிரி என்னுடைய ரோலை நீ எடுத்துக் கொண்டுவிட்டாய். சிஸ்டம் சீரழிந்து விட்டதாகச் சொல்லி, அதைச் சீரமைக்க அவதாரம் எடுத்திருப்பதுபோல் ஸீன் போட்டு விட்டாய்!

ரஜினி: கண்ணா! ஓர் ஊர்ல ஒரு சித்தர் இருந்தாராம்... ஒருநாள் அவர் இருக்கும் இடத்தில் எக்கச்சக்கக் கூட்டம்...

கிருஷ்ணர்: குட்டிக்கதையா? வேண்டாமே ப்ளீஸ்...

சம்பவாமி யுகே... யுகே..!

ரஜினி: எந்த ஒரு நாட்டிலும் கதை கேட்க விரும்பாதவனும், கேட்ட கதையைத் திரிச்சு சொல்றவனும் இருக்கும்வரை அந்த நாடு உருப்பட்டதா சரித்திரமே இல்லை. அது போகட்டும் பாச்சா... எங்க ஊர்ல பார்த்தசாரதியை செல்லமா பாச்சானுதான் அட்ரஸ் பண்ணுவோம். இப்ப நான் விஷயத்துக்கு வரேன்... நான் அரசியலுக்கு வர்றதா சொல்லவே இல்லை... போர் வரட்டும்னுதான் சொன்னேன்... அது பாகிஸ்தானுக்கு எதிரான போராக்கூட இருக்கலாமே... ஆனால்...

கிருஷ்ணர்: பச்சைத் தமிழனே... பாலசந்தரின் சீடனே... அஞ்ஞானத்தால் உதித்து, உன் மனத்தில் குடிபுகுந்த உன் சந்தேகத்தை ஆத்ம ஞானம் என்ற கத்தியினால் துண்டித்துவிட்டு, கர்மயோகத்தை அனுஷ்டிப்பாயாக...

ரஜினி: அன்னிக்கு அர்ஜுன்கிட்ட சொன்னதையெல்லாம் இப்ப என்கிட்ட சொல்றீங்களே... நான் அர்ஜூன் இல்லை சுவாமி... அவன் நிபுணன்..! நான் சாதாரண சிவாஜிராவ். இருப்பினும், நான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவே நினைத்து நிறைய பேர் அலம்பல் பண்ணிட்டு இருக்காங்களே...

கிருஷ்ணர்: நீ என்ன சொல்ல வருகிறாய்?

ரஜினி: காட்சி ஊடகங்களில் நான் பேசு பொருளாகவும், அச்சு ஊடகங்களில் எழுது பொருளாகவும் மாறிவிட்டேன். நான் அரசியலுக்கு வந்தா, வரவேற்கிறதா நிறைய தலைவர்கள் சொல்றாங்க. ‘மகிழ்ச்சி’ன்னு என்னோட டயலாக்கை என்கிட்டேயே எடுத்துவிடறாங்க...

கிருஷ்ணர்: ‘நான் வந்துட்டேன்னு சொல்லு...’னு காலிங்பெல் அடித்தவனாயிற்றே நீ?

ரஜினி: அதே மாதிரி என் அரசியல் என்ட்ரியை எதிர்க்கிறவங்களும் நிறைய பேர்... எனக்காக பி.ஜே.பி. கதவு எப்பவும் திறந்திருக்கும்னு அந்தக் கட்சியின் தலைவர் சொல்றார். அதே பி.ஜே.பி-யை சேர்ந்த இன்னொரு ஹார்வர்டு தலைவர், சினிமாவிலேர்ந்து அரசியலுக்கு வந்தவங்க அத்தனை பேரும் நாட்டை நாசம் பண்ணிட்டுப் போயிட்டதா சொல்றார். நான் நல்லவங்க லிஸ்ட்லே சேர்த்திருந்த ஒருவர், ‘கபாலி’ படத்துக்கு நான் வாங்கின சம்பளத்தையும், அதுக்காக நான் கட்டிய வரியையும் சொல்ல முடியுமான்னு சவால் விடறார். எனக்கு ரத்தக் கொதிப்பு ஏறுது சுவாமி...

கிருஷ்ணர்: முரட்டுக்காளை மனம் புழுங்கலாமா? குளிர், வெப்பம், சுகம், துக்கம், மானம், அவமானம் இவற்றில் சம நோக்குடனிருந்து, ஆத்மாவை வசப்படுத்தி அமைதியாக உள்ளவன் பரமாத்ம நிலையைப் பெற்றிருப்பான்.

ரஜினி: தாங்களே என்னை இமயமலைக்கு அனுப்பி விடுவீர்கள் போலிருக்கிறதே சுவாமி?

கிருஷ்ணர்: அன்பர்கள், நண்பர்கள், பகைவர்கள், அசட்டையாக இருப்பவர்கள், நடுநிலையாக இருப்பவர்கள், தன்னை துவேஷிப்பவர்கள், பந்துக்கள், சாதுக்கள், பாபிகள் இவர்கள் எல்லோரிடமும் சம நோக்குடன் இருப்பவர்கள் உயர்ந்தவன் என்பதை புரிந்துகொள்...

ரஜினி: மதுசூதனா!

கிருஷ்ணர்: ஓ! என்னை பன்னீர் அணியில் சேர்த்து விட்டாயா?

ரஜினி: தமிழ்நாட்டு விவசாயிகள் என்னை விரல் நீட்டிக் கேள்வி கேட்கிறார்கள். அதுகூட பரவாயில்லை... பிரதமர் மோடி ஸ்டைலில் பாராமுகமாக இருந்து விடுவேன். என்னுடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதையும்கூட ‘இதெல்லாம் தமிழ்நாட்டில், குறிப்பாக போயஸ் கார்டனில் சகஜமப்பா’ என்று சமாதானம் அடைவேன். ஆனால்...

கிருஷ்ணர்: வலிமைமிக்க தோளுடையாய்! இன்னும் என்ன சந்தேகம்?

ரஜினி: சுவாமி... அரசியலுக்கு நான் வருவது பிடிக்காதவர்கள், என் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்... என்னால் சூடு பொறுக்க முடியவில்லை வல்லிக்கேணி வாசனே!

கிருஷ்ணர்: கரிகாலனே! ஆளும் திறமையுடன் கூடியதும், ஒளிமிக்கதும், செழுமை கொண்டதும், நன்மை பயக்கக் கூடியதுமாக எந்த எந்த வஸ்து உண்டோ, அது அனைத்தும் எனது தேஜஸின் ஓர் அம்சத்தால் உண்டானதென்று அறிவாயாக...

ரஜினி: அதாவது உருவபொம்மையும் நீங்கள்... அதை எரிப்பவனும் நீங்கள்... தீயும் நீங்கள்... சாம்பலும் நீங்கள்... அப்படித்தானே?

சம்பவாமி யுகே... யுகே..!

கிருஷ்ணர்: மிகச்சரியாகச் சொல்லிவிட்டாய்! யுத்த பூமியில் நிற்கும் வீரர்கள் - அல்லது அரசியல் தேர்தலில் நிற்கப் போகிறவர்கள் - நீ இல்லாவிட்டாலும் ஜெயிக்கவோ தோற்கவோ போவது நிச்சயம். ஆகவே, நீ எழுந்திரு. எதிரிகளை வென்று புகழ் அடைவாயாக... செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி... யுத்தம் செய்... போரில் பகைவர்களை வெற்றி கொள்வாய்.

நம் இருவருக்கும் நடந்த இந்த தர்மமான உரையாடலை எவன் ஒருவன் படிப்பானோ, அவன் ஞான யக்ஞத்தால் என்னை ஆராதித்தான் என்றே நான் நினைப்பேன்.

- சொல்லிவிட்டு  ஸ்ரீகிருஷ்ணர் மறைந்து விட, ரஜினிக்கும் கனவு கலைகிறது. இதோ, விமானத்தில் மும்பைக்குப் பறந்துவிட்டார் சூப்பர் ஸ்டார். அங்கே, பா.இரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தில் ரஜினி பிஸி.

அடுத்தப் படம் ஆரம்பிக்கும்போது போர் முரசு ஒலிக்கும். வெளியேவந்துவிடுவார் ரஜினி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism