Published:Updated:

“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”

“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”

ஆ.பழனியப்பன், படம்: க.பாலாஜி

“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”

ஆ.பழனியப்பன், படம்: க.பாலாஜி

Published:Updated:
“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”

டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள், ‘வணக்கம்… நன்றி’ எனச் சில தமிழ் வார்த்தைகளை உச்சரித்துவிட்டு ஆங்கிலம், இந்திக்குத் தாவிவிடுவார்கள். ஆனால், ‘சட்டப் பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வைரவிழா’வில் தமிழில் பேசி வியக்கவைத்தார்  சீத்தாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரைச் சந்தித்துப் பேசினேன்.

“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை!”

“நீங்கள் சென்னையில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களுக்கும் சென்னைக்குமான தொடர்பு பற்றி…”

“எங்களுடைய குடும்பத்தினர் இரண்டு மூன்று தலைமுறைகளாகச் சென்னையில் தான் இருந்தார்கள். என்னுடைய தாத்தா, மயிலாப்பூரில் வசித்தார். அந்த வீட்டில்தான் என் அம்மா பிறந்தார். நானும் அங்குதான் பிறந்தேன். என் தாத்தா, இங்கே வழக்கறிஞராக இருந்தார். என் அம்மா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், என் அப்பா, கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்தவர்கள். நான் பிறந்தவுடனே சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர நேர்ந்தது என்றாலும்,  ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிடுவோம். இரண்டு மாதங்கள் தங்கியிருப்போம். இங்கு எங்களுக்கு நிறைய குடும்ப நண்பர்கள் உண்டு.”

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பி.ஜே.பி முயற்சிப்பதாகவும், அதற்காக மத்திய அரசைப் பயன்படுத்துவதாகவும் எழுந்துள்ள விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வடஇந்தியாவைப் போன்றது அல்ல தென்இந்தியா. இங்கு, பி.ஜே.பி வளர்வதற்கான வாய்ப்பே இல்லை. பி.ஜே.பி மாதிரியான ஒரு வகுப்புவாதக் கட்சியை,  மதச்சார்பற்ற எண்ணம்கொண்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால், ஏதாவது ஒரு குறுக்கு வழியில் இங்கு காலூன்ற முடியுமா என்று பார்க்கிறார்கள். அப்படித்தான், அ.தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் இங்கு தங்கள் செல்வாக்கைச் செலுத்தப் பார்க்கிறார்கள். இது, தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.”

“மோடி தலைமையிலான அரசு முழுமையாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``மோடி அரசின் மூன்று ஆண்டு கொண்டாட்டங்களைப் பார்க்கும்போது எனக்கு நிறையக் கேள்விகள் எழுகின்றன. இவர்கள் எதை சாதித்துவிட்டார்கள்? எதற்காக இந்தக் கொண்டாட்டம்? தாம் அளித்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றினால், அதைக் கொண்டாடலாம். ஆனால், இவர்கள் ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். இதுவரை, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்?

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கியிருக்க வேண்டிய நிதியில், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தியாவில் ஐ.டி துறையில் பணியாற்றும் 40 லட்சம் இளைஞர்களில், 50-60 சதவிகிதம் பேர், இந்த ஆண்டில் வேலையைவிட்டு அனுப்பப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மோடி அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தற்கொலைக்குக் கடன்சுமையே காரணம். விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய இந்த அரசு தயாராக இல்லை. இவையெல்லாம் சாதனைகளா? இவற்றுக்காகத்தான் இந்தக் கொண்டாட்டமா?

“காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கும், மோடி அரசின் செயல்பாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?”

“இன்று பிரதமரே வகுப்புவாத ரீதியில் பேசுகிறார். உதாரணத்துக்கு, முத்தலாக் விவகாரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முத்தலாக் முறையை நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. அது, முழுக்க முழுக்கப் பெண்களுக்கு எதிரானது. ஆனால், இதை பிரதமர் பேசுவதற்கு ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. உண்மை யிலேயே, பெண்களின் நலனில் பிரதமருக்கு அக்கறை இருக்குமானால், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை, தங்களின் தனிப்பெரும்பான்மை அரசைக் கொண்டு நிறைவேற்றியிருக்கலாமே? மூன்றாண்டுகளாக ஏன் அதைச் செய்யவில்லை? எனவே, முத்தலாக் பற்றி அவர்கள் பேசுவது வெறும் வேஷம். தங்களின் வகுப்புவாத அஜெண்டாவுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”

“தமிழகத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத ஒரு தனி அணியை உருவாக்கிப் போட்டியிட்டீர்கள். இப்போது, தி.மு.க-வுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். இது, தேர்தல் கூட்டணியாக மாறுமா?”

“இல்லை இல்லை. முக்கியமான பிரச்னைகள் மற்றும் மக்கள் நலனுக்கானப் போராட்டங்களில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இப்போது, மோடி  அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பின்வாங்க வைப்பதற்கு அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டியுள்ளது. அதுதான் முக்கியம்.”
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism