சமூகம்
தொடர்கள்
Published:Updated:

எடப்பாடிக்கு எல்லாமே இவர்தான்!

எடப்பாடிக்கு எல்லாமே இவர்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடிக்கு எல்லாமே இவர்தான்!

திகைக்க வைக்கும் டிரைவர் சென்டிமென்ட்...

சென்டிமென்ட் பார்ப்பதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாருமில்லை. அதிலும், அ.தி.மு.க-வில் இருப்பவர்களுக்கு இந்த சென்டிமென்ட் ஒரு நூல் தூக்கலாகவே இருக்கும். குறிப்பிட்ட ஒருவரைத் தன்னுடைய கார் டிரைவராக வைத்துக்கொண்டதால்தான், தனக்கு முதல்வர் பதவி கிடைத்ததாக சென்டிமென்ட்டாக நினைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சகுனம் பார்ப்பதில் சாமியார்களையே மிஞ்சிவிடும் எடப்பாடி, தனது முக்கிய விசிட்களுக்கெல்லாம், நம்பிக்கைக்குரிய அந்த டிரைவரைத்தான் பயன்படுத்துகிறார். ‘எடப்பாடிக்கு எல்லாமே இந்த டிரைவர்தான்’ என்கிறது கோட்டை வட்டாரம்.

எடப்பாடி பழனிசாமிக்கு ‘ராசியான’ அந்த டிரைவரின் பெயர் சரவணன். யார் இவர்? எப்படி எடப்பாடியின் டிரைவர் ஆனார்? சரவணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சரவணன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரைச் சேர்ந்தவர். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். படிப்பு ஏறாததால், எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டார். கொஞ்ச நாள் சும்மா ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். இதனால் கவலைப்பட்ட அவரின் பெற்றோர்கள், சரவணனின் மச்சானுடன் லாரி கிளீனர் வேலைக்கு அனுப்பிவைத்தார்கள். மச்சானுடன் லாரியில் போன சரவணன், அப்படியே டிரைவிங் கற்றுக்கொண்டார். அந்தச் சமயத்தில்தான், மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமியின் கல்குவாரியை ஆரம்பித்தார்கள். அங்கே, டிப்பர் லாரி ஓட்டும் வேலைக்கு சேர்ந்தார் சரவணன்.

எடப்பாடிக்கு எல்லாமே இவர்தான்!

2011-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தனது பிரசார வாகனத்துக்கு, தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு நல்ல டிரைவரைத் தேடிக்கொண்டிருந்தார். பவளத்தானூருக்கு அருகே அத்திகாட்டானூர் என்ற ஊர் உள்ளது. அங்கே, சரவணன் என்ற பெயரில் ஒரு டிரைவர் இருந்தார். அவரை எடப்பாடிக்கு டிரைவராக வருமாறு அழைத்தார்கள். அவரோ, ‘எனக்கு வேறு வேலை இருக்கிறது. பவளத்தானூரைச் சேர்ந்த டிரைவர் சரவணனை வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள், அவரும் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்று சிபாரிசு செய்துள்ளார்.

அதையடுத்து. எடப்பாடியின் டிரைவராக 2011-ல் சரவணன் சேர்ந்துள்ளார். அந்தத் தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்றதுடன், அமைச்சராகவும் ஆனார். அந்த சென்டிமென்ட், ‘டிரைவர் சரவணன் ராசியானவர்’ என்று எடப்பாடியை நம்ப வைத்தது. அதனால், அவரைத் தன்னுடனேயே அரவணைத்து வைத்துக்கொண்டார். 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதும், சரவணனையே தன்னுடைய டிரைவராகப் பழனிசாமி வைத்துக்கொண்டார். 2011 தேர்தலைப்போலவே, இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அமைச்சராகவும் ஆனார் எடப்பாடி. முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின், அ.தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அரசு டிரைவர்களை அனுப்பிவிட்டு, தன்னுடைய ‘ராசி’யான டிரைவர் சரவணனையே தன் கார் டிரைவராக வைத்துக்கொண்டார் எடப்பாடி. இந்த முறை எடப்பாடிக்கு ஜாக்பாட்டே அடித்தது. தமிழக முதல்வராகவே ஆகிவிட்டார் அவர்’’ என்றார்கள் அவர்கள்.

இதனால், எடப்பாடி பழனிசாமியிடம் சரவணனுக்கு ராஜமரியாதை. முதலமைச்சர் என்பதால் எடப்பாடிக்கு அரசு டிரைவர்கள் உள்ளனர். ஆனாலும்,  சரவணனையே தன் பர்சனல் டிரைவராக அவர் வைத்துள்ளார். குறிப்பாக, சேலம் எல்லைக்குள் எடப்பாடி நுழைகிறார் என்றால், அவருடைய டிரைவராக இருப்பவர் சரவணன்தான். குடும்பத்துடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும், தொகுதிக்குள் மக்களைச் சந்திக்கச் சென்றாலும், பர்சனலாக யாரையேனும் சந்திக்கச் சென்றாலும் எடப்பாடியின் கார் டிரைவராக இருப்பவர் சரவணன் மட்டுமே.

‘‘சரவணனின் ராசியால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் நெருக்கத்தால், டிரைவர் சரவணனின் செல்வாக்கு எங்கேயோ போய்விட்டது. முன்பு சரவணன் வீட்டின் அருகே மாடு கட்டிக்கிடந்த இடத்தில், இப்போது விலை உயர்ந்த கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணன் மகளின் காதணி விழாவுக்கு முதல்வரின் குடும்பமே வந்திருந்தது வாழ்த்தியது. முப்பதுக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி ஊருக்கே விருந்து வைத்து அசத்தினார் சரவணன். இப்போது முதல்வர் எடப்பாடிக்கு எல்லாமே சரவணன்தான்” என்கிறார்கள் சரவணனின் உறவினர்கள்.

சரவணனிடம் இந்த சென்டிமென்ட் பற்றிக் கேட்டபோது, ‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நான் சாதாரண டிரைவர்தான். பத்திரிகைகளில் எதையாவது எழுதி வில்லங்கத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்பதால், பத்திரிகையாளர்களிடம் நான் பேசுவதில்லை. ஆளை விடுங்க சாமீ... உங்களுக்குப் புண்ணியமா போகும்’’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.

- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்