Published:Updated:

' ஒரு பூத்துக்கு 2 கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க!' - அறிவாலயத்துக்கு 'செக்' வைக்கும் பூத் கமிட்டி

'முன்னாள் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமியின் மகன்' என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர, புதிய மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் அறிந்திருக்கவில்லை.

' ஒரு பூத்துக்கு 2 கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க!'  - அறிவாலயத்துக்கு 'செக்' வைக்கும் பூத் கமிட்டி
' ஒரு பூத்துக்கு 2 கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க!' - அறிவாலயத்துக்கு 'செக்' வைக்கும் பூத் கமிட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கச் சென்ற அறிவாலய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. ' மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் உள்ளனர் கட்சி நிர்வாகிகள். இந்த அதிருப்தியை ஸ்டாலின் நியமித்த குழுவிடமும் வெளிப்படுத்தியுள்ளனர்' என்கின்றனர் தென்மண்டல தி.மு.கவினர். 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கடந்த 8-ம் தேதி கட்சி எம்.எல்.ஏக்கள் 12 பேரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த விவாதத்தில், திருவிடைமருதூர் கோவி.செழியன், பல்லாவரம் கருணாநிதி, பென்னாகரம் இன்பசேகரன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களிடம் பேசிய ஸ்டாலின், 'நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் வேலைகளைத் துரிதப்படுத்துமாறு கூறியும், பல மாவட்டங்களில் அடிப்படைப் பணிகளே நடைபெறவில்லை. உங்கள் 12 பேருக்கும் மண்டலங்களைப் பிரித்துக் கொடுத்துள்ளேன். இந்தப் பணிகளை உடனே தொடங்குங்கள். மாவட்ட செயலாளர், ஒன்றிய, நகர, கிளை செயலாளர்களை வைத்துக் கூட்டம் போடுங்கள். ஏற்கெனவே, நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களின் பெயர்கள் சரியானவையா என சரிபார்ப்புப் பணிகளையும் மேற்கொள்ளுங்கள். வரும் 30-ம் தேதிக்குள் பூத் கமிட்டிக்கு ஆள்களை நியமிக்கும் பணிகளை நிறைவு செய்துவிட வேண்டும்' என நம்பிக்கையோடு கூறி வழியனுப்பி வைத்தார் ஸ்டாலின். 

' ஒரு பூத்துக்கு 2 கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க!'  - அறிவாலயத்துக்கு 'செக்' வைக்கும் பூத் கமிட்டி

"ஆனால், பல மாவட்டங்களில் செயல் தலைவர் நியமித்த எம்.எல்.ஏக்கள் குழுவினரை, கட்சி நிர்வாகிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் கிடைத்த அனுபவத்தைக் கேள்விப்பட்டு மிகுந்த ஆதங்கத்தில் இருக்கிறார் ஸ்டாலின்" என விவரித்த தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், " ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் பறிபோனதையடுத்து, அங்குள்ள கிளைக் கழக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். அங்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தச் சென்றார் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். அங்கிருந்த நிர்வாகிகளோ, ' கட்சி வேலை செய்யவே ஆள் இல்லை. பகுதி, வட்டத்தையெல்லாம் கலைச்சிட்டு, இப்பத்தான் புது நிர்வாகிகளைப் போட்டிருக்கீங்க. என்ன செய்யறதுன்னு எங்களுக்கே தெரியல. பூத்துக்கு இருபது பேரைப் போடுன்னு சொல்றீங்க. ஒரு பூத்துக்கு இரண்டு கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க. ஏற்கெனவே இருந்த பழைய நிர்வாகிகள், இங்க இருந்த மினிட் புக்கைத் திருடிட்டுப் போயிட்டாங்க' எனப் புலம்பியுள்ளனர். ' மினிட் புக்கைத் திருடிட்டாங்களா?' எனக் கார்த்திகேயன் கேட்க, அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், ' எந்த மினிஸ்டர்கிட்ட சொல்லி, உங்களால காண்ட்ராக்ட் வாங்கித் தர முடியும்?' என சீரியஸாகக் கேட்டிருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் கட்சி நிர்வாகிகள் திரும்பிவிட்டனர். இதே நிலைமைதான் மாநிலம் முழுவதும் நிலவுகிறது" என்றவர், 

"அண்மையில், மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களை மாற்றியமைத்தார் ஸ்டாலின். இதில், ராமநாதபுரம் மா.செவாக இருந்த சுப.த.திவாகரனுக்குப் பதிலாக முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டார். 'முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமியின் மகன்' என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர, முத்துராமலிங்கம் குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் அறிந்திருக்கவில்லை. புதிய மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டத்தையும் கட்சி நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டனர். மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் இருந்து 5 பேர்தான் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நான்கு நகர செயலாளர்களில் ராமேஸ்வரம் ந.செ நாசர்கான் மட்டும் கலந்து கொண்டார். 7 பேரூராட்சி செயலாளர்களில் அபிராமம் பேரூராட்சி செயலாளர் ஜாகீர் உசேன் மட்டுமே கூட்டத்துக்கு வந்தார். தலைமையால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது குறித்து, செயல் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் ஐ.பெரியசாமி நேரடியாக வந்து நிர்வாகிகளிடம் பேசினார். இதன்பிறகு கட்சி நிர்வாகிகளிடம்  பேசிய ஸ்டாலின், ' 30 நாள் பொறுத்திருங்கள். நிலைமை மாறும்' எனக் கூறியதாகத் தகவல் வெளியானது. இதன்பின்னர், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆய்வு நடத்தச் சென்றார் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. 

' ஒரு பூத்துக்கு 2 கட்சிக்காரன் கிடைப்பானான்னு பாருங்க!'  - அறிவாலயத்துக்கு 'செக்' வைக்கும் பூத் கமிட்டி

அங்கு ஒரே ஒரு நகர செயலாளர், 3 ஒன்றிய செயலாளர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆய்வுக் கூட்டத்துக்கு வர மறுத்துவிட்டனர். புதிய மாவட்டப் பொறுப்பாளர் நியமனத்தில் இன்னும் அதிருப்தி நிலவுவதால், கட்சி நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டனர். கூட்டத்துக்கு வந்திருந்த கட்சிக்காரர்களும், ' பூத்துக்குப் பத்து பேரை நியமித்துவிட்டோம். அதிலும் 5 பேர் பட்டியலில் இல்லாதவர்கள். இப்போது பூத்துக்கு 20 பேரை நியமிக்குமாறு சொல்கிறீர்கள். நாங்கள் நியமித்த பத்து பேரை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம். மேலும் பத்து பேர் வேண்டும் என்றால், அந்தப் பத்து பேர் பெயரையும் நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். பூத்துக்கு 20 பேர் கிடைத்தால், அனைத்துத் தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்' என சிரித்தபடியே கூறியுள்ளனர். இந்தப் பதிலை அறிவாலய நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு மாவட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், ' தொகுதிக்கு 250 முதல் 300 பூத்துகள் வருகின்றன. ஒவ்வொரு பூத்துக்கும் 2 ஏஜெண்டுகளை நியமிக்கவே 500 பேர் தேவைப்படுவார்கள். இந்த 500 பேரை நியமிப்பதே பெரிய வேலை. பூத்துக்கு 10 பேர் நியமிக்கப்பட்டால், அதில் 5 பேர்தான் உண்மையான கட்சிக்காரர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் ஏதோ பெயரளவுக்குத்தான் இருப்பார்கள். 2500 பேரில் ஆயிரம் பேர்கூட ஒரிஜினல் கட்சிக்காரர்களாக இருக்க மாட்டார்கள்' என விவரித்துள்ளனர். மதுரை, தேனியிலும் புதிய பொறுப்பாளர் நியமனத்தில் அதிருப்தி நீடிக்கிறது. 

இதனை எப்படி சரிசெய்வது என யோசித்த அறிவாலய நிர்வாகி ஒருவர், அதிருப்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது, ' விரைவில் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. உறுப்பினர் அட்டை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற உள்ளன. இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் தற்போது நீக்கப்பட்டவர்கள் இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றியைப் பெறுவார்கள். எனவே, சில வார காலம் நம்பிக்கையோடு இருங்கள். பூத் கமிட்டி வேலைகளில் ஆர்வம் காட்டுங்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள் கேட்டு சற்று அமைதியாக இருக்கின்றனர் தென்மண்டல நிர்வாகிகள்.