சமூகம்
தொடர்கள்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், சென்னை-110.

‘‘தூங்குபவர்களை எல்லாம் தட்டி எழுப்பி அரசியலுக்கு வரவழைக்கிறோம். மண்ணுக்குச் சொந்தக்காரன்தான் தலைவனாக இருக்க வேண்டும்” என்று பாரதிராஜா குறிவைத்துச் சொல்வது யாரை?


பாரதிராஜா சொல்வது ரஜினியை. இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. ‘மண்ணுக்குச் சொந்தக்காரன்தான் தலைவனாக இருக்க வேண்டும்’ என்று சொல்வதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ‘தூங்குபவர்கள்’ என்று ரஜினியைச் சொல்ல முடியாது. அவர் இன்னும் பரபரப்பாகப் படங்களில் நடித்துக்கொண்டு, மேடைகளில் பேசிக்கொண்டு, ரசிகர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார். சில நாட்களுக்கு முன் பாரதிராஜா ஆரம்பித்த திரைப்படப் பயிற்சிக் கல்லூரியைத் துவக்கி வைத்தவர் ரஜினிதான். ‘தூங்குபவரை’ எழுப்பி எதற்காகத் துவக்கி வைக்க அழைத்தார்?

நாடே சசிகலாவை விமர்சித்துக் கொண்டு இருந்தபோது அவரைச் சந்தித்தும், தினகரனுக்குக் கட்சிப் பதவி தரப்பட்டதும் அவரைச் சந்தித்தும், தனது பாராட்டுகளைத் தெரிவித்த பாரதிராஜாவின் அரசியல் என்ன வகைப்பட்டது?

பாரதிராஜா பாணியில் சொல்வதாக இருந்தால், ‘மண்ணுக்குச் சொந்தக்காரன் எல்லாம் தூங்குபவனைப் போல நடிப்பதால்தான்’ நாட்டுக்கு இந்த நிலைமை. ஆண்டுக்கு ஒருமுறை மைக் முன்னால் ஆவேசமாகப் பேசுவதால் எல்லாம் மண்ணைக் காப்பாற்றி விட முடியாது!

கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

தமிழக ஆளுங்கட்சியினரும் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்களே?


அ.தி.மு.க தலைமைக் கழகம் அங்கேதான் இருக்கிறது. அவர்களது ‘தலைவரும்’ அங்கேதான் இருக்கிறார்.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க ஆட்சி தானாகவே கவிழ்ந்து, சட்டமன்றத் தேர்தலை அக்கட்சி சந்திக்கும் நிலை ஏற்பட்டால்..?


இரட்டை இலையும் இல்லாத சூழ்நிலையில் அதோ கதிதான்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.


தமிழக அரசுப் பள்ளிகளின் தரத்தைத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும், அத்துறையின் செயலாளர் உதயசந்திரனும் முயற்சிப்பார்களா?


அதற்கான ஆரம்பகட்டமாக சில முயற்சிகளை இருவரும் செய்து வருகிறார்கள். இதேபோல் அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவது, தனியார் பேருந்துகள் போலப் பாதுகாப்பும் வசதிகளும் நிறைந்தவையாக அரசுப் பேருந்துகளை மாற்றுவது, தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக அரசு சுற்றுலா விடுதிகளை மாற்றுவது என அரசாங்கம் களம் இறங்க வேண்டும்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா பற்றி..?


கருணாநிதி இல்லாத சட்டமன்றம் போல இருந்தது!

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்!

ஜெ.தீபா செல்லாக்காசு ஆகிவிட்டாரே?

எப்போதாவது செல்லுபடி ஆன காசாக இருந்திருந்தால் தான் இந்த உதாரணம் பொருந்தும்!

இரா.கமலக்கண்ணன், சித்தோடு.

எப்போதும் மக்களை பரபரப்பில் வைத்துக் கொண்டே இருக்கிறதே மத்திய அரசு?


இது ஒருவிதமான தந்திரம். ‘மூன்று ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தீர்கள்?’ என்ற கேள்வி வருவதற்கு முன்னால், இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கத் தடை செய்தார்கள். அதைப் பற்றியே மக்கள் ஆதரித்தும் எதிர்த்தும் பேசுகிறார்கள். நான்காவது ஆண்டு முடியும்போது, ‘ராமர் கோயிலை மீண்டும் கட்டுவோம்’ என்பார்கள். அதை நோக்கிப் போவோம்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் பழனிசாமியை முதல்வராக ஏற்க முடியாது’ என்று கூறுகிறாரே கே.பி.முனுசாமி?


சசிகலாவால் மட்டுமல்ல, தினகரனாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்பது முனுசாமிக்குத் தெரியாதா? இன்று சசிகலா குடும்பத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தைரியச் சிகாமணிகள் எல்லாம், அவர்கள் குடும்பத்தின் காலடியில் கிடந்தவர்கள்தான். முதலமைச்சர் என்ற கூச்சமே இல்லாமல் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் வைத்து சசிகலா காலில் விழுந்தவர் பன்னீர். சசிகலாதான் கூச்சப்பட்டு அவரைத் தடுப்பார். பொதுவாக, ஒருவர் விழுந்ததும் மற்றவர்களும் அடுத்தடுத்து காலில் விழுவதுதான் அ.தி.மு.க-வின் வழக்கம். சசிகலா காலில் பன்னீர் விழுந்த பிறகும் குண்டுக்கல் போல நிற்பார் திண்டுக்கல் சீனிவாசன். இப்படிப் பார்த்தால், பன்னீரை விட இவர்கள்தான் கம்பீரமானவர்கள்!

போஸ்டல் ராஜ், திருநாவலூர்.

கணவரை விட்டுவிட்டு, ஜெயலலிதாவுக்குத் துணையாக சசிகலா வந்தது எதைக் காட்டுகிறது?


சும்மா வந்தாரா? சும்மா இருந்தாரா? எந்த பிரதிபலனும் அடையவில்லையா?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘தமிழக அரசை பி.ஜே.பி ஆட்டிப் படைக்கவில்லை’ என்று தமிழிசை செளந்தர்ராஜன் சொல்லி இருக்கிறாரே?


இந்த அரசியலுக்கும் தமிழிசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே டெல்லி அஜெண்டா. அதை அவர் அறியமாட்டார்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

அரசியல் தலைவர்களில் கோமாளிகளும் இருக்கிறார்களே?

‘அரசியல் தலைவர்களில் கோமாளிகளும் அதிகளவில் இருக்கிறார்களே’ என்று கேட்பதே சரியானது!

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

ரஜினி, விஜயகாந்த், டி.ராஜேந்தர், சரத்குமார் ஆகியோர் சேர்ந்து கூட்டணி அமைத்தால் தமிழக அரசியல் எப்படி இருக்கும்?


வெளங்கும்?

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு அ.தி.மு.க ஒரு அடிகூட எடுத்து வைக்காது’’ என்கிறாரே நாஞ்சில் சம்பத்?


நாஞ்சில் சம்பத் எந்த அ.தி.மு.க-வில் இருக்கிறார்?

கழுகார் பதில்கள்!

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்தது குறித்து..?

மேற்கு வங்க மாநில அரசியலில் எதிரும் புதிருமாக நிற்பவைதான் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும். மூன்றுமே அங்கு செல்வாக்கான கட்சிகள். ஒருவரோடு இன்னொருவர் மோதிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால், அந்தப் பகையை மறந்து கருணாநிதியின் பிறந்த நாள் விழா மேடையில் ஒன்றாக உட்கார்ந்தார்கள். அரசியல் பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் இதனை வரவேற்கவே செய்வார்கள்.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒரு அணி நாடாளுமன்றத் தேர்தலில் உருவாக வேண்டும் என்று பேசப்படுகிறது. அது அநேகமாக ஜனாதிபதி தேர்தலிலேயே தொடங்கப்படலாம். இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் நடந்த சில கலந்துரையாடல் கூட்டங்களிலும் இந்தத் தலைவர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இந்தக் காட்சியைத்தான் தமிழகம் பார்த்தது.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழகத் தலைவர்கள் இணைந்து பங்கேற்கும் இப்படிப்பட்ட ஒரு காட்சியை நாம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. தேர்தல் அரசியல் அற்ற பொது நிகழ்வுகளில் கட்சித் தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்கும் பக்குவம் பெற்றாக வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002  kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!