சமூகம்
தொடர்கள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

ழுகார் உள்ளே நுழைந்ததும் டேபிளில் இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை எடுத்து அவர் முன்னால் விரித்தோம்.

‘‘காலையிலேயே பார்த்துவிட்டேன். தலைப்புச் செய்தியைப் பற்றித்தானே கேட்கிறீர்?” எனச் சிரித்தார். ‘ஆமாம்’ என்பதுபோல தலையாட்டினோம்.

‘‘அ.தி.மு.க-வில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என முக்கியமான மூன்று அணிகள் இருப்பது மாதிரி, கண்ணுக்குத் தெரியாமல் இன்னொரு கோஷ்டியும் இருக்கிறது. அதுதான் ‘நமது எம்.ஜி.ஆர் மருது அழகுராஜ் கோஷ்டி’. தினமும் மருது அழகுராஜ் என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ, அதுதான் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் வெளிவருகிறது. அந்த நிலைப்பாடு விநோதமானது. தினகரனையும் எடப்பாடியையும் ஒரே நேரத்தில் ஆதரிக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

‘‘புதிராக இருக்கிறதே?”

‘‘ஆமாம்! ‘கழகத் துணைப் பொதுச்செயலாளரைச் சந்தித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. சின்னம்மாதான் எங்கள் பொதுச்செயலாளர். அம்மாவின் ஆட்சி நான்காண்டுகள் நீடிக்கும்’ என்பதுதான் நமது எம்.ஜி.ஆர் போட்டுள்ள தலைப்புச் செய்தி. ‘தினகரன் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை, சசிகலாவை யாரும் சந்திக்கச் செல்லக்கூடாது’ என்று எடப்பாடி தரப்பினர் சொல்லி வரும் நிலையில், இப்படி ஒரு தலைப்பைப் போட்டுள்ளார்கள். இப்படி ஒரு செய்தியைப் போட்டுவிட்டு, அதற்குக் கீழே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் சந்திக்கும் படத்தைப் பெரிதாக வைத்துள்ளார்கள். மேலே இருக்கும் தலைப்பு, எடப்பாடிக்கு எதிரானது. கீழே எடப்பாடி படம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், தலைப்புச் செய்தியாக வந்துள்ள அறிவிப்பைச் செய்தது பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி. பட்டாசு அதிபர்கள் முதலமைச்சர் எடப்பாடியைச் சந்திக்கும் படத்திலும் ராஜேந்திர பாலாஜி இருக்கிறார்!”

‘‘இது மகா குழப்பம் ஆச்சே?”

‘‘எடப்பாடி தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், தினகரனை வரிசையாகச் சந்தித்து வந்தார்கள். அதே நாளில் முதலமைச்சர் எடப்பாடியையும் அவர்கள் சந்தித்தார்கள். அவர்களிடம், ‘எடப்பாடியைப் போய்ப் பாருங்கள்’ எனச் சொன்னதே தினகரன்தானாம். ‘நான் இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கவில்லை. ஆனால், எடப்பாடியும் சில அமைச்சர்களும் ஏதோ தங்களது சொந்த செல்வாக்கால்தான் ஆட்சி நடக்கிறது என நினைக்கிறார்கள். அது இல்லை என்று உணர்த்தவே நினைக்கிறேன். அதனால், நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். துணைப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில், என்னை வந்து சந்திக்கிறீர்கள். நீங்கள் என்னை வந்து சந்திக்கக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. நானும் முதலமைச்சரை நீங்கள் பார்க்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். எடப்பாடியைப் பாருங்கள். உங்கள் தொகுதிக்குச் செய்ய வேண்டிய கோரிக்கைகள் என்ன என்பதை எழுதிக் கொடுங்கள். அதனை மானியக் கோரிக்கை அறிவிப்பிலும் சேர்க்கச் சொல்லுங்கள்’ என்றாராம் தினகரன்.அந்த அடிப்படையில்தான், எடப்பாடியைத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து வருகிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

‘‘ஓஹோ!”

‘‘பெங்களூரு சிறையில் சசிகலாவைத் தினகரன் சந்தித்தபோது, அவர் கொடுத்த ஐடியாவாம் இது. ‘இரண்டு மாத காலம் எதுவும் செய்ய வேண்டாம். அமைதியாகக் கட்சிப் பணிகளை மட்டும் பார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யார் வந்து சந்தித்தாலும் பார். மாவட்டம்தோறும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசு. கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது’ என்றாராம் சசிகலா.”

‘‘தினகரனுக்கு எதிராகத் திவாகரன்தான் இதையெல்லாம் தூண்டுகிறார் என்கிறார்களே?”

‘‘நடராசன், திவாகரன் என யாரையும் மதிக்காமல், தான்தோன்றித்தனமாக தினகரன் நடந்துகொள்கிறார் என்பதில் சசிகலா குடும்பத்தினருக்கு வருத்தம்தான். நடராசன் மருத்துவமனையில் இருந்தபோது தினகரன் போய் அவரைப் பார்க்கவில்லை. மகாதேவன் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த தினகரன், ‘உடல்நலம் எப்படி இருக்கிறது’ என நடராசனிடம் ஒப்புக்கு விசாரித்ததோடு சரி. அதேபோல் திவாகரனோடும் தினகரனுக்கு அவ்வளவாகப் பேச்சுவார்த்தை கிடையாது. ‘தினகரன் தனி ஆவர்த்தனம் செய்கிறார்’ என்பதுதான் அவர்களின் கோபம். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் திவாகரனுக்கு மார்க்கெட் வேல்யூ கூடியிருக்கிறது!”

‘‘அப்படியா? அது எதனால்?”

‘‘புதிதாகச் சிலரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமென்றும், சிலரை நீக்க வேண்டுமென்றும் எடப்பாடிக்குத் தினகரன், நெருக்கடி கொடுத்து வருகிறார் அல்லவா? இதில் சமாதானம் செய்யும் வேலை, திவாகரனிடம் போயுள்ளது. திவாகரனிடம் எடப்பாடி பேசியதாகச் சொல்கிறார்கள். அப்போது, தனது வருத்தங்களை எடப்பாடியிடம் சொன்னாராம் திவாகரன். ‘தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்த அன்று, ‘சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை’ என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது? சின்னம்மா இல்லாவிட்டால், நீங்கள் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்க முடியுமா?’ என்றெல்லாம் பொரிந்து தள்ளினாராம் திவாகரன்!”

‘‘அந்த அளவுக்கா?”

‘‘இன்னும் சொல்லி இருக்கிறார் திவாகரன். ‘நான் சொல்லி அனுப்பிய சின்னச்சின்ன விஷயங்களைக்கூட  நீங்களோ, சில அமைச்சர்களோ செய்து தரவில்லை. இப்படி நடந்துகொள்ளும் நீங்கள், உங்களுக்குப் பிரச்னை வரும்போது மட்டும் என்னிடம் ஏன் வருகிறீர்கள்?’ என்று கேட்டாராம்.”

‘‘எடப்பாடி என்ன சொன்னார்?”

‘‘அவருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. ‘இன்னும் சில மாதங்கள்தான் முதலமைச்சர் பதவி’ என்று நினைக்கும் எடப்பாடி, அதுவரை தனது பதவியைத் தக்க வைக்கும் காரியங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்!”

‘‘ம்!”

‘‘ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக அ.தி.மு.க பிரிந்து காணப்படுகிறது. இதில், ‘முதல்வர் ஆகிவிட வேண்டும்’ என ஓ.பி.எஸ் தரப்பும், ‘முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்’ என       ஈ.பி.எஸ் தரப்பும், ‘ஆட்சி போனால் பிரச்னையில்லை... கட்சியைத் தக்க வைக்க வேண்டும்’ என்ற முடிவில் தினகரனும் இருக்கின்றனர்” என்று கழுகார் சொல்லும்போதே, ஜூ.வி இதழ் அட்டை வடிவமைக்கப்பட்டு வந்து சேர்ந்தது.

அதைப் பார்த்துவிட்டு, ‘‘எதற்காகவும் வாய் திறந்து பேசாமல் கமுக்கமாக இருக்கும் எடப்பாடி, யார் பேச்சையும் கேட்காத தினகரன், நடக்கும் பிரச்னை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பன்னீர் என்று மூவரையும் கச்சிதமாக வரைந்திருக்கிறார் ஓவியர்’’ என்றார்.

எம்.எல்.ஏ-க்களில் யார் யார் எந்தப் பக்கம் என ஜூ.வி டீம் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நிமிர்ந்த கழுகார், ‘‘மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான கவுண்டர் இன எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கின்றனர். அவர்களைத் தக்க வைக்கும் பணிகளை அமைச்சர் தங்கமணி பார்த்துக்கொள்கிறார். தினகரன் பக்கம் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இப்போது இருதரப்புமே, எதிர்தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் தோப்பு வெங்கடாசலமும், செந்தில் பாலாஜியும், பழனியப்பனும் தினகரன் பக்கம் நிற்கின்றனர். ‘நீங்களே நம்ம முதல்வருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், வேறு யார் நிற்பார்கள்? நம் பக்கம் நிற்கவில்லை என்றாலும், தினகரன் பக்கம் சேராமல் பொதுவாக நிற்கலாமே’ என்று கொங்கு சமுதாயத்தின் பெரும் தொழிலதிபர்கள் சிலர் மூலம் இவர்களுக்கு எடப்பாடி தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், இவர்கள் மூவரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தினகரன் தரப்பினரைத் தம் பக்கம் திருப்பும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் எடப்பாடி.

எந்தப் பக்கமும் சாயாமல், அமைதியாக இருந்து நடப்பதைக் கவனிக்கும் எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைப்பதற்கான பணி வேலுமணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பெரும் தொழிலதிபர்களுடன் சில நாட்களுக்கு முன்பு சந்திப்பு நடந்துள்ளது. ‘நம்ம தொழில் நல்லாருக்கணும்னா, நம்ம ஆட்சி தொடரணும்’ என அதில் பேசப்பட்டுள்ளது. அவர்கள் பெருமளவில் நிதியை வாரி வழங்கியுள்ளதாகப் பேச்சு. அதிலிருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் கணிசமாகப் பிரித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அந்தப் பணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கொஞ்சம் கொஞ்சமாக சேலத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி எம்.எல்.ஏ-க்கள் காட்டில் மழைதான்.”

‘‘கரன்சி மழை எனச் சொல்லும்’’

‘‘தினகரனின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து, அவரை சமாதானம் செய்யலாமா என்றும் எடப்பாடி தரப்பு யோசித்துள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ராதாபுரம் இன்பதுரை, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன்,  தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரில் நான்கு பேருக்கு மந்திரி பதவி கேட்கிறாராம் தினகரன். அதோடு தனக்கு எதிராகப் பேசிவரும், செயல்பட்டுவரும் நான்கு பேரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார் தினகரன். அந்த நான்கு அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அவர்களை நீக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினால், எடப்பாடியால் அதனை நிறைவேற்றவும் முடியாது. அதிர்வுகள் இப்போதைக்கு நிற்காது. அரசு நாற்காலில் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படம்: எம்.விஜயகுமார்

சாதனையாளனைத் திசை திருப்புகிறார்களா நண்பர்கள்?

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டி தங்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க மாரியப்பனுக்கு இப்போது சிக்கல்.

மாரியப்பனின் சொந்த ஊரான சேலம் பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், கடந்த 4-ம் தேதி ரயில்வே டிராக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணத்தில்தான் மாரியப்பன் மீது சந்தேகத்தைக் கிளம்புகிறார்கள் சதீஷ்குமாரின் குடும்பத்தினர். மாரியப்பனின் காருக்கு சதீஷ்குமார் சேதம் விளைவித்ததால் எழுந்த பிரச்னை என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு

சதீஷ்குமாரின் அக்கா சங்கீதா, ‘‘ஊருக்குள் ஒரு சிறிய சாலையில் மாரியப்பனின் கார் நின்றிருக்கிறது. அதைத் தாண்டி பைக்கில் வரும்போது மண் சரிந்து, விழுந்திருக்கிறான் சதீஷ். அப்போது பதற்றத்தில் காரின் கைப்பிடியைப் பிடிக்க, அது உடைந்துவிட்டது. அதற்காக மாரியப்பனும், அவர் நண்பர்கள் யுவராஜும் சபரியும் வீட்டுக்கு வந்து சதீஷை அடிச்சாங்க. நானும், அம்மாவும், தம்பியும் மாரியப்பனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டோம். என் தம்பியின் செல்போனைப் பிடுங்கிட்டுப் போயிட்டாங்க.

பிறகு மாரியப்பனிடம் மன்னிப்புக் கேட்டு, செல்போனை வாங்கிட்டு வருவதாகச் சொல்லிட்டுச் சதீஷ்குமார் போனான். அடுத்தநாள் ரயில்வே டிராக்கில் பிணமாகத்தான் அவனைப் பார்க்க முடிஞ்சது. என் தம்பியின் மரணத்துக்கு மாரியப்பனும், அவரோட நண்பர்களும்தான் காரணம்’’ எனக் கண்ணீர் வடிக்கிறார். 

‘‘மாரியப்பனுக்குப் பெங்களூரில் பயிற்சி இருக்கிறது. இடையில் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு வந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உடன் இருப்பவர்கள் செய்த தவறுதான் மாரியப்பன் மீது கொலைப் பழி விழும் அளவுக்குப் போயிருக்கிறது. பணம் பறிப்பவர்களும், மாரியப்பனின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுமே அவரோடு இருக்கிறார்கள். மாரியப்பன் தன் தகுதியை உணர்ந்து, தன் மீது அக்கறையுள்ள நல்ல மனிதர்களைக் கூட வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கவலைப்படுகிறார்கள் ஊர்க்காரர்கள்.

மாரியப்பனின் அம்மா சரோஜாவோ, ‘‘என் மகன் எந்தத் தவறும் செய்ய மாட்டான். கூட இருந்தவர்கள் என்ன பேசினாங்களோ தெரியவில்லை. சதீஷ்குமார் யாரால் இறந்தான், எப்படி இறந்தான் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். இனி மாரியப்பனின் நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பேன்” என்கிறார்.