Published:Updated:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 4,2011

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடனான தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது என தேமுதிக முடிவு செய்தது.

இதையடுத்து, அதிமுக தரப்புடன் தேமுதிகவின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழு அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இரவு 9.30 மணிக்கு சந்தித்துப் பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இதன் முடிவில், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்குவது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். இதனை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.

அதன் பின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்படுகிறது என்ற உடன்பாட்டில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர்.

 அந்த உடன்பாட்டில், '13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4-ம் தேதி) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடனான சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த விஜயகாந்த், நிருபர்களிடம் எதுவும் கூறவில்லை. அதிமுக தரப்பில் இருந்தே தொகுதிப் பங்கீடு குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

தேமுதிகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகிவிட்ட நிலையில், அந்த அணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை இன்று அல்லது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் போட்டியிடுவது என்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.