Published:Updated:

``தங்கத்துல ரோடு போட்டாக்கூட இவ்ளோ செலவு ஆகாதுபோல!” - 8 வழிச்சாலைக்கு எதிராக கே.பி பயணம்!

``தங்கத்துல ரோடு போட்டாக்கூட இவ்ளோ செலவு ஆகாதுபோல!” - 8 வழிச்சாலைக்கு எதிராக கே.பி பயணம்!
``தங்கத்துல ரோடு போட்டாக்கூட இவ்ளோ செலவு ஆகாதுபோல!” - 8 வழிச்சாலைக்கு எதிராக கே.பி பயணம்!

"புதிய விரைவுச்சாலையில் இந்த அரசு முழுக்க முழுக்க, மக்களுக்கு எதிரானதாக - கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக இருக்கிறது."

ளும் கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்துவரும்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக பல சமயங்களில் முன்னிலைக்கு வராமல் தவிர்த்துவருகிறது. அண்மையில் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து, வரும் ஆக.1 முதல் 7-ம் தேதிவரை, 170 கி.மீ., பிரசார நடைப்பயணத்துக்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளது சி.பி.ஐ.எம்.  

இப்பயணமானது, திருவண்ணாமலை மாவட்டம் அதியந்தலில் தொடங்கி, அய்யம்பாளையம், எறையூர், செங்கம், மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துரை, தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டை, தீர்த்தமலை, முத்தானூர், அரூர், கோ-கூட்டுச்சாலை, சாமியார்புரம் கூட்டுச்சாலை, மஞ்சவாடி, சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர், வலசையூர், அயோத்தியாபட்டணம், அம்மாபேட்டை வழியாக சேலம் நகரத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் உரையாடினோம். 

அதிலிருந்து..! 

"திட்டமோ சென்னை-சேலம்வரை; நீங்களோ திருவண்ணாமலை முதல் சேலம் வரை பயணம் போகிறீர்கள்?"

”திட்டம் தொடங்கும் இடம்தான் சென்னையே தவிர, சரியாக அது காஞ்சிபுரம் மாவட்டம்தான். மொத்தப் பாதையில் அதிக பாதிப்புள்ள இடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சேலம் வரையுள்ள பகுதிகளில் இருக்கின்றன. பல மக்கள் போராட்டங்களும், சேலத்தையொட்டிய பகுதிகளில் நடந்துள்ளன. அத்துடன், பயணத் தொலைவையும் கணக்கில்கொண்டு 170 கி.மீ., தொலைவுக்கு இந்த வழியைத் திட்டமிட்டோம். மற்றபடி இதில் வேறொன்றும் இல்லை.”

"இந்தப் பயணத்தின் மூலமாக மக்களிடம் என்ன சொல்லப்போகிறீர்கள்?"

”எட்டுவழிச் சாலைத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு தப்புத்தப்பான விவரங்களைச் சொல்லிவருகிறார்கள். தொழில் வளரும், நாடு முன்னேறும், தமிழகம் முன்னேறிவிடும் எனப் பல பொய்களைக் கொட்டுகிறார்கள். ஏற்கெனவே, சாலை அமைத்த இடங்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதையும், தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான சாலை என்பதைப் போல அவர்கள் வைக்கும் வாதம் தவறானது என்பதையும் மக்களிடம் எடுத்துச்சொல்லவிருக்கிறோம். இந்தத் திட்டத்தால் மக்களுக்கு நன்மைகள் என்பதைவிட பாதிப்புகளே அதிகம் என்பதை உணர்த்தக்கூடிய ஒரு விழிப்புஉணர்வுப் பிரசாரம்தான் இது!”

"முதலமைச்சரும் பாஜக தலைவர்களும் இந்தத் திட்டத்தால் பாதுகாப்புத் துறைத் தொழில்களின் கேந்திரமாக, அதைச் சார்ந்த தொழில்மையமாக தமிழ்நாடு மாறும் என்கிறார்களே?"

”எவ்வளவு ஏமாற்றுத்தனம், இது! இவர்கள் தேவையே இல்லாத பத்து இடங்களில் சாலை போடத் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் கேந்திரமானால், எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களாக வந்துவிடுமா என்ன? தனியாரே வந்தாலும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? யதார்த்தம் என்னவென்றால், இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளும் வரக்கூடிய ஆலைத் திட்டங்களும் வெளிமாநிலத்துக்கு வேகவேகமாகப் போய்க்கொண்டு இருக்கின்றன; இதைத் தடுத்துநிறுத்தும் அளவுக்கு அரசு செயல்பாடு இல்லை. ஒருவேளை அதைச் செய்யவேண்டும் என்றால், இருக்கிற சாலைகளைப் பயன்படுத்தியே செய்யலாமே! 

உண்மையில் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால், இருக்கும் சாலைகளை வைத்து எவ்வளவோ செய்யமுடியும்! நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தலாம்; சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், பிற நீர்நிலைகளை உரிய காலத்தில் ஆழப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பாசனவசதி பெருகும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ரோடு போடுவதால் மட்டும் என்ன வேலைவாய்ப்பு கிடைத்துவிடப்போகிறது? 

சாலைக்காக செலவுசெய்கிறார்களா, 10 ஆயிரம் கோடிக்காக சாலை அமைக்கிறார்களா? எங்களைப் பொறுத்தவரை தேவையில்லாத திட்டம். ஏற்கெனவே, மூன்று சாலைகள் இருக்கிறபோது நான்காவதாக இது தேவை இல்லை என்கிறோம். இந்தச் சாலைக்கு ஒரு கி.மீக்கு 32.5 கோடி ரூபாய் செலவுசெய்யப் போகிறார்கள். இதனால என்ன ஆகப்போகிறது? இது சாலைக்கு ஆகப்போகும் செலவா...? சாலையைக் காட்டி அவர்கள் வேறு ஏதேனும் செய்யப்போகிறார்களா? ஒரு செலவு எழுதுவதற்கான கணக்காக சாலையை உருவாக்குகிறார்களா? தங்கத்தில் ரோடு போட்டால்கூட இவ்வளவு செலவு ஆகாது போல இருக்கே! 

இப்போது இருக்கும் பைபாஸ் சாலைகளைப்போல, புதிய சாலை இல்லை. சாதாரண சாலை வேறு, அதிவேக எக்ஸ்பிரஸ் சாலை என்பது வேறு! அதில் இரண்டு பக்கமும் ஆடு,மாடு வரக்கூட வழி இருக்காது; எட்டு - ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சப்-வே இருக்கும் என்கிறபோது, மனுசன் எப்படி வரமுடியும்? இந்தச் சாலையின் பக்கவாட்டில் புதிதாக என்ன தொழிற்சாலை வந்துவிடும். 900 அடி அகலம் என்கிறார்கள். ஒரு ஊருக்கு நடுவில் இந்தச் சாலை வந்தால், ஊர் இரண்டாகிவிடும். ஏனென்றால் சாலையின் இரு பக்கமும் மூடிவிடுகிறார்கள். சாதா பைபாஸ் சாலையில் வேலியைத்தாண்டி அந்தப் பக்கம் போகலாம். புதிய விரைவுச்சாலையில் இந்த அரசு முழுக்க முழுக்க, மக்களுக்கு எதிரானதாக - கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக இருக்கிறது.”

"ஆளும் கட்சி - எதிர்க்கட்சி லாவணிக்கச்சேரியில் அடிபடும் ’முதலமைச்சரே பதவிவிலகுக’ முழக்கத்தை, அண்மையில் உங்கள் கட்சி தனித் தீர்மானமாக வெளியிட்டிருக்கிறீர்களே?"

”இந்த அரசு சட்டமன்றத்தை வைத்து ஓட்டுகிறார்களே தவிர, இதை பெரும்பான்மை அரசு எனச் சொல்லமுடியாது; இரண்டாவது, இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நேரடியாக இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. இவர்கள் சம்பந்தப்படாமல் எப்படி நான்கு ஆண்டுகளாக ஒரே ஒருவருக்கு 7 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்த வேலைகள் கிடைக்கும்? இவர்களின் பினாமியாக இருக்கலாம் என ஏன் யோசிக்கமுடியாது? முட்டைக் கொள்முதலில் 5 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடக்கிறதென்றால் அது என்ன? தூத்துக்குடியில்  இவ்வளவு மோசமான துப்பாக்கிச் சூட்டை ஏன் நடத்துகிறார்கள்? மொத்தத்தில் மோசமான அரசாக மாறிவிட்டது; இந்த அரசு நீடிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை. ஆகவே ’பதவி விலகுங்க’ எனக் கேட்கிறதுக்கு முக்கியக் காரணம். 

இது, கிட்டத்தட்ட டெல்லி அரசின் ஒரு கைப்பாவையாகத்தானே இருக்கிறது. மாநிலத்தை ஆள்கிற தார்மீக உரிமை இல்லை; மாநில சுயாட்சி, மாநில உரிமைகளைப் பறிக்கிறபோது அதைத் தட்டிக்கேட்கத் தயாராக இல்லை. நீட் தேர்வை எதிர்த்து குரல்கொடுக்க முடியவில்லை. மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பெரும்பான்மைக்கு எதிராக இவர்கள் ஆதரிக்கிறார்கள். அதிமுகவுக்கு உள்ளேயே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஏகோபித்த ஆதரவு இல்லை. தீர்மானத்தின்போது புறக்கணித்துவிட்டுப் போவதென பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறித்தான் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனாலெல்லாம்தான், இந்த அரசாங்கத்தைப் பதவி விலகச் சொல்கிறோம்.”

"இதற்கான தனி இயக்கம் எதையும் நடத்துவதாக இருக்கிறீர்களா?"

”மக்கள் பிரச்னைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இவையே ஒரு பெரும் வேலைகளாகிவிடுகின்றன. 'எட்டுவழிச் சாலை போராட்டம்' அதன் ஒரு பகுதிதான்; முன்னே, தூத்துக்குடி பிரச்னைக்கு எதிரான இயக்கம் இதைப் போன்ற இன்னொரு அரசியல் நடவடிக்கைதான்! இவையெல்லாம் சேர்ந்துதான் அந்தக் கோரிக்கையே உருவாகிறது!”

"ஆட்சியை வீழ்த்தவேண்டும் எனத் திமுகவும் சொல்கிறது; அந்தக் குரலுடன் எந்த அளவுக்கு ஒன்றுபடமுடியும் அல்லது மாறுபடுகிறீர்கள்?"

”சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரை எங்களுக்கு தனிப்பட்ட நிலைப்பாடு இருக்கிறது. எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் திமுகவுக்கு மாறுபட்ட பார்வை இருக்கலாம். இந்த அரசு இன்னின்ன காரணங்களால் இருக்கக்கூடாது; முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் அரசாக மாறிவிட்டது; மோடியின் ஒரு கையாளாக மாறிவிட்டது; இதற்கு தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ உரிமைகளைப் பற்றியோ எந்த அக்கறையும் கவலையும் இல்லை; ஆகவே, இந்த அரசு அகலவேண்டும் என வற்புறுத்துகிறோம். இதற்காக தனி இயக்கம் எடுக்கலாம். ஒருவேளை அதன் வளர்ச்சிப்போக்கில் திமுகவோ வேறு பல கட்சிகளோ வந்தால், அதனோடு சேர்ந்து போராடப் போகலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. மக்கள் நலன்களுக்காக காங்கிரஸ்கூட வந்தாலும் சேரத் தயாராக இருக்கிறோம்.” 

அடுத்த கட்டுரைக்கு