Published:Updated:

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

ழுகார் வந்ததும் டி.வி ரிமோட்டை கையில் எடுத்து ‘டைம்ஸ் நவ்’ சேனலைத் தட்டிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஸ்டிங் ஆபரேஷன் உச்சபட்ச டெசிபலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நம் பக்கம் திரும்பிய கழுகார், ‘‘நேற்றுகூட ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டது’ எனக் குற்றம் சாட்டினாரே... கவனித்தீரா?” என்றார்.

‘‘முதல்நாள் அவர் அங்கே பேசுகிறார். மறுநாள், அவரது கோஷ்டியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனுடன் நடத்திய பேச்சை ரகசியக் கேமராவில் படம் பிடித்து ‘டைம்ஸ் நவ்’ வெளியிடுகிறது. இநதச் சூழலில், அ.தி.மு.க இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவையும் கலைப்பதாக மேடையில் அறிவித்துவிட்டாரே ஓ.பி.எஸ்?” என்றோம்.

‘‘சட்டசபை கூடும் சூழ்நிலையில், ஓ.பி.எஸ் திடீரென இப்படி அறிவித்திருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தைக் குழு அமைத்ததிலிருந்து ஒருமுறைகூட இரு தரப்பினரும் பேசவில்லை. காரணம், எடப்பாடி கோஷ்டியினர் மறைமுகமாக சசிகலாவையும் தினகரனையும் ஆதரிக்கிறார்கள் என்பதுதான். திகார் சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் தினகரன், பரபரப்பாக அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார். தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார். ‘இந்தச் சூழ்நிலையில், இன்னமும் இணைப்புக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை’ எனப் பன்னீர் முடிவு எடுத்தார். ‘ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவும் நிலையில், நாம் ஒதுங்கி இருந்தால் அ.தி.மு.க சிதறிப்போய்விடும்’ எனப் பன்னீரிடம் சுட்டிக் காட்டினார்களாம்.’’

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

‘‘ஓஹோ!”

‘‘ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், எடப்பாடி அமைச்சரவையில் சுமார் ஆறு பேரை ரெய்டு என்கிற பெயரில் மத்திய அரசு துவம்சம் செய்யப்போவதாக அவருக்குத் தகவல் வந்திருக்கிறது. நிலக்கரி வாங்கியதில் ஒருவர், எல்.இ.டி பல்பு விவகாரத்தில் இன்னொருவர், ஏற்கனவே சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஒரு அமைச்சர், அந்த ரெய்டின்போது அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்த இரண்டு அமைச்சர்கள், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் மற்றொரு அமைச்சர் என ஆறு பேர் மீது ரகசியமாக ஃபைல் ரெடி பண்ணி வைத்திருக்கிறார்களாம். இவர்கள் நெருக்கடிக்கு ஆளாகும்போது, எடப்பாடி அரசு தானாக கவிழ்ந்துவிடும் என்கிறார்கள் ஓ.பி.எஸ் கோஷ்டியினர். ‘உள்ளாட்சித் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ வரலாம். அதில் தனியாகக் களம் கண்டு அதிக இடங்களில் ஜெயிக்கலாம். இப்படி நடந்தபிறகு, கட்சி உங்கள் பின்னால் அணிவகுக்கும். அதுவரை பொறுமை காப்போம்’ என்றார்களாம். இதை ஏற்றுத்தான் குழுவைக் கலைப்பதாக அறிவித்தாராம்.”

‘‘அரசியலில் இந்த மாதிரி கணக்கு பலிக்குமா?”

‘‘பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எடப்பாடி பழனிசாமியும் சாதாரணப் பட்டவர் இல்லை. அவரது கணக்கு வேறு மாதிரி இருக்கும். இந்தப் பரபரப்புகள் நடக்கும் போதே, இரட்டை இலைக்கு உரிமை கோருவதற்காக நான்கு லாரிகளில் கட்சிக்காரர்களின் பிரமாணப் பத்திரங்களை டெல்லி எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து இருக்கிறது எடப்பாடி அணி. வரும் 16-ம் தேதி இதற்குக் கடைசி நாள். இரட்டை இலையை வசப்படுத்துவதில் நம்பிக்கையாக இருக்கிறார் எடப்பாடி. ஆனால், இரண்டு தரப்பும் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதால், ‘இதில் உடனடி முடிவு எடுக்கப்படாது’ என்கிறார்கள் டெல்லியில்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!‘‘தினகரன் திடீர் பயணமாக டெல்லி போனாராமே?’’

‘‘ஆம்! கடந்த புதன்கிழமை இரவு திடீரென டெல்லிக்கு நள்ளிரவில் வந்திறங்கினார் தினகரன். அவரது பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. எங்கு தங்கினார் என்பதைக்கூடப் பத்திரிகையாளர்களாலும், தமிழக போலீசாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் பா.ஜ.க பிரமுகர்களை அவர் தொடர்பு கொண்டிருக்கிறார். அமித் ஷாவைச் சந்திக்கும் முயற்சி நடக்கவில்லை. அவர் டெல்லியிலும் அப்போது இல்லை. ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை அவர் சந்தித்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. மறுநாள் வியாழன் அன்று மாலை விமானத்தில் அவர் புறப்பட்டபோது மற்றொரு டெல்லி பத்திரிகையாளரும் சென்னை பயணித்திருக்கிறார். தினகரன் டெல்லியில் இருந்த வியாழன் அன்று, அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஜாமீன் விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது. அவரை மீண்டும் போலீஸ் விசாரிக்க முயற்சிக்கலாம் என்பதால், ஒரு பாதுகாப்புக்குத் தினகரன் டெல்லியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.’’

‘‘போயஸ் கார்டனில் தீபா நடத்திய அமர்க்களம் பற்றி செய்தி இருக்கிறதா?”

‘‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவி தீபாவின் அறிக்கைகள் இப்போது அர்த்தம் பொதிந்தாகவே உள்ளன. அ.தி.மு.க. வரலாறையும், தமிழக அரசியலையும் ஆழமாக அறிந்த ஒருவர்தான் தீபாவுக்கு அறிக்கைகளை இப்போது எழுதிக் கொடுக்கிறார். சமீபத்தில் அவர் விடுத்த அறிக்கையில், ‘சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பற்றிப் புரிந்துகொண்ட தொண்டர்கள் என் பின்னே வந்துவிட்டார்கள். அவர்களின் சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும் வீழ்த்தி, அ.தி.மு.க எனும் மக்கள் இயக்கத்தைத் துரோகிகளிடமிருந்து மீட்டிட, மாலுமியாக, படைத்தலைவியாக பணியாற்றிட அனைத்து எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை வாஞ்சையுடன் அழைக்கிறேன்’ எனச் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்வது எல்லாம் ஜெயலலிதாவின் ஸ்டைல்.’’

‘‘தீபாவின் அறிக்கைக்கும் போயஸ் கார்டன் போர்க்களத்துக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘போயஸ் கார்டனில் தீபா போர்க்களம் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரனைக் கண்டித்து அறிக்கை ஒன்றை விட்டிருந்தார். ‘திடீர் உப்புமா, சாம்பார் மாதிரி, திடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க-வை சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல’ என அறிக்கையில் சொன்ன தீபா, தினகரனைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘திகார் தினகரன்’ எனக் கிண்டலடித்திருக்கிறார். அதே அறிக்கையில் ‘அ.தி.மு.க என்பது எஃகு கோட்டை. வத்தலக்குண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாறன் சிந்திய ரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அ.தி.மு.க-வுக்குச் சம்பந்தமே இல்லாத சகுனி சசிகலா, திகார் தினகரன் போன்றோர்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது’ எனக் காட்டமாகச் சொல்லியிருந்தார். அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலில் கொல்லப்பட்டவர் வத்தலகுண்டு ஆறுமுகம், அரசியல் பகையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பூலாவாரி சுகுமாறன். அ.தி.மு.க-வின் வரலாறு தெரிந்த அடிமட்டத் தொண்டர்களுக்குத்தான் இவர்களைப் பற்றித் தெரியும். அவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டுத் தீபா வெளியிட்ட அறிக்கை, சசிகலா தரப்பை சூடேற்றியது. அதனால் தீபாவுக்குப் பாடம் புகட்ட நினைத்தார் தினகரன்.’’

மிஸ்டர் கழுகு: இரட்டை இலை பரபரப்பு... இணைப்புக் குழு கலைப்பு..!

‘‘என்ன செய்தார்?’’

‘‘போலீஸை அனுப்பினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபாவிடம் தொடர்புகொண்டு ‘எதற்காக அறிக்கை விட்டீர்கள்’ எனக் கேட்டார். ‘தினகரன் என்ன அரசு அதிகாரியா... அவரை எதிர்த்து அறிக்கை வெளியிடக் கூடாதா? இப்படியெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? தினகரன் என்ன முதல்வரா, கலெக்டரா?’ எனக் கிடுக்கிப்பிடிக் கேள்விகளைப்  போட்டார் தீபா. வேறுவழியில்லாமல் ‘சாரிமா... தெரியாம கேட்டுட்டேன்’ என போன் இணைப்பைத் துண்டித்தார் அந்த இன்ஸ்பெக்டர்.’’

‘‘இதில் போயஸ் கார்டன் கலாட்டா எங்கே வருகிறது?’’

‘‘தீபாவை வேறு எதிலாவது சிக்க வைக்க சசிகலாத் தரப்பு நினைத்தது. அதற்குத் தீபாவின் சகோதரர் தீபக்கை பகடைக்காயாகப் பயன்படுத்தியது. தீபாவைப் போயஸ் கார்டனுக்கு வரச் சொல்லி தீபக் போன் செய்தது ஞாயிற்றுக்கிழமை காலையில். அதே நாளில் மன்னார்குடியில் தினகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.’’

‘‘ஆம்! இது பற்றி நம் நிருபர் கட்டுரை அனுப்பியுள்ளார்.”

‘‘திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே இருக்கும் மோதல் மீடியாவில் பரபரப்பாக வெளியாகி, எக்ஸ்போஸ் ஆகிவிடக் கூடாது என நினைத்து, தீபக்கை வைத்து பிளே செய்தார்களாம். தீபாவுக்கும் பாடம் புகட்டவும், மன்னார்குடி செய்தியை அமுங்கிப் போகச் செய்யவும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க நினைத்தது தினகரன் தரப்பு. ‘போயஸ் கார்டன் இல்லத்துக்கு வா. அத்தையின் படத்துக்கு மரியாதை செலுத்துவோம். அத்தையின் சொத்துகள் யாருக்கு என்பதையும் முடிவு செய்யலாம்’ எனச் சொல்லித்தான் தீபாவை தீபக் வர வைத்தாராம். ஆனால் பின்னணி வேறு.’’

‘‘என்னவாம்?’’

‘‘தீபாவைப் பழி வாங்க வேண்டும் என்பதோடு, அவரிடம் இருந்து கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்கிற நோக்கமும் இருந்ததாம். கடந்த மாதம் தீபா வெளியிட்ட ஒரு அறிக்கையில் ‘போயஸ் கார்டன் எனக்கும், தீபக்குக்கும் சொந்தமானது; சட்ட ரீதியான வாரிசுகள் நாங்கள்தான். நினைவிடமாக்க அரசுக்கு உரிமையில்லை’ எனச் சொல்லியிருந்தார். எனவே, ‘போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துக்களுக்கு உரிமை கோர மாட்டேன்’ எனத் தீபாவிடம் கையெழுத்து வாங்கிவிட சசிகலா தரப்பு முயன்றதாம். அதற்காக தீபாவுக்குக் கணிசமான தொகையைக் கொடுத்துவிடவும் திட்டம் இருந்ததாம். அதற்குத் தீபக்கை பயன்படுத்தினார்கள். போயஸ் கார்டன் வந்த தீபாவுக்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகுதான் அவர் கூச்சல் போட்டுக் கலாட்டா எல்லாம் செய்தார்.’’

‘‘தீபா, ‘பிரதமர் மோடியிடம் முறையிடுவேன்’ என சொல்லியிருக்கிறாரே?”

‘‘பிரதமரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பதுதான் இப்போதைய நிலை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தீபாவின் வீட்டில் தினமும் நூற்றுக்கணக்கில் கட்சியினர் திரண்டார்கள். அப்போது தீபாவின் செல்வாக்கைப் பார்த்த பி.ஜே.பி, அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்த நினைத்தது. அதற்காக அவரிடம் சிலர் தூது போனார்கள். ஜெயலலிதாவின் சொத்துகளை வாரிசான தீபாவுக்குப் பெற்றுத் தருவதாக அப்போது வாக்குறுதிகூட கொடுக்கப்பட்டதாம். ஆனால், தீபா எதையும் ஏற்கவில்லை. அதனால் முயற்சியைக் கைவிட்டுப் பன்னீர்செல்வத்தைப் பிடித்துக் கொண்டது பி.ஜே.பி. இந்த நிலையில் மோடியைச் சந்திக்க தீபாவுக்கு எப்படி அனுமதி கிடைக்கும் எனத் தெரியவில்லை” என்ற கழுகார், சட்டெனப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism