Published:Updated:

`பி.எம் நரேந்திரமோடி; சி.எம் ரஜினிகாந்த்!'  - அமித் ஷாவுக்கு அலர்ட் கொடுத்த ஆடிட்டர் 

நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.கவோடு அணி சேர்ந்தால் ஏற்படக் கூடிய சாதக, பாதகம் குறித்து, அமித் ஷாவிடம் விரிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி

`பி.எம் நரேந்திரமோடி; சி.எம் ரஜினிகாந்த்!'  - அமித் ஷாவுக்கு அலர்ட் கொடுத்த ஆடிட்டர் 
`பி.எம் நரேந்திரமோடி; சி.எம் ரஜினிகாந்த்!'  - அமித் ஷாவுக்கு அலர்ட் கொடுத்த ஆடிட்டர் 

த்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலக வாசலில் 40 நிமிடங்கள் காத்திருந்தும், பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. `அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தால் வரக்கூடிய இழப்புகளைப் பற்றி விரிவான அறிக்கை கொடுத்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. ரஜினியை மனதில் வைத்து அ.தி.மு.கவை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கிறார் அமித் ஷா' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் நடந்த சோதனைகளும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையைக் குறிவைத்து நடந்த ரெய்டுகளும் எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. இதுதொடர்பாக, வருமான வரித்துறையின் தொடர் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர் கிறிஸ்டி குமாரசாமியும் செய்யாதுரையும். இந்த விசாரணைகள் ஒருபுறம் இருக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்குக் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனு, பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. `வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட இந்தப் புகார் மனு தொடர்பாக, முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது' என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.

வழக்குகள், ரெய்டுகள் என சசிகலாவைக் குறிவைத்த பா.ஜ.க தலைமை, தற்போது எடப்பாடி பழனிசாமியை நெருக்குவதைக் கொங்கு மண்டல அமைச்சர்கள் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். இதன் நீட்சியாக, `வேறு எந்தவிதமான நடவடிக்கைகளும் பாய்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, டெல்லியில் தங்களுக்கு வேண்டப்பட்ட பா.ஜ.க புள்ளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திப்பதற்காக டெல்லிக்குப் புறப்பட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், ``இது எனது தனிப்பட்ட பயணம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரர் மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு மத்திய அரசுத் தரப்பில் ராணுவ விமானம் அளித்து உதவி செய்தனர். எனவே, அதற்கு நன்றி தெரிவிக்க மட்டுமே செல்கிறேன். வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், மைத்ரேயனை மட்டும் சந்தித்த நிர்மலா சீதாராமன், `பன்னீர்செல்வத்தைச் சந்திக்கவில்லை' என்பதை ட்வீட்டாகவே அவரது அலுவலகம் வெளியிட்டது. அதேநேரம், வண்டலூரில் புலி ஒன்றுக்குப் பெயர் வைக்கச் சென்ற எடப்பாடி பழனிசாமி, `மத்திய அரசுடன் கூட்டும் இல்லை, எதிரியும் இல்லை' எனப் பேட்டியளித்தார். 

`அ.தி.மு.கவைப் புறம்தள்ளுவதற்குப் பிரதான காரணம் என்ன?' என்ற கேள்வியை, பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.கவோடு அணி சேர்ந்தால் ஏற்படக் கூடிய சாதக, பாதகம் குறித்து, அமித் ஷாவிடம் விரிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் அளித்துள்ள அறிக்கையில், `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உருவானால், அது தி.மு.க- காங்கிரஸ் அணியை பிரமாண்டமானதாக மாற்றிவிடும். உதாரணமாக, 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 60 சதவிகித வாக்குகளைத் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பெற்றது. அப்போது, ஜெயலலிதா தலைமை இருந்தும் வாஜ்பாய் போன்ற தலைவர் இருந்தும் தமிழ்நாட்டில் 34 சதவிகித வாக்குகள்தாம் அ.தி.மு.க-பா.ஜ.க அணிக்குக் கிடைத்தது. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் அ.தி.மு.கவோடு சேர்ந்தால், `மதவாதம்' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறிக் கொண்டே, எதிர் அணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். 60 சதவிகித வாக்குகள் அந்த அணிக்குச் சென்று சேர்ந்துவிடும்.

`காங்கிரஸ் அணியில் இருந்தால், மத்தியில் அங்கம் வகிக்கலாம்' என்ற எண்ணத்தில் தினகரன் அங்கே போய்விடுவார். `தனித்துப் போட்டி' எனக் கூறிக்கொண்டிருக்கும் அன்புமணியும், கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆப்ஷனைத்தான் தேடுவார். 2004-ல் உருவானதுபோல, 2019 தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான அணி இயல்பாகவே உருவாகிவிடும். இந்த அணியில், சி.பி.எம், ம.தி.மு.க, திருமாவளவன் அல்லது ராமதாஸ், தினகரன் என அனைவரும் அங்கம் வகிப்பார்கள். இப்படிப்பட்ட ஓர் அணி உருவானால், அதனால் நமக்கு எந்தவித லாபமும் இல்லை. ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்தபோது 35 சதவிகித வாக்குகள் வந்து சேர்ந்தன. தற்போது மோடி தலைமை இருப்பதால், இதே சதவிகித வாக்குகளை நம்மால் பெற முடியும். எனவே, அவசரப்பட்டு அ.தி.மு.கவோடு அணியை உருவாக்கிவிட வேண்டாம். 

அரசியலில் மாற்றத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். அது தானாக உருவாகாது. அண்ணா தி.மு.க நிர்வாகிகள் அனைவரும், நம்மை நோக்கி வருவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அ.தி.மு.கவோடு சேர்ந்தால் 2004 ரிசல்ட்டைத்தான் எதிர்பார்க்க நேரிடும்' எனக் குறிப்பிட்டவர், தொடர்ந்து, `தி.மு.க அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை 16 இடங்களை ஒதுக்குவதற்கு ஸ்டாலின் விரும்ப மாட்டார். தேசியக் கட்சியின் துணை இல்லாமலும் கருணாநிதி தலைமை இல்லாமலும் இருப்பதால், 24 சதவிகிதமாக இருக்கும் தி.மு.கவின் வாக்குவங்கி, ஸ்டாலின் தலைமையில் 18 சதவிகிதமாகச் சுருங்கிவிடும். தி.மு.க - காங்கிரஸ் அணி உடைந்தால் மட்டுமே நாம் வேறு முடிவுகளை எடுக்க வேண்டும். 2009, 2004-ல் நடந்த அரசியல் விளையாட்டுகள் எதுவும், தமிழ்நாட்டில் நமக்குத் தேவையில்லை. தி.மு.க, காங்கிரஸ் அணிக்கு இப்போதும் 40 சதவிகித வாக்குகள் உள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் வேலையில் நாம் இறங்க வேண்டாம். எனவே, அ.தி.மு.க அணி நமக்குத் தேவையில்லை' என விவரித்திருக்கிறார்" என்றவர், 

``வரக்கூடிய தேர்தலில், `பி.எம் நரேந்திரமோடி, சி.எம் ரஜினிகாந்த் என்பதுதான் அமித் ஷாவின் முழக்கமாக இருக்கிறது. இந்த முயற்சிக்கு ரஜினி இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க மீது ரெய்டு நடவடிக்கைகள் பாய்வதற்குக் காரணம், `ரஜினிக்கு நம்பிக்கை வர வேண்டும்' என்பதற்காகத்தான். `மாநிலங்களிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு' என அமித் ஷா பேசியதும் இந்த அடிப்படையில்தான். `ரஜினியுடன் கூட்டணி' என முரளிதர ராவும் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டின் பா.ஜ.கவின் நம்பிக்கைக்குரிய முகமாக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். அ.தி.மு.வின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்க மறுத்ததற்கும் இதுதான் பிரதான காரணம். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில், அமித் ஷா இருந்தால் ரெய்டு நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. அகில இந்தியத் தலைமையின் மனதில் சில கணக்குகள் ஓடுகின்றன. மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பலமுனைகளாகப் பிரித்தால், அது பா.ஜ.க-ரஜினி அணிக்கு வலு சேர்க்கும் என நம்புகிறார். அடுத்துவரக் கூடிய நாள்கள் ஒவ்வொன்றும் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் சோதனை மிகுந்தவையாகவே இருக்கும்" என்றார் விரிவாக.