மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

பி.எஸ்சி முடித்து ஆசிரியர் வேலைக்குப் போய், அதையும் எல்.கணேசனுக்காக உதறிவிட்டுத் தேர்தல் வேலையைப் பார்த்த நடராசனுக்கு எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்பது ஆசை. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் பங்கேற்றார். அதனால், அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அடுத்து படிப்பதற்குக் கல்லூரிகளில் இடம் அளிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவைப் போட்டிருந்தது காங்கிரஸ் அரசு. அதனால் முதுகலை படிப்பில் நடராசனால் சேர முடியவில்லை. அண்ணா ஆட்சி அமைந்தபிறகு கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் சேர விண்ணப்பித்து இருந்தார். ஒரத்தநாட்டில் ஜெயித்த எல்.கணேசனிடமும் இதனைத் தெரிவித்தார். ஆனாலும், மாநிலக் கல்லூரியில் நடராசனுக்கு சீட் கிடைக்கவில்லை.    

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

மன்னர் சரபோஜி கல்லூரிப் பேராசிரியர்கள் விமலா நத்தம், கு.சிவஞானம் ஆகியோர் நடராசனின் விருப்பத்தை அறிந்து உதவினார்கள். அவர்களோடு பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் காத்தையனும் சேர்ந்து, ஒரு காரில் நடராசனை அழைத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த பேராசிரியர் வெள்ளைவாரணனாரைச் சந்தித்தார்கள். அவர் நடராசனிடம் ‘‘என்ன படிக்க விருப்பம்?’’ எனக் கேட்டார். ‘‘எம்.ஏ தமிழ் அல்லது ஆங்கிலம்’’ என்றார் நடராசன். ‘‘ஆங்கிலத் துறையின் அட்மிஷன் முடிந்துவிட்டது. தமிழ் எம்.ஏ-வைவிட மொழியியல் முதுகலைப் பட்டப்படிப்பு படியுங்கள். அறிவு வளர்ச்சிக்கு உதவும்’’ எனச் சொன்னார் வெள்ளவாரணனார். அதனால் மொழியியல் படிப்பில் சேர்ந்தார் நடராசன்.  

1969-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடராசன் படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தி எதிர்ப்புத் தியாகி மாணவர் ராஜேந்திரன் சிலை, சிதம்பரத்தில் திறக்கப்பட்டது. 1965 ஜனவரி 26-ம் தேதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு மாணவர் ராஜேந்திரன் பலியானார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீப்பற்றி எரிய முதல் களப்பலி ஆனவர் ராஜேந்திரன். அவருக்குச் சிலை அமைப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டது. அதில் மற்ற மாணவர்களோடு நடராசனும் இடம்பெற்றார். சிலை அமைக்க நன்கொடை திரட்டப்பட்டது. முதலில் அண்ணாவைச் சந்தித்தது குழு. அண்ணா, நூறு ரூபாய் நிதி அளித்தார். பணம் சேர்ந்த நிலையில், சிலையைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, சிதம்பரம் வந்தபோது, அவரை மாணவர்களோடு போய்ப் பார்த்தார் நடராசன். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலை, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அங்கே சிலை வைக்க கருணாநிதி ஒப்புதல் தந்தார்.   

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

1969-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதியன்று ராஜேந்திரன் சிலை திறக்கப்பட்டது. 1967-ல் ஆட்சியைப் பிடித்த அண்ணா, 1969 பிப்ரவரியில் மரணம் அடைந்தார். அதன்பிறகு முதல்வர் ஆன கருணாநிதிதான் அந்தச் சிலையைத் திறந்து வைத்தார். அமைச்சர் கே.ஏ.மதியழகன், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடிதான் பிறகு தி.மு.க அமைச்சரானார் என்பது பலரும் அறியாதது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டுத் தீவிர அரசியலில் கால் பதிக்க நினைத்தார் நடராசன். 1971 சட்டசபைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆக ஆசைப்பட்டார். ஆனால், அவருடைய ஆசைக்கு அணை போட்டு, செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற அரசு வேலையை எல்.கணேசன் பெற்றுத் தந்தார். அதன்பிறகு நடராசனின் திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்து, மணவாழ்க்கை தொடங்கியது. தஞ்சாவூர், கடலூர், ஆவின், மெட்ரோ வாட்டர் எனப் பல இடங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாக அடுத்தடுத்து பணியாற்றி வந்தார் நடராசன். எம்.ஜி.ஆர் ஆட்சியில், நடராசன் தனது லீலைகளை நடத்த ஆரம்பித்தார்.   

சசிகலா ஜாதகம் - 49 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடராசன்!

சென்னையில் சசிகலாவுக்கு வீடியோ கடையை வைத்துக் கொடுத்தார் நடராசன். ஜெயலலிதா அ.தி.மு.க-வுக்குள் என்ட்ரி ஆனபோது அவரது நிகழ்ச்சிகளுக்கான வீடியோ கவரேஜ் வாய்ப்பு கிடைத்ததோடு, ஜெயலலிதாவோடு நெருக்கமும் ஆனார் சசிகலா. இந்த நெருக்கம்தான் ஜெயலலிதாவை உளவு பார்க்க சசிகலாவை     எம்.ஜி.ஆர் பணியமர்த்தவும் காரணமாக அமைந்தது. இதற்காக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனிடம் ஒப்புதலும் பெற்றார்கள்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வில் நுழைந்தது முதல் எம்.ஜி.ஆர் மறைவு வரையில் நடராசன் நடத்திய அரசியலைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்துவிட்டோம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது?

(தொடரும்)