Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

கருணாநிதி வைர விழாவின்போது ஸ்டாலின் அளித்த மதிய விருந்தில் கலந்துகொள்ள ராகுல் மறுத்துவிட்டாராமே?


டெல்லியில் இருந்து ராகுல் வந்த பயண நேரம் இதற்குப் பொருந்தவில்லை என்றுதான் சொல்லப்பட்டது. அதனால் மாலை நேரம் ஸ்டாலின் வீட்டில் நடந்த விருந்தில் ராகுல் கலந்துகொண்டார். இதில் அரசியல் தவிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

கழுகார் பதில்கள்!

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வந்து விட்டாரே... இனி கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கும்?


அவர் அவ்வளவுச் சீக்கிரம் வெளியில் வர மாட்டார் என்றுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நினைத்தார்கள். அமைச்சர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால், அவர்களின் நினைப்பு, இப்போது அவர்களின் பிழைப்பையே கெடுக்க ஆரம்பித்துவிட்டது. வெளியில் வந்த வேகத்தில் கட்சியைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முயற்சியைக் கையில் எடுத்துவிட்டார்  தினகரன். ஆட்சியைக் கைப்பற்ற அவருக்குக் கால அவகாசம் இருக்கிறது. என்றாலும், ஒரு விதப் பதற்றத்தில் பழனிசாமியை வைத்திருக்க அவர் திட்டம் போடுகிறார். எம்.எல்.ஏ-க்கள் தனித்தனியாக முதல்வரையும் அமைச்சர்களையும் மிரட்டுவார்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒருபக்கமும் அமைச்சர்கள் வேறு ஒரு பக்கமும் செயல்படுவார்கள்.

வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள் வேறுவேறு பக்கம் போனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அ.தி.மு.க-வின் நிலைமையும் ஆட்சியின் நிலைமையும் இருக்கும்!
 
அ.குணசேகரன், புவனகிரி.

‘கருணாநிதி 94’ - சிறப்பு என்ன?


94 கொண்டாடுவதே சிறப்புதானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

‘தமிழ்நாட்டில் அரசியல் செய்ய துணிச்சல் தேவை’ என்று சொல்லி இருக்கிறாரே தமிழிசை சௌந்தர்ராஜன்?


அது ரஜினிக்குச் சொன்னதாக இருக்கும்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை ஆட்சி செய்ய விடும் சூழல் உண்டா?


சென்னை ராஜதானி என்று பரந்த பகுதியாக இருந்தபோது, இன்றைய கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளும் அதில் இணைந்திருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாம் ஆகிய குறுநில அரசுகள் மட்டுமே தனித்தனியாக இயங்கி வந்தன. அதனால், சென்னை ராஜதானி எனும் பெரும் நிலப்பரப்பில் தமிழர் அல்லாதவரும் அரசியல் கட்சிகளில் முன்னணிக்கு வருவது, முதலமைச்சர்களாக இருப்பது தவிர்க்க முடியாததாக அப்போது இருந்தது. தமிழகம் தனி மாநிலமாக உருவான பிறகும் அதுவே, தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த மாநிலங்களில் எல்லாம், மண்ணின் மைந்தர்களுக்கே மரியாதை என்பது அழுத்தமாகப் பதிந்திருப்பதால், மற்றவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு துளிகூட இல்லாமல் இருக்கிறது.

கிருஷ்ணகுமார், நெல்லை.

முன்பு ‘இந்தியாவை விட்டுப் போய்விடுவேன்’ என்றார் கமல். இப்போது ‘சினிமாவை விட்டுப் போய்விடுவேன்’ என்கிறாரே?


சினிமா வசனங்களைக் கேட்டு மறந்துவிட வேண்டும். சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமே!

சந்தனா வசீகரன் சின்ன தாத்தா, கருப்பம்புலம்.

‘தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அறிந்துகொள்ள தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க முடிவு செய்துள்ளேன்’ என்கிறாரே ராகுல் காந்தி?


பாவம்... பயந்துவிடப் போகிறார்!

சாமா, ஸ்ரீரங்கம்

உயர் நீீதிமன்றம் கொடுக்கும் பல தீர்ப்புகளை அரசு புறக்கணிக்கிறதே..?

அந்த அளவுக்குத்தான் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது!

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மூவரும் பங்கு பிரித்துக் கொண்டால், திட்டப்பணிகளுக்கு எத்தனை சதவிகிதம் மிஞ்சும்?


இப்போதெல்லாம் சில திட்டங்களுக்கு 35 சதவிகிதத்துக்கு மேல் கமிஷன் தொகை போய்விடுவதாகச் சொல்கிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, திட்டப்பணிகளுக்கான விளம்பரச் செலவு மட்டும்தான் மிஞ்சும்!

பொன்விழி, அன்னூர்.

தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இன்றைய நிலையில் படு பயங்கரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்றே இல்லை. தனது பலவீனங்களின் காரணமாக பயந்து நடுங்கும் மாநில அரசாங்கமும், இவர்களது பலவீனத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் மத்திய அரசாங்கமும்தான் நமக்கு இருக்கிறது. இந்த நிலைமை பல மாதங்கள் தொடர்ந்தால், நிர்வாகம் செல்லரித்து விடும். பிறகு இதனைச் சரி செய்யவே பத்து ஆண்டுகள் ஆகிவிடும்.

சோ. பூவேந்த அரசன், சின்ன தாராபுரம்.

 ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சீட் உறுதிதானே?


முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும். அதற்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவரது கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும். இவை எல்லாம் நடந்தால் உங்களது கேள்விக்குப் பதில் சொல்லலாம்!

கழுகார் பதில்கள்!

விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ

தினம் தினம் ஒரு பூகம்பத்தைச் சந்தித்து வரும் தமிழக அரசியல் சூழ்நிலையில் இந்த ஆட்சி நிலைக்குமா... நிலைக்காதா?


ந்த ஆட்சி வெகு காலத்துக்கு நிலைக்காது என்று அ.தி.மு.க-வினரே சொல்கிறார்கள். இதனுடைய ஆயுட்காலம் என்பது நித்ய கண்டம்தான்.  அ.தி.மு.க ஆட்சியின் எதிரிகள் வெளியில் இல்லை. அந்தக் கட்சிக்கு உள்ளேதான் இருக்கிறார்கள். சசிகலா, நடராசன், திவாகரன், தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய பி.ஜே.பி மேலிடம் என எல்லோரும் வேறு வேறு சிந்தனைகளுடன் இருக்கிறார்கள். ‘இந்த ஆட்சி நிலைக்க வேண்டும், கட்சி வலுப்பெற வேண்டும்’ என்று இவர்களில் யாரும் சிந்திக்கவில்லை. ‘கட்சியும் ஆட்சியும் தங்கள் கைக்குள் வந்தாக வேண்டும், மற்றவர்கள் ஒழிய வேண்டும்’ என்றே ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அதாவது, பொதுவான நோக்கம் இவர்களுக்கு இல்லை. தனிப்பட்ட சுயநல நோக்கம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. மேலும், இவர்களால் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. ஒரு கட்சியை நடத்துவதிலும், அதை ஆட்சிக்குக் கொண்டுவரச் செய்வதிலும் இருக்கும் துன்ப, துயரங்கள் இவர்களுக்குத் தெரியாது. எனவே மிக விரைவில் இந்தப் பானையை உடைத்துவிடுவார்கள்.

பொறுப்பான எதிர்க்கட்சியினர் எழுப்ப வேண்டிய கேள்வி, ‘இந்த ஆட்சி நிலைக்குமா, நிலைக்காதா’ என்பது அல்ல. ‘நிலைக்க வேண்டுமா, கூடாதா’ என்பதுதான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!