
தீபா கணவர் மாதவன் திகுதிகு
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவுக்கும், அவருடைய கணவர் மாதவனுக்கும், தீபா பேரவை நிர்வாகி ராஜாவுக்கும் இடையே நடந்த மோதல்தான் கடந்த வார பரபரப்பு. ‘எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ தி.மு.க’ பொதுச்செயலாளர் (சொல்லும்போதே மூச்சுவாங்குது!) மாதவன், “சார், நீங்க எந்தக் கேள்வி வேணும்னாலும் தயங்காம கேளுங்க. நான் பதில் சொல்ல ரெடி’’ என்றார்.
``யார் சார் நீங்க?”
``புரட்சித்தலைவியின் ஒரே மகன்.”
``இதை ஜெயலலிதா இருக்கும்போதே சொன்னீங்களா அல்லது அவங்க இல்லாததால அடிச்சு விடுறீங்களா?”
“அப்படிக் கிடையாது. தீபாவை நான் கல்யாணம் செய்த நிமிஷத்திலிருந்து, புரட்சித்தலைவிக்கு ஒரே மகன் நான்தான்.”
``தீபக்?”
``அவங்களைப் புரட்சித்தலைவி மகனாகவே ஏற்றுக்கொண்டதில்லை. அதுதான் உண்மை. மீண்டும் சொல்கிறேன், புரட்சித்தலைவிக்கு ஒரே மகன் நான்தான்.”

``அரசியல்வாதி ஆகணும்னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணிட்டீங்களா?”
``புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை எனக்கு அப்படி ஓர் எண்ணமே இல்லை. அவர் இறந்த பிறகு, லட்சக்கணக்கான தொண்டர்கள் என் வீடு தேடி வந்தார்கள். அவர்கள் அனைவரும் `கட்சியை இனி நீங்கள்தான் வழிநடத்த வேண்டும்’ என்று சொன்ன காரணத்துக்காகக் கட்சியை ஆரம்பித்தேன். காலத்தின் கட்டாயத்தால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.”
``அப்போ உங்க வீட்டுக்கு வந்த கூட்டமெல்லாம் தீபாவுக்காக வந்ததில்லையா?’’
``அவருக்காகத்தான் வந்தார்கள். ‘இல்லை’ என்று மறுக்கவில்லை. அவரைச் சந்திக்கவந்த தொண்டர்களை எல்லாம் நான்தான் சந்தித்துப் பேசினேன். ஆனால், தீபா தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்தார். சசிகலா ஆள்களை எல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டார். நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால்தான் வெளியே வந்து கட்சி ஆரம்பித்துவிட்டேன். உண்மையாகக் கட்சி வேலை செய்பவர்களை விட்டுவிட்டு, பலருக்கும் பொறுப்புகளை வழங்கினார் தீபா. நான் உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்குப் பொறுப்புகளை வழங்கத்தான் தனிக்கட்சி தொடங்கினேன்.”
``அ.தி.மு.க தொண்டர்கள் எல்லாரும் உங்க பக்கம் இருக்காங்கன்னா... நீங்க ஏன் இரட்டை இலைச் சின்னத்தை இதுவரை கேட்கவில்லை?”
``சின்னத்துக்காகப் போட்டி போடுபவர்கள் அனைவரும் பண முதலைகள். என்னிடம் அவ்வளவுப் பணம் கிடையாது; நல்ல மனம் இருக்கிறது. உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள். அவை போதும். அவர்களை வைத்து, கட்சியை நல்ல முறையில் நடத்துவேன்.”
``கட்சிப் பெயரை இப்படி வைக்கக் காரணம் என்ன?”
``நான் புரட்சித்தலைவரின் பெயரையோ, புரட்சித்தலைவியின் பெயரையோ சொல்ல மாட்டேன். ஆகவேதான், ‘எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ தி.மு.க’ என்று வெச்சேன்.”
``கட்சித் தலைவரின் பெயரைச் சொல்வதில் என்ன இருக்கிறது?”
``நீங்கள் சொல்லலாம். நான் அம்மாவைக் கடவுளாக வணங்குகிறேன். அம்மாவின் பெயரை நான் சொல்லவே மாட்டேன்.”
``சரி, ஜெயலலிதாவைச் சந்திச்சிருக்கீங்களா?”
``ம்ம்ம்... சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். ஆனால், என்ன பேசினார் எனச் சொல்ல மாட்டேன்.”
``உங்கள் கட்சியின் கொள்கைகள் என்னென்ன?”
``டெல்லியில கட்சிப் பதிவு எண் கிடைத்த பிறகு, கட்சி மாநாட்டை திருச்சி அல்லது சேலத்தில் நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை வெளியிடுவோம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என் ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் ஒரு கொள்கையை வெளியிடுவேன்.

``உங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் நீங்கள்தானா?”
``ஆமாம். எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் மலர வைப்பேன். என்னைவிட என் கட்சியில் சிறந்தவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு இந்த வாய்ப்பை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.”
``கடந்த வாரம் எதற்காக போயஸ் கார்டன் போனீர்கள்?”
``என் மனைவி தீபா ஆபத்தில் இருப்பதாகச் சொன்னார். உடனே சென்றேன். காவலர்களைவிட்டு என்னை மிரட்டினார்கள். குண்டர்களை ஏவிவிடுகிறார்கள். இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். சசிகலா குடும்பம், என்னையும் என் மனைவியையும் வேண்டுமென்றே பிரிக்கிறது.’’
``உங்களைப் பிரித்து வைப்பதால் சசிகலாவுக்கு என்ன பயன்?”
``பயன் இல்லை, பயம். ஆம், நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பின்னால் வந்துவிடுவார்களோ என்று சசிகலாவுக்குப் பயம்.”
``தீபா பேரவை நிர்வாகி ராஜா என்கிறவர் உங்களைப் பொது இடத்தில் வைத்து கண்டபடி திட்டினாரே... நகைகளை எல்லாம்கூட நீங்கள் திருடிவிட்டதாகச் சொல்லியிருக்கிறாரே?”
``அந்த ராஜா யார் என்றே எனக்குத் தெரியாது. நகை விஷயத்தைப் பற்றி என் மனைவியே விரிவாக பிரஸ்மீட்டில் சொல்லிவிட்டாரே. அதைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை.”
``சார், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் ஆகிடுவீங்கபோல. வரும் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?”
(கடுமையாக யோசிக்கிறார்) “இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பற்றி நான் எதையும் சொல்ல முடியாது. யார் யார் வேட்பாளர்கள் என்று முதலில் பார்க்கலாம். பிறகு, யாருக்கு எங்கள் கட்சி ஆதரவு என்பதை முடிவுசெய்வோம்.” (ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மட்டுமே ஓட்டு போட முடியும். மாதவனிடம் அப்படி யாருமே இல்லை!)
அரசியல்வாதிக்கு உண்டான எல்லா தகுதிகளும் உங்களுக்கு இருக்கு சார்!
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: தே.அசோக்குமார்