Published:Updated:

‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு ஸ்டாலின்!’’

‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு ஸ்டாலின்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு ஸ்டாலின்!’’

முன்னெச்சரிக்கை செய்யும் மூன் டி.வி நிர்வாகி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் நாற்காலிக்காக நடந்த அதிகாரச் சண்டையில் கோடிகளும் தங்கமும் விளையாடியதை நேரடி வாக்குமூலங்களால் அம்பலப்படுத்தி, சூடு கிளப்பியிருக்கிறது மூன் டி.வி. ‘டைம்ஸ் நவ்’ ஆங்கிலத் தொலைக்காட்சியும் மூன் தொலைக்காட்சியும் இணைந்து, ‘ஜனநாயகம் விற்பனைக்கு’ எனும் தலைப்பில் வெளியிட்ட வீடியோக்கள் வைரலானது. ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன், எடப்பாடி அணியில் இருக்கும் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், இடைத்தரகர்கள் ஹரி, பாலாஜி, ஆதம் பாவா எனப் பலருடனும் பேசி, ரகசிய கேமராவால் படம்பிடித்து எடுத்த வீடியோ க்கள் இந்தியா முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தின.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி தரப்பு கோடிகளிலும் தங்கத்திலும் பேரம் நடத்தியது... எடப்பாடியைக் கவிழ்க்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரின் மகன்கள் ரவீந்திரநாத்தும் பிரதீப்பும் பலருடன் பேரம் நடத்தியது... எடப்பாடி அணியிலிருந்து ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் பன்னீர் தரப்புக்கு மாற முயற்சி செய்தது... பி.ஜே.பி-யின் கண்ணசைவில் பன்னீர் செயல்பட்டது என்று பல விஷயங்களைச் சொல்கின்றன இந்த வீடியோக்கள். சட்டமன்றம் முதல் சாமானியர்கள் வரை பலரும் இவை குறித்து விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில், ரகசிய வீடியோக்களை எடுத்த மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கானுக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல். ஷாநவாஸ்கானிடம் பேசினோம்.

‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு ஸ்டாலின்!’’

‘‘இந்த ரகசிய பேரத்தை அம்பலப்படுத்தும் திட்டம் எப்படி வந்தது?’’

‘‘அ.தி.மு.க இரண்டாக உடைந்ததும் சசிகலா தரப்பு, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது. அதனை அடுத்துதான் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்களையும் கூவத்தூரில் தங்க வைத்திருந்தனர். அங்கே தங்கி இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு, சசிகலா தரப்புப் பல கோடிகள் தந்ததாகப் பேசப்பட்டது. இதன் பின்னணி உண்மையைக் கண்டறிந்து மக்களிடம் அம்பலப்படுத்தத் திட்டமிட்டோம்.

கூவத்தூர் ரிசார்ட்ஸிலிருந்து முதன்முதலில் தப்பிவந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்த எம்.எல்.ஏ சரவணனிடமிருந்து ஆரம்பித்தோம். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி எங்கள் அலுவலகத்துக்குச் சரவணனை வரவழைத்து, நடந்தவற்றை விசாரித்தோம். சரவணன் இயல்பாகப் பேசினார். ‘வெளியூர்களிலிருந்து வந்த எம்.எல்.ஏ-க்களை விமான நிலையத்திலேயே மடக்கி, இரண்டு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். அடுத்து எல்லோரையும் கவர்னர் மாளிகைக்குக் கூட்டிச் சென்றபோது, நான்கு கோடி தருவதாகச் சொன்னார்கள். பிறகு கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தபோது ஆறு கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார்கள். பணமாக இல்லாததால், தங்கமாகத் தருவதாகவும் கூறினார்கள்’ என்றார். அவை அனைத்தையும், ரகசியக் கேமராக்களால் பதிவுசெய்தோம். தொடர்ந்து சரவணனோடு திருநெல்வேலி வரை பயணம் செய்தோம். அவர் சொன்ன தகவல்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

எம்.எல்.ஏ சரவணன், சில இடைத்தரகர்களின் பெயர்களைக் கூறினார். அவர்களிடமும் பேசினோம். அதோடு சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களிடமும் பேசினோம். அவற்றையும் வீடியோவாகப் பதிவுசெய்தோம். அவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில் ஹரி, பாலாஜி, ஆதம் பாவா என இடைத்தரகர்கள் சிக்கினார்கள். ஏப்ரல் 1-ம் தேதி எம்.எல்.ஏ சரவணனைச் சந்திக்கத் தொடங்கினோம். அது, இறுதியாக மே 25-ம் தேதிதான் முடிந்தது.

கடந்த ஆறு மாதங்களாகத் தமிழகத்தை பிரேக்கிங் நியூஸ்களே ஆக்கிரமித்துள்ளன. வெறும் தகவல்கள் மட்டும் இங்கே பிரேக்கிங் செய்திகளாக உள்ளன. புலனாய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டுவரும் செய்திகளில், ஒரு பத்திரிகையாளன் கவனம் செலுத்த வேண்டும். அதைச் சரியாக செய்துள்ளோம். அதனால்தான் நாங்கள் வெளியிட்ட அந்த வீடியோவையே, ‘பிரேக்கிங் தி பிரேக்கிங் நியூஸ்’ எனத் தலைப்பிட்டிருந்தோம்.’’

‘‘உங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்?’’

‘‘கடந்த 1997-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கினேன். அடுத்து என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே உள்ளிட்டவற்றில் பணியாற்றினேன். அந்த அனுபவங்களைக் கொண்டு, தமிழ் வெப் இணையதளத் தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கி, நடத்தி வந்தேன். இந்த நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் மூன் தொலைக்காட்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பங்குதாரர்களில் ஒருவராகி, கடந்த மூன்று வருடங்களாக நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன்.’’

‘‘இதற்கு முன் இதுபோன்ற வீடியோக்கள் எடுத்ததுண்டா?’’

‘‘மதுரை திருமங்கலம் தேர்தலில், பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அதை முதன்முதலில் வீடியோ ஆதாரமாக வெளியிட்டோம். இப்போது ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று இந்தியாவே சொல்வதற்குக் காரணம் அந்த வீடியோதான். அதேபோல் இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளில், ‘கேபரே டான்ஸ்’ நிகழ்ச்சி நடந்ததாக சர்ச்சை கிளம்பியது, அதை வீடியோவாக வெளியிட்டதும் நாங்கள்தான். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா செய்கிறார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டோம். இதுபோன்று     10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டுள்ளோம். எங்களுக்கு எந்தச் சார்பும் இல்லை. எல்லோரையுமே மக்களிடம் அம்பலப்படுத்துகிறோம்.’’

‘‘இந்த வீடியோ விவகாரத்தில் இருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?’’

‘‘எம்.எல்.ஏ சரவணனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்படும்’ என்றார். அவர் சொன்ன அடுத்த சில நாட்களில் தேர்தல் ரத்தானது. அதேபோல் ‘சசிகலா அணியில் 10     எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கப் போகிறார்கள்’ என்றார். அவர் சொன்னது நடந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய இடைத்தரகர்களிடம் பேசும்போது, ‘அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடக்கப் போகிறது’ என்றார்கள். அதேபோல் நடந்தது. ‘அடுத்து சிக்கப்போவது கார்த்தி சிதம்பரம்தான்’ எனச் சொன்னார்கள். சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கடைசியாக அவர்கள் சொன்ன அதிர்ச்சித் தகவல், ‘அடுத்து ஸ்டாலின்தான் இலக்கு’ என்பதே. இனி தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தனிப்பட்ட செல்வாக்குள்ள தலைவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், அப்படி யாரும் பெயர் எடுத்துவிடக்கூடாது என்பதிலும் பி.ஜே.பி தெளிவாக இருப்பதாக இடைத்தரகர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு ஸ்டாலின்!’’

‘‘நீங்கள் எடுத்த வீடியோக்களை ‘டைம்ஸ் நவ்’ சேனலுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டீர்கள் எனத் தகவல் உலா வருகிறதே?’’

‘‘அது வதந்தி. நாங்கள் யாருக்கும் வீடியோக்களை விற்கவில்லை. நாங்கள் எடுத்த வீடியோக்களை எங்கள் தொலைக்காட்சியில் வெளியிடுவதோடு, இந்திய அளவில் மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டோம். எனவேதான் ‘டைம்ஸ் நவ்’ சேனலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம். மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் செய்துவரும் மோசடிகள், பெரும்பான்மை மக்களைச் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது சரியாகவே நடந்துள்ளது.’’

‘‘ ‘வீடியோக்களில் இருப்பது நான்தான்; அதில் உள்ள குரல் என்னுடையது இல்லை’ என எம்.எல்.ஏ சரவணன் கூறுகிறாரே?’’

‘‘நாங்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் அனைத்தும் உண்மை. எம்.எல்.ஏ-க்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்தது முதல் அவர்களுடன் பேசிய அனைத்தையும் பதிவு செய்துள்ளோம். அவர்களை எங்கள் அலுவலகத்துக்கு வரவைத்து நானே வீடியோ எடுத்தேன். அந்த வீடியோக்கள் வெளியே லீக் ஆகிவிடக்கூடாது என்கிற பதற்றம் இருந்தது. வீடியோ எடுப்பது முதல் எடிட்டிங் என அனைத்தும் எனக்குப் பரிச்சயம் என்பதால், தனி ஆளாக இவற்றை மேற்கொண்டேன். அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன. பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, இதுகுறித்து விளக்கவும் உள்ளோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. பொறுப்புள்ள பத்திரிகையாளராக எங்கள் பணியை முழுமையாகச் செய்துள்ளோம்.’’

‘‘இந்த வீடியோக்கள் வெளியான பிறகு உங்களுக்கு எதிர்ப்புகள், மிரட்டல்கள் வந்துள்ளதே?’’

‘‘தமிழகத்தின் பல பகுதிகளில் மூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் தொலைபேசிகளுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. வேறு ஏதோ ஒரு இணையதளத் தொலைக்காட்சியில் வந்த காட்சிகளை வைத்து, ‘ஆபாசப்படங்கள் எடுப்பவன்’ என என்னைப்பற்றி ஆளும்கட்சியின் தொலைக்காட்சியிலும் சமூக வலைதளங்களிலும் தவறான வீடியோக்களைப் பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம். கடந்த 14-ம் தேதி இடைத்தரகர்கள் குறித்து வீடியோ வெளியிட்டோம். அதுவெளியான அன்று நள்ளிரவு 11 மணியளவில் இடைத்தரகர்களின் ஆட்கள் வந்து பிரச்னை செய்தார்கள். அதனால், அலுவலகத்துக்குப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.’’

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: மீ.நிவேதன்