Published:Updated:

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

ஜூ.வி லென்ஸ்

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

றநிலையத்துறையின்கீழ் வரும் ஒரு கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி குடும்பத்தினர் சட்டவிரோதமாகவும், மிகக் குறைந்த விலைக்கும் வாங்கியிருப்பதாக புது பூகம்பம் கிளம்பியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பழைய பேருந்து நிலையம் அருகில் முக்கிய பிராமண சுவாமிகள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம், பெருந்துறையின் மையப்பகுதியான கருமாண்டி செல்லிபாளையம் கிராமம், கந்தாபாளையத்தில் (சர்வே எண்கள் 704/2, 710/1, 710/3, 711/1) உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்த நிலத்தைத்தான், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியான பெருந்துறை சுப்பிரமணியம் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, பெருந்துறை மக்கள் சேவை இயக்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமாரிடம் பேசினோம். “இந்த நிலத்தை திரௌபதியம்மாள் என்பவரின் குடும்ப வாரிசுகள் நீண்ட காலமாகப் பராமரித்து வந்தனர். அவர்களிடம் இருந்து, கொங்கு வேளாளர் கல்வி நிறுவனம் வாங்கியது. தமிழ்நாட்டில் கோயில் நிலத்தைக் கிரயம் செய்ய முடியாது என்பதால், கேரள மாநிலம் ஒலவக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் 31.8.1995 அன்று கிரயம் செய்துள்ளனர். அதை அறிந்த அன்றைய ஈரோடு அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன், ‘இது கோயிலுக்குச் சொந்தமான இடம். இதைத் தனிநபர் விற்கவோ, வாங்கவோ முடியாது. இந்த நிலத்தில் கட்டடம் கட்டவோ, மின் இணைப்பு கொடுக்கவோ கூடாது’ எனப் பெருந்துறை தாசில்தார், சார்பதிவாளர், பேரூராட்சி செயல் அலுவலர், மின்வாரிய கோட்டப் பொறியாளர் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதையும் மீறி, கடந்த 2005-ம் ஆண்டு, கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத்தின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?
சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத்திடம் இருந்து, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியான பெருந்துறை சுப்பிரமணியத்தின் மனைவி ஜி.ஜெயந்தி, சாரதாம்பாள் மற்றும் ஆர்.ஜெயந்தி பெயர்களில் 16.11.2016-ல் மிகக் குறைந்த விலைக்குக் கிரயம் செய்யப்பட்டு, பிறகு பட்டா மாறுதலும் செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் குடும்பம் முதல்வரின் சம்பந்தியா அல்லது பினாமியா எனத் தெரியவில்லை” என்றார்.

ஜி.ஜெயந்தி பெயரில் 6.36 ஏக்கர் மற்றும் 7.13 ஏக்கர், சாரதாம்பாள் பெயரில் 7.13 ஏக்கர், ஆர்.ஜெயந்தி பெயரில் 7.13 ஏக்கர் என மொத்தம் சுமார் 27.75 ஏக்கர் நிலத்தை சுமார் 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். ஆனால், தற்போதைய சந்தை மதிப்புப்படி அந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாயாம்.

பெருந்துறை அறநிலையத் துறை ஆய்வாளர் ஜெயமணியிடம் இந்தக் கிரய ஆவணங்களை நாம் காட்டினோம். அவற்றை அறநிலையத் துறையின் பதிவேட்டில் சரிபார்த்து விட்டு, “இவை அனைத்தும் கோயில் நிலம். இந்த ஆவணங்கள் எப்படி உங்களுக்குக் கிடைத்தன?” என்று ஆச்சர்யப்பட்ட அவர், “முக்கிய பிராமண சுவாமிகள் கோயிலுக்கு மொத்தம் 32 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இந்த நிலம் விற்கப்பட்ட விஷயம், பத்து நாள்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியவந்தது. உடனே, உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டேன். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

ஈரோடு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் முருகய்யாவிடம் கேட்டதற்கு, ‘‘கோயில் நிலத்தை யாரும் அபகரிக்க முடியாது. அப்படி கிரயமோ, பட்டா மாறுதலோ செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார். பெருந்துறை சார் பதிவாளர் அமுதா, ‘‘இது கோயில் நிலம் என்று அறநிலையத் துறை எங்களுக்கு  எந்தவொரு தகவலும் கொடுக்கவில்லை. அதனால்தான்.  கிரயம் செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சட்டவிரோதமாக வாங்கப்பட்ட கோயில் நிலம்... முதல்வரின் சம்பந்தியா... பினாமியா?

எடப்பாடியின் சம்பந்தி பெருந்துறை சுப்பிரமணியத்தின் மனைவி ஜி.ஜெயந்தியிடம் கேட்டதற்கு, ‘‘இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்க வீட்டுக்காரரைத்தான் கேட்க வேண்டும். அவர் வெளியூர் போய்விட்டார்’’ என்றார்.

பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேஷன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் சென்னியப்பன், ‘‘சொந்தமாக நிலம் வாங்கி ஸ்கூல் கட்டலாம் என முடிவெடுத்தோம். ராகவேந்திர ராவ் என்பவர் இந்த நிலத்தை விற்பதாகக் கேள்விப்பட்டு அவரிடம் விசாரித்தோம். ‘இந்த நிலம் முக்கிய பிராமண சுவாமிகள் கோயிலுக்குச் சொந்தமானது. இதை விற்று கிடைக்கும் தொகையை வங்கியில் சேமித்து வைத்து, அதன் வட்டி மூலம் கோயிலைப் பராமரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். நிலத்தை விற்றுக்கொள்ளலாம் என்று 1943-ல் தீர்ப்பு வந்தது’ என்று சொல்லி, தீர்ப்பின் நகலைக் காண்பித்தார். நிலத்தை நாங்கள் வாங்கி 22 வருடங்கள் ஆகின்றன. பள்ளிக்குப் புதிய கட்டடங்கள் கட்டியதால், நஷ்டம் ஏற்பட்டது. அதனால், இந்த நிலத்தை விற்றுவிட்டோம்” என்றார்.

அ.தி.மு.க ஆட்சி என்றாலே அபகரிப்பு புகார்களைத் தவிர்க்க முடியாது போலிருக்கிறது.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி