Published:Updated:

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”

சசி குடும்பத்துக்கு தீபக் கெடு

ஜெயலலிதா வாழ்ந்தவரை போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம், கம்பீரத்தின் உச்சமாகத் திகழ்ந்தது. அது, பொதுமக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இடம்; அ.தி.மு.க-வினருக்கு வழிபாட்டுத்தலம்; எதிர்க்கட்சிகளுக்குச் சிங்கத்தின் குகை. ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறை சென்றபிறகு அந்த இல்லத்தின் கம்பீரம் சிதையத் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போட்ட நான்குமுனைச் சண்டை, தெருச் சண்டை ரகம்.

தீபா, தீபக் மோதலையடுத்து பல வாதங்கள் வதந்திகளாகப் பரவின. ‘‘போயஸ் கார்டன் வீடு குறித்து ஜெயலலிதா தனியாக ஒரு உயில் எழுதி உள்ளார். அதன்படி அந்த வீட்டுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக், தீபா ஆகியோர் தற்போது உரிமை கொண்டாட முடியாது’’ என்று ஒருபக்கம் பேசப்பட்டது. இதற்கிடையில் தீபா, “அத்தை எழுதிய உயில் என்னிடம் உள்ளது... நேரம் வரும்போது அதை வெளியிடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தீபக்கை சந்தித்துப் பேசினோம். பல விஷயங்களை நம்மிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் அவர்.

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”

‘‘போயஸ் கார்டன் வீட்டின் தற்போதைய நிலை என்ன... அது யார் பெயரில் இருக்கிறது?’’

‘‘போயஸ் கார்டன் வீடு என் அத்தையின் உரிமையில்தான் இப்போதும் இருக்கிறது. இந்த வீடு பாட்டியும் (ஜெயலலிதாவின் தாயார் சந்தியா), அத்தையும் சேர்ந்து வாங்கியது. ‘நாட்டியக் கலா நிகேதன்’ என்ற அமைப்பில் என் அத்தையும் பாட்டியும் பங்குதாரர்கள். இந்த அமைப்பின் பெயரில்தான் போயஸ் வீடு வாங்கப்பட்டது. அதன்பிறகு அதில் செய்யப்பட்ட மாற்றங்கள், கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் எல்லாம் அத்தையின் சொந்த சம்பாத்தியத்தில்தான் நடந்தன. 1971-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பாட்டி, ‘நாட்டிய கலா நிகேதன்’ அமைப்பின் பெயரில் இருக்கும் சொத்துகளும் இந்த வீட்டின் முழு உரிமையும் அத்தைக்குத்தான் என்பதைத் தெளிவுபடுத்தி உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த ஆவணங்கள் தற்போது என்னிடம் உள்ளன.

அதன்பிறகு அத்தை இறக்கும்வரை, வேறு யாருக்கும் மாற்றி எழுதிக் கொடுக்கவில்லை. அப்படி அத்தை செய்திருந்தால் அது நிச்சயமாக சசி அத்தைக்குத் தெரிந்திருக்கும். இதுவரை சசி அத்தை அப்படி நடந்ததாகச் சொல்லவில்லை. மேலும், வேறு யாரும் அப்படி ஒரு உயில் இருக்கிறது என்று சொல்லி உரிமை கேட்டு வரவில்லை; வரவும் முடியாது. ஏனென்றால், என் அத்தை அப்படி ஒரு உயிலை எழுதவில்லை என்பதுதான் உண்மை. அதனால், சட்டப்படி இந்த வீடு எனக்கும் தீபாவுக்கும் சொந்தமாகிறது. இந்த வீடு மட்டுமல்ல, ‘தன்னுடைய பெயரில் உள்ள சொத்துக்கள்’ என அத்தை எவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டு தன்னுடைய பிரமாணப் பத்திரங்கள் மூலம் நீதிமன்றங்களில் குறிப்பிட்டுள்ளாரோ... அவை அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதில் வேறு யாரும் எந்தப் பிரச்னையும் செய்ய முடியாது.’’

‘‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதில் ஏதாவது இடையூறு ஏற்படுத்துகிறார்களா?’’

‘‘சசி அத்தையும், அவர்களுடைய உறவினர்களும் இதுவரை எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. தற்போது போயஸ் வீட்டை நான்தான் பராமரித்து வருகிறேன். பூங்குன்றன்கூட இப்போது இங்கு வருவதில்லை. நந்தகுமார் என்பவரை வைத்து அந்த வீட்டின் தினப்படி வேலைகள் எப்போதும்போல் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளேன். நான் அந்த வீட்டுக்கு எப்போது போனாலும் யாரும் என்னை அங்கு தடுப்பதும் இல்லை. வேறு எந்தப் பிரச்னையும் செய்வதில்லை. அவர்களால் செய்யவும் முடியாது. ஒருவேளை சசி அத்தையின் உறவினர்கள் ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், சசி அத்தையே அதைத் தடுத்துவிடுவார். நடராசன் அங்கிளும் வேடிக்கை பார்க்க மாட்டார். இதெல்லாம் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனாலும், இதைத்தாண்டி நான் சொல்ல விரும்புவது... அத்தையின் பெயரில் உள்ள சில சொத்துகள் தற்போது வேறு சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் தானாக முன்வந்து அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக போயஸ் கார்டன் வீட்டை முழுமையாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வீட்டில் எங்களைத்தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அப்படி உரிமை உள்ளதாக நினைத்துக்கொண்டு, அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து செல்லும் சசி அத்தையின் உறவினர்கள் இனிமேல் அதுபோன்ற செயல்களைக் கைவிட வேண்டும். அவர்களுடைய உடைமைகள் ஏதாவது இங்கே இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும்.’’

‘‘கடந்த 11-ம் தேதி தீபா, தீபக், மாதவன், ராஜா என நான்குமுனைச் சண்டை போயஸ் கார்டன் வீட்டில் நடந்ததே... அதற்குப் பின்னணி என்ன?’’

‘‘போயஸ் வீட்டுக்கு நான் வரும்போது என்னை யாரும் தடுப்பதில்லை. எனக்குத் தொந்தரவுகள் கொடுப்பதில்லை. எனக்கு இருப்பதைப் போன்ற அந்த ஒரு பிடிமானம், என் அக்கா தீபாவுக்கும் இந்த வீட்டோடு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அதனால்தான் கடந்த 11-ம் தேதி நானே தொலைபேசியில் அழைத்து, தீபாவை வரச் சொன்னேன்.

அவர் வரும்போதே ராஜாவையும் அழைத்து வந்தார். அதன்பிறகு நானும் தீபாவும் அத்தையின் படத்துக்குப் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினோம். இங்கேயே சமைத்துச் சாப்பிட்டோம். அதுவரை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென தீபா என்ன நினைத்தாரோ... வீட்டுக்குள் இருந்த சசி அத்தையின் படம் உள்ளிட்ட மற்ற பொருட்களை அப்புறப்படுத்த முயன்றார். நான் அப்போது தலையிட்டு, ‘அந்தப் பொருள்கள் நமக்கு உரிமையில்லாதவை. அவற்றை இப்போது தொடாதே! சசி அத்தை அல்லது அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் வைத்து அவற்றைப் பொறுமையாக அப்புறப்படுத்தலாம்’ என்றேன். ஆனால், தீபா கேட்கவில்லை. சசி அத்தையின் படத்தை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார். அதன்பிறகுதான் சசி அத்தையின் செக்யூரிட்டிகள் வந்து பிரச்னை செய்தனர். உடனே நான் தலையிட்டு, தீபா, அவருடைய கணவர் மாதவன், தீபாவின் பாதுகாப்புக்காக வந்த ராஜா ஆகியோரை வெளியேற்றச் சொன்னேன். அதில் தீபாவுக்குக் கோபம். அவர் என்னை சரமாரியாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கூச்சல் போட்டு ரகளை செய்துவிட்டார்.’’

‘‘நீங்கள் ராஜாவையும் மாதவனையும் தாக்கியதாக தீபா சொல்கிறாரே?’’

‘‘நான் மட்டுமல்ல... அங்கிருந்த வேறு யாரும் ராஜாவையோ, மாதவனையோ, தீபாவையோ தாக்கவில்லை. அன்று நடந்தவை எல்லாம் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளன. அவற்றைப் பார்த்தால் உண்மைகள் தெரியும்.’’

“போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!”

‘‘போயஸ் கார்டன் வீட்டில் 11-ம் தேதி நடந்த விவகாரங்கள் எல்லாம் சசிகலாவுக்குத் தெரியுமா... அவர் ஏதாவது சொன்னாரா?’’

‘‘இங்கு நடந்தவை, நடந்துகொண்டிருப்பவை எதையும் சசி அத்தையிடம் இருந்து மறைக்க முடியாது. அவருக்கு உடனடியாகத் தகவல் தெரிந்துவிடும். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட அவர் என்னிடம், ‘போயஸ் கார்டன் வீட்டை அக்காவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அதற்காக நீ அந்த வீட்டை விட்டுக்கொடு’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நினைவு இல்லமாக மாற்றவோ... அல்லது வேறு நல்ல காரியங்களுக்காகவோ என்றால் நான் இந்த வீட்டை நிச்சயமாக விட்டுத் தருவேன். ஆனால், உங்களைத் தவிர உங்களுடைய உறவினர்கள் யாராவது இந்த வீட்டை வேறு வழிகளில் ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ நினைத்தால் அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டேன்.’’

‘‘தீபாவின் உதவியாளராக இருக்கும் ராஜா யார்? தீபாவின் கணவரையே மிரட்டும் அளவுக்கு அவருக்கு எப்படி உரிமை வழங்கப்பட்டது?’’

‘‘ராஜா என் மூலமாகத்தான் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கம். கடந்த 15 ஆண்டுகளாக அவர் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானவர்தான். ஒரு பகுதியில் செல்வாக்கான நபர்கள் இருந்தால், அவர்களோடு வலியப்போய் சிலர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள் அல்லவா! அதுபோல் ராஜா என்னோடு பழக்கமானார். ஆனால், நெருங்கிய நட்பு என்பதெல்லாம் கிடையாது. இதற்கு மேல் அவரைப் பற்றி பேச நான் விரும்பவில்லை... விட்டுவிடுங்கள்.’’

‘‘தீபாவின் கணவர் மாதவனோடு உங்களுக்கு என்ன பிரச்னை?’’

‘‘மாதவனோடு எனக்குப் பிரச்னையும் இல்லை; நெருக்கமும் இல்லை. தீபா - மாதவன் திருமணத்துக்குக்கூட என்னை அவர்கள் அழைக்கவில்லை. அப்போது இருந்தே மாதவனோடு நான் சரியாகப் பேசியதில்லை. அத்தை இறந்தபிறகு தீபாவின் நடவடிக்கைகள்... அவர் கட்சி தொடங்கியது... அதன்பிறகு தீபா பெயரைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை மாதவன் வசூல் செய்தது... என்றெல்லாம் வந்த தகவல்களை நான் ஆராய்ச்சி செய்ததும் இல்லை. அதுபற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனாலும்கூட தீபா என் அக்கா. அதனால், அவர் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும், அவர் மீது பாசமும் அக்கறையும் எனக்கு இருக்கும்.’’

- ஜோ.ஸ்டாலின்

ஜெயலலிதாவின் சொத்துகள்...

நாட்டியக் கலா நிகேதன் பெயரில் உள்ளவை:

1. 10 கிரவுண்ட் இடத்தில் போயஸ் கார்டன் வீடு.

2. ஸ்ரீநகர் காலனி வீடு, ஹைதராபாத்.

3. 15 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஜீடிமெட்லா, ஹைதராபாத்.

4. 2.5 கிரவுண்ட் நிலம், மணப்பாக்கம், சென்னை.

ஜெயலலிதா பெயரில் உள்ளவை:

1. செயின்ட் மேரீஸ் சாலை வணிகக் கட்டடம், சென்னை.

2. கடை எண் 18. பார்சன் காம்ப்ளக்ஸ், அண்ணா சாலை, சென்னை.

3. 3.5 ஏக்கர் விவசாய நிலம், செய்யூர், காஞ்சிபுரம்.

சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் பெயரில் உள்ளவை:

1. பிரின்டிங் பிரஸ், கட்டடம் மற்றும் மெஷின்கள், கிண்டி தொழிற்பேட்டை.

2. நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள்.

3. பட்டம்மாள் தெருவில் உள்ள வீடு, மந்தைவெளி, சென்னை.

4. கடை எண் 14, பார்சன் காம்ப்ளெக்ஸ், அண்ணாசாலை, சென்னை.

5. கடை எண் 9, ஜெம்ஸ் கோர்ட் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.

6. 3.5 ஏக்கர் நிலம், சுந்தரக்கோட்டை, மன்னார்குடி.

7. 8.5 கிரவுண்டில் உள்ள வீடு, தஞ்சாவூர்.