Published:Updated:

'ரகசியமாக உங்களைச் சந்திக்க வேண்டும்' என்றார் ஓ.பி.எஸ்.!' - மோடிக்கு நிர்மலா சீதாராமனின் மெசேஜ்

ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிகளுக்குள் நடக்கும் மோதலில், யார் டெல்லியோடு நெருக்கம் என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நாடகம் நடந்துள்ளதாக அறிகிறோம்.

'ரகசியமாக உங்களைச் சந்திக்க வேண்டும்' என்றார் ஓ.பி.எஸ்.!' - மோடிக்கு நிர்மலா சீதாராமனின் மெசேஜ்
'ரகசியமாக உங்களைச் சந்திக்க வேண்டும்' என்றார் ஓ.பி.எஸ்.!' - மோடிக்கு நிர்மலா சீதாராமனின் மெசேஜ்

மிழக ஆட்சியாளர்களை மத்திய ஆட்சியாளர்கள் அணுகும்விதம் குறித்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. ' மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரகசியமாக சில விஷயங்களைப் பேச விரும்பினார் ஓ.பன்னீர்செல்வம். அதை ஊடகங்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டதால், அவர் மீது  உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பா.ஜ.க மேலிடம்' என்கின்றனர் 

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் சிங்கம் ஒன்றுக்குப் பெயர் வைக்கச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக மைத்ரேயனுடன் டெல்லிக்குக் கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ்ஸின் ஒருநாள் டெல்லி பயணம் குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ' அவர் சகோதரருக்கு உதவி செய்ததற்காக நன்றி தெரிவிக்கச் செல்கிறார்' என்றார். தொடர்ந்து பேசியவர், ' மத்தியில் உள்ளவர்களோடு கூட்டும் இல்லை, எதிரியும் இல்லை' எனப் பதில் அளித்தார். இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது, நிர்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மைத்ரேயனை மட்டும் அமைச்சர் சந்தித்தார் என்ற தகவல் வெளியானது.

இந்த சில வரி ட்வீட், தமிழக அமைச்சர்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியது. ' சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த இருப்பதால், அதில் இருந்து தப்பிக்கும்விதமாக நிர்மலாவை சந்திக்கச் சென்றார் பன்னீர்செல்வம். கூடவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்க விரும்பினார். சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம், பா.ஜ.கவின் கோபம் இன்னும் தணியவில்லை என்பது தெரிகிறது' எனவும் தகவல் வெளியானது. சௌத் பிளாக்கில் நிர்மலாவை சந்திக்காமலேயே சென்னைக்குத் திரும்பினார் பன்னீர்செல்வம். இதைப் பற்றிய மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, ' எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என எங்களுக்கு அண்ணா சொல்லிக் கொடுத்திருக்கிறார்' எனப் பதில் அளித்தார். தமிழக ஆட்சியாளர்களோடு மத்திய அரசின் பாராமுகமும் தொடரும் ரெய்டு விசாரணைகளும் கொங்கு மண்டலத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. 

‘' பன்னீர்செல்வத்தைப் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?' என தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " பன்னீர்செல்வம் விவகாரத்தில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஓ.பி.எஸ்ஸின் சகோதரருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர், உதவி செய்தது உண்மைதான். அதில் எந்தவித விதிகளும் மீறப்படவில்லை. ராணுவ ஆம்புலன்ஸை ஒதுக்குவதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. 'துணை முதல்வரின் தம்பி' என்ற அடிப்படையில் உதவி செய்தார். இதற்கு நன்றி சொல்ல விரும்பியிருக்கிறார் பன்னீர்செல்வம். அவரது கோரிக்கையை ஏற்று, கடந்த வாரம் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டார் மைத்ரேயன் எம்.பி.

இதற்குப் பதில் அளித்த நிர்மலா, ' நன்றியெல்லாம் வேண்டாண்ணே...இதில் என்ன இருக்கிறது?' என மறுத்திருக்கிறார். உடனே மைத்ரேயன், ' யாருக்கும் தெரியாமல் அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார். உங்களிடம் சில விஷயங்களைப் பேச விரும்புகிறார்' எனச் சொல்லவும், ' சரி...வரச் சொல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். எனவே, மைத்ரேயன் பெயரில் அப்பாயின்ட்மென்ட் பதிவாகிவிட்டது. இதன்பிறகு, ' இந்த சந்திப்பில் புகைப்படம் எடுத்தால், அதை மீட்டிங் முடிந்ததும் போட்டுக் கொள்ளுங்கள்' என மைத்ரேயன் கூறியிருக்கிறார். நிர்மலாவும், ' போட்டோவை எடுத்து எனக்கு என்ன ஆகப் போகிறது. அதை வைத்து நான் செய்யப் போகிறேன்?' எனக் கூறிவிட்டார். 

ஆனால், 'யாரிடமும் சொல்ல வேண்டாம். மிக ரகசியமான சந்திப்பு' எனக் கூறிவிட்டு, நிர்மலாவை சந்திப்பது குறித்த தகவலை ஓ.பி.எஸ் தரப்பு முதல்நாளே கசியவிட்டது. இந்தத் தகவல் நிர்மலா கவனத்துக்குச் சென்று சேரவில்லை. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணத்தின் நோக்கம் குறித்துப் பேட்டியளித்தார். இந்தநேரத்தில், 'நான் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்' என ஓ.பி.எஸ் கூறிய தகவலும் வெளியானது. இதை ட்விட்டரில் கவனித்த நிர்மலா, ' இந்த நிமிடம் வரையில் அவரை சந்திக்கவில்லை. அதற்கு முன்னதாகவே, நன்றி தெரிவித்துவிட்டதாகக் கூறுகிறார். ரகசிய சந்திப்பு எனக் கூறிக் கொண்டு, இப்படி ஊரெல்லாம் பேட்டி கொடுத்துட்டு வர்றார்' எனக் கொந்தளித்தார். இதன்பிறகு. மைத்ரேயனை மட்டும் சந்தித்தார். அந்த சந்திப்பிலும், ' நான் அவரைச் சந்திக்க முடியாது. இப்படியெல்லாம் வெளியில் பேசுவது சரியானதா?' எனக் கோபப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கும் தகவல் அனுப்பிவிட்டார் நிர்மலா. அதன்பிறகு மதியம் 3 மணிக்கு நாடாளுமன்ற அலுவல் தொடர்பாக, சத்யபாமா எம்.பியையும் சந்தித்துப் பேசினார். 

சந்திப்பை ரகசியமாக வைக்கச் சொல்லிவிட்டு, அதை ஓ.பி.எஸ் மீறியதுதான் நிர்மலா கோபத்துக்குப் பிரதான காரணம். நன்றி சொல்வதற்காக, வெளிப்படையாகச் சென்றிருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. தவிர, போன் மூலமாகவே நன்றி தெரிவித்திருக்கலாம். இப்படியொரு நாடகத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன, சொத்துக்குவிப்பு வழக்கை துரிதப்படுத்த வேண்டாம் என்பதற்காக ரகசியமாக சந்திக்க விரும்பினாரா, கூட்டணி குறித்த தன்னுடைய பார்வையை வெளிப்படுத்த வந்தாரா என்பதும் தெரியாது. ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிகளுக்குள் நடக்கும் மோதலில், யார் டெல்லியோடு நெருக்கம் என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நாடகம் நடந்துள்ளதாக அறிகிறோம். 'இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்' என பிரதமர் தனியாகக் கூறியதைக்கூட, பொதுவெளியில் பகிரங்கப்படுத்தினார் பன்னீர்செல்வம். இதனை பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் ரசிக்கவில்லை. இவர்களுக்குள் நடந்துவரும் நிழல் யுத்தத்தின் ஒருபகுதியாகவே இதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நிர்மலா சீதாராமன், ' இவர்களுக்கு உதவி செய்த பாவத்துக்காக என் தலையை உருட்டுகிறார்கள். இவர்கள் நடத்தும் அரசியலுக்குள் என்னையும் இழுத்துவிட்டார்கள்' என ஆதங்கப்பட்டு பேசினார். எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீதும் தலைமையின் கோபம் குறையவில்லை. அ.தி.மு.கவோடு கூட்டணி அமைக்கும் முடிவிலும் அகில இந்திய தலைமை இல்லை" என்றார் விரிவாக.