Published:Updated:

முதல்வருடன் ஒரு நாள்!

முதல்வருடன் ஒரு நாள்!
பிரீமியம் ஸ்டோரி
முதல்வருடன் ஒரு நாள்!

நமது நிருபர்கள், படங்கள்: சு.குமரேசன்

முதல்வருடன் ஒரு நாள்!

நமது நிருபர்கள், படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
முதல்வருடன் ஒரு நாள்!
பிரீமியம் ஸ்டோரி
முதல்வருடன் ஒரு நாள்!

‘ஆனந்தவிகடனில் வரும் அரசியல் விமர்சனத்தை ரெகுலராகப் படிப்பேன். எதையுமே மிஸ் பண்ண மாட்டேன். எப்படியிருக்கு சார் எங்க ஆட்சி?’ - அதிகாலை 5.30 மணி... மாடிப்படிகளில் இருந்து இறங்கியபடியே கேட்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. தினகரன் பக்கம் 34 எம்.எல்.ஏ-க்கள் போய்விட்டார்கள்; கூவத்தூரில் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினார்கள் என்கிற பரபரப்புகளுக்கு இடையில்தான் ‘முதல்வருடன் ஒரு நாள்’ அசைன்மென்டுக்கு செம ஆர்வத்துடன் ஓகே சொல்லியிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 

ஜூன் 13- தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முதல்நாள்தான் ‘முதல்வருடன் ஒருநாள்’ அசைன்மென்ட்டுக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் இருக்கிறது தமிழக முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம். வீட்டின் பெயர் `செவ்வந்தி’. வீட்டின் எல்லா பக்கமும் ஜெயலலிதா படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. 

முதல்வருடன் ஒரு நாள்!

“என் மனைவி பெயர் ராதா. மகன் மிதுன். மருமகள் திவ்யா. சில நாட்களுக்கு முன்புதான் பேரன் பிறந்திருக்கான். அவங்க எல்லோரும் சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்துக்குப் போயிருக்காங்க. இப்ப, நான் சிங்கிள்தான்” சிரித்தபடியே பேசுகிறார் எடப்பாடியார். திடீரென செல்போன் ஒலி கேட்க, ``உங்க செல்போன் ரிங் அடிக்குது’’ என்றோம்.

சிரித்தபடியே, “அது என்னுதில்ல. நான் செல்போனைக் கையில் வெச்சுக்க மாட்டேன். என் போனை, என் பி.ஏ-க்கள்தான் வெச்சிருப்பாங்க. நாம் இருக்கும் இடம், பொருள், சூழ்நிலை தெரியாமல் எதிர்முனைல பேசுவாங்க. அதைத் தவிர்க்க நினைக்கிறேன்.

அதுக்காக எனக்கு டிஜிட்டல் எல்லாம் தெரியாதுன்னு நினைக்காதீங்க. இப்பல்லாம் வீடியோ கான்ஃபரன்ஸ்  மூலமாத்தான்  மாவட்ட கலெக்டர்கள்கிட்ட பேசுறேன். அரசுத் திட்டங்கள் பற்றிய பவர் பாயின்ட் புரோகிராம்களைப் பார்ப்பேன். அதில் கரெக்‌ஷன்களைச் சொல்வேன். ஃபைனலா நான் படிச்சு ஓகே செஞ்சபிறகுதான், வெளியே அனுப்புவாங்க” அதிகாலையிலேயே உற்சாகமாகப் பேசுகிறார் முதல்வர்.

``உங்க ஹேர்ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?’’ என்றால் சிரித்தபடியே நீண்ட விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கிறார். “பணி நிமித்தம் நான் சென்னையில் இருந்தாலும், என்னுடைய பழக்கவழக்கம் எல்லாமே சேலம் சைடுதான். எனக்கு முடிவெட்டுறவர் சேலத்தில் இருக்கிறார். 25 வருஷமாக அவர்தான் எனக்கு முடிவெட்றார். முடிவெட்டுவதற்காகவே சேலத்தில் இருந்து அவர் சென்னைக்கு வருவார். எனக்குத் துணி தைக்கும் டெய்லரும்கூட சேலத்தில் இருக்கிறார். அவ்வப்போது அளவு எடுத்து கனகச்சிதமாய் தைத்துக்கொடுக்கிறார்” நம்முடன் பேசியபடி, சிறப்பு பி.ஏ-வான கிரிதரனை இன்டர்காமில் அழைத்தார் முதல்வர்.

“ரெடியா? ரிப்போர்ட்லாம் ஹாலுக்கு எடுத்துக்கிட்டு வாங்க?” அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த கிரிதரன்,  ஒரு ரிப்போர்ட்டை எடப்பாடியார் கையில் கொடுத்தபடி ‘மேட்டூர் அணை, பெரியார் அணை, வைகை அணை...நீர்மட்டம் எவ்வளவு?’ என்று சொன்னார்.

முதல்வருடன் ஒரு நாள்!

“சரி... தினசரி மணல் விற்பனை ரிப்போர்ட் கேட்டிருந்தேனே?... வந்திருக்கா?”

“இருக்கு சார்... 1,200 லோடு விற்பனை ஆகிட்டிருந்தது. இப்ப, நாளுக்குநாள் அதிகமாகி, 5,000 லோடு மணல் விற்பனை ஆகுது சார்” என்ற பி.ஏ-விடம், “நம்ம டிமாண்ட் தினமும் 7,000 லோடுதானே? சீக்கிரமே அதை ரீச் பண்ணிடுவோம்ல” எனக் கேட்க தலையாட்டுகிறார் பி.ஏ.

அடுத்தது, உளவுத்துறை புல்லட்டின். தினமும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் உளவுத்துறை இதைத் தயாரிக்கிறது. முந்தினநாள் இரவு முதல் அதிகாலை நேரம் வரை தமிழகத்தில் நடந்த க்ரைம், விபத்து, அரசியல்... என்று நிகழ்வுகளைப் பிரித்துத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர்... உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும் ஃபைல் அது.

புல்லட்டினை எடுத்துப் புரட்டினார் முதல்வர். `‘இவ்வளவு சாலை விபத்துகளா?’’ என்று வருத்தப்பட்டவர், அடுத்துச் சென்றது ட்ரெட் மில் இருந்த இடத்துக்கு!

“முதல்வராகும் முன்பு, இந்த வீட்டின் வளாகத்தைச் சுற்றிலும் காலையில் தவறாம வாக்கிங் போவேன். இப்போ போக முடியலை. அதான், இந்த மெஷினை வாங்கிட்டேன்” என்று சொல்லியபடியே நடக்க ஆரம்பித்தார். 

முதல்வருடன் ஒரு நாள்!

“ட்ரெட் மில் ஒர்க்அவுட்டால் எவ்ளோ எடை குறைஞ்சிருக்கீங்க?’’

“என்னோட வயசு 63. என்னோட உயரம் 5.10 இருக்கும். எடை 89 கிலோ. இன்னமும் பத்து கிலோ குறைக்கணும்னு டாக்டர்கள் சொல்றாங்க. எங்க முடியுது?’’ எனச் சிரிக்கிறார். 20 நிமிட ட்ரெட் மில் வாக்கிங் முடித்துவிட்டு விறுவிறுவென ஒரு வி.ஐ.பி-யைச் சந்திக்கப் புறப்பட்டார் முதல்வர்.


“இவர் பெயர் சீஷர். என் மகன் மிதுன் ஃப்ரெண்ட்’’ எனத் தனது செல்ல நாய்க்குட்டியை  அறிமுகப்படுத்துகிறார். ``எங்க வீட்டுக்கு இவன் திறமையான காவல்காரன். முன்னெல்லாம் சீஷருடன் விளையாட எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ நேரமில்லை. வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய்களை போலீஸ் வீட்டுக்குள்ள கொண்டுவந்துட்டதால, சீஷர் வேலை குறைஞ்சிடுச்சு’’ என்றபடி சீஷரை வருடிக்கொடுக்க, வாலை ஆட்டியபடி செல்லமாகக் குரைத்தது நாய்.

காலை 6 மணிக்கெல்லாம், முதல்வரின் வீட்டு வாசலில் மனு கொடுக்கப் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனி ஷெட் போட்டு 200 நாற்காலிகளைப் போட்டிருக்கிறார்கள். செக்யூரிட்டி சோதனைகளை முடித்துவிட்டு, கையில்  மனுக்களுடன் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காபி கொடுக்கப்படுகிறது. அதேநேரம் உளுந்தூர்பேட்டை மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ-க்கள், அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் காஞ்சிபுரம் எம்.பி-யான மரகதம் குமாரவேல் ஆகியோர் வி.ஐ.பி அறையில் முதல்வர் சந்திப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

இன்னொரு அறையில், தலைமைச் செயலகத்தில் துறைவாரியாக நடந்துவரும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ள உயர் அதிகாரிகள் முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காகக் காத்திருந்தனர். இடைப்பட்ட நேரத்தில் குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக வந்தார் முதல்வர் எடப்பாடியார்.

டி.வி-யை ஆன் செய்து தமிழ் செய்தி சேனல்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

முதல்வருடன் ஒரு நாள்!

“ உங்களுக்கு எந்த சேனல் பிடிக்கும்?”

“ஆங்கிலப் படங்கள், வீர சாகச விளையாட்டுகள் வரும் சேனல்களை ஆர்வமாகப் பார்ப்பேன்” என்றவர் செய்தித்தாள்களைப் புரட்ட ஆரம்பித்தார். அவரது டேபிளில் `ஆல விருட்சம்’ என்ற புத்தகமும், `தேசிய நீர்வளமும், நதிநீர் இணைப்பும்’ என்ற புத்தகமும் இருந்தன.

“நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்கள் படிப்பேன். என்னைச் சந்திக்க வர்றவங்க பலரும் நிறைய புத்தகங்களைக் கொடுக்கிறாங்க. ஆனால், எல்லாத்தையும் படிக்கத்தான் நேரம் இல்லை.  எனக்கு பிடித்த சப்ஜெக்ட் உள்ள புத்தகங்களை மட்டும் தேர்தெடுத்துப் படிக்கிறேன்”  என்றபடியே எழுந்தார்.

“வாங்க... எங்க வீட்டுத் தோட்டத்தைக் காட்டுறேன்...” என்றபடியே வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றார்.

‘‘இதோ...இங்கே நாட்டுக்கோழிகளை முட்டைக்காக வளர்க்கிறோம்” என்றபடி, கோழிக்கூண்டு அருகே போய் நின்றார். பின்பு தோட்டம். ‘`கத்திரிக்காய் விதைக்காக விட்டிருக்கிறோம். தோட்டத்தில் விதம்விதமான பூ, செடி வளர்த்தால், அதன் நறுமணம் இந்த வீடு வளாகம் முழுவதும் பரவும். டென்ஷனான நேரத்தில் அந்த நறுமணத்தை சுவாசிச்சா, டென்ஷன் ரிலீஸ் ஆகும். என் சொந்த கிராமத்தில் 28 ஏக்கர் நிலம் வெச்சிருக்கேன். இங்கே... இந்தச் சின்ன இடத்துல சில காய்கறிச் செடிகளையும், பூச்செடிகளையும் என் மனைவி ராதாவும், மகன் மிதுனும் வெச்சாங்க. சொந்த கிராமத்திலிருந்து வந்த செடிகள். ஆனா, தண்ணி சரியில்லை, வறட்சி வேற. சரியாவே எதுவும் வளரலை. 40 வருஷமா இருந்த மாமரம், வேப்பமரம்  எல்லாம் வர்தா புயல்ல போயிடுச்சு” என்றபடியே நடக்க ஆரம்பிக்க, அங்கே டூ வீலர் லைசென்ஸுக்காக  எட்டு வரைந்திருப்பதைப்போல ஒரு சிமென்ட் படுக்கையில் எட்டு போட்டிருந்தார்கள். அதை நாம் ஆச்சரியமாகப் பார்க்க, ``இது வேற ஒண்ணுமில்ல. வீட்டுல இருக்கிற லேடீஸ் வெளியில வாக்கிங் போக முடியாதில்லையா... அவங்களுக்காகத்தான் இந்த எட்டு. இந்த எட்டு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறை இருக்கு. அதன் அடிப்படையில் இதைச் செஞ்சிருக்காங்க. இல்லைனா, நடக்கும்போது தலைச்சுற்றல் வந்துடும். நானும் அவ்வப்போது இதில் நடப்பதுண்டு” என்றார்.

தோட்டத்திலிருந்து நேராக டைனிங் டேபிளுக்கு வந்தார். மூன்று தோசைகள் அவருக்குத் தயாராக இருந்தன.

“நீர்ச்சத்து உள்ள காய்கறிகள்தான் எனக்கு விருப்பம். புடலை, வெண்டை, சுரைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், செளசெள என்றால் ஒரு பிடி பிடிப்பேன். எப்போதாவது நான்வெஜ். ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிடுவேன். எனக்கு சர்க்கரையோ, பி.பி-யோ எதுவும் இல்லை’’ என ரிலாக்ஸாகப் பேச ஆரம்பிக்க, ஊரிலிருந்து அவசர போன் வந்திருப்பதாகச் சொல்லி,  போனைக் கொடுத்தார் பி.ஏ. சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ-வின் தாயார் இறந்துவிட்ட தகவல் அது. தனது வருத்தத்தைச் சொல்லிவிட்டு, உடனே அவரது கிராமத்தில் இருந்த மகன் மிதுனை போனில் அழைத்து, “என் சார்பாக நீ போய் இறுதி மரியாதை செலுத்திவிட்டு வா” என்றார்.

முதல்வருடன் ஒரு நாள்!

அடுத்தது அரசியல் சந்திப்பு. மாவட்டச் செயலாளர் உள்பட மனுக்களோடு வந்திருந்தவர்களைச் சந்தித்தார். அடுத்ததாக உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு. பெண் அதிகாரி ஒருவர் முதலில் உள்ளே வந்தார்.
“வாங்க... சுமதி மேடம்”  என்றவர், நம்மைப் பார்த்து,“இவங்கதான் நெடுஞ்சாலைத் துறையின் முதல் சீஃப் இன்ஜினீயர். கீழ் நிலையில் இருந்து பல்வேறு பதவிகளில் இருந்துட்டு இப்போ உயர் பதவிக்குத் தகுதி அடிப்படையில் வந்திருக்காங்க” என்று அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்து, போர்டிகோவில் மனு கொடுக்கவந்த பொதுமக்களைச் சந்தித்தார். மொத்தம் 112 பேர். எல்லோரிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் அனுப்புகிறார்.  இடையிடையே, மனு கொடுக்கவந்தவர்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

முதல்வர் காரில் ஏறும் முன், அன்றைய தினம் முதல்வர் கலந்துகொள்ளும் புரோகிராம்களின் லிஸ்ட் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு பிரதியை நம் கையிலும் கொடுத்தார் முதல்வர்.

முதல் நிகழ்ச்சிக்கான இடம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. கார் புறப்பட்டது. முன் சீட்டில் அமர்ந்திருந்த முதல்வர் எடப்பாடியார், மியூஸிக் சிஸ்டத்தை ஆன் செய்தார். எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசன் எழுதிய தத்துவப்பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மெய்ம்மறந்து ரசித்தபடி பயணித்தார்.

``தற்போது மேட்டூரில் தூர் வாரி வருகிறார்கள். 82 வருடங்களுக்குப் பிறகு நடக்கிறது. அருகிலுள்ள விவசாயிகள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கச் சொல்லிட்டோம். அப்படியும் தினம் ஒன்றுக்கு 1,200 லோடுதான் ஐந்து இடங்களில் எடுக்கிறார்கள். அரசு மட்டும் எடுத்தால், அடுத்த நாலு வருஷத்துக்கு மண் எடுக்க வேண்டியிருக்கும். அதனால்தான் இந்த முடிவு எடுத்தோம்” என்றார்.

முதல்வருடன் ஒரு நாள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வாசலில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிதி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் நின்றிருந்தனர்.

முதல்வரை வரவேற்று லிஃப்ட்டுக்கு அழைத்துச் சென்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

``பிறவியில் இருந்து காது கேளாத குழந்தைகளுக்குப் பேச்சும் வராது. இதைப் பெற்றோர் கண்டுபிடிக்கவே பல வருடங்கள் ஆகும். கண்டுபிடித்தபிறகு, சரிசெய்ய வேண்டுமானால், நவீன அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.  தனியார் ஆஸ்பத்திரியில் ஏழரை லட்ச ரூபாய் செலவாகும். ஆனால், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆபரேஷனை இலவசமாகச் செய்து வருகிறோம். சென்னை மருத்துவமனையில் இதுவரை 199 குழந்தைகளுக்கு ஆபரேஷன் முடிந்து, அடுத்தகட்டமாகப் பேச்சுப் பயிற்சியில் இருக்கிறார்கள். அந்த வகையில், 200-வது ஆபரேஷன் முடித்த குழந்தைக்கு இன்று நீங்கள் காது கேட்கும் மெஷினைப் பொருத்தி ஸ்விட்ச் ஆன் செய்வதுதான் புரோகிராம்”  என்று சுருக்கமாகச் சொன்னார்.

நான்கு வயது குழந்தைக்குக் காதில் கருவியைப் பொருத்தியபோது, அந்த வளாகத்தில் இருந்த 199 குழந்தைகளும் ‘அம்மா’ என்று திக்கித் திக்கி குரல் கொடுக்க... முதல்வர் உட்பட அங்கிருந்தவர்கள் எல்லோருமே எமோஷனல் ஆனார்கள்.

பக்கத்தில் இருந்த மருத்துவமனை டீனை அழைத்து ``எனக்கு ரத்தப் பரிசோதனை  செய்யுங்கள்’’ என்றார் முதல்வர். அருகில் நின்ற நிதி அமைச்சர் ஜெயக்குமார் ரத்தம் எடுத்த டெக்னீஷியனிடம், ``ஏம்பா...இவருக்கு எல்லா டெஸ்ட்டும் பார்த்திடுப்பா” என்று சிரித்தார்.

அவரைப்பார்த்த முதல்வர், ``56 வயசுவரை நான் எந்த மெடிக்கல் செக்-அப்பும் பண்ணிக்கலை. அப்படியே இருந்துட்டேன்” என்றார்.

மருத்துவமனையில் இருந்து கிளம்பும்முன், லேப் டெஸ்ட் ரிசல்ட் வந்தது. எடப்பாடியாருக்கு எல்லாமே நார்மல்.

முதல்வருடன் ஒரு நாள்!

மருத்துவமனையில் இருந்து தலைமைச் செயலகத்துக்குப் புறப்பட்டார் முதல்வர்.

காரில், இந்த முறை டேப் ஒலிக்கவில்லை. வழி நெடுகிலும் காது கேளாத குழந்தைகளின் செயல்பாடுகளைப் பற்றியே பேசிக்கொண்டு  வந்தார்.

தலைமைச் செயலகம் வந்தது. முதல்மாடிக்கு லிஃப்டில் ஏறினார். அவரது இருக்கைக்குச் செல்லும் முன், அருகிலிருந்த அறைக்குச் சென்றார். அங்கே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருந்தது. அதற்கு மாலையிட்டு மரியாதை செய்தார். அடுத்து பூஜை அறை இருந்தது. அதில், விளக்கு ஏற்றி சூடம் காட்டி வணங்கினார். பிறகு, அவரது இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வருடனான அப்பாயின்ட்மென்ட்டுகள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பவர், முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான இன்னசென்ட் திவ்யா. பம்பரமாக இங்கும்அங்கும் ஒடிக்கொண்டிருந்தார். முதல்வரின் செயலாளர்கள் ஷிவ்தாஸ் மீனா, விஜயகுமார் ஆகியோர் அங்கே இருந்தனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முதல்வரின் அறைக்குள் வந்தார்.

``சார்...இன்றைக்கு ஐந்து வயது முடிந்து தொடக்கக்கல்வி பயிலச் செல்லும் 2,62,073  அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு  முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைக்கும் அடையாளமாக உங்கள் கைகளால் ஏழு குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்போகிறீர்கள்’’ என்றார்.

அருகில் இருந்த விழா அரங்கை நோக்கி முதல்வர் நடக்க ஆரம்பிக்க, அதிகாரி ஒருவர் ஒடிவந்து, ‘`இரண்டு குழந்தைகள் பாத்ரூம் போக வேண்டும் என அடம்பிடித்தன. அழைத்துப்போயிருக்கிறார்கள்.  சில நிமிடங்கள் ஆகும்’’ என்று சொல்ல... `‘அவங்க மெதுவாவே வரட்டும். நான் வெயிட் பண்றேன்’’ என்று சொல்லிவிட்டு இருக்கைக்குத் திரும்பினார்.
 
 “உங்கள் டேபிளில் ஃபைல்கள் எதுவுமே இல்லையே?” என்றால்,  சிரிக்கிறார். ``நீங்கதான் எதுவும் நடக்கலைன்னு கவர் ஸ்டோரியே போட்டீங்களே’’ என்றவர்,

``பெண்டிங் கிடந்த எல்லாத்தையும் க்ளியர் பண்ணிட்டேன். இதுவரைக்கும் 2,200 ஃபைல்ல கையெழுத்துப் போட்டிருப்பேன். புதிதாக ஃபைல்கள் வரும்போது, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துவேன். என்னுடைய கேள்விக்குச் சரியான பதில்  கிடைச்சா, உடனே கையெழுத்துப்போட்டுக் கொடுத்துடுறேன். எதையும் நாளைக்குப் பாத்துக்கலாம்னு விடுறதில்லை” என்றார்.

அடுத்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வருடன் ஒரு நாள்!

சின்ன பிரேக்...

முதல்வரின் செயலாளர்கள் ஷிவ்தாஸ் மீனா, விஜயகுமார் ஆகியோரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் முதல்வர். இடையில், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி(பொறுப்பு) ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்வரின் அறைக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களையும் உள்ளே அழைத்தார்.

கூட்டம் முடிந்தவுடன், ‘`வழக்கமான சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டம்தான் இது” என்றார் நம்மிடம்.

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நாகை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆரம்பமானது.

``வறட்சியால் பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏதாவது ஒரு காரணத்துக்காக விடுபட்டிருக்கலாம். அவர்களையும் லிஸ்ட்டில் சேர்த்துடுங்க. வேற... உங்க மாவட்டத்தில் என்ன விசேஷம்?’’ என்று முதல்வர் ஜாலியாகக் கேட்க, எதிர்முனையில் இருந்து உற்சாக பதில்கள் வந்தன.

அடுத்து, முதல்வர் அறைக்குள் நுழைந்தவர்கள் 2016-ம் வருட பேட்ச்சைச் சேர்ந்த 12 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசியதோடு, புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 
மாலை 4.30. தரைத்தளத்தில் உள்ள அரங்கில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பானது. முதலில், முதல்வரின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர் உள்ளே இருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து அதிகாரிகளை வெளியே அனுப்பிவிட்டனர். அமைச்சர்களுடன் தனியாக ஒருமணி நேரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் முதல்மாடியில் உள்ள தனது அறைக்குள் நுழைந்தார். அவரது டேபிளில் அமெரிக்கன் கான் மற்றும் கேழ்வரகு பிஸ்கட் ஆகியவற்றை மாலை நேரத்து ஸ்நாக்ஸ்களாகக் கொண்டுவந்து வைத்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இருந்தார். இருவரும் பேசியபடி ஸ்நாக்ஸ் சாப்பிட்டனர்.

“நேற்று மாலை நவதானியங்கள் கலந்து செய்யப்பட்ட ஓர் உணவைத் தந்தார்கள். இன்று இது. கம்பு, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்து செய்யப்பட்ட சத்துள்ள டிஷ்களை ஒவ்வொரு நாளும் என்னைச் சந்திக்க வருகிறவர்களுக்குத் தருகிறார்கள்” என்றார் முதல்வர். இந்த உணவுகள் தமிழ்நாடு டூரிஸம் ஹோட்டலில் இருந்து முதல்வர் கேபினுக்கு ஸ்பெஷலாக சப்ளை ஆகின்றன.

முதல்வருடன் ஒரு நாள்!

தலைமைச்செயலகத்தைவிட்டு முதல்வர் கிளம்பும்போது, இரவு மணி 7.

கடற்கரைச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர்ந்துகொண்டிருக்க, நடுவில் தனிப்பாதையைச் செயற்கையாக உருவாக்கி முதல்வர் கார் செல்லும்படி செய்திருந்தார்கள். யாருக்கும் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் கார் சென்றது.

காரில் முதல்வருடன் பேசிக்கொண்டே போனோம். அரசியல், கட்சி களேபரங்கள் பற்றிப் பேசினால் சிரித்தபடியே  பதில் இல்லாமல் கேள்விகளைக் கடக்கிறார். ``முதல்வரான பின் மூன்று முறை டெல்லிக்குப் போயிட்டு வந்திருக்கீங்க? தமிழகத்துக்காக மத்திய அரசு நிதியை எவ்வளவு வாங்கியிருக்கீங்க?’’ என்று கேட்ட உடனே பதில் வருகிறது.

“கடந்த 123 நாட்களில், பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதி சுமார் 7,371 கோடி ரூபாய். நபார்டு திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றது சுமார் 683 கோடி ரூபாய். பன்னாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகப் பெறப்பட்ட கடனுதவி சுமார் 1,028 கோடி ரூபாய்...” என்ற  புள்ளிவிவரங்களை அடுக்கியவர் காரின் க்ளோவ்பாக்ஸுக்குள் இருந்த  `100 நாள் சாதனைகள்’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்.

முதல்வரின் வீடு வந்தது. ``காலைல வந்தவுடனே உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன். நீங்க இன்னும் பதிலே சொல்லலை’’ என்றார் முதல்வர். நாம் புரியாமல் பார்க்க, ``எங்க ஆட்சி எப்படியிருக்குன்னு கேட்டேனே?’’ என்று சிரிக்கிறார்.

நோ கமென்ட்ஸ் முதல்வரே!