Published:Updated:

“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: என்.ஜி.மணிகண்டன்

“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

‘`பிரதமர் தேர்தலில் நிற்கும்போதே அவரது முதல் பேச்சில் எதையெல்லாம் சொன்னாரோ, அவற்றையெல்லாம் செய்துகொண்டு வருகிறார். காஷ்மீரில் பயங்கரவாதத்தைக் குறைத்துள்ளோம். ‘ஒரே நாடு; ஒரே மக்கள்; ஒரே வரி’ என்று ஜி.எஸ்.டி புரட்சி மசோதாவைக் கொண்டுவந்துள்ளோம். இந்தியத் தமிழக மீனவர்கள் நலனுக்கென 1,100 கோடி ரூபாயில் திட்டம் போட்டுள்ளார் பிரதமர். இலங்கையில் தூக்குக்கயிற்றில் நின்றுகொண்டிருந்த தமிழக மீனவர்களைக் காப்பாற்றித் தந்துள்ளார். இப்படி மோடியின் சாதனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். கையேந்தி நிற்கும் வகையில் என் தாய்நாட்டு மக்கள் நிற்கக் கூடாது என்ற சிந்தனை இருப்பதால்தான், அவர் எதையும் இலவசமாகச் கொடுக்கவில்லை. ஒருகாலத்தில், தமிழ்நாட்டில் மூன்றெழுத்து மந்திரம் இருந்தது. ஆனால், இன்று நாடு முழுவதும்  மோடி என்கிற இரண்டெழுத்து மந்திரத்தைத்தான் உச்சரிக்கிறார்கள்’’ மூன்றாண்டு கால பி.ஜே.பி ஆட்சியின் சாதனைகள் என்ன என்ற கேள்விக்கு இடைவெளி இல்லாமல் பதில் சொல்கிறார்  மத்திய இணையமைச்சரும், தமிழகத்தின் ஒற்றை பி.ஜே.பி. எம்.பி-யுமான பொன்.ராதாகிருஷ்ணன். சென்னை, கன்னியாகுமரி, டெல்லி எனப் பறந்துகொண்டே இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன்.

‘`நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது; பி.ஜே.பி-யோடு சேரக் கூடாது என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றனவே?’’

‘`தமிழகத்தில் பி.ஜே.பி மிகமிக வேகமாக வளர்ந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் இரண்டுமே தமிழக மக்களைக் கையேந்த வைத்துவிட்டன. எங்கே பி.ஜே.பி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடுமோ, என்ற அச்சத்தில் தான் ஆளாளுக்கு அலறுகிறார்கள். அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் ரஜினியின் தனிப்பட்ட விருப்பம். பி.ஜே.பி-யில் சேர்வதும், சேராமல் இருப்பதும் அவரது விருப்பம். எந்த முடிவையும் எடுக்க அவருக்கே உரிமை உள்ளது. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்றால், ரஜினி வந்தால் இருக்கிற கட்சிகள் முகவரி இல்லாமல் அழியும் நிலை உருவாகும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.’’

“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

‘`ரஜினி ஏன் பி.ஜே.பி-க்கு வர வேண்டும்?’’

‘`அரசியலுக்கு வர ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது. ரஜினிகாந்த்தை மட்டுமல்ல, ‘பி.ஜே.பி-க்கு எல்லாரும் வாருங்கள்’ என்றுதான் அழைத்துக்கொண்டு இருக்கிறேன்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பி.ஜே.பி நம்பர் ஒன் கட்சியாக வரப்போகிறது. ஆனால், எப்படி வரப்போகிறது என்று மட்டும் கேட்கக் கூடாது. மழை வரும் என்றால், தவளைகள் சத்தம் போடும் அல்லவா? அதுபோலத்தான், பி.ஜே.பி வளர்ச்சியைப் பார்த்துத் தமிழகத்தில் சில கட்சிகள் மிரண்டு,  கூப்பாடு போடுகிறார்கள்.’’

‘‘ `அ.தி.மு.க அரசை பி.ஜே.பி அரசு இயக்குகிறது’ என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?’’

‘`தமிழகத்துக்கு மோடி கொண்டுவந்த பல திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாத நிலையில், கடந்த காலகட்டங்களில் தமிழக அரசு செயல்பட்டது. இன்றைய காலநிலையில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்றால், அதன் பாதிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதைப் பார்த்து பிற கட்சிகள் அப்படிச் சொல்கிறார்கள். அரசியல் கட்சியினர்,  அவர்களின் உட்கட்சிப் பிரச்னைகளை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நடக்கத் தெரியாத குழந்தை நடக்கத்தொடங்கும்போது அதன் கால்கள் தட்டப்பட்டுத் தானாகக் கீழே விழும். அந்தக் குழந்தை நிமிர்ந்து பார்க்கும்போது, பெற்ற தாய் அந்தக் குழந்தையைப்  பார்த்துக்கொண்டிருந்தால், தாய் தன்னைக் கீழே தள்ளிவிட்டதாக நினைத்து அழும். அந்தக் குழந்தையை யாரும் பார்க்கவில்லை யென்றால், அது பாட்டுக்குச் சென்று கொண்டிருக்கும். இதுதான் இப்போது தமிழகத்தின் நிலை.’’

‘`ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மறைமுகமாகத் தட்டிக்கொடுத்து, அ.தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயமடைய முயல்வதாக உங்கள் கட்சி மீது குற்றம் சொல்கிறார்களே?’’

‘`யாரையும் தட்டிக்கொடுத்து கொம்பு சீவ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொடுத்தால், சர்வநிச்சயமாக ஆதரிப்பார்கள். அந்த இலக்கை நோக்கித்தான் மோடி அரசு சென்றுகொண்டிருக்கிறது. புத்திக்கூர்மை உள்ள மனிதன் பிழைத்துக்கொள்வான். அ.தி.மு.க ஓட்டைப் படகு; உடைந்த படகு. அதில், பயணம் செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். அவர்களே மூன்று குழுவாக உடைந்து கிடக்கிறார்கள். அவர்களை நாங்கள் எந்த வகையிலும் தட்டிக் கொடுக்கவில்லை.’’

‘`எதற்காக ஓராண்டு காலமாகத் தமிழகத்துக்கான ஆளுநரை நியமிக்காமல் இருக்கிறது மத்திய அரசு?’’

‘`தமிழகத்துக்கு என்று ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றாலும், எந்த வேலையும் நடக்கவில்லை என்ற குறைபாடு இல்லையே? மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், கூடுதல் பொறுப்பாகத் தமிழக நிர்வாகத்தைச் சிறப்புடன் கவனிக்கிறார். தமிழகத்தின் கள நிலவரத்தை நன்கு புரிந்துகொண்டு செயல்படுகிறாரே.’’

‘`மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடையால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதே?’’

‘`இறைச்சி சாப்பிடத் தடை என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவரவில்லை. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், தங்களுக்குள் மாடுகளை விற்க, வாங்க எந்தத் தடையும் இல்லை. எப்போதும்போல கிராமங்களில் தனிப்பட்ட முறையில் மாடுகளை விற்கலாம்; வாங்கலாம். ஆனால், சந்தையில் விற்பனை செய்வதைத்தான் முறைப்படுத்தி இருக்கிறோம். மோடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் கொண்டவர்கள்தான் அரசியல் ஆதாயத்துக்காகப் போராட்டம் என்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை.’’

“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்!”

‘` ‘அ.தி.மு.க அரசு கேட்ட வறட்சி நிவாரண நிதியைக்கூட மத்திய அரசு கொடுக்கவில்லை’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாரே?’’

‘`தமிழகத்துக்கு வறட்சிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னவுடன், மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துத் தமிழகத்துக்கு அனுப்பியது. அவர்கள் ஆய்வுசெய்து அறிக்கை கொடுத்தார்கள். நாடு முழுவதுமே வறட்சி நிவாரணம் என்று 60,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. அதில், தமிழகத்துக்கு மட்டும் 39,000 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு வர்தா புயல் நிதியையும் சேர்த்தால், மொத்தம் 71,000 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறோம். மாநில அரசும் தனக்குள்ள கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குற்றம் சாட்டக் கூடாது.’’

‘`ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் தங்கள் அணிகளுக்கு எம்.எல்.ஏ-க்களை இழுக்கவும் அ.தி.மு.க-வில் கோடிகள் புரண்டதாக வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளதே?’’

‘`அது உண்மையாக இருக்குமானால், இதைவிட அவமானம் வேறு எதுவுமில்லை. இது ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் ஏற்பட்ட இழிவு. ஆனால், அந்தக் குற்றச்சாட்டைச் சொல்லக்கூடிய யோக்கியதை தி.மு.க-வுக்கு இல்லை. எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும்போது, தி.மு.க ஏன் கலவரம் உண்டு பண்ணியது, அன்றைக்குச் சட்டமன்றத்தில் அவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் செய்வதைப் பார்த்தால், அவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு நாடகம் நடத்துகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.’’

‘`தி.மு.க தலைவர் கருணாநிதி வைரவிழாவில் பேசிய தலைவர்கள் பி.ஜே.பி-யைக் கடுமையாக தாக்கிப் பேசினார்களே?’’

‘`இந்த விழா கலைஞருக்கு எடுக்கப்பட்ட விழா அல்ல. அது, கலைஞரை அவமானப்படுத்திய விழா. கலைஞர் 94 வயதில், 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார். அந்த விழாவில், அவரது அரசியல் பயணங்களை நினைவுகூர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்?

அ.தி.மு.க துணையோடு வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி ஆட்சி மத்தியில் இருந்தது. அப்போது, தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்தியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட பிரதமர் வாஜ்பாய், ‘தி.மு.க ஆட்சியைக் கலைக்க மாட்டேன்’ என்றார். அதற்காக வாஜ்பாய் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அப்படிப்பட்ட பி.ஜே.பி-யின் அரசியல் நாகரிகத்தை வேறு யாரிடமும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் தி.மு.க மேடை பறைசாற்றியது. தி.மு.க வேண்டாம் என்று ஒதுக்கிவைத்த காங்கிரஸையும் கம்யூனிஸ்ட்களையும் அழைத்துவந்து கலைஞருக்கு எடுத்தது விழாவே அல்ல. அதனால்தான் சொல்கிறேன், இது கலைஞரை அவமானப்படுத்திய விழா.’’