Published:Updated:

இது அடையாள மோதல் அல்ல!

இது அடையாள மோதல் அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
இது அடையாள மோதல் அல்ல!

இது அடையாள மோதல் அல்ல!

‘தோற்றுவிடுவோம்’ என்று தெரிந்தே ஒரு தேர்தலில் போட்டியிடுவதைவிட வேறு வேதனை என்ன இருக்க முடியும்? ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு வேதனையோ, வருத்தமோ இல்லை. வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தபோதே, பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.  ‘நாங்களும் மோதுகிறோம்’ என்ற அடையாள எதிர்ப்புக்காக காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதன்பின்னால், பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது. பி.ஜே.பி-க்கு மாற்றாக தாங்கள் உருவாக்கும் கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே மோதுகிறது காங்கிரஸ்.

இது அடையாள மோதல் அல்ல!

ஒருவேளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முந்திக்கொண்டு பி.ஜே.பி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருக்காவிட்டால் காங்கிரஸ்,  வேட்பாளரை நிறுத்தாமலே ஒதுங்கி இருக்கக்கூடும். காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி அமைத்து பீகார் தேர்தலில் வென்று முதல்வர் ஆனவர் நிதிஷ் குமார். ஆனால், பீகார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை பி.ஜே.பி,  வேட்பாளராக அறிவித்ததும் உடனே அவருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் நிதிஷ் குமார். கடந்த சில நாட்களாகவே எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு  வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தார் நிதிஷ். கடைசியில், எதற்காக இப்படிச் செய்தார் என்பதைத் தன் அறிவிப்பு மூலம் உணர்த்தியும் விட்டார்.

கஷ்டப்பட்டு உருவாக்கிய கூட்டணி சிதறுவதை, காங்கிரஸால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் பலரும் தனித்தனியாக எல்லோரையும் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டபடி இருந்தார்கள். ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலித் பிரமுகர் என்பதால், அவரை எதிர்த்துக்கொண்டு இன்னொரு வேட்பாளருக்கு ஆதரவு தருவதில் அகிலேஷ் யாதவ், மாயாவதி என இருவருக்குமே தயக்கம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டு வங்கியே, உ.பி-யில் இருக்கும் தலித்துகள்தான். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், ராம்நாத் கோவிந்த்தின் ஜாதியினர் ஆதரவு கணிசமாக உண்டு. உ.பி-யில் பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்பவர்களாக இருந்தாலும், வேறு வழியின்றி அதன் வேட்பாளரை ஆதரித்துவிடுவார்களோ என காங்கிரஸ் பயந்தது.

இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை, மகாராஷ்ட்ரா விவசாயிகளோடு பிரதமர் மோடியைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்திருந்தார் சரத் பவார். அந்த நேரத்திலேயே, ‘பி.ஜே.பி-யின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தருகிறோம்’ என அறிவித்துவிடுவாரோ என்ற கலக்கம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. அதனால் வியாழக்கிழமை காலை முதலே டெல்லியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தும், அகமது படேலும் சரத் பவாரைச் சந்தித்தனர். அவர் பிடி கொடுக்கவே இல்லை. ‘‘தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் எதற்காகப் போட்டியிட வேண்டும்?’’ என்று கேட்டார். இரண்டு மணி நேரம் பேசி, அவரைக் கரைத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைத்து வந்தனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இது அடையாள மோதல் அல்ல!

காங்கிரஸ் முதலில் வேட்பாளராக நிறுத்த நினைத்தது, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை. ஆனால், ‘‘பி.ஜே.பி ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் நிலையில், தலித் அல்லாத ஒருவரை நிறுத்தினால் நாங்கள் ஆதரிக்க முடியாது’’ என்று மாயாவதி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை அடுத்த சாய்ஸாக பரிசீலனை செய்தனர். முடிவெடுக்காமல் தவிப்பில் இருக்கும் சிவசேனா கட்சியின் ஆதரவையும் பெறுவதற்கு பிரகாஷ் அம்பேத்கர் உதவுவார் என்று கணக்கு போட்டனர். ஆனால், சரத்பவார் பிடிவாதமாக இதை எதிர்த்தார். கம்யூனிஸ்ட்களும் திரிணாமுல் காங்கிரஸும் மீரா குமார் பெயரைப் பரிந்துரைக்க, கடைசியில் அவரே எல்லோரும் ஏற்றுக்கொண்ட வேட்பாளர் ஆகிவிட்டார். வியாழக்கிழமை மாலையே 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவரை வேட்பாளராக அறிவித்து, வேட்புமனுவில் எல்லா தலைவர்களின் கையெழுத்தையும் கையோடு வாங்கிவிட்டனர்.

பீகாரைச் சேர்ந்தவர் மீரா குமார். முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளான இவர், ஐந்து முறை எம்.பி-யாக வென்றவர். மக்களவை சபாநாயகராகப் பதவி வகித்தவர். ‘ஒரு பீகார் தலித்தை ஆதரிக்காத வரலாற்றுத் தவறை நிதிஷ் குமார் செய்துவிட்டார்’ என்பதை உணர்த்தவும், இனிமேல் எந்த எதிர்க்கட்சியும் பி.ஜே.பி-யின் காந்தப்புயலால் ஈர்க்கப்படாமல் தடுக்கவும் மீரா குமார் உதவலாம். மற்றபடி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆவதை அவரால் தடுக்க முடியாது.

- தி.முருகன்